இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 7 செப்டம்பர், 2012

100% பாதுகாக்கப்படும் இறைவேதம்


திருக்குர்ஆன் எவ்வாறு பாதுகாக்கப் படுகிறது?
 திருக்குர்ஆன் என்பது இறைவேதமே என்பதை நீங்களாகவே உணர ஒரு சிறு பரிசோதனையை நடத்திப் பார்க்கலாமே!. திருக்குர்ஆனின் உலகெங்கும் உள்ள பிரதிகளை நேரில் நீங்கள் பரிசோதித்துப் பார்க்க வேண்டுமென்றால் இன்று இணையம் மூலமாகவோ அல்லது ஒரு பொது நூலகத்தில் சென்றோ இதை நீங்கள் எளிதில் செய்ய முடியும். அவ்வாறு நீங்கள் பரிசோதிக்கும்போது முந்தைய வேதங்களையும் மற்றும் திருக்குர்ஆனையும் ஒப்பீடு செய்து பாருங்கள். அப்போது நீங்கள் திருக்குர்ஆனின் ஒரு தனித்தன்மையை உணரலாம்.
       உலகில் இன்றுள்ள மற்ற மத வேதங்களின் மொழிபெயர்ப்புகளை மட்டுமே காணமுடிகிறது. அவற்றின் மூல வசனங்களைக் காண முடிவதில்லை. இதுதான் அவ்வேதத்தின் மூலம் என்று அறுதியிட்டு உறுதியாகக் கூறப்படும் எதையும் நீங்கள் தேடினாலும் காணமுடியாது.
       ஆனால் திருக்குர்ஆனைப் பொறுத்தவரையில் இரண்டு விதமான பிரதிகளைக் நீங்கள் காண முடிக்கிறது. ஒன்று வெறும் அரபுமொழி மூலம் மாத்திரம் இடம்பெற்றுள்ள பிரதிகள். மற்றவை திருக்குர்ஆனின் மொழிபெயர்ப்புப் பிரதிகள். ஆனால் அவற்றில் அதன் அரபுமொழியில் உள்ள மூலமும் இடம்பெற்று இருக்கும். ஆக மூலவசனங்கள் அருளப்பட்ட நாள் முதல் இன்றுவரை வருடங்கள் 1430 ஆகியும் அட்சரம்பிசகாமல் அப்படியே பாதுகாக்கப் படுவதை நீங்கள் காணலாம்.
  இது எப்படி?
முஹம்மது நபியவர்கள் 40-ஆவது வயதில் இறைத்தூதராக ஆனது முதல் 63-ஆவது வயதில் மரணமடையும் வரை அவருக்கு அவ்வப்போது சிறிது சிறிதாக ஒலிவடிவில் அருளப்பட்ட வசனங்களின் தொகுப்பே திருக்குர்ஆன் என்பதை அறிவீர்கள்.
 இறைவன் புறத்திலிருந்து வானவர் ஜிப்ரீல் இவ்வசனங்களை கொண்டு வந்து நபிகளாருக்கு ஓதிக்  காட்டுவார்கள். நபிகளாரோ எழுதவோ படிக்கவோ அறியாதவர்தனக்கு முன் ஓதப்படும் வசனங்களை மனப்பாடம் செய்து கொள்வார் நபிகளார். அது இறைவனுடைய ஏற்பாடு. தொடர்ந்து ஜிப்ரீலிடம் தான் செவியுற்ற வசனங்களை தனது தோழர்கள் முன் ஓதிக் காட்டுவார்கள். அவற்றை தோல்களிலும் எலும்புகளிலும் எழுதி வைத்துக் கொண்டனர் நபித்தோழர்கள். அது மட்டுமல்ல அவ்வசனங்களின் கவர்ச்சியில் தங்களைப் பறிகொடுத்த தோழர்கள் அவற்றை தொழுகையிலும் தொழுகைக்கு வெளியேயும் அடிக்கடி ஓதும் பழக்கமுடையோரானார்கள். அதாவது ஒலி வடிவிலேயே திருக்குர்ஆன் வசனங்கள் பிரபலமாகின.
இதைப் புரிந்துக்கொள்ள ஒரு சிறு உதாரணத்தைக் கூறுவோம். தமிழில் பழைய திரைப்படப் பாடல்கள் எதையாவது எடுத்துக்கொள்ளுங்கள். பாலும் பழமும் கைகளிலேந்தி....... அல்லது நான் ஆணையிட்டால்... போன்ற பாடல்களை நீங்கள் அறிவீர்கள். அவை இயற்றப்பட்டு வருடங்கள் நாற்பதுக்கு மேலாகியும் அவை இன்றும் அவ்வாறே பாடப்படுவதைக் காண்கிறோமல்லவா? ஒலிவடிவிலேயே அவை மக்களிடையே பிரபலாமானதுதான் அதற்குக்காரணம். அவ்வாறுதான் திருக்குர்ஆன் வசனங்களும் முஸ்லிம்களிடையே பிரபலமாகின.
 புண்ணியம் கருதியும் தொடர்ந்த ஓதலின் காரணமாகவும்  பலரும் குர்ஆன் வசனங்களை  மனப்பாடம்   செய்தனர். குர்ஆன் என்ற வார்த்தையின் பொருளே ஓதப்படுவது என்பதே!
ஆம், அருளப்பட்ட நாள் முதல் இன்று வரை திருக்குர்ஆனை அதிகமதிகமாக ஒதிவருவது உலகெங்கும் முஸ்லிம்களின் பழக்கமாக உள்ளது.
  உலகிலேயே மிக மிக அதிகமாக மூல மொழியில் ஓதப்பட்ட மற்றும் ஓதப்படும் நூல் திருக்குர்ஆன் மட்டுமே! குறிப்பாக ரமலான் மாதம் பகலில் விரதமிருந்து இரவில் நின்று தொழுவது இஸ்லாமிய கடமை என்பதை கேட்டிருப்பீர்கள். இரவில் நீண்ட நேர தொழுகைகளில் இமாமாக நிற்பவர் 30 நாட்களில் முழு குர்ஆனையும் ஓதி முடிப்பது வழக்கம். அந்த அளவுக்கு இமாம்கள் முழு குர்ஆனையும் மனப்பாடம் செய்திருப்பார்கள். அவ்வாறு முழு குர்ஆனையும் மனப்பாடம் செய்தவர்கள் ஆயிரக்கணக்கில் அன்றும் இருந்தார்கள். இலட்சக் கணக்கில் இன்றும் இருக்கிறார்கள். கோடிக் கணக்கில் நாளையும் இருப்பார்கள், (இன்ஷாஅல்லாஹ்)! இவ்வாறு முழு குர்ஆனும் ஒலி வடிவில் உலகெங்கும் உலா வருகிறது. மனித மனங்களிலேயே பாதுகாக்கவும் படுகிறது. இதைப் பற்றி இறைவனும் குர்ஆனில் குறிப்பிடுகிறான்:

நிச்சயமாக நாமே இந்த நினைவூட்டலை (குர்ஆனை) இறக்கியிருக்கிறோம். நிச்சயமாக நாமே இதைப் பாதுகாப்போம் (திருக்குர்ஆன் 15:9)

இப்படியும் இந்த உண்மையை புரிந்து கொள்ளலாம்- இன்று உலகில் காணும் குர்ஆன், பைபிள, பகவத்கீதை, உள்ளிட்ட எல்லா வேதபுத்தகங்களையும் மற்ற புத்தகங்களையும் குறுந்தகடுகளையும் எல்லாம் திரட்டி ஒரு மூலையில் இட்டு தீக்கிரையாக்கினாலும், மறுபடியும் திரும்ப எழுதப் படக்கூடிய ஒரே புத்தகம் திருக்குர்ஆன் மட்டுமே! காரணம் உலகெங்கும் உள்ள இலட்சக் கணக்கான மக்கள் மனங்களில் அது ஒரே போல பதிவாகி இருப்பதேயாகும்! மேற்படி இறைவனின் வாக்குறுதி புலர்ந்து வருவது புலப்படுகிறது அல்லவா?
முந்தைய வேதங்கள் ஏன் பாதுக்காக்கப்படவில்லை?

இப்போது உங்கள் மனங்களில் எழும் ஒரு சந்தேகத்தையும் ஆராய்வோம். முந்தைய இறைவேதங்களும் இறைவனால் அருளப் பட்டவைதானே, அவை ஏன் பாதுகாக்கப்படவில்லை?
அவை ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்காக குறிப்பிட்ட மக்களுக்காக அனுப்பப்பட்டவையாக இருந்தன என்பதே அதற்குக் காரணம். உதாரணமாக ஒரு நாட்டின் அரசியல் சாசனம் புதுப்பிக்கப் படும்போது பழையது காலாவதியாகி மதிப்பற்றவையாகி விடுகிறதல்லாவா? அதேபோலத்தான் முந்தைய வேதங்கள் காலாவதியாகிப் போனதனால் அவை பாதுகாக்கப் படவில்லை.
மாறாக திருக்குர்ஆன் ஏன் பாதுகாக்கப் படுகிறது?
இது இறைவனின் இறுதிவேதம். இறுதிநாள் வரை இனி வரப்போகும் மக்களுக்கு இதுதான் இறை வழிகாட்டுதல். இதன் அடிப்படையிலேயே மறுமை நாளில் நம் பாவபுண்ணியங்கள் தீர்மானிக்கப்படும்.

தொடர்புள்ள ஆக்கங்கள் 
சந்தேகங்களுக்கு அப்பாற்பட்ட வேதம்  
திருக்குர்ஆன் கூறும் அறிவியல் உண்மைகள்  
திருக்குர்ஆன் தமிழாக்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக