இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 6 செப்டம்பர், 2012

4. தர்மமும் பயங்கரவாதமும் (part-4)


4. தர்மத்தை நிலைநாட்ட பொறுமை தேவை
தன் தாயகமான மக்காவில் நபிகள் நாயகம் மக்களை மூடநம்பிக்களைக் கைவிட்டுவிட்டு ஏக இறைவனை வணங்கச் சொல்லி அழைத்தார். ஆனால்  சத்தியம் மக்களுக்குக் கசந்தது. தீவிரமாக எதிர்த்தார்கள். அவரையும் சத்தியத்தை ஏற்றுக் கொண்டோரையும் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கினார்கள். ஆனால் நபிகளார் பொறுமைக்கு மேல் பொறுமை மேற்கொண்டு சத்தியப் பிரச்சாரத்தை தொடர்ந்தார்கள். 
  மக்காவிற்கு அருகே இரு மலைகளுக்கு இடையே அமைந்திருந்த தாயிப் நகரில் தனது பிரச்சாரத்திற்காக சென்ற போது மிக மிகக் கடுமையாக கல்லால் அடித்துத் துரத்தப் பட்டார்கள் நபிகளார். இரத்தம் தோய்ந்த உடலோடு கண்ணீர் மல்க இறைவனிடம் பிரார்த்தித்தார் நபிகளார். உடனே தனது வானவர்களை அனுப்பிவைத்தான் இறைவன். “ஆணையிடுங்கள் நபியே, உங்களை வேதனைக்குள்ளக்கிய இவ்வூர் மக்களை இம்மலைகளுக்கிடையில் நசுக்கிவிட நாங்கள் தயார்!” என்றார்கள் வானவர்கள். ஆனால் கருணை வடிவான நபிகளார் என்ன சொன்னார்கள் தெரியுமா? “இன்று இவர்கள் ஏற்காவிட்டாலும் இவர்களின் தலைமுறைகளில் இருந்து நல்லோர் உருவாவார்கள் என்று நம்புகிறேன்” என்று கூறி அவர்களைத் தடுத்தார்கள்.
மக்களை அழிப்பதல்ல திருத்தி எடுப்பதே நோக்கம் 
  ஏனெனில் இங்கு தாக்குபவர்கள் நமக்கு எதிரிகளே அல்ல. அவர்களைப் பீடித்துள்ள ஷைத்தான் தான் நமக்கு எதிரி. பொறுமை மூலமும் விவேகத்தைக் கைக்கொள்வது மூலமும்தான்  இம்மக்களைத் திருத்தியெடுத்து நேர்வழிக்குக் கொண்டுவர முடியும் என்பதை நன்றாக உணர்ந்திருந்தார்கள் அண்ணல் நபிகளார்.
 தங்களுக்கு ஏற்படும் சோதனைகள் குறித்துநபித்தோழர்கள் வந்து முறையிட்ட போது நபிகளார் (ஸல்) அவர்கள் என்ன கூறினார்கள் தெரியுமா? இதோ உடம்பு முழுக்க இரும்புக் கம்பியால் சூடிடபட்ட வடுக்களைத் தாங்கிய நபித்தோழர் கபாப்(ரலி) அவர்கள் பிற்காலத்தில் கூறுகிறார்கள்:   “ இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கஅபாவின் நிழலில் தம் சால்வை ஒன்றைத் தலையணையாக வைத்துச் சாய்ந்து கொண்டிருந்த போது அவர்களிடம் (இஸ்லாத்தின் எதிரிகள் எங்களுக்கிழைக்கும் கொடுமைகளை) முறையிட்டபடி எங்களுக்காக (இறைவனிடம்) நீங்கள் உதவி கோர மாட்டீர்களாஎங்களுக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்ய மாட்டீர்களா என்று கேட்டோம்.
 அதற்கு அவர்கள்உங்களுக்கு முன்னிருந்தவர்களிடையே (ஏகத்துவக் கொள்கையை ஏற்று இறைத்தூதரின் மீது நம்பிக்கை கொண்ட) ஒரு மனிதருக்காக மண்ணில் குழி தோண்டப்பட்டுஅவர் அதில் நிறுத்தப்பட ரம்பம் கொண்டு வரப்பட்டுஅவரது தலை மீது வைக்கப்பட்டு அது கூறுகளாகப் பிளக்கப்படும்.
ஆயினும் அ(ந்தக் கொடுமையான)து அவரை அவரது மார்க்கத்திலிருந்து பிறழச் செய்யவில்லை. (பழுக்கச் காய்ச்சிய) இரும்புச் சீப்புகளால் அவர் (மேனி) கோதப்பட அது அவரது இறைச்சியையும் கடந்து சென்று அதன் கீழுள்ள எலும்பையும்நரம்பையும் சென்றடைந்து விடும். அதுவும் கூட அவரை அவரது மார்க்கத்திலிருந்து பிரழச் செய்யவில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த (இஸ்லாத்தின்) விவகாரம் முழுமைப்படுத்தப்படும். எந்த அளவிற்கென்றால்வாகனத்தில் பயணம் செய்யும் ஒருவர் (யமனில் உள்ள) ஸன்ஆ விலிருந்து ஹளர மவ்த் வரை பயணம் செய்து செல்வார். (வழியில்) அல்லாஹ்வைத் தவிர அல்லது தன் ஆட்டின் விஷயத்தில் ஓநாயைத் தவிர வேறெவருக்கும் அவர் அஞ்ச மாட்டார். ஆயினும் நீங்கள் தான் (பொறுமையின்றி) அவரசப்படுகிறீர்கள்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: கப்பாப் இப்னு அல் அரத் (ரலி) நூல்: புகாரி3612, 3852
ஆம், தர்மத்தை பூமியில் நிலைநாட்ட உறுதியான கொள்கைப் பிடிப்பும் அளவுகடந்த பொறுமையும் தேவை என்பதையே எடுத்துரைக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக