இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 6 செப்டம்பர், 2012

.5. தர்மமும் பயங்கரவாதமும் (part-5)


5. பொறுமையின் எல்லை?


தன் தாயகமான மக்காவில் நபிகள் நாயகம் மக்களை மூடநம்பிக்களைக் கைவிட்டுவிட்டு ஏக இறைவனை வணங்கச் சொல்லி அழைத்தார். ஆனால்  சத்தியம் மக்களுக்குக் கசந்தது. தீவிரமாக எதிர்த்தார்கள். அவரையும் சத்தியத்தை ஏற்றுக் கொண்டோரையும் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கினார்கள். ஆனால் நபிகளார் பொறுமைக்கு மேல் பொறுமை மேற்கொண்டு சத்தியப் பிரச்சாரத்தை தொடர்ந்தார்கள். 

எதற்கும் ஓர் எல்லை உண்டு. சித்திரவதைகள் தாங்கமுடியாமல் போனால்...?
அதற்கும் வழிகாட்டுகிறார்கள் நபிகளார். சித்திரவதைகளுககு ஈடு கொடுக்க முடியாமல் போன நபித்தோழர்கள் சிலரை  அபீசீனியாவுக்கும், வேறுசிலரை   மதீனா எனும் நகருக்கும் நபிகளார் குடிபெயர்ந்து செல்லுமாறு பணித்தார்கள். ஆம், அடக்குமுறைகள் கட்டுக்கடங்காமல் போனபோதும் எதிர்த்து நின்று பதிலடி கொடுக்க அனுமதி கொடுக்கவில்லை நபிகளார். மாறாக ஊர்விட்டு வேறிடம் சென்று குடியிருக்கச் சொன்னார்கள்.
   இத்தனை அடக்குமுறைகளையும் மீறி இஸ்லாம்  மக்காவிலும் தொடர்ந்து வெளியூர்களிலும் குறிப்பாக மதீனாவில்  பரவி வளர்ந்து கொண்டு  இருந்தது. முடிவில் 'இவரை உயிரோடு விட்டு வைத்தால் ஊரையே கெடுத்து விடுவார்; எனவே கொலை செய்து விடுவோம்' என்று திட்டம் வகுத்தார்கள்.
அப்போது இறைவனின் கட்டளைப் பிரகாரம் நபிகள் நாயகம் தாயகம் துறந்து  தம் தோழர் அபூபக்கர் அவர்களுடன்  மதீனா என்னும் நகர் நோக்கி தியாகப் பயணம் மேற்கொண்டார்கள். மதீனா நகரில் இஸ்லாம் என்ற இனிய கொள்கை ஏற்கெனெவே வெகுவாகப் பரவியிருந்த காரணத்தால் நபிகளாருக்கு மகத்தான வரவேற்பு காத்திருந்தது. அவ்வூர் மக்கள் நபிகள் நாயகம் (ல்) பிரச்சாரம் செய்த கொள்கையையும் ஏற்றார்கள். நபிகள் நாயகத்தைத் தங்களின் தலைவராகவும் ஏற்றுக் கொண்டார்கள்.
  மக்க்காவிலோ நபிகளாரின் வளர்ச்சி அவர்களுக்கு பெரும் கலக்கத்தை உண்டாக்கியது. நபிகள் நாயகத்தையும் அவர்களது கொள்கையையும் வளரவிட்டால் தங்களது ஆதிக்கமும் செல்வாக்கும் பறிபோய்விடும், இன்று ஊரைவிட்டு துரத்தப் பட்ட அவர்கள் நாளை பழிவாங்க படை திரட்டி வரலாம் என்ற அச்சம் அவர்களை ஆட்கொண்டது. எப்படியாவது நபிகளாரையும் அவரது சகாக்களையும் அழித்துவிட வேண்டும் என்ற முடிவுடன் ஆயிரம் பேர் கொண்ட படையைத் திரட்டிக் கொண்டு போருக்கு வந்தார்கள் மக்கத்துக் கொடுங்கோலர்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தர்மத்தை நிலைநாட்டப் புறப்பட்டவர்கள் என்ன செய்ய வேண்டும்? இதோ வழிகாட்டுகிறான் இறைவன்.
  இப்போதுதான் எதிர்த்து நிற்க அனுமதி அளிக்கிறான் இறைவன். கீழ்கண்ட திருக்குர்ஆன் வசனங்களை இறக்கிவைத்து எதிர்த்துப் போரிடும் அனுமதியை  அளித்தான் இறைவன்
“போர் தொடுக்கப்பட்டோருக்கு அவர்கள் அநியாயம் செய்யப்பட்டிருக்கின்றார்கள் என்பதனால் (அவ்வாறு போர் தொடுத்த இறைமறுப்பாளர்களை எதிர்த்துப் போரிடுவதற்கு) அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது; நிச்சயமாக அவர்களுக்கு உதவி செய்ய அல்லாஹ் பேராற்றலுடையவன். (திருக்குர்ஆன் 22:39)
 பலஹீனமான ஆண்களையும் பெண்களையும், சிறு குழந்தைகளையும் பாதுகாப்பதற்காக, அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் போர் செய்யாதிருக்கக் காரணம் யாது? (அவர்களோ) எங்கள் இறைவனே! அக்கிரமக்காரர்கள் இருக்கும் இவ்வூரைவிட்டு எங்களை வெளிப்படுத்துவாயாக; எங்களுக்காக உன்னிடமிருந்து தக்க ஒரு பாதுகாவலனை அளித்தருள்வாயாக; இன்னும் எங்களுக்காக உன்னிடமிருந்து ஓர் உதவியாளனையும் அளித்தருள்வாயாகஎன்று பிரார்த்தனை செய்கிறார்கள். (திருக்குர்ஆன் 4:75)
 பூமியில் தர்மம் நிலைநாட்டப் படவேண்டுமானால் நன்மைகள் ஏவப்படும் அதேவேளையில் தீமைகளை வேரறுக்கவும் வேண்டும். ஆனால் தீமைகளை வளர்ப்பதையும் தீமைகளை வைத்தே வயிறு வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டு அதர்மவாதிகள்  தர்மத்திற்கு எதிராக அணிதிரண்டு வரும்போது அதை தடுத்து நிறுத்துவது தர்மத்தின் பாதுகாவலர்கள் மீது கடமையாகிறது. எனவே தற்காப்புக்கான போருக்குத் தயாரானார்கள் நபிகள் நாயகமும் தோழர்களும். வெறும் 313 பேர் கொண்ட இறைவிசுவாசிகளின் படை  மூன்று மடங்கு பெரிய மக்கத்துப் படையை மதீனாவுக்கு அருகேயுள்ள பத்ர் என்ற இடத்தில் எதிர்கொண்டது. இறைவனின் அருள் கொண்டு இச்சிறிய படை கொடுமைக்காரர்களின் படையை வென்றது. சில முக்கியமான கொடுமைக்காரர்கள் அப்போரில் கொல்லப்பட்டனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக