இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 6 செப்டம்பர், 2012

1. தர்மமும் பயங்கரவாதமும் (part-1)


பொறுமை - தர்மத்தின் காவலர்களின் கடமை!

இஸ்லாம் என்றாலே அமைதி என்று பொருள். அதன் இனியொரு பொருள் கீழ்படிதல் என்பது.  படைத்த இறைவனுக்கு கீழ்ப்படுவது மூலம் தனிநபர் வாழ்விலும் சமூக வாழ்விலும் அமைதியை அடைவதும் அதை உலகில் நிலைநாட்டுவதும்தான் இஸ்லாம் மார்க்கத்தின் குறிக்கோள். அமைதியை நிலைநாட்ட வேண்டுமென்றால் தனிநபர் வாழ்விலும் அதைத்தொடர்ந்து சமூக வாழ்விலும் ஒழுக்கத்தைப் பேணவேண்டும். அதாவது நம்மைச் சுற்றி தர்மத்தையும் நீதியையும் நிலைநாட்ட வேண்டும். இக்குறிக்கோளுக்காகப் பாடுபடும்போது. சமூகத்தில் உள்ள அநீதியாளர்களும் அதர்மத்தை வைத்துப் பிழைப்பு நடத்துபவர்களும் தர்மம் வளர்வதற்கு முட்டுக் கட்டையாக இருப்பார்கள். சிலர் சுயநலத்தின் காரணத்தாலும் பலர் அறியாமையின் காரணத்தாலும் தர்மத்திற்கு எதிராக அணிதிரள்வார்கள். முழுமூச்சாக அதை எதிர்த்து நிற்பார்கள்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் தர்மத்தை நிலைநாட்டப் புறப்பட்டவர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? தமது குறிக்கோளை அடைய கொண்ட கொள்கையை விட்டுக் கொடுக்காமல் எதிர்ப்புகளைக் கண்டு துவண்டுவிடாமல் மிகமிகப் பொறுமையோடும் ஆழ்ந்த விவேகத்தோடும் நடந்து கொள்வது மூலம் மட்டுமே எதிர்ப்பவர்களைத் தன்வயப்படுத்தவும் வெல்லவும் முடியும்! நமது நோக்கம் மக்களைச் சீர்திருத்துவதுதான். மக்கள் நமது எதிரிகள் அல்ல. எதிர்ப்போரையெல்லாம் கொன்றோதுக்கி விட்டு அவர்களின் சமாதிகளின் மீது நிலைநாட்டப் படவேண்டியதல்ல தர்மம்!  மாறாக மக்களைத் திருத்தி அவர்கள் கரங்களைக் கொண்டே வீழ்ந்துகிடக்கும் தர்மத்தை தூக்கி நிறுத்த வேண்டும். இதை மனித இனத்துக்குக் கற்றுக் கொடுப்பதற்குத்தானே கருணையுள்ள இறைவன் தனது தூதர்களை அவ்வப்போது இப்பூமிக்கு அனுப்புகிறான்.
 அத்தூதர்கள் ஒவ்வொருவரும் தத்தமது மக்களிடம் வந்து அவர்கள் ஷைத்தானின் தாக்கத்தின்கீழ் செய்து கொண்டிருக்கும் அநியாயங்களைப் பற்றியும் அக்கிரமங்களைப் பற்றியும்  எச்சரித்தார்கள், அவர்கள் முன்னோர்களின் வழக்கம் என்ற பெயரில் செய்து கொண்டிருக்கும் மூடப்பழக்கவழக்கங்களுக்கும் பலம் வாய்ந்தவர்கள் பலவீனமாவர்களிடம் செய்து கொண்டிருக்கும் உரிமை மீறல்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்குமாறு அவர்களைக் கேட்டுக்கொண்டனர். அவர்களுக்குப்  படைத்த இறைவனைப் பற்றியும் அவனுக்குக் கட்டுப்பட்டு இப்பூமியில் வாழவேண்டியதன் அவசியத்தையும் அவன் மறுமையில் நம்மை விசாரிக்க இருப்பது பற்றியும் நினைவூட்டினார்கள். பாவிகளுக்கு கிடைக்கவுள்ள நரக தண்டனைகள் பற்றியும் புண்ணியவான்களுக்குப் பரிசாகக் கிடைக்கவுள்ள சொர்க்கவாழ்வு பற்றியும் எடுத்துரைத்தார்கள்.
 இவ்வுலகின் சொந்தக்காரனும் சர்வவல்லமை பொருந்தியவனும் ஆன  இறைவனின் தூதர்கள் என்ற முழு அதிகாரத்தோடு அவர்கள் மக்களிடம் வந்தாலும் அவர்கள் இறைவனின் கட்டளைகளை பலவந்தமாக மக்களின் மேல் திணிக்கவில்லை. படிப்படியாக மக்களிடம் போதனை செய்து அவர்களைத் திருத்தினார்கள். இறைவனுக்குக் கீழ்படிதல் என்ற கொள்கையை (அரபு மொழியில் இஸ்லாம்) ஏற்றுக்கொண்ட மக்களைச் சிறுகச்சிறுகச் சேர்த்து இந்தச் சீர்திருத்த இயக்கத்தை வளர்த்தார்கள். இந்த சீர்திருத்த சிந்தனைகள் மக்களிடையே பெரும் புரட்சிகளை ஏற்படுத்தின. முக்கியமாக படைத்த இறைவன் மட்டுமே வணக்கத்திற்கு உரியவன் என்ற சிந்தனை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. படைப்பினங்களோ அல்லது மனிதர்களோ அல்லது முன்னோர்களோ அவர்களின் சிலைகளோ வணக்கத்திற்கு உரியவை அல்ல என்ற உண்மையை மக்கள் உணர்ந்த மாத்திரத்திலேயே அவர்கள் இறைவனை நேரடியாக வணங்கவும் தங்கள் தேவைகளைக் கோரி பிரார்த்திக்கவும் முற்பட்டனர். அவர்களிடம் குடிகொண்டிருந்த மூட நம்பிக்கைகள் அகன்றுபோயின. தன்மானம்  உள்ளவர்களாகவும் சுயமரியாதை மிக்கவர்களாகவும் ஆனதன் விளைவாக அதுவரை அவர்களைக் கடவுளின் பெயரால் ஏய்த்துக் கொண்டிருந்த இடைத்தரகர்களையும் ஆதிக்க வர்க்கத்தினரையும் புறக்கணிக்க ஆரம்பித்தனர்.
 இதன் விளைவாக ஆதிக்க வர்க்கமும் ஆன்மீகத் தலைவர்களும் அநியாயத்தையும் அதர்மத்தையும் முதலீடாக வைத்து மக்களை ஏய்த்துப் பிழைப்பு நடத்துபவர்களும் இணைந்து அந்த இறைத்தூதருக்கும் சீர்திருத்தவாதிகளுக்கும் எதிராக பொய்களையும் புகார்களையும் மக்களிடையே பரப்பியதோடு பயங்கரமான அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிட்டனர்.
 இறைத்தூதரைப் பொய்யர் என்றும் சூனியக்காரர் என்றும் குடும்பங்களைப் பிரிக்க வந்தவர் என்றும் குற்றம் சாட்டினர். அவர்களைப் பின்பபற்றியோரை தாய்மதத்தையும் நாட்டின் கலாச்சாரத்தையும் அவமதிப்பவர்கள் என்றும் கொடுமைகள் தாங்காது தாயகம் துறந்து சென்றவர்களை தேசத்துரோகிகள் என்றும் முத்திரைக் குத்தினார்கள். இக்கொள்கையை ஏற்றவர்களை குறிப்பாக நலிந்தவர்களை கொன்று குவித்தார்கள். அவர்களை சித்திரவதைகளுக்கு உள்ளாக்கி சிலைகளையும் போலி தெய்வங்களையும் வணங்கச் சொல்லியும் பூர்வ மதங்களுக்குத் திரும்பச் சொல்லியும் பலவந்தம் செய்தார்கள். ஏற்காதவர்களை ஊரைவிட்டு வெளியேற்றினார்கள் அல்லது ஊர்விலக்கம் செய்தார்கள்.
 நாட்டில் தர்மம் நிலைநாட்டப்படவேண்டும் என்று ஆர்வம் இருந்தாலும் பயம் காரணமாக பலரும்  இவ்வியக்கத்தில் சேராமல் பின்வாங்கினர். அதர்மவாதிகள் இவ்வாறு தங்கள் பயங்கரவாதத்தால் தர்மம் வேரூன்றுவதைத் தடுக்க முழுமூச்சாக முற்பட்டாலும் தர்மத்தின் காவலர்கள் எதிர் நடவடிக்கைகளிலோ தாக்குதல்கள் நடத்துவதிலோ ஈடுபடவில்லை. தங்கள் இலக்கு எதிர்போரையும் அவர்களின் உடமைகளையும் அழிப்பதல்ல, மாறாக அவர்களைத் திருத்துவதுதான் என்பதைத் தெளிவாகப் புரிந்திருந்தார்கள். அதன் காரணமாக பொறுமையையும் மன்னிப்பையும் இறைஉதவியையுமே தங்கள் ஆயுதங்களாக எடுத்துக் கொண்டார்கள். அதர்மவாதிகள்  நாளடைவில் தோல்வியே கண்டார்கள்.
 இதுதான் தர்மத்திற்கு எதிரான பயங்கரவாதத்தின் சுருக்கமான சரித்திரம். இந்த சரித்திரம் பூமியின் எல்லாப் பாகங்களிலும் நிகழ்ந்துள்ளது, இதில் சில வேளைகளில் அதர்மவாதிகளை தர்மத்தின் காவலர்களின் கைகள் கொண்டு இறைவன் அழித்தான். இன்னும் சிலவேளைகளில் நிலநடுக்கம், வெள்ளம், புயல் போன்ற இயற்கை சீற்றங்கள் கொண்டு அழித்தான். இவ்வாறு பூமியில் அதர்மத்தை அவ்வப்போது அழித்து தர்மத்தை நிலைநாட்டி வருகிறான் இறைவன்!
22:40. ''எங்கள் இறைவன் அல்லாஹ்வே'' என்று அவர்கள் கூறியதற்காகவே நியாயமின்றி அவர்களின் இல்லங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர். மனிதர்களில் ஒருவர் மூலம் மற்றவரை அல்லாஹ் தடுத்திருக்காவிட்டால் மடங்களும், ஆலயங்களும், வழிபாட்டுத்தலங்களும், அல்லாஹ்வின் பெயர் அதிகமாகத் துதிக்கப்படும் பள்ளிவாசல்களும் இடிக்கப்பட்டிருக்கும். தனக்கு உதவி செய்வோருக்கு அல்லாஹ்வும் உதவுகிறான். அல்லாஹ் வலிமையுள்ளவன்; மிகைத்தவன். 
 இவ்வாறு உலகம் தொடங்கிய நாள் முதல் ஆரம்பித்த தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் இடையேயான போராட்டம் இன்னும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டு வருகிறது. இறுதிநாள்வரை இது தொடரும். இதில் தர்மத்தைக் காக்கப் போராடியவர்களுக்குப் பரிசாக மறுமையில் சொர்க்கம் கிடைக்கும். அதர்மத்தை வளர்ப்பதற்காகப் போராடியவர்களுக்கு நரகமும் கிடைக்கும்.     (தொடரும் இன்ஷாஅல்லாஹ்

http://quranmalar.blogspot.com/2012/09/1.html 
தர்மமும் பயங்கரவாதமும் (part-1)
http://quranmalar.blogspot.com/2012/09/blog-post.html 
தர்மமும் பயங்கரவாதமும் (part 2) 
http://quranmalar.blogspot.com/2012/09/3.html 
தர்மமும் பயங்கரவாதமும் (part-3)
http://quranmalar.blogspot.com/2012/09/4.html
தர்மமும் பயங்கரவாதமும் (part-4)
http://quranmalar.blogspot.com/2012/09/5.html
 தர்மமும் பயங்கரவாதமும் (part-5)
http://quranmalar.blogspot.com/2012/09/6.html
தர்மமும் பயங்கரவாதமும் (part-6)
http://quranmalar.blogspot.com/2012/09/7.html
தர்மமும் பயங்கரவாதமும் (part-7)

2 கருத்துகள்: