இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 10 ஜூன், 2016

அன்று பெய்தது தேன்மழை!


உலகெங்கும் வருடம் ஒருமுறை கொண்டாடப்படும் இந்த மனித சமத்துவ, சகோதரத்துவ விழாவின் பின்னணி என்ன?
இந்த மாதத்தில் ஒரு இரவு இருப்பதாகவும் அது ஆயிரம் மாதங்களைவிட சிறந்தது என்றும் அன்று வானவர்கள் இப்பூலோகம் வந்து கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதாகவும் இறைவனின் திருமறை கூறுகிறது. அவ்விரவின் மகத்துவத்தை அடைவதற்காகவே இறை விசுவாசிகள் ரமலான் மாதத்தின் இறுதிப்பகுதியில் பத்து இரவுகள் பள்ளிவாசல்களில் முழுமையாகத் தங்கி இறைவழிபாடுகளில் ஈடுபடுகிறார்கள்.
விசுவாசிகளின் தொழுகை, தானதர்மங்கள் போன்ற ஒவ்வொரு நற்செயல்களுக்கும் பொதுவாக பத்து முதல் எழுநூறு மடங்கு வரை அதிகமாக நற்கூலி வழங்கப்படுகின்றன. ஆனால் இம்மாதம் அவற்றிற்கு கணக்கின்றி நற்கூலிகள் வழங்கப் படுகின்றன.
இந்த ரமலான் மாதத்தின் சிறப்புக்கு ஒரு மிகச்சிறந்த காரணம் இருக்கிறது!
அது என்ன? அதை அறிய வரலாற்றில் சற்று பின்னோக்கி பயணிப்போம்...
அனைத்துமே ஆரம்பமானது அங்கே...
முஹம்மத் நபி அவர்கள் மக்கா நகரில் அன்று உயர்குலமாக அறியப்பட்டிருந்த  குரைஷிப் பரம்ரையில் அப்துல்லாஹ் மற்றும்  ஆமினா தம்பதியினருக்கு கி.பி. 571ல் பிறந்தார்கள். இவர்கள் தாயின் வயிற்றில் இருக்கும் போது தந்தையாரையும், பிறந்து சில மாதங்களில் தனது தாயாரையும் இழந்தார்கள். அநாதையான இவரை அவர்களின் சிறிய தந்தை அபூதாலிப் என்பவர் பெறுப்பேற்று வளர்த்தார்கள். அநதையாகவே வளர்ந்தாலும் நற்பண்புள்ளவராகவும் உண்மையாளராகவும் திகழ்ந்த இவரை மக்கள் அல் அமீன் (பொருள்: நம்பிக்கைக்கு உரியவர்) என்று பட்டம் சூட்டி அழைத்தனர்.
ஆனால் அவரைச்சுற்றி அனாசாரங்களும் மூடநம்பிக்கைகளும் அநியாயங்களும் அட்டூழியங்களும் வெகுவாகப் பரவியிருந்தன. அங்கு மக்கள்  முன்னோர்கள் விட்டுச்சென்ற முடமான பழக்கவழக்கங்களை கண்மூடித்தனமாகப் பின்பற்றி வந்தனர். யாரென்றே தெரியாதவர்களுக்கு எல்லாம் சிலைகள் வைத்து வணங்கினார்கள். கடவுளின் பெயரால் புரோகிதர்கள் கற்பித்த மூடநம்பிக்கைகளையும் வீண் சடங்குகளையும் மறுகேள்வி கேட்காமல் பின்பற்றினார்கள். பெண் குழந்தைகளை உயிருடன் புதைத்தனர், மது குடித்தனர், மனித உயிர்களை துச்சமாக மதித்தனர், பெண்களை அடிமைகளாக நடத்தினர், சாதராண விஷயத்திற்காக பலஆண்டுகள் தொடராக சண்டை இட்டுக் கொண்டனர்நிறவெறிகோத்திரவெறி, தேசியவாதம், சாதியம் போன்ற தீமைகள் கட்டுக்கடங்காமல் மக்களை அலைக்கழித்துக் கொண்டிருந்தன.
விடியலுக்கு ஏங்கிய உள்ளம்
இப்படிப்பட்ட சூழலில் அனைத்துமே அனைவருமே பாவங்களில் மூழ்கியிருப்பதால் நன்மை எது, நீதி எது, நியாயம் எது என்பதையே யாரும் சிந்திக்காமல் இருக்கும் நிலை! ஆனால் நபிகள் நாயகத்தின் மனம் மட்டும் அங்கு இதற்கோர் விடிவு பிறக்காதா என்று ஏங்கியது! அவரால் அந்த அசிங்க சூழலை சகித்துக் கொண்டிருக்க முடியவில்லை. அதன் விளைவாக அவர் மனம் தனிமையை விரும்பியது.
அவருக்கு அப்போது நாற்பது வயது நெருங்கியிருந்தது. சத்துமாவையும் தண்ணீரையும் எடுத்துக் கொண்டு மக்காவிலிருந்து இரண்டு மைல் தொலைவிலுள்ள நூர் மலையின் ஹிரா குகைக்குச் செல்லத் தொடங்கினார். அக்குகை நான்கு முழ நீளமும் ஒன்றே முக்கால் முழ அகலமும் கொண்டது. ரமழான் மாதத்தில் அங்கு தங்கி வணக்க வழிபாடுகளிலும், இப்புவியையும் அதைத் தாண்டிய பிரபஞ்சத்தையும் இயக்கும் அபார சக்தியைப்பற்றி சிந்திப்பதிலும் ஈடுபட்டார்கள்.
அன்று பெய்தது தேன்மழை!
இப்படிப்பட்ட அந்த சூழலில்... அந்த ரமலான் மாதத்தின் ஒரு இரவில்தான்... அந்த பேரற்புதம் நிகழ்ந்தது! ஆம் மனித வரலாற்றின் போக்கை மாற்றி எழுதிய அந்த அற்புதம்! விண்ணும் மண்ணும் உறவைப் புதுப்பித்துக்கொண்ட அற்புதம்!  வருடங்களாக வறண்டு கிடந்த வானம் பார்த்த பூமியின்மேல் வான்மழை பொழிந்தால் எப்படியிருக்கும்? அதுவும் பொழிந்தது தேன்மழையாக இருந்தால் கேட்கவும் வேண்டுமோ? ஆம்  அன்று பெய்த தேன்மழை அன்றோடு நின்று விடவில்லை. தொடர்ந்து பெய்தன அத்தேன் துளிகள்! நபிகளார் இப்புவியில் நடமாடிய காலம் வரை தொடர்ந்து சிறுகச்சிறுகப் பெய்தன அந்த அமுதத்தின் துளிகள். நபிகளாரின் இதயத்தில் சேகரமான அந்த  தேன்துளிகளின் தொகுப்பே இன்று உலகெங்கும் பரவி நிற்கும் திருக்குர்ஆன் என்ற வான்மறை!
அதைப்பற்றி அந்த வான்மறையில் இறைவன் இவ்வாறு கூறுகிறான்:
97:1- 3. நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம். மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக்க மேலானதாகும்.

ஆம், அது அவ்விரவு ஆயிரம்  மாதங்களைவிட மேலோங்கி நிற்கிறது. அந்த அருள் நிரம்பிய இரவும் அது கொண்டுவந்த அருட்கொடையும் இந்த பூமியில் விளைவித்த நன்மைகள் கொஞ்ச நஞ்சமா?
-------------------------
தொடர்புடைய ஆக்கங்கள்:

ரமலான் - இறைவனுக்கு நன்றிகூறும் மாதம்!

http://quranmalar.blogspot.com/2014/07/blog-post_10.html

உலக வரலாற்றைப் புரட்டிப் போட்ட அந்த இரவு!

http://quranmalar.blogspot.com/2015/07/blog-post.html


5 கருத்துகள்: