இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 6 செப்டம்பர், 2012

2. தர்மமும் பயங்கரவாதமும் (part 2)


சீர்த்திருத்தவாதத்திற்கு எதிராக   பயங்கரவாதம்

    சவுதி அராபியாவில் மக்கா நகரில் பிறந்து வளர்ந்த முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தமது நாற்பது வயது வரை  சாதாரண மனிதராகவும், ஒரு வியாபாரியாகவும் தான் இருந்தார்கள்.  ஆனால் தாம் வாழ்ந்த மக்களிடையே உண்மைக்கும் நேர்மைக்கும் நாணயத்திற்கும் பெயர்பெற்றவர்களாக இருந்தார்கள். மக்கள் அவரை ‘அல் அமீன்’ (நம்பிக்கைக்கு உரியவர்)) என்ற பட்டப்பெயர் கொண்டு மதிப்போடு அழைத்தார்கள்.
 ஆனால் அவரைச் சுற்றி வாழ்ந்த மக்கள் பலவிதமான  மூடநம்பிக்கைகளிலும் மூடப்பழக்கவழக்கங்களிலும் மூழ்கிக்கிடந்தார்கள். மக்காவில் இன்று காணப்படும் சதுர வடிவான கஅபா என்ற இறையில்லம் சுமார் 5000 வருடங்களுக்கு முன்னால் இப்ராஹீம் (ஆப்ரஹாம்) என்ற இறைத் தூதரால் ஏக இறைவனை வழிபடுவதற்காக கட்டப்பட்ட ஒன்றாகும். ஆனால் காலப்போக்கில் அதற்குள் 360 சிலைகள் நிறுவப்பட்டு  தினம் ஒரு சிலைக்கு வழிபாடு என்றவாறு நடத்திக் கொண்டிருந்தார்கள். அதிகாரம் படைத்தவர்களும் பலம் வாய்ந்தவர்களும் இடைத்தரகர்களும் சேர்ந்து கடவுளின் பெயரால் மக்களை அடிமைப் படுத்தியும் கொடுமைப் படுத்தியும் வந்தனர். குலவேற்றுமையும் இனவேற்றுமையும் ஆழமாய் வேரூன்றியிருந்த காரணத்தால் அவர்களுக்குள்ளே சண்டைகளுக்கும் கலகங்களுக்கும் பஞ்சமில்லாமல் இருந்தது.   பெண்ணடிமைத்தனமும் மூடநம்பிக்கைகளும் காரணமாக அவர்கள் பெண்குழந்தைகள் பிறந்தாலே இழிவு என்று கருதி அவர்களை உயிரோடு புதைக்கவும் செய்து வந்தார்கள். இன்னும் இவைபோன்ற பல அனாச்சாரங்களும் தலைவிரித்தாடிக் கொண்டிருந்தன.
 தன்னைச் சுற்றி இவையெல்லாம் நடந்துகொண்டிருக்க இவற்றுக்கான தீர்வுகளுக்காக அவரது மனம் ஏங்கிக கொண்டிருந்த வேளையில்தான் முஹம்மது (ஸல்) அவர்கள் இறைவனின் தூதராகத் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள். ஜிப்ரீல் என்ற வானவர் மூலம் நபிகளாருக்கு இறைவன் புறத்திலிருந்து வேதவசனங்களும் இறைகட்டளைகளும் வழிகாட்டுதல்களும் வரத் துவங்கின. 
முதன் முதலாக இறைவன் புறத்திலிருந்து இறங்கிய வசனங்கள் இவையே:
 (முஹம்மதே!) படைத்த உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக! அவன் மனிதனை கருவுற்ற சினை முட்டையிலிருந்து படைத்தான். ஓதுவீராக! உமது இறைவன் கண்ணியமானவன். அவனே எழுது கோலால் கற்றுத் தந்தான். அறியாதவற்றை மனிதனுக்குக் கற்றுத் தந்தான். (திருக்குர்ஆன் 96:1-5)
இவற்றைத் தொடர்ந்து வந்த இறைக் கட்டளைகளின் அடிப்படையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது நாற்பதாம் வயதில் தம்மைக் கடவுளின் தூதர் என்று மக்களிடையே பிரகடனம் செய்தார்கள். இறைவன் புறத்திலிருந்து தான் பெறும் செய்திகளையும் எச்சரிக்கைகளையும் மக்களுக்கு எடுத்துச் சொன்னார்கள்.
= இந்த உலகம் இறைவனால் படைக்கப் பட்டது. இங்கு வாழும் மனிதர்கள் யாவரும் இறைவனுக்கு கீழ்படிந்து வாழக் கடமைப் பட்டுள்ளார்கள் . அவ்வாறு வாழ்ந்தால் மட்டுமே இவ்வுலகில் நீதியும் அமைதியும் ஏற்படும். மறுமையிலும் நீங்கள் மோட்சத்தை அடைய முடியும்.
= ஒருநாள் இவ்வுலகம் முற்றாக அழிக்கப்படும். மீண்டும் இறைவனிடமிருந்து கட்டளை பிறப்பிக்கப் படும்போது இவ்வுலகின் மீது வாழ்ந்து மறைந்த அனைத்து மனிதர்களும் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவர். அன்று ஒவ்வொரு மனிதர்களும் இப்பூமியின் மேல் செய்த ஒவ்வொரு பாவமும் புண்ணியமும் எடுத்துக்காட்டப்பட்டு. விசாரிக்கப் படுவார்கள். விசாரணைக்குப் பிறகு புண்ணியவான்களுக்கு சொர்க்கமும் பாவிகளுக்கு நரகமும் விதிக்கப் படும். எனவே இறைவனின் கட்டளைகளை ஏற்று அவன் ஏவியவற்றைச் செய்யுங்கள். தடுத்தவற்றில் இருந்து விலகிக் கொள்ளுங்கள்.
= இறைவனின் கட்டளைகளில் முக்கியமானது அந்த ஏக இறைவன் மட்டுமே வணங்குவதற்குத் தகுதியானவன் என்று ஏற்றுக் கொள்வதாகும். அவனை இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக வணங்க வேண்டும். அவன் அல்லாத எதையுமே கடவுள் என்று சொல்வதோ வணங்குவதோ அறவே கூடாது. அவனுக்கு பதிலாக சிலைகளையோ உருவங்களையோ வணங்குதல் பெரும் பாவமாகும்.
= மனிதர்கள் அனைவரும் சீப்பின் பற்களைப் போல் சமமானவார்களே. இனத்தாலோ, குலத்தாலோ, நிறத்தாலோ, மொழியாலோ யாரும் யாரையும் விட உயர்ந்தவர்கள் அல்ல.  
= மேலும் கொலை, கொள்ளை, வட்டி, சூதாட்டம், விபச்சாரம், போதைப் பொருட்கள், பொய், பித்தலாட்டம், மோசடி, ஏமாற்றுதல், போன்ற எல்லாத் தீமைகளிலிருந்தும் மனிதர்கள் விலகி இருக்க வேண்டும்'
தான் இறைவனிடமிருந்து பெறும் செய்திகளை மக்கள் முன் எடுத்துரைத்து சத்தியப் பிரச்சாரத்தை துவங்கினார் நபிகள் நாயகம் (ஸல்). 

  கஃபா என்னும் ஆலயத்திலும், அதைச் சுற்றிலும்  சிலைகளை நிறுவி  அவற்றின் வழிபாட்டில் ஆழமாக மூழ்கிக்கிடந்த  சமுதாயத்தில் 'ஒரே ஒரு கடவுளை அதாவது படைத்தவனை  - மட்டும்  தான் - வணங்க வேண்டும்; மற்றவை கடவுள் அல்ல' என்று கூறினால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை யாரும் அனுமானிக்க முடியும்.
ஆம், நபிகள் நாயகம் இந்த ஏக இறைக்கொள்கையைச் சொல்லச் சொல்ல மக்கள் மத்தியில் புரட்சி புயலென எழுந்தது. ஆரம்பத்தில் ஒருசில பலவீனமானவர்களும் ஒடுக்கப்பட்டவர்களும்தான் இக்கொள்கையை ஏற்றுக் கொண்டார்கள். நாளடைவில் மற்றவர்களையும் கவர ஆரம்பித்தது.  ஆனால் மூதாதையர்கள் வளர்த்த மூடப் பழக்கவழக்கங்களில் மூழ்கிப் போயிருந்த பெரும்பான்மை மக்களோ இக்கொள்கைக்கு வன்மையான எதிரிகளாக மாறினார்கள்.

 
அன்றுவரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை உண்மையாளர், நம்பிக்கைக்கு உரியவர் என்றெல்லாம் பாராட்டிய மக்கள்  அவருக்கு பைத்தியம் என்று பட்டம் சூட்டினார்கள்  அவர்களையும், அவர்களது கொள்கையை ஏற்றுக் கொண்ட வர்களையும் சொல்லொனாத  துன்புறுத்தல்களுக்கும் சித்திரவதைகளுக்கும் ஆளாக்கினார்கள்.
 உதாரணத்திற்காக ஓருசில சம்பவங்களை மட்டும் இங்கு காண்போம்:
= நபிகளார் பிரச்சாரம் செய்யும்போது அவரது முகத்தில் மண்ணை வாரித் தூவினார்கள். ‘பைத்தியக்காரர்’ ‘சூனியக்காரர்” என்று வசை பாடினார்கள்.
= கஅபா ஆலயத்தின் அருகே அவர் தன் நெற்றியை தரையில் வைத்துத் தொழுது கொண்டு இருக்கும்போது அவரது தலைமீது அறுக்கப் பட்ட ஒட்டகத்தின் சாணத்தையும் இரத்தத்தையும் கழிவுப் பொருட்களையும் கொண்டுவந்து கொட்டி அவர் தம் தலையைத் தூக்க இயலாமல் தத்தளிப்பது கண்டு எள்ளி நகையாடினர்.
= அவர் நடக்கும் பாதையில் முட்களைப் பரப்பிவைத்தார்கள். வீட்டிற்கு முன் கழிவுப் பொருட்களையும் குப்பைகளையும் கொட்டி வைத்தார்கள்.
= தாயிப் என்ற இடத்தில் அவர் பிரச்சாரம் செய்யும் வேளை சிறுவர்களை ஏவிவிட்டு இரத்தம் சிந்த கல்லால் அடித்தார்கள்.
  = இக்கொள்கையை ஏற்றுக் கொண்ட நலிந்தோர்களையும் அடிமைகளையும் கொன்று குவித்தார்கள். மூதாதையர்களின் மதங்களையும் கடவுளர்களையும் மதிக்காதவர்களுக்கு இதுதான் கதி என்று மக்களை அச்சுறுத்தினார்கள்.
= ஏக இறைவன் மட்டுமே வணக்கத்திற்கு உரியவன். அவனைத் தவிர எதுவும் வணக்கத்திற்கு உரியவை அல்ல (அரபியில் ‘லா இலாஹ இல்லல்லாஹ்) என்று கூறியமைக்காக பகல் முழுக்க பாலைவனத்து சுடுமணலில் வெற்றுமேனியில் கிடத்தி பாறாங்கற்களை ஏற்றினார்கள்.
= தண்ணீர் தொட்டிமுன் முழங்காலிட வைத்து தலையை நீரில் அழுத்தி மூச்சு முட்ட வைத்து சிலைவழிபாட்டுக்குத் திரும்புமாறு பணித்தார்கள்.
= பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பிகளால் உடலில் சூடிட்டு தாய்மதம் திரும்ப வற்புறுத்தினார்கள்.
= இன்னும் இவைபோன்ற பல்வேறுவகையான சித்திரவதைகளும் ஊரெங்கும் அரங்கேறிக் கொண்டு இருந்தன.
 இங்கு நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால் – நபிகள் நாயகம் ஒரு புதிய கடவுளை அறிமுகப்படுத்தி அதை வணங்க மக்களை அழைக்கவில்லை. ஒரு புதிய மதத்தை நிறுவி அதில் சேருமாறு மக்களை அழைக்கவில்லை. மக்களுக்கும் நாட்டுக்கும் நன்மைபயக்கக் கூடிய ஒரு அழகிய சீர்திருத்தக் கொள்கையை முன்வைத்து அதன்பால்தான் அழைத்தார்கள். இந்த சீர்திருத்த இயக்கத்துக்கு எதிராகத்தான் பயங்கரவாத அடக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன.
(தொடரும் இன்ஷா அல்லாஹ்) 

http://quranmalar.blogspot.com/2012/09/1.html 
தர்மமும் பயங்கரவாதமும் (part-1)
http://quranmalar.blogspot.com/2012/09/blog-post.html 
தர்மமும் பயங்கரவாதமும் (part 2) 
http://quranmalar.blogspot.com/2012/09/3.html 
தர்மமும் பயங்கரவாதமும் (part-3)
http://quranmalar.blogspot.com/2012/09/4.html 
தர்மமும் பயங்கரவாதமும் (part-4)
http://quranmalar.blogspot.com/2012/09/5.html 
 தர்மமும் பயங்கரவாதமும் (part-5)
http://quranmalar.blogspot.com/2012/09/6.html 
தர்மமும் பயங்கரவாதமும் (part-6)
http://quranmalar.blogspot.com/2012/09/7.html 
தர்மமும் பயங்கரவாதமும் (part-7)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக