இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 17 நவம்பர், 2012

இறைத் தூதரோடு நமக்கென்ன தொடர்பு?

Image result for world and mankind
தர்மத்தை நிலைநாட்ட இறைவனால் அவ்வப்போது மனிதர்களுள் சிறந்தவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் மூலம் தன செய்திகளை மனிதர்களுக்கு அறிவிப்பது இறைவனின் வழக்கம். இவர்கள் தர்மத்தை போதிப்பதுடன் இறைவனின் பார்வையில் பாவம் எது புண்ணியம் எது என்பதை மக்களுக்கு எடுத்துரைத்தார்கள்.. அத்துடன் அந்த மக்களிடையே ஒரு சிறந்த முன் மாதிரி புருஷர்களாக வாழ்ந்தும் காட்டிச் சென்றார்கள். இதுவரை 1,24,000 இறைத்தூதர்கள் இப்பூமியின் வெவ்வேறு பாகங்களுக்கு வந்து சென்றுள்ளனர் என்பது இறுதி இறைத்தூதர் முஹம்மது நபிகள்(ஸல்) அவர்களின் கூற்று.
இன்று நாம் அவசியம் பதில் காண வேண்டிய கேள்விகள் சில உள்ளன::

·  இவர்களுக்கும் நமக்கும் என்ன தொடர்பு?

·  இவர்களை புறக்கணித்து நாம் நம் மனம்போன போக்கில் வாழமுடியுமா?

·  இவர்களில் யாரை வேண்டுமானாலும் பின்பற்றலாமா?

முதலாவதாக இவ்வாழ்க்கை என்பது தற்காலிகமானது, இறைவனால் நடத்தப்படும் பரீட்சை போன்றது என்பதை நாம் உணர்ந்தால், அடுத்ததாக நாம் செய்ய வேண்டியது இந்த பரீட்சையில் நாம் எப்படி வெற்றி பெறுவது என்பதை ஆராய்ந்து அறிய வேண்டும். இதில் அலட்சியம் காட்டினால் நாம் மறுமையில் நிரந்தரமாக நரகத்தில் வாழ வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாவோம். அப்படியானால் அந்நரகத்தை தவிர்த்து சொர்கத்தில் பிரவேசிக்க என்ன வழி? ஒரே ஒரு வழிதான் உண்டு! ஆம் அது அந்த இறைவனே காட்டித் தரும் வழி!

இன்றைய காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் நமக்காக அருளப்பட்ட இறைவேதத்தையும் நமக்காக அனுப்பப்பட்ட இறைத்ததூதரையும் பின்பற்றுவது ஒன்று மட்டுமே மோட்சத்துக்கு உரிய வழியாகும்! இது அல்லாத எந்த வழியும் நமக்கு மோட்சத்தைப் பெற்றுத்தருமா? தராது என்பது தெளிவான உண்மை! காரணம் இவ்வுலகுக்கு சொந்தக்காரன் இறைவன். அவன்தான் இவ்வுலகுக்கும் இவ்வுலகில் காணப்படும் அனைத்துக்கும் நம் புலன்களுக்கு எட்டாத அனைத்துக்கும் கடந்த காலங்களுக்கும் நிகழ்காலம், எதிர்காலங்களுக்கும் உரிமையாளன் அவன் ஒருவன் மட்டுமே! இம்மையும் மறுமையும் இறுதித் தீர்ப்பு நாளும் அவனுக்கே உரியன! இதோ அவ்விறைவனே தன இறுதி மறையில் கூறுகிறான்:
''நேர் வழியைக் காண்பித்தல் நிச்சயமாக நம் மீது இருக்கிறது. அன்றியும் பிந்தியதும் (மறுமையும்) முந்தியதும் (இம்மையும்) நம்முடையவையே ஆகும்.'                                                            (திருக்குர்ஆன் 92:12-13)
அவனைத்தவிர வேறு இறைவன் இல்லை என்பது தெளிவானபின் வேறு வழிகளில் மோட்சம் கிடைக்க வழி இல்லை என்பது உறுதியாகிறது.
இப்போது நம் முன் எழும் கேள்வி- இன்று பலரும்
·  எங்கள் வழிதான் நேர்வழி,
·  எங்கள் மூதாதையர் வழிதான் நேர்வழி,
·  நாங்கள் பின்பற்றி வருவதுதான் இறைவழி
·  எங்கள் இனத்தாருக்கும் இறைத்தூதர்கள் வந்துள்ளார்கள்.அவர்கள் வழியே எங்களுக்குப் போதும்,
என்றெல்லாம் கூறிக்கொண்டிருக்கும்போது, அந்த உண்மை வேதத்தையும் உண்மைத் தூதரையும் நாம் எப்படி அறிந்து கொள்வது?
வாருங்கள் சிந்தித்து அறிவோம்!
நம் மனிதகுலம் என்பது ஒன்றே ஒன்று! நாம் எங்கு வாழ்ந்த போதும எம்மொழியைப் பேசினாலும் எவ்வினத்தைச் சேர்ந்தோரானாலும் ஒரு தாய் ஒரு தந்தையில் இருந்து உருவாகிப் பல்கிப் பெருகி பரவியவர்களே. நாம் அனைவரும் ஒரே குடும்பத்தின் அங்கங்களே என்பதையும் நம் இறைவன் ஒரே இறைவனே எனபதையும் நாம் மறந்து விடக்கூடாது. இதை யார் மறந்தாலும் மறுத்தாலும் உண்மை உண்மையே! இன்றைய நவீன விஞ்ஞானமும இவ்வுண்மையை மெய்ப்பித்து நிற்கிறது.
நம் மனித குடும்பத்தை நேர்வழி நடத்த அவ்வப்போது நம் மூதாதையார்களிடையே தனது தூதர்களை அனுப்பினான் இறைவன். ஆக, அவர்கள் எந்த பூமியில் எக்காலத்தில் வந்திருந்தாலும் அனைவரும் நம்மவரே! அனுப்பப்பட்ட வேதங்கள் அனைத்துமே நமது வேதங்களே! இங்கு உங்கள் வேதம் எங்கள் வேதம் என்றோ அல்லது உங்கள் தூதர் எங்கள் தூதர் என்றோ பிரிவினை கொண்டாட துளியும் இடம் இல்லை!

அவர்கள் அனைவரும் தத்தமது மக்களை நோக்கி  இறைவன் ஒருவனையே வணங்குங்கள். அவனுக்கு கீழ்ப்படிந்து வாழுங்கள். அவ்வாறு கீழ்படிந்து வாழ்ந்தால் இவ்வுலகிலும் அமைதி காண்பீர்கள். அதற்குப் பரிசாக மறுமையில் சொர்க்கத்தை அவன் வழங்குவான். கீழ்ப்படியாமல் தான்தோன்றித்தனமாக நடந்தால் இவ்வுலகிலும் அமைதியின்மை காண்பீர்கள். மறுமையில் நரக தண்டனையும் உங்களுக்குக் காத்திருக்கிறது. என்று போதித்தார்கள்.
ஆனால் என்ன நடந்தது? தூதுர்களின் மறைவுக்குப் பின் அவர்களின் உருவச்சிலைகளை கடவுளாக பாவித்து வணங்க ஆரம்பித்தார்கள். இவ்வாறு கடவுள் உணர்வு சிதைக்கப்பட்டதன் காரணமாக பாவங்கள் பெருகின, இனத்துக்கு ஒன்று ஊருக்கு ஒன்று என்று கடவுளர்களின் எண்ணிக்கையும் பெருகிய காரணத்தால் ஜாதிகளும் பிரிவினைகளும் பல்கிப் பெருகின. இவ்வாறு அதர்மம் தலை தூக்கும்போதெல்லாம் மீண்டும்மீண்டும் தர்மத்தை நிலைநாட்ட மீண்டும்மீண்டும் தூதர்கள் அனுப்பப் பட்டனர். இவர்களில் இறுதியாக  வந்தவரே முஹம்மது நபி(ஸல்) அவர்கள்.
http://quranmalar.blogspot.com/2012/10/blog-post_25.html 
இஸ்லாம் என்றால் என்ன? முஸ்லிம் என்றால் யார்?

1 கருத்து: