இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 8 செப்டம்பர், 2012

1. இறுதி இறைத்தூதரே நபிகளார்


நபிகள் நாயகம்(ஸல்) யார்?
அவரது முக்கியத்துவம்
நம் ஆதிபிதா அல்லது முதல் மனிதராகிய ஆதம் அவர்களே ஓர் இறைத்தூதராக இருந்தார்கள் அவரைத் தொடர்ந்து பூமியின் பல்வேறு பாகங்களுக்கும் வெவ்வேறு காலகட்டங்களில் அனுப்பப்பட்ட அனைத்து இறைத்தூதர்களும் ஒரே கொள்கையைத்தான் போதித்தார்கள். அவர்கள் அனைவரும் இறைவனுக்குக் கீழ்படிதல் (அரபு மொழியில் அதுவே இஸ்லாம் என்று இன்று அறியப்படுகிறது) என்ற அதே கொள்கையைத்தான் தத்தமது மக்களுக்கு போதித்தார்கள்.
அவர்கள் அனைவரும் தத்தமது மக்களை நோக்கி  இறைவன் ஒருவனையே வணங்குங்கள். அவனுக்கு கீழ்ப்படிந்து வாழுங்கள். அவ்வாறு கீழ்படிந்து வாழ்ந்தால் இவ்வுலகிலும் அமைதி காண்பீர்கள். அதற்குப் பரிசாக மறுமையில் சொர்க்கத்தை அவன் வழங்குவான். கீழ்ப்படியாமல் தான்தோன்றித்தனமாக நடந்தால் இவ்வுலகிலும் அமைதியின்மை காண்பீர்கள். மறுமையில் நரக தண்டனையும் உங்களுக்குக் காத்திருக்கிறது. என்று போதித்தார்கள். ஆனால் என்ன நடந்தது? தூதுர்களின் மறைவுக்குப் பின் அவர்களின் உருவச்சிலைகளை கடவுளாக பாவித்து வணங்க ஆரம்பித்தார்கள். இவ்வாறு கடவுள் உணர்வு சிதைக்கப்பட்டதன் காரணமாக பாவங்கள் பெருகின, இனத்துக்கு ஒன்று ஊருக்கு ஒன்று என்று கடவுளர்களின் எண்ணிக்கையும் பெருகிய காரணத்தால் ஜாதிகளும் பிரிவினைகளும் பல்கிப் பெருகின. இவ்வாறு அதர்மம் தலை தூக்கும்போதெல்லாம் மீண்டும்மீண்டும் தர்மத்தை நிலைநாட்ட மீண்டும்மீண்டும் தூதர்கள் அனுப்பப் பட்டனர். இவர்களில் இறுதியாக  வந்தவரே முஹம்மது நபி(ஸல்) அவர்கள்.
  எந்த ஓரிறைக் கொள்கையை முன்னாள் இறைத்தூதர்கள் வாழையடி வாழையாக போதித்தனரோ அதே கொள்கையை சற்றும் மாறுபடாமல். முஹம்மது நபி (ஸல்) அவர்கள் போதித்தார்கள். கண்டிப்பாக இறைவன் எந்த முரண்பாடுகளையும் கற்பிக்க மாட்டான் என்பதையும் இறைத்தூதர்களும் ஒருவருக்கு ஒருவர் முரண்பட மாட்டார்கள் என்பதையும் நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். இன்று முரண்பாடுகளாக ஏதாவது தென்பட்டால் அவை பிற்காலங்களில் ஒருசில குழப்பவாதிகளும்  இடைத்தரகர்களும் அரசியல் சக்திகளும் மதத்தின் பெயரால் மக்களைச் சுரண்ட நுழைத்தவை என்பதையும் நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
முஹம்மது நபி(ஸல்) அவர்கள் இறுதித் தூதராக வந்துள்ளதாலும் இன்று நாம் வாழும் காலகட்டத்திற்காக அனுப்பப்பட்டவர் என்பதாலும்  அவர் மூலம் மார்க்கம் முழுமைப் படுத்தப்பட்டதாலும் அவரது ஒருசில சிறப்புகளை அறிந்துக்கொள்வது அவரது வார்த்தைகளின் முக்கியத்துவத்தையும் நம்பகத்தன்மையையும் நமக்கு எடுத்துணர்த்தும்.முந்தைய இறைத்தூதர்களோடு ஒப்பிடும்போது முஹம்மது நபி(ஸல்) ஒருசில வேறுபாடுகளை நீங்கள் காணமுடியும். அவை:
1. அகில உலகுக்கும் பொதுவான இறைத்தூதராக முஹம்மது நபி அவர்கள் அனுப்பப்பட்டுள்ளார்கள்.
முந்தைய இறைத்தூதர்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் மற்றும் ஒரு குறிப்பிட்ட நாடுகளுக்காகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட சமுதாயங்களுக்காகவோ அனுப்பட்டிருந்தார்கள். உதாரணமாக,
7:65  இன்னும் ஆது கூட்டத்தாரிடம் அவர்களுடைய சகோதரர் ஹூதை (நபியாக அனுப்பி வைத்தோம்)
7:85  மத்யன் நகரவாசிகளிடம் அவர்களுடைய சகோதரராகிய ஷுஐபை (நம் தூதராக அனுப்பிவைத்தோம்)
தூதர்கள் வரிசையில் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு முன் வந்து சென்றவர் இயேசு(அலை) அவர்களும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை நோக்கித்தான் அனுப்பப் பட்டு இருந்தார்.
43:59 அவர் (ஈஸா நம்முடைய) அடியாரே அன்றி வேறில்லை. அவருக்கு நாம் அருட்கொடையைச் சொரிந்து இஸ்ராயீலின் சந்ததியாருக்கு அவரை நல்லுதாரணமாக ஆக்கினோம்.
மேற்கூறப்பட்ட உண்மை இன்று நம்மிடையே காணக்கிடைக்கும் பைபிளிலும் இடம்பெறுவதைக் காணலாம்.
அப்பொழுது அந்த திசைகளில் குடியிருக்கிற கானானிய ஸ்திரி ஒருத்தி அவரிடத்தில் வந்து ஆண்டவரே தாவீதின் குமாரனே எனக்கு இரங்குப் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறாள் என்று சொல்லக் கூப்பிட்டாள் அவளுக்கு பிரதியுத்தமாக அவர் ஒரு வார்தையும் சொல்லவில்லை அவர்களுடைய சீஷர்கள் வந்து இவள் நம்மைப் பின் தொடர்ந்து கூப்பிடுகிறாளே இவளை அனுப்பிவிடும் ஊன்று அவரை வேண்டிக்கொண்டார்கள். அதற்கு அவர் காணாமல்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனே யன்றி மற்றபடியல்ல என்றார். அவள் வந்து ஆண்டவரே எனக்கு உதவி செய்யும் என்று அவரைப் பணிந்து கொண்டாள் அவர் அவனை நோக்கி பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து நாய்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல என்றார். (மத்தேயு 15:22 26 )
ஆனால் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறுதி இறைத்தூதராகவும் உலகம் முழுமைக்கும் பொதுவானவராகவும் அனுப்பப்பட்டார்கள்.  நாம் இன்று இவ்வுலகின் இறுதி காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
  அன்றும் இன்றும் உள்ள தகவல் தொடர்பு வசதிகளை ஒப்பிட்டுப் பார்த்தாலே இந்த உண்மையை நாம் விளங்கிக் கொள்ள முடியும். அன்று ஊர்களுக்கும் நாடுகளுக்கும் இடையே தகவல் தொடர்பு இல்லாத நிலையில் வெவ்வேறு நாடுகளுக்கு வெவ்வேறு தூதர்கள் அனுப்பபட்டிருந்தனர். இன்றைய காலகட்டம் தகவல் தொடர்பு மிக விரிவடைந்த கால கட்டம். இங்கு பேசினால் உடனுக்குடன் உலகின் மறு மூலையில் கேட்கக் கூடிய அளவுக்கு முன்னேறியிருக்கிறோம். இப்படிப்பட்ட சூழலில் இறுதி இறைத்தூதர் உலகம் முழுமைக்கும் பொதுவானவராக அனுப்பப் பட்டார்கள்..இவருக்குப் பிறகு எந்த இறைத்தூதரும் வரப்போவதில்லை. இனி உலகம் அழியும் நாள் வரையும் இவர்தான் இறைவனின் தூதர்.
http://quranmalar.blogspot.com/2012/09/2.html 
இறுதி இறைத்தூதரே நபிகளார் - பாகம் இரண்டு
http://quranmalar.blogspot.com/2012/09/3_8.html
இறுதித் தூதரே நபிகளார் - பாகம் மூன்று 
http://quranmalar.blogspot.com/2012/09/4_8.html 
இறுதித் தூதரே நபிகளார் - பாகம் நான்கு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக