இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 1 ஜூலை, 2015

உலக வரலாற்றைப் புரட்டிப் போட்ட அந்த இரவு!


நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம்.
மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக்க மேலானதாகும். (திருக்குர்ஆன் 97:1-3)
திருக்குர்ஆன் என்ற இறைவனின் வேதவரிகள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முதன்முதலாக அந்த கண்ணியமிக்க இரவில்தான் அருளப்பட்டன. அரபு மாதமான ரமலானின் இறுதி இரவுகளில் ஒன்றே அது.  இந்த சரித்திர சிறப்பு வாய்ந்த நிகழ்வைக் கொண்டாடுவதற்காகவே உலகம் முழுக்க முஸ்லிம்கள் வருடாவருடம் இந்த மாதம் முழுக்க நோன்பு(விரதம்) வைத்து இம்மாதத்தின் நிறைவை ரம்ஜான் பண்டிகை  அல்லது ஈகைத் திருநாள் என்று சொல்லிக் கொண்டாடுகின்றனர்.
இறைவன் மனிதகுலத்தோடு தன் தொடர்பைப் புதுப்பித்த அந்த இரவை ஆயிரம் மாதங்களைவிட சிறந்தது என்று உயர்வாகக் கூறும் அளவுக்கு அது புண்ணியத்தாலும் சிறந்தது, உலகெங்கிலும் அந்த நிகழ்வு உண்டாக்கிய தாக்கத்தாலும் சிறந்தது!
அப்படியென்ன சிறப்பு அந்த இரவுக்கு?
ஆம், அங்கிருந்துதான் துவங்கியது உலகத்தின் மாபரும் புரட்சி! இஸ்லாம் என்ற சீர்திருத்த இயக்கம் உருக்கொண்டு பரவத்துவங்கியது அன்று! உலகெங்கும் வாழும் பலகோடி மக்களைப் பிணைத்திருந்த அடிமை விலங்குகளை உடைத்தெறிந்து அவர்களை  விடுதலை செய்த புரட்சி! இனம், நிறம், இடம், மொழி, குலம், கோத்திரங்களின் பெயர் சொல்லிப் பிளவுண்டு கிடந்த ஒரு தாய் மக்களை மீண்டும் ஒன்றே குலம், ஒருவனே இறைவன் என்ற மந்திரத்தின் கீழ் ஒருங்கிணைத்து அவர்களிடையே சகோதரப் பாசப் பிணைப்பை பின்னத் தொடங்கிய நாளும் அதுவே!
நபிகளாரின் நாற்பதாவது வயதில் தொடங்கி அவர்களின் மரணம் வரை சிறுகச்சிறுக அவருக்கு இறைவன் புறத்திலிருந்து அருளப்பட்ட வசனங்களின் தொகுப்பே திருக்குர்ஆன்! அந்த இறைவழிகாட்டுதல்களின் அடிப்படையில் நபிகளார் மக்களுக்கு ஒன்றே மனிதகுலம், ஒருவன் மட்டுமே இறைவன், அவனிடமே நம் மீளுதலும் இம்மை வாழ்வு பற்றிய விசாரணையும் உள்ளது, மறுமையில் நம் செயல்களுக்கு ஏற்ப சொர்க்கமோ நரகமோ வாய்க்க உள்ளது என்ற உண்மைகளை போதிக்கத் துவங்கினார். இறைவன் கற்பிக்கும் எவல்விலக்கல்களைப்  பேணி வாழ்ந்தால் இம்மையில் அமைதியும் மறுமையில் சொர்க்கமும் கிடைக்கும் என்று கூறினார். அந்த இறைவன் கற்பிக்கும் வாழ்க்கை நெறியே இஸ்லாம் என்று அறியப்படுகிறது. 
திருக்குர்ஆன் வந்திருக்கா விட்டால்.... என்ன நடந்திருக்கும்?
 ‘ஒன்றும் நடந்திருக்காது... எப்போதும்போலவே உலகம் இருந்திருக்கும்’ என்று சிந்திக்காதவர்களும் அதன் பயனை உணராதவர்களும்  கூறுவார்கள்....
ஆனால் அதன் பயனை உணர்ந்தவர்களைக் கேட்டுப் பாருங்கள்... அவர்கள் கூறுவார்கள்....
‘ஓ.... எண்ணிப்பார்க்கவே பயமாக இருக்கிறது...! ‘ என்று.
 திருக்குர்ஆனின் வரவு மூலம் பயனடைந்த ... தொடர்ந்து பயனடைந்து கொண்டிருக்கின்ற உலகெங்கும் பரவிக்கிடக்கும் உலக மக்கள்தொகையின் கால்வாசிக்கும் அதிகமான எண்ணிக்கையில் உள்ள அந்த  மக்களைக் கேட்டுப்பாருங்கள் அவர்கள் சொல்வார்கள்...
திருக்குர்ஆன் வந்திருக்கா விட்டால்....
= ‘நாங்களும் மனிதப்பிறவிகளே என்பதை உலகம் இன்னும் ஏற்றிருக்காது. வெள்ளையர்கள் எங்களை இன்னும் கடைச் சரக்காக விற்றுக்கொண்டிருப்பார்கள். அங்காடியிலும் ஆன்லைனிலும் எங்கள் உடல்களைக் காட்டி எங்களையும் ஏன், எங்கள் கிட்னிகளையும் உறுப்புக்களையும் சர்வசாதாரணமாக விலைபேசிக் கொண்டிருப்பார்கள்! பார்சல்கள் அனுப்பிக் கொண்டிருப்பார்கள்!  ... என்பார் தங்கள் இருண்ட நிறத்தின் காரணமாக உண்டான அடிமைத்தளைகளிலிருந்து விடுபட்டு ஆப்ரிக்காவிலும் அமெரிக்காவிலும் இன்ன பிற இடங்களிலும் சுதந்திரக் காற்றை சுவாசிப்போர்!
= காலாகாலமாக பீடித்திருந்த ஜாதிக் கொடுமைகளில் இருந்தும் தீண்டாமைத் தீமைகளில் இருந்தும் அந்நிகழ்வு காரணமாக விடுபட்ட ஒரு பெருங்கூட்டம் ‘இதுதான் இஸ்லாம் என்று தெரிந்திருந்தால் நாங்கள் இக்கொடுமைகளில் இருந்து எப்போதோ விடுபட்டிருப்போமே! காலம் தாழ்த்தியேனும் இந்த அருட்கொடையை அடையும் வாய்ப்பை எங்களுக்குத் தந்த இறைவனுக்கு நன்றிகள் பல! திருக்குர்ஆன் மட்டும் வந்திருக்காவிட்டால் இன்று வேற்றுமைகள் மறந்து கருப்பரும் வெள்ளையரும் ஏழைகளும் பணக்காரர்களும் அரசனும் ஆண்டியும் ஒரே வரிசையில் தோளோடு தோள் சேர்த்து அணிவகுத்து நின்று இறைவனை வணங்கும் விந்தையையும் ஒரே தட்டில் உணவுண்ணும் விந்தையைக் கற்பனைசெய்து கூட பார்க்க முடியாது! இறைவன் மிகப்பெரியவன்!’ என்று இறைவனின் புகழைப் பாடுவார்கள்.
பெண்ணினத்தின் குரல்
= ‘நாங்கள் இன்று உயிர்வாழ்வதே அந்த இறைவேதத்தின் வரவைக் கொண்டுதான்! அது மட்டும் வந்திருக்காவிட்டால் இவ்வுலகையே நாங்கள் கண்டிருக்க மாட்டோம். இன்று நாம் உங்களோடு பேசிக்கொண்டிருக்க மாட்டோம்...  எங்களைக்  கருவிலேயே கத்திகள் பதம் பார்த்திருக்கும்!... தப்பித்தவறிப் பிறந்திருந்தால் கள்ளிப்பாலும் விஷ ஊசிகளும் விளையாடியிருக்கும்!’ என்று தாம் இன்று உயிர் வாழும் அற்புதம் பற்றி பெண்ணினம் பேசும்.
= ‘எங்களுக்கும் ஆன்மா உண்டா என்ற சர்ச்சை தொடர்ந்திருக்கும்... எங்களுக்கும் ஆண்களிடம் உரிமைகள் உண்டு என்பதை அறியாமலே பெட்டிப்பாம்பாக வாழ்ந்துகொண்டு இருப்போம்.  மகளாக, மனைவியாக, தாயாக, குடும்ப உறவுகளோடு உரிய உரிமைகளோடு உணர்வுகளோடு வாழ வழிவகுத்தது அந்த நிகழ்வு. ஆணுக்குப் பெண் சமமே என்ற அந்த சிந்தனைப் புரட்சியை அறிமுகப்படுத்தியது அது. இன்றும் கூட தொடர்ந்து மறுக்கப்பட்டு வரும் பெண்ணுரிமைகளை அன்றே மீட்டுத்தந்தது இஸ்லாம். தலைமுறை தலைமுறைகளாக வரதட்சணை, வைப்பாட்டிகள், கற்பழிப்புக் கொடுமைகளில் இருந்து எம் இனத்தைக் காப்பாற்றிவருகிறது. இன்று நாங்கள் அனுபவிக்கும் சொத்துரிமை, கல்வி பெறும் உரிமை, பேச்சுரிமை, விரும்பியவரை மணந்துகொள்ளும் உரிமை, மணக்கொடை பெறும் உரிமை  ஆகியவற்றுக்கு அடித்தளம் இட்டது இஸ்லாம்!’   என்பார்கள் உலகெங்கும் வாழும் இஸ்லாமிய மங்கையர் கூட்டம்.
= ‘இன்றைய நவீன உலகில் எங்கள் உடல்களைக்  கடைச்சரக்காக்கி  விற்றுப்பிழைக்கும் கயவர்களிடம் இருந்தும் கற்பழித்துத் தூக்கி எறியும் காமுகர்களின் வஞ்சக வலையில் இருந்தும் தந்தைகள் இல்லா அனாதைக் குழந்தைகளை நாங்கள் கர்ப்பத்தில் சுமக்கும் இழிவில் இருந்தும் நாங்கள் விடுபட்டு கண்ணியமாக பாதுகாப்பாக வாழ்கிறோம் என்றால் அதற்கு வித்திட்டது அந்த இறைவனின் வேதமே.’ என்பார்கள் இஸ்லாமிய பெண்ணினத்தின் பிரதிநிதிகள்.
முதியோர் குரல்
= ‘எங்கள் பிள்ளைகளைப் பெற்றெடுத்து இறை அச்சத்தோடு வளர்த்ததன் காரணமாக இன்று நாங்கள் எங்கள் பிள்ளைகளின் அரவணைப்பிலேயே பாதுகாப்பாக வாழ்ந்து வருகிறோம். அதற்குக் காரணமாக இருந்தது குர்ஆனின் வரவு!’ என்பார்கள் இஸ்லாமிய முதியோர்கள். அந்நிகழ்வு நிகழாதிருந்தால் இன்று எம்மை உயிருடன் நீங்கள் பார்ப்பது சந்தேகமே. நாங்கள் முதியோர் இல்லங்களில் ஒதுக்கப் பட்டவர்களாகவோ வீடுகளை விட்டு துரத்தப்பட்டவர்களாகவோ ஆகியிருப்போம். நோய்வாய்ப்பட்ட நிலையில் படுக்கையிலேயே கருணைக் கொலைக்கு நாங்கள் ஆளாகவும் கூடும். இக்கொடுமைகளில் இருந்து காத்த இறைவனுக்கே புகழனைத்தும்’ என்பார்கள் இஸ்லாமிய முதியோர்கள்.
இல்லத்தரசிகளின் குரல்
= ‘இங்கு உலகில் பரவலாகக் காணும் குடிப்பழக்கத்திற்கு எங்கள் கணவன்மார்கள் ஆளாகியிருப்பார்கள். எங்கள் அண்டை அயலார் வீடுகளில் இன்று காணும் அட்டூழியங்கள் எங்கள் வீடுகளிலும் அன்றாடம் நடந்திருக்கும். கிடைக்கும் சம்பாத்தியத்திற்கு குடித்துவிட்டு வரும் கணவன்மார்களின்  அடியும் உதையும் ஏச்சும் பேச்சும் அனுபவித்துப் புழுங்கும் மனைவிமார்கள் படும் அவஸ்தையில் இருந்து காத்தது அந்த மாபெரும் வேதமே’ என்று இஸ்லாமிய மனைவிமார்கள் நன்றிப் பெருக்கோடு புகழ்ந்துரைப்பார்கள்.
உலகெங்கும் பலவிதமான குரல்கள்
 திருக்குர்ஆன் வந்திருக்கா விட்டால்.... என்ன நடந்திருக்கும்?
 இதோ இன்னும் பலவிதமான குரல்கள் உலகெங்கும் ஓங்கி ஒலிக்கின்றனவே...  அவற்றையும் கேட்போமே...
= இவ்வுலகைப் படைத்தவன் மட்டுமே வணக்கத்திற்குத் தகுதியான ஒரே இறைவன் என்பதை அறியாமல் முன்னோர்கள் கற்பித்தவற்றை எல்லாம் தெய்வங்கள் என நம்பி வணங்கி இருந்திருப்போம். இந்த தெய்வத்தை வணங்கினால் அந்த தெய்வம் கோபித்துக் கொள்ளுமோ அதை வணங்கினால் இது கோபித்துக் கொள்ளுமே என்ற குழப்பங்களுக்கு ஆளாகி அங்கும் இங்கும் தாவிக்கொண்டு இருந்திருப்போம். பாலைவனத்துக்கும் பள்ளத்தாக்குக்கும் மலைகளுக்கும் காடுகளுக்கும் வெவ்வேறு தேவதைகளும் கடவுளர்களும் உண்டென்று நம்பி இன்றும் மோசம் போயிருப்போம்.
=  இடைத்தரகர்கள் இன்றி பொருட்செலவின்றி சடங்கு சம்பிரதாயங்கள் இன்றி எளிமையாக யாரும் எப்போதும்  இறைவனை நெருங்க முடியும் வணங்கமுடியும் என்பதை மனித குலத்துக்குக்  கற்றுக் கொடுத்த அந்த வேதம் மட்டும் வந்திருக்காவிட்டால் இன்றும் நாங்கள் ஆள்தெய்வங்களிடமும் உணர்வில்லாப் பொருட்களின் முன்னாலும் சரணடைந்திருப்போம். எங்கள் சம்பாத்தியங்களை காணிக்கைகளாகக் கொட்டி இருப்போம். சுயமரியாதையை இழந்திருப்போம்!
= எங்கள் முன்னோர்கள் கற்பித்த மூடநம்பிக்கைகளில் மூழ்கிப் போய் எங்கள் குழந்தைகளை இஷ்ட தெய்வங்களுக்கு நாங்களே நரபலிகொடுத்து இருப்போம்! ஆன்மிகம் என்ற போர்வையில் வரும் ஆசாமிகளுக்கு இரையாகி இருப்போம். பெண்களின் கற்புகளை இழந்திருப்போம்.
= நிறத்தின், இனத்தின், சாதிகளின் பெயரால் மூட்டப்படும் தீண்டாமைத் தீயில் மானிட உணர்வுகள் பொசுங்கிப் போய் எங்களை நாங்களே வெட்டி சாய்த்திருப்போம்!  சக மனிதன் என் உடன்பிறப்பே என்பதை உணரவைத்த அந்த வேதம் மட்டும் வந்திருக்காவிட்டால் இன்றும் அக்கொடுமைகளுக்கு நாங்களும் துணை போயிருப்போம்.
= இடைத்தரகர்கள் வாய்மொழிகளை வேதங்களாக நம்பி பகுத்தறிவை இழந்திருப்போம்.. அவர்கள் இடுகின்ற கட்டளைகளை சிரமேற்கொண்டு பணிந்திருப்போம்... அவர்களின் பாதங்களைக் கழுவிக் குடித்திருப்போம்....  உழைத்து வியர்வை சிந்தி சேர்த்த எங்கள் சம்பாத்தியங்களை அவர்களின் காலடிகளில் சமர்ப்பித்து இருப்போம்! இவற்றில் இருந்தெல்லாம் எங்களையும் எங்கள் தலைமுறைகளையும் காத்த இறைவனுக்கு எவ்வளவு நன்றி கூறினாலும் தகும்!
ஆம், திருக்குர்ஆன் என்ற இறை அற்புதம் பூமிக்கு வந்திறங்கி அந்த நிகழ்வினால் பயன்பெற்ற கோடிக்கணக்கான உள்ளங்களின் உணர்வலைகளை எடுத்தெழுத முயன்றாலும் முடியாது.

சந்தேகங்களுக்கு அப்பாற்பட்ட வேதம்
http://quranmalar.blogspot.com/2015/06/blog-post_11.html 
நல்லொழுக்கம் பேணுதலே இஸ்லாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக