இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 15 செப்டம்பர், 2021

மதுவிலிருந்து மக்களைக் காக்கும் 10 உறுதியான வழிமுறைகள்


 '
மது தீமைகளின் தாய்' என்றார்கள் நபிகள் நாயகம்(ஸல்).

சொல்லளவில் நின்றுவிடாமல் அவரைப் பின்பற்றும் கோடிக்கணக்கான மக்களை நூற்றாண்டுகளாக இத்தீமையில் இருந்தும் அது உண்டாக்கும் கொடூர விளைவுகளில் இருந்தும் தடுத்து வருகிறார்கள். மனித வரலாற்றில் அந்த மாமனிதர் நூற்றாண்டுகளாக நிகழ்த்திய மற்றும் நிகழ்த்திக் கொண்டிருக்கும் மாபெரும் சாதனைகளில் இதுவும் ஒன்று.

நம் நாட்டின் 30 சதவீதம் மக்களை அடிமைப்படுத்தியுள்ளது மது. கெட்டுப்போகும் இளைஞர் சமுதாயம், சீர்குலையும் குடும்ப உறவுகள், சிதையும் பொருளாதாரம், மங்கும் உழைப்புத் திறன், பெருகும் சாலை விபத்துகள, குடிநோய்கள், அதிகரிக்கும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள், தற்கொலைகள், குற்றச்செயல்கள்... என மதுவின் கொடுமைகள் நீள்கின்றன.

= பெண்களுக்கு எதிரான 85% குற்றங்களுக்குக் காரணமாக அமைவது மதுவே என்கிறது தேசிய குற்றவியல் ஆவணக்காப்பக (NCRB) அறிக்கை!

= கொடிய இந்த மது அரக்கனின் ஆதிக்கத்தில் இருந்து மனித குலத்தைக் காக்கவேண்டும் என்பது சமூகப் பொறுப்புணர்வுள்ள நல்ல மனிதர்களின் ஆவல். அது பெண்ணினத்தின் நிறைவேறாத கனவு. கொரோனா ஊரடங்கின் போது மதுவருந்தா ஆண்களைக் கண்டு மகிழ்ச்சியுற்றிருந்த குடும்பங்களில் மீண்டும் மண்ணை அள்ளிபோட்டது 'டாஸ்மாக்' கடைகளின் திறப்பு! சமூக விலகல் பேணாமல் அலைமோதியது 'குடிமகன்களின்' கூட்டம் என்பதையெல்லாம் நாமறிவோம்.

= மதுவிலக்கை அமுல்படுத்தி மக்களின் அமைதியைக் காக்க வேண்டிய அரசாங்கமே அதன் வருமானத்தை வைத்துப் பிழைக்கும் அவலநிலையில் இருக்கும்போது இத்தீமையில் இருந்து மக்களைக் காப்பாற்ற முடியுமா?

இனி மக்கள் கடுமையாகப் போராடி மதுவிலக்கை அரசு அமுல்படுத்தினாலும் அங்கு கள்ளச்சாராயம் ஊடுருவுவதைக் காண்கிறோம்.

மதுவிலிருந்து மக்களைக் காப்பாற்ற என்னதான் வழி?

எவ்வளவு சவால்கள் இருந்தாலும் அனைத்தையும் தாண்டி மக்களிடம் உரிய மனமாற்றங்களைச் செய்து அதன் மூலம் காப்பாற்ற முடியும் என்கிறது இஸ்லாம். அதை நடைமுறைப் படுத்தி உலகின் மக்களின் சுமார் நான்கின் ஒருபகுதியினரை இக்கொடுமையில் இருந்தும் அதன் விளைவுகளில் இருந்தும் காப்பாற்றி வருகிறது. எப்படி?

இஸ்லாம் என்றால் என்ன?

இஸ்லாம் என்றால் அதன் பொருள் கீழ்படிதல் என்பது. அதன் இன்னொரு பொருள் அமைதி என்பதாகும். அதாவது இறைவன் கற்பிக்கும் எவல்விலக்கல்களை அல்லது கட்டுப்பாடுகளைப் (discipline) பேணி வாழ்வதால் தனிநபர் வாழ்விலும் குடும்ப வாழ்விலும் சமூக வாழ்விலும் பெறப்படும் அமைதிக்குப் பெயர்தான் இஸ்லாம்! இவ்வாறு கட்டுப்பாடு மிக்க வாழ்வை வாழ்ந்ததற்குப் இறைவன் புறத்திலிருந்து மறுமையில் நிரந்தர இன்பங்கள் நிறைந்த சொர்க்கம் பரிசாக வழங்கப்படும் என்கிறது இஸ்லாம்.

சில முக்கியமான உண்மைகளை தெளிவான முறையில் கற்பித்து அவற்றை அனுதினமும் பேணி வாழும் வகையில் வழிபாட்டு முறைகளை அமைத்து இஸ்லாம் அதனை வாழ்வியலாக ஏற்றுக் கொண்டோரை ஒழுக்கம் பேணுபவர்களாக்குகிறது:

1. தெளிவான கடவுள் கொள்கை:

சொல்வீராக: இறைவன் ஒருவனே, அவன் தேவைகள் அற்றவன் அவன் யாரையும் பெற்றேடுக்கவும் இல்லை. அவனையும் யாரும் பெற்றேடுக்கவும் இல்லை. அவனுக்கு நிகராக யாரும் எதுவும் இல்லை.” (திருக்குர்ஆன் 112:1-4)

இறைவனின் தன்மைகளை இவ்வாறு புரிந்து கொண்டு இடைத்தரகர்களுக்கோ மூடநம்பிக்கைகளுக்கோ வீண் சடங்கு சம்பிரதாயங்களுக்கோ இடம் கொடாமல் அவனை நேரடியாக வணங்க வேண்டும் என்று கற்பிக்கிறது இஸ்லாம். படைத்தவனைத் தவிர மற்றவை அனைத்தும் படைப்பினங்களே. எனவே அந்த இறைவனுக்கு பதிலாக படைப்பினங்களை - அவை உயிருள்ளவை ஆயினும் சரி உயிரும் உணர்வுமற்ற உருவங்களாயினும் சரி - அவற்றை வணங்குவதோ அல்லது கடவுள் என்று கற்பிப்பதோ மோசடியும் பாவமும் ஆகும் என்கிறது இஸ்லாம்.

2. தெளிவான வாழ்க்கைக் கண்ணோட்டம்:

இந்தக் குறுகிய தற்காலிக வாழ்வு ஒரு பரீட்சை என்றும் இவ்வுலகம் அதற்கான பரீட்சைக் கூடம் என்றும் கூறுகிறது இஸ்லாம். இவ்வுலக வாழ்க்கையில் மனிதனால் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் இறைவனால் பதிவு செய்யப்பட்டு அதுபற்றி மறுமையில் விசாரிக்கப்பட்டு அந்த அடிப்படையில் சொர்க்கமோ அல்லது நரகமோ அவனுக்கு வாய்க்க இருக்கிறது என்கிறது இஸ்லாம்.

= ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்;. அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்;. எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ. அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்;. இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை. (திருக்குர்ஆன் 3:185)

3. தொடர்ச்சியான இறை உணர்வு:

மேற்கண்ட நம்பிக்கைகளை பகுத்தறிவு பூர்வமாக விதைத்து படைத்த இறைவனை நேரடியாக வணங்கும் பண்பு சிறுவயதில் இருந்து கற்பிக்கப்படுவதால் அவனைப் பற்றிய மதிப்பும் மரியாதை உணர்வும் நம் செயல்களுக்கு அவனிடம் பதில் சொல்லியாக வேண்டும் என்ற பொறுப்புணர்வும் மனித உள்ளங்களில் விதைக்கப் படுகிறது. இந்த உணர்வை தொடர்ச்சியாக வலுவூட்டும் வண்ணம் அமைந்துள்ளது இஸ்லாம் கற்பிக்கும் தொழுகை. அங்கத் தூய்மை பேணி தினசரி ஐந்து வேளைகள் இறைவன் முன்னால் பயபக்தியோடு நின்று தொழும்போது இறை உணர்வு அவ்வப்போது புதுப்பிக்கப்படுவதால் மது போதை மட்டுமல்ல, மற்றெந்த பாவங்களின் பக்கமும் மனம் ஈர்க்கப்படுவதில்லை. மேலும் இந்தத் தொழுகைகளை அவ்வப்போது பள்ளிவாசல்களில் ஒன்று கூடி நிறைவேற்றும்போது எனைய மக்களோடு ஏற்படும் சகோதரத்துவ உணர்வும் தொடர்ச்சியான நல்லோர் சகவாசமும் பாவங்களில் இருந்து பாதுகாக்கும் வலுவான அரணாக அமைகின்றன.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் குளிப்பதையும் அன்று மதியம் பள்ளிவாசல்களில் ஜும்ஆ எனப்படும் கூட்டுதொழுகையில் கலந்து கொள்வதையும் கட்டாயமாக்கி உள்ளது இஸ்லாம். தொழுகைக்கு முன் நடத்தப்படும் திருக்குர்ஆன் மற்றும் நபிமொழி போதனையும் மனிதனை நல்வழிப்படுத்துபவையாக உள்ளன.

4. பாவங்கள் பதிவு பற்றிய விழிப்புணர்வு:

இன்று எங்கும் கண்காணிப்புக்காக பொருத்தப்படும் CCTV கேமராக்கள் அவற்றின் பார்வையில் படும் நிகழ்வுகளை பதிவு செய்வதை நாம் அறிவோம். அதைப்போலவே நம் ஒவ்வொருவரது கண்களும் நமது நடவடிக்கைகளை இயற்கையாகவே பதிவு செய்து கொண்டிருக்கின்றன. அவை மட்டுமல்ல, நமது காதுகளும் தோல்களும் அதுபோலவே பதிவு செய்கின்றன என்றும் அவை மறுமையில் மனிதனுக்கெதிராக சாட்சி கூறும் என்றும் திருக்குர்ஆன் கூறுகிறது:

= தன்னை ஒருவரும் பார்க்கவில்லையென்று அவன் எண்ணுகிறானா?அவனுக்கு நாம் இரண்டு கண்களை ஆக்கவில்லையா? மேலும் நாவையும், இரண்டு உதடுகளையும் (ஆக்கவில்லையா)? (திருக்குர்ஆன் 90:7-9 )

 

5. பாவமன்னிப்பு பற்றிய தெளிவு:

இறைவனை மாபெரும் கருணையாளன் என்று அறிமுகப்படுத்தும் அதேவேளையில் இடைத்தரகர்கள் கற்பிக்கக்கூடிய வீண் சடங்குகள் அல்லது மூடமான நம்பிக்கைகள் மூலம் பாவங்கள் மன்னிக்கப் படுவதில்லை என்கிறது இஸ்லாம். ஒருவர் செய்த பாவத்திற்கு அவரே பொறுப்பாவார் என்றும் மனம்வருந்தி இறைவனிடம் முறையிட்டு மன்றாடுதல் மூலமே பாவங்கள் மன்னிக்கப்பட வாய்ப்புண்டு என்று தெளிவுபட கூறுகிறது. பாவம் செய்தபின் குற்ற உணர்வில் இருந்து தப்பிக்க குறுக்குவழிகள் ஏதும் இங்கு இல்லை.

6. புண்ணியம் எது பாவம் எது என்பதற்கான அளவுகோல:

மனிதர்கள் மனோஇச்சைக்கு ஏற்ப பாவ புண்ணியங்களைத் தீர்மானிப்பது பாவங்கள் பெருகுவதற்கு மற்றொரு காரணம் ஆகும். உண்மையில் இவ்வுலகின் சொந்தக்காரனான இறைவன் எதைச் செய் என்று எவுகிறானோ அதுவே புண்ணியம். அவன் தடுக்கும் செயலே பாவம். அந்த வகையில் இன்று இறைவனின் இறுதிவேதமான திருக்குர்ஆனும் முஹம்மது நபி அவர்களின் நடைமுறைகளும் பாவபுண்ணியங்களை தீர்மானிக்கும் தெளிவான அளவுகோலைத் தருகின்றன.

7. மது மற்றும் போதைக்கு தெளிவான தடை:

இறைவனது கட்டளைப்படி மது என்பது முழுக்க தடை செய்யப்பட்டதாகும்.

= இறைநம்பிக்கை கொண்டோரே மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷத்தானின் அருவருக்கத்தக்க செயல்களில் உள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் - அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள். (திருக்குர்ஆன் 5:90 )

= இறைகட்டளையை மீறி அதை அருந்துவதும் உற்பத்தி செய்வதும் விற்பதும் வாங்குவதும் உதவுவதும் சுமப்பதும் என அனைத்தும் தடை செய்யப் பட்டதாகும். இறைவனின் சாபத்திற்கு உரிய பாவமாகும் என்றும் அவர்களுக்கு மறுமையில் நரக வேதனை காத்திருக்கிறது என்றும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் எச்ச்சரித்துள்ளதை நபிமொழி நூல்களில் காண்கிறோம்.

8. குடும்ப உறவும் பொறுப்பும் வலியுறுத்தல்:

மதுவை ஊக்குவிக்கும் ஒரு காரணி தனிமையும் பொறுப்புணர்வில்லா வாழ்க்கை முறையும் ஆகும். இஸ்லாம் பிரம்மச்சரியத்தையும் துறவறத்தையும் தடை செய்து திருமணத்தையும் குடும்ப உறவு பேணுவதையும் வலியுறுத்துகிறது. குடும்பப் பொறுப்புகள் பற்றி இறைவனிடம் விசாரணை உண்டு என்று கூறுகிறது. ‘’ஆண், தன் குடும்பத்தாருக்குப் பொறுப்பாளன் ஆவான். அவன், தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவான்.” என்று நபிகளார் கூறியுள்ளார்கள். (நூல்:புகாரி)

9. ஆட்சியாளர்களின் பொறுப்பு

= சட்டம் ஒழுங்கைப் பேணுவதும் மது மற்றும் போதைப்பொருட்களுக்கு முழுமையான தடை விதிப்பதும் மீறுவோரைக் கடுமையான முறையில் தண்டிப்பதும் அரசின் பொறுப்பாகும் என்கிறது இஸ்லாம். இப்பொறுப்பை நிறைவேற்றாத ஆட்சியாளர்கள் இறைவனின் தண்டனைக்கு ஆளாவார்கள் என்றும் நபிகள் நாயகம் அவர்கள் எச்சரித்துள்ளார்கள்:

'உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர் ஆவார். தன் பொறுப்புக்கு உட்பட்டவை பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளரே! தன் குடிமக்கள் பற்றி அவர் விசாரிக்கப்படுவார்.....' (நூல்: புகாரீ)

10. மது அருந்துவோருக்கு தண்டனை:

மதுவின் தீமைகளில் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்க ஒரு நடைமுறை சாத்தியமான தீர்வையும் நபிகள் நாயகம் காட்டிவிட்டுச் சென்றார்கள். அதை மதீனாவில் அரசாட்சி கைவந்தபோது நடைமுறைப்படுத்தவும் செய்தார்கள். நம்மாலும் இன்று அதை நடைமுறைப்படுத்த முடியும். அது என்ன?

= மது குடித்த நிலையில் பொதுவெளியில் வெளிப்படும் நபர்களை தண்டிக்கும் உரிமையை பொதுமக்களுக்குக் கொடுத்தார்கள் நபிகளார். அவ்வாறு மதுவருந்தி போதையேறிய நபர் ஒருவரை மக்கள் கைகளாலும் பேரித்த மர மட்டையாலும், செருப்புகளாலும் அடித்த சம்பவத்தை நபிமொழித் தொகுப்பில் காண்கிறோம் (நூல்: அஹ்மத்)

இவ்வாறு மதுவிலக்கை அமுல்ப்படுத்துவதோடு பொதுமக்களுக்கு முன் குடித்த நிலையில் வருபவர்களுக்கு உடனடி தண்டனை வழங்க ஏற்பாடு செய்தால் யாராவது அதற்குத் துணிவார்களா? பாதிக்கப்படும் மக்களுக்கு 'குடிமகன்களை' தண்டிக்கும் அதிகாரத்தைக் கொடுத்து அதை சட்டபூர்வமாக்கலாம். இதை தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பினால் நாடே இதுகுறித்து விழிப்புணர்வு பெறும் என்பதில் ஐயம் இல்லை.

ஆக, இறை உணர்வையும் மறுமை உணர்வையும் உரிய முறையில் விதைப்பதன் மூலம் மனித மனங்களைப் பண்படுத்தி மதுவிலிருந்து விலகி வாழும் நல்லோர்கள் நிறைந்த சமூகத்தை உருவாக்க உழைப்போம் வாரீர்.

--------------------- 

இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?

1 கருத்து:

  1. மாஷா அல்லாஹ்! அருமையான விளக்கமான பதிவு! அல்ஹம்துலில்லாஹ்.
    அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக! ஆமீன்

    பதிலளிநீக்கு