இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 29 செப்டம்பர், 2012

வணக்கத்திற்குரியவன் இறைவன் மட்டுமே!



இறை ஏகத்துவம்:
அகில உலகையும் படைத்து பரிபாலித்து வரும் இறைவன் ஒரே ஒருவனே! அவன் மட்டுமே வணக்கத்துக்கு உரியவன். அவன் மட்டுமே பிரார்த்தனைகளை ஏற்கக்கூடியவன். அவனை நேரடியாக விளித்துப் பிரார்த்திக்க வேண்டும். அவனைத் தவிர மற்ற அனைத்தும் படைப்பினங்களே. அவை அனைத்தும் அழியக்கூடியவையே. தன்னிகரில்லாத மற்றும் தனக்கு உவமையே இல்லாத இறைவனுக்கு கற்பனை உருவங்கள் சமைப்பதோ அல்லது உயிரும் உணர்வும் அற்ற பொருட்களைக்  காட்டி அவற்றைக் கடவுள் என்று சொல்வதோ பெரும் பாவமும் வீணும் வழிகேடும்  ஆகும்.
ஏகத்துவத்தை என் பேணவேண்டும்?
 இறைவனின் ஏகத்துவத்தை போதிப்பதே இறைத்தூதர்களின் அடிப்படைப் பணியாக இருந்தது. ஏனெனில் இதுதான் பூமியில் தர்மத்தை நிலைப் நாட்டுவதற்கான அடித்தளம். மனிதன் பாவங்களில் இருந்து விலகி இருக்க வேண்டுமானால் கடவுளைப் பற்றிய முறையான எண்ணமும் நம்பிக்கையும் அவனுள் விதைக்கப்பட வேண்டும். அந்த எல்லாம் வல்ல இறைவன் என்னைக் கண்காணிக்கிறான், நான் குற்றம் செய்தால் அவன் என்னை தண்டிப்பான் என்ற உணர்வு அவனுள் சதா இருக்க வேண்டும். 
அந்த அடிப்படையில் இந்த பூமிக்கு வந்த இறைத்தூதர்கள் அனைவரும் தத்தமது மக்களுக்கு கீழ்கண்டவாறு கடவுள் கொள்கையை போதித்தார்கள்:
·  இவ்வுலகைப் படைத்து பரிபாலித்து வரும் இறைவன் ஒரே ஒருவனே.  அவன் மட்டுமே உங்கள் வணக்கத்துக்கும் பிரார்த்தனைக்கும் உரியவன்.
· அவனை நேரடியாக வணங்க வேண்டும்.  அவனுக்கு இடைத்தரகர்கள் தேவை இல்லை. சடங்கு சம்பிரதாயங்களும் தேவை இல்லை.
·  அவனுக்கு ஓவியங்களோ உருவங்களோ சமைக்ககூடாது ஏனெனில் அவனைப்போல் எதுவுமே இல்லை
·  நாங்கள் அவனுடைய தூதர்கள் மட்டுமே. அவனுக்கு பதிலாக எங்களையோ எங்கள் சமாதிகளையோ உருவங்களையோ வணங்கக் கூடாது.
· படைத்தவனுக்கு பதிலாக படைப்பினங்களையோ உருவங்களையோ நீங்கள் வணங்குவீர்களாயின் உங்களுக்குள் பிரிவினைகளும் குழப்பங்களும் ஏற்படும்.
என்றெல்லாம் போதித்தார்கள். அத்துடன் அவர்கள் மக்களோடு மக்களாக வாழ்ந்து இறைவனின் போதனைகளின் படி பாவ புண்ணியங்கள் எவை என்பவற்றை கற்பித்தது மட்டுமல்லாமல் முன்மாதிரி புருஷர்களாகவும் வாழ்ந்து காட்டினார்கள். ஆனால் இறைத்தூதர்களின் மறைவுக்குப் பிறகு பிற்கால மக்கள் மெல்லமெல்ல  இக்கட்டளைகளை மீறினார்கள். ஷைத்தானின் தூண்டுதலால் இறைத்தூதர்களின் நினைவுக்காக அவர்களுக்கு  படங்களை வைக்க ஆரம்பித்தார்கள். நாளடைவில் அவற்றைச் சிலைகளாக வடித்து பின்னர் அவற்றை வழிபட ஆரம்பித்தார்கள். உண்மை இறைவனை மறந்தார்கள்! அதன் விளைவு?.....இறையச்சம் மக்களில் இருந்து அகல அகல, இடைத்தரகர்களும் மூடநம்பிக்கைகளும் பெருகப் பெருக......  கடவுளின் பெயராலேயே சுரண்டல்களும் அக்கிரமங்களும் நடந்தேறின. இவ்வாறு பூமியில் அதர்மம் பரவிப் படர்ந்தது..

இவ்வாறு பூமியில் அதர்மம் பரவும் போதெல்லாம் மீணடும் தர்மத்தை நிலைநாட்ட மீண்டும்மீண்டும் தூதர்களை இறைவன் அனுப்பினான். அவர்கள் மீணடும் இறை ஏகத்துவத்தைப் போதித்து தர்மத்தை நிலைநாட்டிச் சென்றார்கள்  ஆனால் பிற்கால மக்கள் அந்தத் தூதர்களையும் கடவுளாக்கினார்கள். இவ்வாறு கடவுளர்களின் எண்ணிக்கைப் பெருகப்பெருக மனிதகுலம் கூறுபோடப் பட்டு இன்று நாம் பல்வேறுபட்ட மதங்களில் நின்று கொண்டு நமக்குள் பகைமை பாராட்டிக்கொண்டு வாழ்கிறோம்!  ஆம் அன்பர்களே, இன்று ஒரே குடும்பத்தைச் சேர்ந்த  நம்மைப் பிரித்து வைத்திருப்பதும் நம்மை ஒருவருக்கொருவர் அண்ட விடாமல் தடுப்பதும் நாம் கொண்டிருக்கும் முரண்பட்ட கடவுட்கொள்கைகளே! ஆக, நமக்குள் பகைமை மறந்து
நாம் மீணடும் சகோதர பாசத்தோடு இணைய வேண்டுமானால் ஒரே இறைவனைப் பற்றி நாம் கொண்டிருக்கும் முரண்பாடுகளைக் களைந்தே ஆக வேண்டும்.
இறைவனை எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும்?
     இறைவனை அவன் எவ்வாறு அறிமுகப் படுத்துகிறானோ அவ்வாறே விளங்கிக் கொள்ள வேண்டும். அது அல்லாமல் நம் கற்பனையில் உதித்தவற்றை எல்லாம் கடவுள் என்று கற்பித்தால் ஒரே இறைவனுக்கு பதிலாக பல போலிக் கடவுள்கள் உருவாகி ஒவ்வொன்றையும் வணங்குவோர் தனித்தனி குழுக்களாகவும் ஜாதிகளாகவும் பிரிந்து தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளும் நிலைமை உருவாகிறது. ஆனால் இறைவனை அவன் எவ்வாறு கற்றுத்தருகிறானோ அவ்வாறு புரிந்துகொண்டு வணங்கும் போது மொழி, இனம், நிறம், மாநிலங்கள், நாடுகள் போன்ற தடைகளைக் கடந்து மனித சமத்துவமும் உலகளாவிய சகோதரத்துவமும் உருவாகிறது.
இறைவேதங்களில் தன்னை இறைவன் எவ்வாறு அறிமுகப்படுத்துகிறான்? இதோ, அவனது இறுதி வேதமாக அறியப்படக்கூடிய திருக்குர்ஆன் கூறுவதைப் பார்த்து விட்டு முந்தைய வேதங்களையும் பாப்போம்.
அல்லாஹ் என்றால் யார்?
 படைத்த இறைவனைத்  திருக்குர்ஆன் அரபிச் சொல்லான அல்லாஹ் என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ஏகனாகிய இறைவனைக் குறிக்கும் சொல்லே அல்லாஹ் என்பது. ஆங்கிலத்தில் காட், தமிழில் கடவுள், ஹிந்தியில் பகவான் என்றெல்லாம் குறிப்பிடப்படுவது போல் அரபு மொழியில் கடவுளைக் குறிக்கும் வார்த்தைதான் அல்லாஹ்! எனினும் மற்ற மொழி வார்த்தைகளோடு ஒப்பிடும் போது இவ்வார்த்தைக்கு ஓரிரு தனிச் சிறப்புக்கள் உள்ளன:
  இவ்வார்தையின் உண்மைப்பொருள் வணங்குவதற்குத் தகுதி வாய்ந்த ஒரே இறைவன் என்பது.
 இவ்வார்த்தைக்கு ஆண்பால் பெண்பாலும் கிடையாது, பன்மையும் கிடையாது. எப்போதும் இது ஒருமையிலேயே விளங்கும்.
 உதாரணமாக ஆங்கில வார்த்தை God – Gods , Godess  அல்லது கடவுள் கடவுளர்கள் என்றும் பகவான் பகவதி என்றும் பன்மைக்கும் பாலுக்கும் ஏற்றவாறு மாறுவதுபோல் அல்லாஹ் என்ற வார்த்தை ஒருபோதும் சிதைவதில்லை.
இப்படிப்பட்ட சிறப்புக்களின் காரணத்தால் உலகெங்கும் முஸ்லிம்கள் இறைவனை அல்லாஹ் என்ற வார்த்தை கொண்டு அழைக்கின்றனர். மாறாக அல்லாஹ் என்றால் அரபு நாட்டுக் கடவுள் என்றோ முஸ்லிம்களின் குலதெய்வம் என்றோ நினைத்து விடாதீர்கள்.
அந்த இறைவனைப் பற்றி மனித மனங்களில் எழக்கூடிய சந்தேகங்களுக்கெல்லாம் திருக்குர்ஆன் பதிலளிக்கிறது:
இறைவன் ஒருவனைத்தவிர வேறில்லை
 முதலில் இறைவன் ஒருவன் மட்டுமே என்பது பற்றி நமது பகுத்தறிவு என்ன சொல்கிறது?
ஒரு பள்ளிக்கூடத்திற்கு இரண்டு முதல்வர்கள் அல்லது ஒரு பேருந்துக்கு  இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட ஓட்டுனர்கள் இருந்தால் அது எவ்வாறு பெரும் குழப்பம் , கலகம் அல்லது விபத்தில் கொண்டு சேர்க்குமோ அதுபோல இவ்வுலகம் ஒன்றுக்கு மேற்பட்ட கடவுள்கள் இருந்தால் என்றோ அழிந்துபோய் இருக்கும் எனபதை நமது சாமானிய அறிவு கூட நமக்குச் சொல்கிறது.
திருக்குர்ஆனும் இவ்வாறு கூறுகிறது:
'(வானம் பூமி ஆகிய) இவற்றில் அல்லாஹ்வையன்றி வேறு தெய்வங்கள் இருந்திருந்தால், நிச்சயமாக இவையிரண்டும் அழிந்தே போயிருக்கும்......' (திருக்குர்ஆன் 21 : 22)
இறைவன் ஒருவனே என்பது பற்றியும் அவனது தன்மைகள் பற்றியும் இதோ திருக்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது:
நபியே நீர் கூறுவீராக! அல்லாஹ் அவன் ஒருவனே. அவன் தேவைகள் ஏதும் இல்லாதவன். அவன் எவரையும் பெற்றெடுக்கவில்லை அவனையும் யாரும் பெற்றெடுக்கவில்லை. அன்றியும் அவனைப்போல் எவரும் எதுவும் இல்லை.  (திருக்குர்ஆன் 112: 1-4)
59:22        அவனே அல்லாஹ், வணக்கத்திற்குரியவன், அவனைத் தவிர வேறு நாயன் இல்லை, மறைவானதையும், பகிரங்கமானதையும் அறிபவன், அவனே அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்.
59:23        அவனே அல்லாஹ், வணக்கத்திற்குரிய நாயன் அவனைத் தவர, வேறு யாரும் இல்லை, அவனே பேரரசன், மிகப்பரிசுத்தமானவன், சாந்தியளிப்பவன், தஞ்சமளிப்பவன், பாதுகாப்பவன், (யாவரையும்) மிகைப்பவன், அடக்கியாள்பவன், பெருமைக்குரித்தானவன் - அவர்கள் இணைவைப்பவற்றையெல்லாம் விட்டு அல்லாஹ் மிகத் தூய்மையானவன்.
59:24        அவன்தான் அல்லாஹ்; படைப்பவன், ஒழுங்குபடுத்தி உண்டாக்குபவன், உருவமளிப்பவன் - அவனுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன, வானங்களிலும், பூமியிலும் உள்ளவையாவும் அவனையே தஸ்பீஹு (செய்து துதி) செய்கின்றன - அவனே (யாவரையும்) மிகைத்தவன் ஞானம் மிக்கவன்.
வணக்கத்துக்கு உரியவன் யார்?

 மனிதர்களே! நீங்கள் உங்களையும்  உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா இறையச்சமும், தூய்மையும் உடையோராகலாம்.  (அல்குர்ஆன் 2:21)

அவன்தான் கர்ப்பக் கோளறைகளில் தான் நாடியபடி உங்களை உருவாக்குகின்றான்;. அவனைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் வேறில்லை. அவன் யாவரையும் மிகைத்தோனாகவும், விவேகம் மிக்கோனாகவும் இருக்கின்றான். (அல் குர்ஆன்  3:6).
 இவ்வாறு அனைத்து மனித குலத்துக்கும் பொதுவானவனும் சர்வவல்லமை கொண்டவனும் ஆகிய ஏக இறைவனை மட்டுமே வணங்க வேண்டும் என்று திருக்குர்ஆன் வலியுறுத்துகிறது. 
இறைவனை எவ்வாறு அறிவது?
 கடவுளைப் பற்றியும் மறுமை வாழ்க்கை பற்றியும் முரண்பாடுகள் இல்லாத  தெளிவான கொள்கை இருந்தால் மட்டுமே மனிதன் கடவுள் நம்பிக்கையில் நிலைத்திருப்பான். பாவங்களில் இருந்து விலகி இருப்பான். திருக்குர்ஆன் அதற்கு அறிவுபூர்வமாக வழிகாட்டுகிறது. அதனால் மனிதனுக்கு ஆர்வமும் ஈடுபாடும் உண்டாகிறது.
 நம்மைச்சுற்றி உள்ள படைப்பினங்களை பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து இறைவனை அறியுமாறு இறைவன் நம்மை அறிவுறுத்துகிறான்.
2:164      நிச்சயமாக வானங்களையும் பூமியையும் (அல்லாஹ்) படைத்திருப்பதிலும்; இரவும் பகலும் மாறி மாறி வந்து கொண்டிருப்பதிலும்; மனிதர்களுக்குப் பயன் தருவதைக் கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும்; வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்கி அதன் மூலமாக பூமி இறந்த பின் அதை உயிர்ப்பிப்பதிலும்; அதன் மூலம் எல்லா விதமான பிராணிகளையும் பரவ விட்டிருப்பதிலும் காற்றுகளை மாறி, மாறி வீசச் செய்வதிலும்; வானத்திற்கும் பூமிக்குமிடையே கட்டுப்பட்டிருக்கும் மேகங்களிலும் - சிந்தித்துணரும் மக்களுக்கு (அல்லாஹ்வுடைய வல்லமையையும் கருணையையும் எடுத்துக் காட்டும்) சான்றுகள் உள்ளன. 
அப்படிப்பட்ட இறைவனை இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக விளித்துப் பிரார்த்திக்குமாறு இறைவன் தன் தூதர்கள் மூலமாகவும் வேதங்கள் மூலமாகவும் கற்பிக்கிறான். இன்று இறுதிவேதம் திருக்குர்ஆன் வலியுறுத்துவது போலவே இறைவனின் முந்தைய வேதங்கள் என்றும் புனித நூல்கள் என்றும் மக்களால் பரவலாக நம்பப்படும் நூல்களிலும் இவ்வுண்மை வலியுறுத்தப் படுவதைக் காணலாம். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக