இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 19 செப்டம்பர், 2024

சுவர்க்கம் பற்றிய குறிப்புகள்

 சுவர்க்கம் என்பது மறைவான இறை நம்பிக்கையில் உள்ளதாகும்!

எஸ்.எம்.அமீர்,  நிந்தாவூர், இலங்கை.

(பயபக்தியுடைய) அவர்கள் (புலன்களுக்கு எட்டாத) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள் அவர்கள்தான் வெற்றியாளர்கள். (2:5) என்பதற்கு, மனிதர்களின் புலன்களுக்கு அப்பாற்பட்ட சுவர்க்கம் உள்ளிட்ட குர்ஆன் கூறும் உண்மைகளே! மறைவானவை ஆகும். என இப்னு அப்பாஸ்(ரழி) இப்னு மஸ்ஊத்(ரழி) ஆகியோர் கூறினார்கள். (சுத்தீ(ரஹ்) தஃப்சீர் இப்னு கஸீர். 1:75

மேலும், யாரைத் தவிர வேறு இறைவன் இல்லையோ அவன்மீது சத்தியமாக! “மறைவான ஒன்றை நம்புவதை விட மேலானதொரு நம்பிக்கையை எவரும் கொள்ள முடியாது” என்று கூறிய அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரழி) அவர்கள் மறைவானவற்றை நம்புவார்கள் என்று தொடங்கி “அவர்களே வெற்றியாளர்கள்” என்பது வரையுள்ள (2:3-5, ஆகிய வசனங்களை) ஓதினார்கள். (ஹாக்கிம், தஃப்சீர் இப்னு அபீஹாத்திம், தஃப்சீர் இப்னு மர்தவைஹி, இப்னு கஸீர், 1:76)

மேலும், அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்குக் கூலியாக அவர்களுக்கென மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கண் குளிர்ச்சி(தரும் பரிசு)களை யாரும் அறியமாட்டார்கள். (32:17)

என்பதற்கு, (அவை) உயர்தரமான (அத்ன் எனும் சுவர்க்கச்) சோலைகள் ஆகும் மறைவாக உள்ள அவற்றை அருளாளன் தனது (நல்ல) அடியார்களுக்கு வாக்களித்துள்ளான். நிச்சயமாக அவனது வாக்கு நடைமுறைப்படுத்தப்பட்டே தீரும். (19:61,78) அவர்களுக்காக அல்லாஹ் சுவர்க்கச் சோலைகளில் நிலையான அருள்வளங்களை மறைத்து வைத்திருக்கின்றான்.

மேலும், “ஜன்னத்துல் ஃபிர்தெவ்ஸ்” 18:107, “ஜன்னத்துல் அத்னு” 19:61, 38:50, 98:08, 16:31, “ஜன்னத்துல் மஃவா” 53:15, “ஜன்னத்துல் நயீம் 70:38, 83:22, “ஜன்னத்துல் ரய்யான்” புகாரி:3257, 1896 என பல சிறப்புப் பெயர்களைக் கொண்டு அழைக்கப்படுவதும், இருப்பிடங்களிலேயே மிகச் சிறந்ததும் ஒதுங்கும் இடங்களிலேயே அழகிய தங்குமிடமாகவும் ஓய்விடமாகவும், நிலையாகத் தங்குமிடத்தாலும் சிறிது நேரம் தங்குமிடத்தாலும் அது அழகானதாக (26:76, 38:50, 25:76, 19:76)வும் பரிசுத்தமானதாகவும் அமையும்.

சுவர்க்கம்  என்பது  நூறு  படித்தரங்களைக்  கொண்டதாகும் :

உங்கள் இறைவனிடமிருந்து கிடைக்கும் பாவமன்னிப்பிற்கும், சுவர்க்கத்திற்கும் நீங்கள் விரைந்து செல்லுங்கள். அதன் அகலம் வானங்கள் மற்றும் பூமியின் அகலம் ஆகும். (3:133), உங்கள் இறைவனிடமிருந்து கிடைக்கும் பாவமன்னிப்பிற்கும், சுவர்க்கத்திற்கும் நீங்கள் விரைந்து செல்லுங்கள் அதன் அகலமானது வானம் மற்றும் பூமியின் அகலத்தைப் போன்றதாகும். (57:21)

சுவர்க்கத்தின் அகலமே இந்த அளவு என்றால் அதன் நீளமும் அதைவிட விசாலமானதாகவே இருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். அதாவது அதன் அகலமே வானங்கள் மற்றும் பூமியின் அளவு இருக்கும் என்றால் அதன் நீளம் என்ன என்பது சொல்லாமலேயே விளங்கும் இதற்குச் சுவர்க்கத்தின் மெத்தைகளைப் பற்றிக் கூறும் பின்வரும் இறைவசனம் சான்றாகும். அவர்கள் (கட்டில்களின்) விரிப்புகளின் மீது சாய்ந்தவர்களாக இருப்பார்கள் அவற்றின் (அவ்விரிப்புகளின்) உட்புறங்கள் இஸ்தப்ரக் என்னும் தடித்த பட்டுத் துணியால் ஆனவையாகும் (55:54) என்று அல்லாஹ் கூறுகின்றான் அவற்றின் உட்புறங்களே பட்டாக இருந்தால் வெளிப்புறங்களின், மேல்புறங்களின், நிலை பற்றிச் சொல்லவே தேவையில்லை என்பது இதன் கருத்தாகும். (தஃப்சீர் இப்னு கஸீர் 2:226)

மேலும், சுவர்க்கத்தில் நூறு படித்தரங்கள் உள்ளன. அவை ஒவ்வொரு படித்தரத்திற்கும் மத்தியிலும் வானம் பூமிக்கு இடைப்பட்ட அளவு அந்தஸ்தில் வித்தியாசம் இருக்கும் என்றும் நூறு வருடத்தூர வித்தியாசம் இருக்கும் என்றும் உலகத்திலுள்ள அனைவரும் ஒன்று சேர்ந்தாலும் விசாலமானதாகவே இருக்கும் என்றெல்லாம் கூறிவிட்டு அவற்றில் மிக உயர்வானது “பிஃர்தொவ்ஸ்” என்ற சுவர்க்கமே ஆகும். நிச்சயமாக அல்லாஹ்வின் “அர்ஷ்’ ஃபிர்தெளவ்ஸ் என்ற சுவர்க்கத்தின் மேலேதான் இருக்கிறது. அதிலிருந்துதான் சுவர்க்கத்தில் ஆறுகள் ஓடுகின்றன நீங்கள் அல்லாஹ்விடம் சுவர்க்கத்தைக் கேட்பதாக இருந்தால் ஃபிர்தொளவ்ஸைக் கேளுங்கள். ஏனெனில் அதுவே சுவர்க்கத்தின் மிகச் சிறந்த படித்தரமும் மிக உயர்ந்த படித்தரமும் ஆகும் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூ ஹுரைரா(ரழி) அபூ ஸயீத்(ரழி), புகாரி: 2790, 2791, 1386, 7423, திர்மிதி, இப்னு மாஜா, முஸ்னத் அஹ்மத், தஃப்சீர் இப்னுகஸீர் 2:226,227)

மேலும், சுவர்க்கவாசிகள் தங்களுக்கு மேலேயுள்ள சிறப்பு அறைகளில் வசிப்பவர்களை, அடிவானில் கிழக்கிலிருந்தோ மேற்கிலிருந்தோ பயணிக்கிற ஒளியுமிழும் நட்சத்திரத்தைப் பார்ப்பதைப் போன்று (ஆர்வத்துடன்) பார்ப்பார்கள். (அந்தஸ்தில்) தமக்கும் அவர்களுக்குமிடையேயுள்ள ஏற்றத்தாழ்வைக் கண்டு(ஏக்கம் கொண்டே) அப்படிப் பார்ப்பார்கள் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இதைக் கேட்ட) நபித் தோழர்கள், இறைத்தூதர் அவர்களே அவை நபிமார்கள் தங்குமிடங்கள் தாமே?  அவற்றை மற்றவர்கள் அடைய முடியாதல்லவா? என்று கேட்டனர்.  நபி (ஸல்) அவர்கள், இல்லை, என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீதாணையாக! அ(ங்கே தங்குப)வர்கள். அல்லாஹ்வுக்காக ஒருவரை ஒருவர் நேசித்தவர்களும், அல்லாஹ்வின் மீது (உறுதியான) நம்பிக்கை கொண்டு இறைத்தூதர்களை உண்மையாளர்கள் என ஏற்றுக்கொண்டவர்களுமேயாவர் என பதிலளித்தார்கள். (அபூ ஸயீத் அல்குத்ரீ(ரழி) புகாரி: 3256, 6556, முஸ்லிம்: 2831, 5445, திர்மிதி, 2499, ரி/ஸா, 1887)

ஆக சுவர்க்கத்தின் சிறப்புப் படித்தரங்கள் நூறு என்றாலும் அவற்றின் வாயில்கள் பற்றியும் குர்ஆனும், ஹதீஃதும் பேசுகின்றன.

அதன் வாயில்கள் அவர்களுக்காகத் திறக்கப்பட்டிருக்கும் :

அதன் வாயில்கள் அவர்களுக்காகத் திறக்கப்பட்ட நிலையில் இருக்கும் (38:50) என்று அல்லாஹ் கூறுகின்றான். இங்கு “வாயில்கள்’ என்பதைக் குறிக்க “அல்+அப் வாப்’ எனும் சொல் மூலத்தில் ஆளப்பட்டுள்ளது. இதற்கு “வாயில்கள்’ என்பது மட்டுமே பொருளாகும் எனினும் இதில் இடம் பெற்றுள்ள அலிஃப், லாம், எனும் தழுவியற் சொல்லானது “உடைமை’ எனும் பொருளைத் தாங்கியிருக்கிறது. இதன்படி “அவற்றுக்கான வாயில்கள்’ அவர்களுக்காகத் திறந்து வைக்கப்பட்டிருக்கும் என்று இவ் வசனத்திற்குப் பொருள் அமையும். அதாவது அவர்கள் அந்தச் சொர்க்கங்களுக்கு வரும்போது அவற்றின் வாயில்கள் என்பது மட்டுமே பொருளாகும். அதாவது அவர்கள் அந்தச் சொர்க்கங்களுக்கு வரும்போது அவற்றின் வயில்கள் அவர்களுக்காகத் திறக்கப்பட்டிருக்கும். (தஃப்சீர் இப்னு கஸீர்: 7:858) என்பதாகும்.

மேலும், சுவர்க்கத்தின் வாயில்களைக் குறித்தும் அவை எத்தனை என்பதைக் குறித்தும் பல்வேறு வழிகளில் ஏராளமான ஹதீஃத்கள் பதிவாகியுள்ளன. உதாரணமாக “எவர் அல்லாஹ்வின் பாதையில் ஏதேனும் ஒரு பொருளின் இரண்டு ஜோடிகளைச் செலவிட்டாரோ அவரைச் சுவர்க்கத்தின் வாசல்களில் உள்ள வானவ காவலர்கள் ஒவ்வொருவரும் இன்னாரே! இங்கே வாரும் “இன்னாரே இங்கே வாரும் என்று கூவி அழைப்பார்கள்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூஹுரைரா(ரழி) புகாரி: 2841,1897,3216,3666, முஸ்லிம்: 1863,1864, திர்மிதி, 3607, முஸ்னத் அஹ்மத்) மேலும், அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ரமழான் மாதம் வந்துவிட்டால் சுவர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன… என்று (அபூஹுரைரா(ரழி), முஸ்லிம்: 1956, 1957)

மேலும், சுவர்க்கத்தின் வாசல்களில் இரு வாசல்களுக்கிடையே நாற்பது ஆண்டுகள் நடந்து செல்லும் தூரம் இருக்கும். ஆனாலும் அன்றைய நாளில் அதில் நுழைபவர்களின் கூட்டம் நிரம்பியிருக்கும். எனினும் சுவர்க்கத்தின் உள்ளே இடம் மிகுதி இருந்து கொண்டே இருக்கும் இறுதியில் அல்லாஹ் புதியவர்களைப் படைத்துச் சுவர்க்கத்தில் மிகுதியுள்ள இடத்தில் அவர்களைக் குடியமர்த்துவான் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அனஸ்(ரழி), உத்பா இப்னு அஸ்வான்(ரழி), புகாரி: 7484, 4850, முஸ்லிம்: 2967, ரி/ஸா, 498)

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். சுவர்க்கத்தில் எட்டு வாசல்கள் உள்ளன. அதில் “ரய்யான்’ என்று அழைக்கப்படும் வாசல் ஒன்று உள்ளது. அதில் நோன்பாளிகளைத் தவிர வேறு எவரும் நுழையமாட்டார்கள் என்று (சஹ்ல் பின் சஅத்(ரழி) புகாரி: 3257,1896, ஜாமிஉத் திர்மிதி: 50) ஆக உலகத்தில் மனிதர்கள் செய்கின்ற நற்செயல்களைப் பொறுத்து அவ்வாயில்களின் பெயர்கள் அமைகின்றன. அந்தந்த நற்செயல்களில் முனைப்பாக இருந்தவர்கள் மறுமையில் அதற்கான சிறப்பு வாயில்கள் வழியாக சுவர்க்கத்தினுள் நுழைவார்கள் என அறிய முடிகிறது.

  1. தொழுகை வாயில், 2.அர்ரய்யான் எனும் நோன்பு வாயில், 3.அறப்போர் வாயில், 4. ஜக்காத் மற்றும் தானதர்மங்களின் வாயில், 5.ஹஜ், உம்ரா, வாயில், 6.அருள் எனும் பாவமன்னிப்பு வாயில், 7.திக்ர் வாயில், 8.வலப்புறம் எனும் விசாரணையின்றிச் சுவர்க்கம் செல்வோர் நுழையும் வாயில், என்றும் மேலும் இவையன்றி வேறுசில சுவர்க்க வாயில்கள் பற்றிய குறிப்பும் சில நூல்களில் காணப்படுகிறது. (இர்ஷாதுஸ்ஸாரீ, தஃப்சீர் இப்னுகஸீர்: 7:859)

நிரந்தரமாகக் கண் குளிர்ச்சியைத் தரும் அங்குள்ள வினோதமான பரிசுகளை யாரும் அறியமாட்டார்.

மேலும், அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்குக் கூலியாக அவர்களுக்கு என இறைவனால் மறைத்து வைக்கப்படிருக்கும் கண் குளிர்ச்சி தரும் பரிசுகளை யாரும் அறியமாட்டார்கள்.  (32:17, 19:61)

அருள் வளமும் மகத்தான உயர்வும் உடைய அல்லாஹ் எனது நல்ல அடியார்களுக்காக எந்தக் கண்ணும் கண்டிராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த மனிதரின் உள்ளத்திலும் தோன்றிராத, கண்களும் இதயங்களும் நிரந்தரக் குளிர்ச்சியை அடையும் அழியாத, நிரந்தர இன்பங்களைச் சுவர்க்கத்தில், தயார்படுத்தி வைக்கின்றேன் என்று கூறுகின்றான் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இதனை அறிவித்த அபூஹுரைரா(ரழி) அவர்கள், தாங்கள் விரும்பினால், அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்குக் கூலியாக அவர்களுக்கு என இறைவனால் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கண் குளிர்ச்சி தரும் பரிசுகளை யாரும் அறியமாட்டார்கள். (32:17) எனும் இந்த வசனத்தை ஓதிக்கொள்ளுங்கள் என்று கூறினார்கள். (புகாரி : 4779,4780,3244, முஸ்லிம் : 5437, 5439,5456, திர்மிதி : 3121, முஸ்னத் அஹ்மத்)

மூசா(அலை) அவர்கள் இறைவனிடம், சுவர்க்கத்தில் மிக உயர்ந்த தரமுடையவர் யார்? என்று கேட்டார்கள். அதற்கு இறைவன், அவர்களை நானே தேர்ந்தெடுத்தேன். அவர்களுக்குரிய தரங்களையும் நானே நேரடியாகத் தீர்மானித்தேன். அவற்றின் மீது நான் முத்திரையும் வைத்துவிட்டேன். எனவே, (அவர்களின் தரத்தை) எந்தக் கண்ணும் பார்த்திராது. எந்தக் காதும் கேட்டிராது. எந்த மனிதனின் உள்ளத்திலும் தோன்றியிராது என்றான் என்பதாக அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஃகீராபின் ஷிஅபா(ரழி) முஸ்லிம் : 312, திர்மிதி : 3122)

சுவர்க்கத்தில் நுழைபவர் இன்பத்தையே அனுபவிப்பார். அங்கு துன்பம் என்பதையே காணமாட்டார். அவரது ஆடைகள் இற்றுப் போகாது அவரது இளமை வற்றிப் போகாது சுவர்க்கத்தில் அவருக்காக எந்தக் கண்ணும் கண்டிராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த மனிதரின் மனத்திலும் தோன்றியிராத இன்பங்கள் உள்ளன என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூஹுரைரா(ரழி) முஸ்லிம்: 5456, முஸ்னத் அஹ்மத்)

அதாவது சுவர்க்கவாசிகளுக்கு அல்லாஹ் மறைத்து வைத்திருக்கும் நிலையான அருள் வளங்களான இனிமையான உணவுகள், பானங்கள், மதுபானங்கள், பழ வகைகள், ஆடைகள், வீடுகள், மாளிகைகள், மங்கையர்கள், மலர்ச்சிகள், ஆறுகள், அணிகலன்கள், இசைகள், இன்பங்கள், குரலோசைகள், வாகனங்கள் என கண்களுக்கும் இதயங்களுக்கும் நிரந்தரக் குளிச்சியையும், அமைதியையும் தரும் விதவிதமான இன்ப நுகர்வுச் சாதனங்களாகிய பரிசுகளை எவரும் அறியமாட்டார்.

சுவர்க்கத்தின்  நிரந்தர   சொந்தக்காரர்கள் :

இறை நம்பிக்கையாளர்களுக்கு நிச்சயமாகச் சுவர்க்கச் சோலைகள் கிடைக்கும் என்பதற்குப் பதிலாக அவர்களின் உயிர்களையும் அவர்களின் உடமைகளையும் அல்லாஹ் விலைக்கு வாங்கிக் கொண்டான் எனவே இறை நம்பிக்கையாளர்களே நீங்கள் அல்லாஹ்விடம் செய்துகொண்ட இந்த வியாபாரம் குறித்து மகிழ்ச்சி அடையுங்கள் இதுவே மிக மகத்தான வெற்றியாகும். (9:111)

“அல்அகபா’ உடன்படிக்கை கைஎழுத்தான இரவில் அப்துல்லாஹ் பின் ரவாஹா(ரழி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்காகவும் உங்களுடைய இறைவனுக்காகவும் நீங்கள் விரும்பிய நிபந்தனைகளை எங்கள் மீது விதித்துக் கொள்ளலாம் என்று கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், உங்களின் உயிர்களையும் உடமைகளையும் நீங்கள் எதிலிருந்தெல்லாம் காப்பீர்களோ அதிலிருந்தெல்லாம் என்னையும் நீங்கள் காக்கவேண்டும் என்று கூறினார்கள். அப்போது அன்சாரிகள் இதை நாங்கள் செய்தால் எங்களுக்கு என்ன கிடைக்கும்? என்று கேட்டார்கள்.

அதற்கு நபி(ஸல்) அவர்கள், “சுவர்க்கம் கிடைக்கும்” என்றார்கள். உடனே அன்சாரிகள் “இது ஒரு இலாபகரமான வியாபாரமாயிற்றே இந்த வியாபார ஒப்பந்தத்தை நாங்கள் ஒரு போதும் முறிக்கமாட்டோம். முறிக்குமாறு கோரவும் மாட்டோம் என்று கூறினார்கள். அப்போதுதான் இந்த (9:111) வசனம் அருளப் பெற்றது. (முஹம்மத் பின் அல்குறழீ(ரஹ்) தஃப்சீர் தபரீ, தஃப்சீர் இப்னு இதீர் 4:408,409) என்றும்,

மேலும், இந்த வசனத்திற்கு இறை நம்பிக்கையாளர்களிடம் அல்லாஹ் (மிகச் சிறந்த) வியாபார ஒப்பந்தம் (ஒன்றைச்) செய்துகொண்டான். அவர்களுக்கு அவன் மிக உயர்ந்த விலையைக் கொடுத்துள்ளான் என்று ஹஸன் அல்பஸ்ரி (ரஹ்) கத்தாதா(ரஹ்) ஆகியோர் விளக்கமளித்துள்ளார்கள். (தஃப்சீர் தபரீ, இப்னு கஸீர் : 4:408) இறை நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வுடன் செய்துகொண்ட அந்த வியாபார ஒப்பந்தத்தை நிறைவேற்றிடும்போது அவர்களை சுவர்க்கத்திற்கு சொந்தரக்காரர்களாக, உண் மையான வாரிசுகளாக, நிரந்தரமான உரிமை யாளர்களாக, குடியிருப்பாளர்களாக அல்லாஹ் ஆக்கிவிடுகின்றான். (23:10,11, 19:63, 7:43, 26:85, 43:72)

அவை உயர்தரமான “அத்ன்’ எனும் சுவர்க்கச் சோலைகள் ஆகும். மறைவாக உள்ள அவற்றை அளவற்ற அருளாளன் தனது நல்ல அடியார்களுக்கு வாக்களித்துள்ளான் நிச்சயமாக அவனது வாக்கு நடை முறைப்படுத்தப்பட்டே தீரும். அங்கு “சாந்தி’எனும் சொல்லைத் தவிர வீண் பேச்சு எதையும் அவர்கள் கேட்கமாட்டார்கள். அங்கு அவர்களுக்குக் காலையிலும் மாலையிலும் உணவு வழங்கப்படும். அந்தச் சுவர்க்கத்தை நமது அடியார்களில் யார் இறை அச்சமுடையோராக உள்ளனரோ அவர்களை நாம் வாரிசுகளாக்கி விடுவோம். (19:61-63)

இறை நம்பிக்கையாளர்கள் வெற்றியடைந்துவிட்டார்கள். அவர்கள்தாம் தமது தொழுகையில் உள் அச்சத்தோடும் பணிவோடும் இருப்பவர்கள். வீணானதிலிருந்தும் அவர்கள் விலகியிருப்பார்கள். அவர்கள் ஸகாத் எனும் கட்டாய தர்மத்தை வழங்குவார்கள். தமது கற்பை அவர்கள் பேணிக் கொள்வார்கள். தமது மனைவியர் அல்லது தமது வலக்கரங்கள் உடமையாக்கிக் கொண்ட அடிமைப் பெண்களிடம் தவிர, (இதனால்) அவர்கள் நிச்சயமாக பழிக்கப்படமாட்டார்கள். மேலும் தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதப் பொருட்களையும், தாம் செய்து கொண்ட ஒப்பந்தங்களையும் பேணிக் காப்பார்கள். அவர்கள் தமது தொழுகைகளைப் பேணித் தொழுது வருவார்கள். இவர்களே அந்த உண்மையான வாரிசுகள். அனந்தரக்காரர்கள் ஆவர். இவர்களே. ஃபிர்தெளவ்ஸ்” எனும் சொர்க்கத்தை உரிமையாக்கிக் கொள்வார்கள். அதில் அவர்கள் நிரந்தரமாகத் தங்கி இருப்பார்கள். (23:1-11)

மேலும், அவர்களின் நெஞ்சங்களில் இருந்து காழ்ப்புணர்ச்சியை நாம் அகற்றி விடுவோம் அவர்களுக்கிடையே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் அவர்கள் நமக்கு இதன்பால் வழிகாட்டிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் அல்லாஹ் மாத்திரம் நமக்கு நல்வழி காட்டியிராவிட்டால் நாம் நல்வழி அடைந்திருக்கவே மாட்டோம். நமது இறைவனின் தூதர்கள் நம்மிடம் உண்மையையே கொண்டு வந்தனர் என்று கூறுவார்கள். அப்போது இதுதான் சுவர்க்கம், நீங்கள் உலகில் நற்செயல் புரிந்து கொண்டி ருந்ததற்காக இது உங்களுக்கு நிரந்தர உடமையாக்கப்பட்டுள்ளது என்று அவர்களிடம் எடுத்துச் சொல்லப்படும் 7:43 என்றும் மேலும் நீங்கள் செய்து கொண்டிருந்த நன் மையானதன் காரணமாக இந்த சுவர்க்கத்தை நீங்கள் அனந்தரமாகப் பெற்றுக் கொண்டீர்கள் 43:72 என்று கூறப்படும்.

அத்தகைய, அருள்வளம் மிகுந்த சுவர்க்கத்தின் நிரந்தர வாரிசுகளில் ஒருவனாக என்னை நீ ஆக்குவாயாக 26:85 என்று இறைத்தூதர் இப்ராஹீம்(அலை) அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள். நாமும் ஒவ்வொருவரும் அவ்வாறே பிரார்த்திப்போமாக.

உங்களில் எவருக்கும் சுவர்க்கத்தில் ஒரு வசிப்பிடமும் நரகத்தில் ஒரு வசிப்பிடமும் என இரு வசிப்பிடங்கள் இல்லாமல் இருப்பதில்லை ஒருவர் மரணித்து அவர் நரகம் சென்றுவிட்டால் அவரது சுவர்க்கத்தின் வசிப்பிடத்தை சுவர்க்கவாசிகள் உடமையாக்கிக் கொள்வார்கள். அதுவே அவர்கள்தான் உரிமையாளர்களாவர் என்ற 23:10 ஆவது வசனத்தின் கருத்தாகும் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூஹுரைரா(ரழி) இப்னு மாஜா, இப்னு கஸீர்: 6:154)

அல்லாஹ் உங்களை நிரந்தரமான அமைதி இல்லத்திற்கு அழைக்கின்றான் :

சுவர்க்கத்திற்கு “அமைதி இல்லம்’ தாருஸ் ஸலாம் என்பதாகவும் அல்லாஹ் பெயர் சூட்டுகின்றான். அங்கே சோதனைகள், குறைகள், குற்றங்கள், துன்பங்கள், துயரங்கள், இழப்புகள் ஆகியவற்றில் இருந்து முற்றிலும் பாதுகாக்கப்பட்ட நிரந்தர அமைதி இல்லமாகும். அதனையே, அல்லாஹ் உங்களை அமைதி இல்லத்திற்கு அழைக்கின்றான். (10:25)  என்பதாகவும்,

அல்லாஹ்வின் தூதர்(ஸல்)  அவர்களும்  அழைக்கின்றார்கள் :

ஒருநாள் நபி (ஸல்) அவர்கள் உறக்கத்தில் இருந்தபோது அவர்களின் தலைமாட்டில் ஜிப்ரீல்(அலை) அவர்களும் கால்மாட்டில் மீகாயீல்(அலை) அவர்களும் இருப்பதைப் போன்று கனவு கண்டார்கள். அவர்களில் ஒருவர், இவர் உறங்கிக் கொண்டிருக்கின்றார் என்றார். அதற்கு மற்றவர் கண்தான் உறங்குகிறது உள்ளம் விழித்திருக்கிறது என்று கூறினார். பின்னர் அவர்களில் ஒருவர் தமது தோழரிடம் இந்த நண்பருக்கு ஓர் உவமை உண்டு. இவருக்கு அந்த உவமையை எடுத்துரையுங்கள் என்று கூறினார். இவரது நிலை ஒரு மன்னனின் நிலைக்கு ஒத்திருக்கிறது அவன் ஒரு மாளிகையைக் கட்டி அதில் ஒரு குடிலையும் அமைத்தான். பின்னர் அதில் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்து மக்களை அந்த விருந்துக்கு அழைப்பதற்காக ஒரு தூதரையும் அனுப்பினான். மக்களில் சிலர் அத்தூதரின் அழைப்பை ஏற்றனர். வேறு சிலர் அவரைப் புறக்கணித்தனர்.

இதில் அல்லாஹ்தான் அந்த மன்னன் இஸ்லாம்தான் அந்த மாளிகை சுவர்க்கம் தான் அந்தக் குடில் முஹம்மதே நீர்தான் அந்தத் தூதுவர். யார் உமது அழைப்பை ஏற் றாரோ அவர் இஸ்லாத்தில் நுழைந்துவிட்டார். இஸ்லாத்தில் நுழைந்தவர் சுவர்க்கத்தில் நுழைந்துவிட்டார். சுவர்க்கத்தில் நுழைந்தவர் அதில் உள்ளவற்றை உண்பார் என்று விளக்கமளித்தார் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஜாபிர்பின் அப்தில்லாஹ்(ரழி), புகாரி : 7281, திர்மிதி, தஃப்சீர் இப்னு கஸீர்:4: 492,493)

சுவர்க்கத்தின் மண் கஸ்தூரியிலானது :

மிஃராஜ் எனும் விண்ணேற்றப் பயணம் தொடர்பான நபிமொழியில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நான் சுவர்க்கத்தினுள் அனுமதிக்கப்பட்டேன். அங்கே சுவர்க்கத்தின் மண் நறுமணம் கமழும் கஸ்தூரியாக இருந்தது என்று (அனஸ் (ரழி), புகாரி : 349, 3342, முஸ்லிம் : 263)

இப்னு ஸய்யாத் என்பவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து சுவர்க்கத்தின் மண்ணைப் பற்றிக் கேட்டான் அதற்கு நபி(ஸல்) அவர்கள் வெண்மையானதாகவும் சுத்தமான கஸ்தூரியுமாகும் என்று பதிலளித்தார்கள். (அபூசயீத் அல்குத்ரீ(ரழி), முஸ்லிம் : 5612)

சுவர்க்கத்தின் அதி அற்புதமான அழகிய  கட்டட  அமைப்பு:

அல்லாஹ்வின் தூதரே! சுவர்க்கத்துடைய கட்டட அமைப்புகள் எப்படி இருக்கும் என்பது பற்றி எங்களுக்குத் தெரிவியுங்கள் என்று கேட்டோம் அதற்கு நபி(ஸல்) அவர்கள், சுவர்க்கத்தின் செங்கற்களில் ஒரு செங்கள் வெள்ளியாலும் மறு செங்கற்கள் பொன்னாலும் ஆனவை. அந்தச் செங்கற்களுக்கு இடையே இடப்படும் கலவையானது நறுமணம் கமழும் கஸ்தூரியாகும் சுவர்க்கத்தி(ன் நதிகளி)லுள்ள அதன் சிறு கற்கள் முத்து மற்றும் மாணிக்கத்தால் ஆனது சுவர்க்கத்தின் மண் (பட்டுப் போன்ற) குங்குமப் பூவாலானது எவர் அம்மாளிகையில் நுழைவார்களோ அவர்கள் இன்பத்திலேயே இருப்பார்கள், துன்பத்தைக் காணமாட்டார்கள், நிரந்தரமாக உயிருடன் இருப்பார்கள், மரணிக்கமாட்டார்கள், அவர்களின் ஆடைகள் இற்றுப்போகாது அவர்களின் இளமையும் மாறாது என்று கூறினார்கள். (அபூஹுரைரா(ரழி), திர்மிதீ 2646, முஸ்னத் அஹ்மத், தஃப்சீர் இப்னு கஸீர்: 4:334)

ஒருநாள் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் தமது தோழர்களிடம் உங்களில் சுவர்க்கத்தை அடைவதற்கு முயற்சிப்போர் யாரேனும் உண்டா? ஏனெனில் சுவர்க்கமானது நிகரில்லாத ஒன்றாகும் கஃபாவின் இறைவன்மீது சத்தியமாக சுவர்க்கம் என்பது பளபளக்கும் ஒளி வெள்ளமும், அசைந்தாடும் வாசனைச் செடிகளும், உயரமான மாளிகையும், ஓடிக்கொண்டிருக்கும் ஆறுகளும், நன்கு கனிந்த ஏராளமான கனி வகைகளும், அழகும் எழிலும் நிறைந்த துணைவியும், எண்ணிலடங்கா அணிகலன்களும் உள்ள இடமாகும். அது அமைதி இல்லத்தின் நிலையான தங்குமிடமாகும் வாழ்க்கையின் அனைத்து வளங்களும் செழிப்பும் அங்கு நிறைந்திருக்கும். உயர்ந்த தூய்மை யான அழகிய இல்லங்கள் நிறைந்த இடமாகும் அது என்று கூறினார்கள். (உசாமா பின் ஸைத்(ரழி) இப்னுமாஜா, முஸ்னத் அல்பஸ்ஸார், தஃப்சீர் இப்னுகஸீர்: 4:334, 335)

சுவர்க்கத்தின் அழகான கண்ணாடி மாளிகைகள்:

சுவர்க்கத்தில் சில கண்ணாடி அறைகள் உள்ளன. அவற்றின் உட்பகுதியிலிருந்து வெளியேயும் வெளிப்பகுதியிலிருந்து உள்ளேயும் பார்க்கம முடியும் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அலி (ரழி), திர்மிதி, 2646, முஸ்னத் அஹ்மத்)

சுவர்க்கத்தில் கூரைகள் உள்ளன. அதன் உட்புறம் வெளிப்புறத்திலிருந்தும் அதன் வெளிப்புறம் உட்புறத்திலிருந்தும் காணப்படும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி : 2647)         

நன்றி: அந்நஜாத் மாத இதழ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக