இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 15 அக்டோபர், 2012

தர்காவுக்கும் இஸ்லாத்திற்கும் தொடர்பில்லை!


இஸ்லாத்தின் பெயரால் நடைபெற்று வரும்
தர்கா என்ற மோசடி பற்றி அறிவோம் :
லா இலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என்பது இஸ்லாத்தின் மூல மந்திரம். என்பதை நீங்கள் அறிவீர்கள். இதன் பொருள்: வணக்கத்துக்கு உரியவன் இறைவனைத் (அரபு மொழியில்  அல்லாஹ்) தவிர யாரும் இல்லை. முஹம்மது நபி இறைவனின் தூதராவார் என்பதே. இதை ஏற்றுக் கொள்பவரே முஸ்லிம், இந்தக் கொள்கையை ஏற்றுக் கொள்ளாத யாரும் முஸ்லிமாக முடியாது. இறைவனுக்கு பதிலாக இறந்தவர்களை அழைத்துப் பிரார்த்திப்பதோ, சமாதிகளுக்கு வணக்கம் செய்வதோ மன்னிப்பே இல்லாத பாவமாகும். இதைச்செய்பவர்கள் மறுமையில் நிரந்தரமாக நரக நெருப்பில் இருப்பார்கள் என்று குர்ஆன் எச்சரிக்கிறது
தர்கா என்பது என்ன? இவை எப்படி வந்தன?
எங்கு நீங்கள் தர்காவைப் பார்கிறீர்களோ அங்கு எல்லாம் முஸ்லிம் பெரியவர்கள்  வாழ்ந்திருந்தார்கள். அவர்கள்  மக்களுக்கு தன வாழ்நாளில் சிறந்த சேவைகள் ஆற்றினார்கள்.  "லா இலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்" என்ற கொள்கையை மக்களிடையே போதித்து வந்தார்கள். மக்களிடையே தங்கள் சேவை காரணமாக பிரபலமானார்கள். அவர்கள் இறந்தபின் என்ன நடந்தது? அவர்களுக்கு சமாதிகள் எழுப்பப்பட்டன. அவர்கள்  போதித்த கொள்கையை சரிவர புரிந்து கொள்ளாத சில மக்கள் அவர்கள் மீது இருந்த  அன்பின் காரணமாக அவர்களது சமாதிகளை அடிக்கடி கண்டு வரவும் அலங்கரிக்கவும் தொடங்கினர். அந்த பெரியவர்களை அழைத்துப் பிரார்த்திக்கவும் தொடங்கினர்.அப்பெரியவர்களின் உறவினர்களில் சிலர் மக்களின் இந்த மூட பழக்கத்தை முதலீடாக வைத்து பணம் சம்பாதிக்க தலைப்பட்டனர். சமாதியின் தலைமாட்டில் ஒரு உண்டியலை நிறுவினர். செல்வம் சேரத் தொடங்கியது.
மேலும் பல மூடநம்பிக்கைகள் பரப்பப்பட்டன. உங்களுக்கு குழந்தை பிறக்கவில்லையா?.... தீராத வயிற்று வலியா?.....  வியாபாரத்தில்  தோல்வியா?.... அனைத்துக்கும் இங்கு தீர்வுகள் உண்டு! இதோ இங்கு வந்து இந்த அவுலியாவிடம் கேளுங்கள்! இதோ இந்த தாயத்தை கட்டிக் கொள்ளுங்கள்!..... என்பன போன்ற விளம்பரங்கள் வயிறு வளர்போரால் பரப்பப்பட்டன. இவ்வாறு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இந்த தர்காக்கள் வளர்ந்து இன்று பாமரர்களின் அன்றாட உழைப்பின் கனிகளை கறந்து உண்ணக்கூடிய முதலைகளாக திகழ்கின்றன! 
எங்கெல்லாம் தர்க்காக்களைக் காண்கின்றீர்களோ அவையெல்லாம் ஏக இறை வழிபாட்டிலிருந்து மக்களை திசை திருப்புவதற்காக ஷைத்தான் செய்து வரும் சூழ்ச்சி என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்! 
இங்கு பள்ளிவாசலுக்கும் தர்காவுக்கும் என்ன வேறுபாடு ? என்பதையும் உங்களுக்கு தெளிவு படுத்துவது அவசியமாகிறது. தர்கா என்பது ஒரு இறந்து போன பெரியாரின் சமாதியைச் சுற்றி எழுப்பப்பட்ட ஆலயம். அங்கு சமாதியை பட்டுத் துணிகளால் அலங்கரித்து மலர் தூவி வைத்து இருப்பார்கள். வருவோர் அந்த சமாதியில் என்றோ அடக்கமாகியுள்ள பெரியாரின் பெயரைச் சொல்லி பிரார்த்திப்பார்கள்.
ஆனால் படைத்த இறைவனை பலரும் கூட்டாக சேர்ந்து நின்று தொழுவதற்காக காட்டப்படும் ஆலயமே  பள்ளிவாசல் என்பது. அங்கு வருவோர்  கை, கால், முகம் இவற்றை கழுவுவதற்கு வசதியாக தண்ணீர் தொட்டியோ குழாய்களோ முன்னால் காணப் படும். உள்ளே நீங்கள் சென்று பார்த்தீர்களானால், உருவப் படங்களோ, சிலைகளோ எதுவுமே இராது. தரையில் பாய் விரிக்கப் பட்டு இருக்கும், சுவர்களில் எந்த வகையான சித்திரங்களும் இல்லாமல் காலியாக இருக்கும். 5 வேளைகளிலும் தொழுகைக்கான அழைப்பு  ஒலிபெருக்கி மூலம் விடப்படுகிறது.   இதைச் செவியுறும் தொழுகையாளிகள் உடனடியாக தொழுகைக்கு விரைவார்கள். அனைவரும் வந்ந்து சேர்ந்ததும் தோளோடு தோள் சேர்ந்து வரிசைகளில் அணிவகுத்து நிற்ப்பார்கள். தொழுகையாளிகளில் குரான் அதிகம் அறிந்தவர் அணிவகுப்பில் தளபதியைப்  போல் முன் நின்று தொழுகையை நடத்துவார். அவருக்கு அரபு மொழியில் இமாம் என்று கூறுவர். மற்றவர்கள் அவர் செய்வதைப் போலவே செய்து தொழுகையை நிறைவு செய்வார்கள். தொழுகை முடிந்ததும் தத்தமது இருப்பிடங்களுக்கும் அலுவல்களுக்கும் திரும்புவார்கள். இங்கு காசு, பணம், காணிக்கை,பழம், பூ போன்ற எந்த செலவுகளுக்கும் இடமில்லை
பொருட்செலவு இல்லாத சடங்குகள் இல்லாத - இறைவனை நேரடியாக வணங்குவதற்கு உரிய இடம் பள்ளிவாசல். ஆனால் இதற்கு நேர் விபரீதமானது தர்கா என்பது. இதை வைத்து பிழைப்பு நடத்துபவர்கள் சிலர் முஸ்லிம் பெயர்தாங்கிகளாக இருக்கிறார்கள் என்பதைத் தவிர  இதற்கும் இஸ்லாத்துக்கும் எந்த தொடர்புமில்லை என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
------------------ 
இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!

சனி, 13 அக்டோபர், 2012

தீண்டாமை ஒழிக்க ஒரே வழி ஓரிறைக்கொள்கை!

 Image result for untouchability in india
 ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது எல்லா காலத்திலும் போதிக்கப்பட்ட கொள்கை. ஆனால் அந்த ஏக இறைவனை விட்டு படைப்பினங்களை வணங்கத் தலைப்படும் போது மனித குலமும் அவரவர்களின் கடவுள் கொள்கையைப் பொறுத்து கூறுபோடப் படுகிறது. இந்தக் கொடுமைக்கு பலியான நாடுகள் பல. அவற்றில் சிறந்த உதாரணம் நமது நாடுதான். நமது நாட்டின் ஜாதி அமைப்புக்களைப் பாருங்கள். எந்த ஜாதியைச் சேர்ந்தோரானாலும் நாம் அனைவரும் மனிதர்களே. ஒரே இரத்தம்ஒரே மாமிசம், ஒரே உடலமைப்பு  என எல்லாம் ஒன்றாக இருந்தும் ஒரு ஜாதி மக்கள் இன்னொரு ஜாதி மக்களோடு கலப்பதில்லை. இதில் உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி, தாழ்த்தப்பட்டோர், தீண்டத்தகாதவர்கள் என பல கூறுகள்! என்ன காரணம்? ஒவ்வொரு ஜாதியும் தங்களுக்கு வெவ்வேறு தெய்வங்கள் இருக்கின்றன என்று நம்புகிறார்கள். அவற்றை குலதெய்வம் என்று சிறப்பு செய்கிறார்கள். இவை மட்டுமல்ல, ஊர்களையும் எல்லைகளையும் பிரிக்கும் காவல் தெய்வங்களும் எல்லைச்சாமிகளும் மனிதர்களுக்கிடையே மேலும் பிளவை வலுப்படுத்துகின்றன.
இஸ்லாம் என்ன சொல்கிறது என்றால், இனம், நிறம், மொழி, இடம் போன்றவை நம்மைப் பிரித்தாலும் ஒட்டு மொத்த மனித சமுதாயமும் ஒரே குடும்பமே என்ற உண்மையை வலியுறுத்தி மனிதர்கள் கற்பிக்கும் கற்பனை தெய்வங்களை எல்லாம் விட்டு விடுங்கள். படைத்த இறைவனைத் தவிர மற்ற அனைத்தும் படைப்பினங்களே. வாருங்கள் நாம்  அனைவரும் நம்மைப் படைத்து பரிபாலித்து வரும் அந்த ஒரே இறைவன் பக்கம் மீளுவோம், அதன்மூலம் ஒன்றுபடுவோம் என்கிறது.
மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்;. பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்;. ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்........(திருக்குர்ஆன் 4:1) 
(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதி வாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள்)

     இதனால் என்ன பயன் என்கிறீர்களா? இன்று இந்தியாவில் வாழும் முஸ்லிம்களை எடுத்துக் கொள்ளுங்கள், இவர்கள் யாருமே அரபு நாடுகளிலிருந்து வந்து குடியேறியவர்களோ நபிகள் நாயகத்தின் வாரிசுகளோ அல்ல. இவர்கள் இதற்கு முன் இந்துக்களாகவோ கிறிஸ்துவர்களாகவோ இருந்து மதம் மாறியவர்களின் தலைமுறையினர்தான். இவர்கள் இந்த ஏக இறைகொள்கையை ஏற்றுக் கொண்டபின் என்னென்ன புரட்சிகள் நடந்துள்ளது பாருங்கள். இன்று இவர்களுக்கு ஜாதிகள் இல்லை. இவர்களிடையே தீண்டாமை இல்லை. ஒரு காலத்தில் தீண்டாமையால் மேல்ஜாதி, கீழ்ஜாதி என்று சிதறுண்டு கிடந்த இம்மக்களை இன்று பள்ளிவாசல்களில் தொழுகைக்காக ஒரே அணியில் தோளோடு தோள் நிற்க வைப்பதும் ஒரே தட்டில் பாகுபாடின்றி உண்ண வைப்பதும் இந்த ஓரிறைக்கொள்கை நிகழ்த்தி வரும் அற்புதங்களே!
 அம்பேத்கர், பெரியார் முதற்கொண்டு பல சீர்திருத்தவாதிகள் தங்களின் வாழ்நாளை இத்தீமைகளுக்கு எதிராக போராடிக் கழித்தனர். ஆனால் இவர்கள் யாராலும் செய்ய முடியாத தீண்டாமை ஒழிப்பு, ஜாதி ஒழிப்பு இவற்றை நடைமுறைப்படுத்திக் காட்டுகிறது இந்த ஏக இறைக்கொள்கை! நம் நாட்டில் மட்டுமல்ல, உலகெங்கும் மக்களைப் பிரித்து பகைமையை விதைத்து வரும் இனவெறி, நிறவெறி, மொழிவெறிப் பேய்களை  அடக்கி அழிக்கிறது இந்த ஓரிறைக் கொள்கை! அமெரிக்காவிலும் ஆப்ரிக்காவிலும் நிறவெறி மற்றும் இனவெறி கொண்டு சிதறுண்டு ஒருவரையொருவர் வேட்டையாடிக்கொண்டு இருந்த மக்கள் இன்று ஒரே அணியில் தோளோடு தோள் நின்று தொழுவதும் அன்னியோன்னியமாகப் பழகுவதும் இன்று உலகம் கண்டுவரும் கண்கொள்ளாக் காட்சிகள்! ஆம், இன்று அங்கெல்லாம் வெகுவேகமாகப் பரவி வருகிறது இந்த ஓரிறைக்கொள்கை!
மனிதர்கள் அனைவரும் சமமே என்றும் அவர்களில் உயர்ந்தவர் தாழ்ந்தவர் கிடையாது என்பதை இறைவன் பின் வரும் வசனம் மூலம் திருக்குர்ஆனில் வலியுறுத்துகிறான்:
மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண்ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர்உங்களைக் கிளைகளாகவும்கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோஅவர்தாம் அல்லாஹ்விடத்தில்நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன். (திருக்குர்ஆன்49:13) 
http://quranmalar.blogspot.com/2012/10/blog-post_25.html 
இஸ்லாம் என்றால் என்ன? 
http://quranmalar.blogspot.com/2012/11/blog-post_6.html 
மறுக்கமுடியுமா மறுமை வாழ்வை?

செவ்வாய், 9 அக்டோபர், 2012

அல்லாஹ் என்றால் யார்?


படைத்த இறைவனைத்  திருக்குர்ஆன் அரபிச் சொல்லான அல்லாஹ் என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ஏகனாகிய இறைவனைக் குறிக்கும் சொல்லே அல்லாஹ் என்பது. ஆங்கிலத்தில் காட், தமிழில் கடவுள், ஹிந்தியில் பகவான் என்றெல்லாம் குறிப்பிடப்படுவது போல் அரபு மொழியில் கடவுளைக் குறிக்கும் வார்த்தைதான் அல்லாஹ்! எனினும் மற்ற மொழி வார்த்தைகளோடு ஒப்பிடும் போது இவ்வார்த்தைக்கு ஓரிரு தனிச் சிறப்புக்கள் உள்ளன:
  இவ்வார்தையின் உண்மைப்பொருள் வணங்குவதற்குத் தகுதி வாய்ந்த ஒரே இறைவன் என்பது.
 இவ்வார்த்தைக்கு ஆண்பால் பெண்பாலும் கிடையாது, பன்மையும் கிடையாது. எப்போதும் இது ஒருமையிலேயே விளங்கும்.
 உதாரணமாக ஆங்கில வார்த்தை God – Gods , Godess  அல்லது கடவுள் கடவுளர்கள் என்றும் பகவான் பகவதி என்றும் பன்மைக்கும் பாலுக்கும் ஏற்றவாறு மாறுவதுபோல் அல்லாஹ் என்ற வார்த்தை ஒருபோதும் சிதைவதில்லை.
இப்படிப்பட்ட சிறப்புக்களின் காரணத்தால் உலகெங்கும் முஸ்லிம்கள் இறைவனை அல்லாஹ் என்ற வார்த்தை கொண்டு அழைக்கின்றனர். மாறாக அல்லாஹ் என்றால் அரபு நாட்டுக் கடவுள் என்றோ முஸ்லிம்களின் குலதெய்வம் என்றோ நினைத்து விடாதீர்கள்.
அந்த இறைவனைப் பற்றி மனித மனங்களில் எழக்கூடிய சந்தேகங்களுக்கெல்லாம் திருக்குர்ஆன் பதிலளிக்கிறது:

இறைவன் ஒருவனைத்தவிர வேறில்லை
 இறைவன் ஒருவன் மட்டுமே என்பது பற்றி நமது பகுத்தறிவு என்ன சொல்கிறது?
ஒரு பள்ளிக்கூடத்திற்கு இரண்டு முதல்வர்கள் அல்லது ஒரு பேருந்துக்கு  இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட ஓட்டுனர்கள் இருந்தால் அது எவ்வாறு பெரும் குழப்பம் , கலகம் அல்லது விபத்தில் கொண்டு சேர்க்குமோ அதுபோல இவ்வுலகம் ஒன்றுக்கு மேற்பட்ட கடவுள்கள் இருந்தால் என்றோ அழிந்துபோய் இருக்கும் எனபதை நமது சாமானிய அறிவு கூட நமக்குச் சொல்கிறது.
திருக்குர்ஆனும் இவ்வாறு கூறுகிறது:
'(வானம் பூமி ஆகிய) இவற்றில் அல்லாஹ்வையன்றி வேறு தெய்வங்கள் இருந்திருந்தால், நிச்சயமாக இவையிரண்டும் அழிந்தே போயிருக்கும்......' (திருக்குர்ஆன் 21 : 22)
இறைவன் ஒருவனே என்பது பற்றியும் அவனது தன்மைகள் பற்றியும் இதோ திருக்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது:
நபியே நீர் கூறுவீராக! அல்லாஹ் அவன் ஒருவனே. அவன் தேவைகள் ஏதும் இல்லாதவன். அவன் எவரையும் பெற்றெடுக்கவில்லை அவனையும் யாரும் பெற்றெடுக்கவில்லை. அன்றியும் அவனைப்போல் எவரும் எதுவும் இல்லை.  (திருக்குர்ஆன் 112: 1-4)
59:22        அவனே அல்லாஹ், வணக்கத்திற்குரியவன், அவனைத் தவிர வேறு நாயன் இல்லை, மறைவானதையும், பகிரங்கமானதையும் அறிபவன், அவனே அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்.
59:23        அவனே அல்லாஹ், வணக்கத்திற்குரிய நாயன் அவனைத் தவர, வேறு யாரும் இல்லை, அவனே பேரரசன், மிகப்பரிசுத்தமானவன், சாந்தியளிப்பவன், தஞ்சமளிப்பவன், பாதுகாப்பவன், (யாவரையும்) மிகைப்பவன், அடக்கியாள்பவன், பெருமைக்குரித்தானவன் - அவர்கள் இணைவைப்பவற்றையெல்லாம் விட்டு அல்லாஹ் மிகத் தூய்மையானவன்.
59:24        அவன்தான் அல்லாஹ்; படைப்பவன், ஒழுங்குபடுத்தி உண்டாக்குபவன், உருவமளிப்பவன் - அவனுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன, வானங்களிலும், பூமியிலும் உள்ளவையாவும் அவனையே தஸ்பீஹு (செய்து துதி) செய்கின்றன - அவனே (யாவரையும்) மிகைத்தவன் ஞானம் மிக்கவன்.
வணக்கத்துக்கு உரியவன் யார்?

 மனிதர்களே! நீங்கள் உங்களையும்  உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா இறையச்சமும், தூய்மையும் உடையோராகலாம்.  (அல்குர்ஆன் 2:21)

அவன்தான் கர்ப்பக் கோளறைகளில் தான் நாடியபடி உங்களை உருவாக்குகின்றான்;. அவனைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் வேறில்லை. அவன் யாவரையும் மிகைத்தோனாகவும், விவேகம் மிக்கோனாகவும் இருக்கின்றான். (அல் குர்ஆன்  3:6).
 இவ்வாறு அனைத்து மனித குலத்துக்கும் பொதுவானவனும் சர்வவல்லமை கொண்டவனும் ஆகிய ஏக இறைவனை மட்டுமே வணங்க வேண்டும் என்று திருக்குர்ஆன் வலியுறுத்துகிறது. 
http://quranmalar.blogspot.com/2012/10/blog-post_25.html 
இஸ்லாம் என்றால் என்ன? முஸ்லிம் என்றால் யார்? 

வெள்ளி, 5 அக்டோபர், 2012

ஆபாசத் திரைப்படங்களும் கார்ட்டூன்களும்!



பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு ஒரு பாலைவனப் பெருவெளியில் நின்று கொண்டு பூமியில் தர்மத்தை நிலைநாட்டுவதற்காகப் போராடிய ஒரு மனிதரைக் கண்டு இன்று அதர்மவாதிகள் பயப்படுகிறார்கள். அவரை ஆபாசத் திரைப்படம் மூலம் சித்தரித்து தங்கள் காழ்ப்புணர்வை காட்டிக் கொள்கிறார்கள். இவர்களது எதிர்ப்புக்குக் காரணம் அவரல்ல, மாறாக அவர் உலக வரலாற்றில் ஏற்படுத்திய அசைக்கமுடியாத தாக்கமே! ஆம், அவர் அந்த சிறு மணற்பரப்பு மக்களுக்குக் கற்றுக் கொடுத்த ஒழுக்கக் கல்வி உலகெங்கும் பரவி காலங்களைக் கடந்து நிற்பதே இவர்களது வெறுப்புக்குக் காரணம். அவரிடம் பாடம் பயின்றவர்கள் பூமியில் வாழும் வரை அதர்மவாதிகளால் மக்களை ஏய்த்துப் பிழைக்க முடியாது, தங்கள் சுயநல சுரண்டல் திட்டங்களை செயல்படுத்த முடியாது. அந்த உத்தமர் அன்று கற்றுக் கொடுத்த கல்வி தலைமுறை தலைமுறையாகத் தன் விழிப்புணர்வுப் பணியைத் தொடருமானால் சகிக்க முடியுமா இவர்களால்?
அதனால்தான் இன்று நாம் காணும் எதிர்ப்பும் காழ்ப்புணர்வும்! இனி உலகம் உள்ளளவும் வரக்கூடிய அநீதியின் காவலர்களுக்கு சிம்மசொப்பனமாகவே இவர் இருப்பார். இவரைப் பற்றிய பயமும் காழ்ப்புணர்வும் அவர்களிடம் தொடரவே செய்யும்! ஏன் தெரியுமா? ஆம், அவரைத்தான் இறைவன் தன் இறுதித் தூதராக அனுப்பியுள்ளான். அதர்மம் பூமியில் ஆங்காங்கே தன் கோரதாண்டவத்தை நிகழ்த்தும் போது அதை எதிர்ப்பதும் அழிப்பதும் எவ்வாறு? மீண்டும் பூமியில் தர்மத்தை நிலை நாட்டுவது எவ்வாறு என்பவற்றை உலக மக்களுக்கு கற்றுக் கொடுக்கவே அந்த உத்தமரை இறைவன் ஆசிரியராக. நியமித்தான்.  
.முஹம்மது நபி (அவர்மீது இறைவனின் சாந்தியும் அருளும் உண்டாவதாக) அவர்கள்  உலக மக்களுக்கு இறுதியாக அனுப்பப்பட்ட இறைவனின் தூதர் என்பதற்கு இன்றைய இந்த நிகழ்வுகளே சான்று பகர்கின்றன. அவருக்கு முன்னர் அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள் குறிப்பிட்ட கால கட்டத்தில் குறிப்பிட்ட மக்களுக்காக அனுப்பப் பட்டிருந்தார்கள். அவர்கள் தத்தமது காலகட்டங்களில் அதர்மத்தை வென்று தர்மத்தை நிலைநாட்டி விட்டுச் சென்றார்கள். ஆனால் அவர்களைப் போல அல்லாமல் இறுதித் தூதரின் எல்லை உலகளாவியதும் காலங்களைக் கடந்ததும் ஆகும். அவர் அவரது வாழ்நாளில் தர்மத்தை நிலைநாட்டிவிட்டுச் சென்றார். ....இனி தர்மம் எவ்வாறு நிலைநாட்டப்படும்? ஆம், அதைத்தான் அவர்கள் நமக்குக் கற்றுக் கொடுத்துவிட்டுச் சென்றார்கள். அவர் மூலம் இறைவன் வழங்கிய உறுதிமிக்க வேதமாம் திருக்குர்ஆனும் அவரது முன்னுதாரண வாழ்க்கை வழிமுறையுமே அதற்கான நம் கருவிகள்! அவற்றை விவேகத்தொடும் பொறுமையோடும் கையாண்டால் அதர்மத்தையும் வெல்லலாம், அதர்மவாதிகளையும் திருத்தலாம்!
ஆனால் பரிகாச செயல்கள் கண்டு துவண்டு விடக்கூடாது, ஏனெனில் இப்போராட்டத்தில் இது வழமையானது. இப்பரீட்சையை ஏற்படுத்திய இறைவன் நபிகளாரைப் பார்த்து கூறுவதை கவனியுங்கள்:
நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு முன்னால் முந்திய பல கூட்டத்தாருக்கும் நாம் (தூதர்களை) அனுப்பிவைத்தோம். எனினும் அவர்களிடம் எந்தத் தூதர் வந்தாலும் அவரை அந்த மக்கள் ஏளனம் செய்யாமல் இருந்ததில்லை. இவ்வாறே நாம் குற்றவாளிகளின் உள்ளங்களில் இ(வ் விஷமத்)தைப் புகுத்தி வடுகிறோம்.. (திருக்குர்ஆன் 15:10-12)
http://quranmalar.blogspot.com/

உலக பயங்கரவாதத்தின் மூலகாரணம்



இன்று ஊடகங்கள் போட்டிபோட்டுக் கொண்டு உலகில் நடக்கும் பயங்கரவாத செயல்களை இஸ்லாத்தோடு முடிச்சு போட முனைவதை நாம் கண்டு வருகிறோம். ஆனால் அதே ஊடகங்கள் மற்ற மதத்தைச் சேர்ந்த யாரேனும் அப்படிப்பட்ட செயல்களைச் செய்யும்போது அவர்களை அந்த மதத்துடன் இணைத்துப் பேசுவதில்லை. ஏன் இந்த பாரபட்சம்? இக்கேள்வி விடைபெறாமல் தொடர்வதை நாம் அனைவரும் அறிந்தே இருக்கிறோம்.
உலக பயங்கரவாதத்தின் உண்மை முகம் ஊடகங்களால் மூடி மறைக்கப் படுவதை பெரும்பான்மை மக்கள் உணராமலேயே இருக்கிறார்கள். மக்களின் இந்த அறியாமையை உலகின் சுயநல சக்திகள் தங்களுக்கு ஆதரவாக பயன்படுத்திக் கொள்கின்றன. நம்நாட்டு அரசியல் கட்சிகளும் வகுப்புவாத சக்திகளும் இதை தங்களுக்கு வேண்டியவாறு பயன்படுத்திக் கொள்கின்றன.
 உலக அளவில் பார்க்கும்போது அமெரிக்காவுக்கும் G-8 நாடுகளுக்கும் ஆயுத விற்பனைதான் முக்கியமான வருமானம் ஈட்டும் வியாபாரம். உலகிலேயே அதிநவீன தொழில்நுட்பம் வாய்ந்த விமானங்கள், ஏவுகணைகள், நீர்மூழ்கிக் கப்பல்கள். அணுவாயுதங்கள் மற்றும்  இன்னபிற இராணுவத் தளவாடங்கள்  இவர்களின் கைவசம் இருப்பதால்தான் உலகநாடுகள் அனைத்தையும் இவர்களால் அச்சுறுத்தி தங்களின் அடிமைகளாக அடக்கிவைக்க முடிகிறது. இந்நாடுகளின் வளங்களைக் கொள்ளை அடிக்கமுடிகிறது. உதாரணமாக மத்திய கிழக்கில் எண்ணைவள நாடுகளான சௌதி அராபியா, குவைத், துபாய், கத்தர், போன்ற நாடுகள் இவர்களால் நியமிக்கப்பட்ட கைப்பாவை அரசர்களால் ஆளப்படுகின்றன.
ஆயுதங்களை  உலக சந்தையில் விற்பனை செய்ய வேண்டும் என்பதற்காக சிறு சிறு நாடுகளுக்கு இடையே பகைமையை மூட்டி ஒருவர்க்கொருவர் அடித்துக் கொள்ள வைப்பார்கள். அல்லது நாடுகளுக்குள்ளேயே சிறுசிறு குழுக்களைத் தூண்டி அரசுகளுக்கு எதிராக கிளர்ச்சி செய்யத் தூண்டுவார்கள். ஆயிரக் கணக்கில் அல்லது இலட்சக்கணக்கில் மனித உயிர்கள் மாய்வது இவர்களுக்கு ஒரு பொருட்டல்ல. தங்கள் வருமானமும் ஆதிக்கமும் தடைபெறக் கூடாது. இது ஒன்றுதான் இவர்களின் இலட்சியம். இந்த இலட்சியத்தை அடைவதற்காக ஒருபுறம் இராணுவ அடக்குமுறைகளையும் மறுபுறம் தங்கள் கைவசம் உள்ள பத்திரிகை, டிவி, ரேடியோ போன்ற ஊடகங்களையும் தந்திரமான முறையில் கையாள்கிறார்கள். இவர்களின் கைப்பாவை அரசுகளுக்கு எதிராக மனித உரிமைகள் கோரி புரட்சி செய்பவர்கள் உலகுக்கு முன் தீவிரவாதிகளாகவும் பயங்கரவாதிகளாகவும் சித்தரிக்கப்படுகிறார்கள். இவர்கள் தங்கள் ஆதிக்கத்திற்குள் கொண்டுவர நினைக்கும் நாடுகளுக்குள் கிளர்ச்சியாளர்களை உருவாக்கி அவர்களை உலகுக்கு முன் புரட்சியாளர்களாகவும் விடுதலைப் போராளிகளாகவும் சித்தரிக்கிறார்கள். அப்படிப்பட்ட நாடுகளில் கிளர்ச்சியாளர்களுக்கு இராணுவ பலமளித்து அந்நாடுகளைக் கைப்பற்றி கிளர்ச்சியாளர்களின் தலைவரை தங்கள் கைப்பாவை அரசராக அல்லது அதிபராக நியமிப்பார்கள். (சமீபத்திய உதாரணங்கள் : ஈராக், ஆப்கானிஸ்தான்)
  அதிநவீன இராணுவத் தளவாடங்களே இவர்களது முக்கிய விற்பனைப் பொருள். அவற்றை உலக நாடுகளில் விற்க வேண்டுமானால் அவ்வாயுதங்களின் செயல்திறனை உலகுக்கு முன் காட்டியாக வேண்டும். அதற்காக சிறு நாடுகளுக்கிடையே இவர்கள் மூட்டிவிடும் போர்களுக்குப் புறம்பாக ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கு இடையே குறைந்தபட்சம் ஒருமுறை பெரிய அளவிலான போரை எப்படியாவது நிகழ்த்துகிறார்கள். உலகெங்கும் ஊடகங்கள் மூலமாக மக்களை மூளைச்சலவை செய்து அதை நியாயப் படுத்தவும் செய்வார்கள். மக்கள் அதைப் பார்க்கிறார்கள். இப்படி அப்பாவி மக்களின் இரத்தத்தை ஆறாக ஒட்டி அதன்மீது ஆயுதக் கண்காட்சி நடத்துவது இவர்களது வாடிக்கை! இக்கண்காட்சியை தவறாது நடத்துவதன் மூலம் இவர்களுக்கு இரண்டு நேட்டங்கள்: ஒன்று ஆயுத விற்பனை. மற்றது உலக நாடுகளை பயமுறுத்தி தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்துவது.
   இப்போது கூறுங்கள், யார் பயங்கரவாதிகள்? இவர்களாஇல்லை சொந்த மண்ணிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு தங்களது நாட்டை மீட்பதற்காகப் போராடுபவர்கள்களா? அல்லது தங்களது மனைவி மக்களையும் உற்றார் உறவினர்களையும் இவர்களின் சூழ்ச்சிகளினால் பறிகொடுத்துவிட்டு தங்கள் உரிமைகளை மீட்பதற்காக போராட்டங்கள் நடத்துபவர்களா? அல்லது தங்களது நாடுகளில் இவர்களின் கைப்பாவை அதிபர்களுக்கு எதிராகக் குரல் கொடுத்து நாட்டையும் நாட்டின் வளங்களையும் காப்பாற்றுவதற்காக முனைபவர்களா?
ஆனால் என்ன நடக்கிறது?  இன்று ஊடகங்களின் ஆதிக்க பலத்தினால் உலகளாவிய முறையில்  கொடுங்கோலர்கள் சமாதானப் பிரியர்களாகவும் இழந்த உரிமைகளையும் உடமைகளையும் மீட்பதற்காகவும் சமாதானத்தை நிலைநாட்டவும் போராடுபவர்கள் பயங்கரவாதிகளாகவும் சித்தரிக்கப் படுகிறார்கள்.

புதன், 3 அக்டோபர், 2012

சுயமரியாதையை மீட்டெடுக்க ஒரே வழி!

தினமும் ஐவேளைத் தொழ வேண்டும் என்று தூய இறைமார்க்கமாம் இஸ்லாத்தில்  வலியுறுத்தப்பட்டுள்ளது. இத்தொழுகையில் மனிதன் நின்று, குனிந்து, சிரம் பணிந்து, அமர்ந்து படைத்த இறைவனைத்   துதிக்கிறான். இறைவன் மிகப் பெரியவன்; நான் அவனது கட்டளைக்குப் கட்டுப்படவேண்டிய சிறியவன் என்ற பயிற்சியை மனிதன் ,இதன்   மூலம் பெறுகிறான்.
 ,இதனால் மனித சமுதாயத்திற்குக் கிடைக்கும் நன்மைகள் என்ன?
ஏராளமாக உள்ளன.
மனிதன் மானத்துடனும், ரோஷத்துடனும், சுயமரியாதையை இழக்காமலும் வாழவேண்டும் என்று அறிவுடையோர் எதிர்பார்க்கின்றனர். இந்த சுயமரியாதைக்காகவே பல இயக்கங்கள் தோன்றியுள்ளன.
  மனிதனைவிட எல்லாவகையிலும் குறைந்த நிலையிலுள்ள கற்கள், விலங்குகள், பறவைகள் ஆகாயம், சூரியன், சந்திரன், நெருப்பு, ஆகியவற்றுக்கு முன்னால் மனிதன் மண்டியிட்டு வணங்கும் போது சுயமரியாதையை இழந்து விடுகிறான். தன்னைவிட தாழந்தவற்றுக்கு முன் இவன் தாழ்ந்து விடுகிறான். தனக்குச் சமமான, தனனைப்போலவே ஆசாபாசங்கள் உள்ள - தன்னைப்போலவே பலவீனங்கள் நிறைந்த - மலஜலத்தைச் சுமந்திருக்கக் கூடிய இன்னொரு மனிதன் முன்னால் மண்டியிடும்போதும் மனிதன் தனது சுயமரியாதையை இழந்து விடுகிறான்.

இவற்றை எதிர்த்துப் பிரச்சாரம் செய்த சுயமரியாதைக்காரர்களும் கூட இன்னொரு வடிவில் சுயமரியாதையை இழந்து நிற்கும் பரிதாப நிலையைப் பார்க்கின்றோம். கல்லுக்குப் பூஜை செய்யலாமா? அவற்றால் அதை உணர முடியுமா? என்றெல்லாம் கேள்வி கேட்டவர்கள் இன்னொரு கல்லுக்கு - பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்கின்றனர். என்றோ இறந்துவிட்ட பெரியார் இதை உணர முடியுமா?  என்பதைச் சிந்திக்க மறந்து விட்டனர். சிலைகள்தான் மாறியுள்ளனவேத் தவிர சிலை வணக்கம் மாறவில்லை. அவ்வழி வந்த திராவிட கட்சிகளுக்குள் காலில் விழும் கலாசாரம் நாளுக்கு நாள் போட்டிப்போட்டுக் கொண்டு வளர்ந்து வருவதும் கண்கூடு.
 ஆக அனைவரும் சுயமரியாதையை வந்த விலைக்கு விற்றுக் கொண்டுதான் உள்ளனர். விற்கும் சந்தைதான் மாறியுள்ளதேத் தவிர விற்பனை நின்றதாகத் தெரியவில்லை.
இப்போது உலகில் காணும் மற்ற வழிபாட்டு முறைகளோடு  உண்மை இறைமார்க்கம் கூறும் ஐவேளைத் தொழுகை முறையை ஒப்பிட்டுப் பாருங்கள்:    
வணக்கத்துக்கு உரியவன் படைத்த இறைவனைத்தவிர வேறு யாரும் இல்லை என்ற மூல மந்திரத்தைப் பின்பற்றி ஐங்காலத் தொழுகைகளை வீட்டிலோ அல்லது பள்ளிவாசல்களிலோ நிறைவேற்றும்போது

  • படைத்தவன் முன்னால்  ஐவேளையும் நின்று வணங்கும்போது  இறைவனது வல்லமையை நினைவு கூர்ந்து அவனைச் போற்றிப் புகழ்வதால் மனிதனுக்கு உண்மையான இறையச்சமும் பக்தியும் ஏற்படுகிறது அதனால் அவன் ஒரு தொழுகைக்கும் மறு தொழுகைக்கும் இடையே பாவம் செய்ய முற்பட மாட்டான். இதனால் பாவங்கள் அற்ற ஆரோக்கியமான சமூகம் உருவாகிறது.
  • படைத்த இறைவனை நேரடியாக வணங்குவதால் மிகப்பெரிய தன்னிறைவும் மனஉறுதியும் நமக்குள் ஏற்படுகிறது. சந்தேகங்களுக்கோ வீண் சஞ்சலங்களுக்கோ அங்கு இடமில்லை.
  • இடைதரகர்களுக்கு அங்கு வேலை இல்லை.அதனால் கடவுளின்  பெயரால் நடத்தப்படும் சுரண்டல்களுக்கும் மோசடிகளுக்கும் பாலியல் குற்றங்களுக்கும் அங்கு இடமில்லை.
  • உயிரும் உணர்வுமற்ற பொருட்களைக் கடவுள் என்று நம்பி ஏமாறுதலும் பொருட்செலவும் வீண் அலைச்சல்களும் நீண்ட வரிசைகளில் காத்திருப்புகளும் அங்கு இல்லை.  
  • மனிதர்களும் அனைவரும் இறைவன் முன்பு சமம் என்ற கொள்கை என்ற அடிப்படையில் கூட்டுத் தொழுகைகளில் தோளோடு தோள் சேர்ந்து அணியணியாக நிற்கும் போது நம்மிடையே சமத்துவமும் சகோதரத்துவமும் ஈடிணையற்ற முறையில் வளர்கிறது. சமூகத்தில் தீண்டாமையும் ஜாதிகளும் ஒழிந்து போகின்றன.
  • படைத்தவன் மட்டுமே வணக்கத்துக்கு உரியவன் என்ற கொள்கை உறுதியாகப் பின்பற்றப்படுவதால் மனிதன் மனிதனுக்கு முன்னாலோ அவனுக்கு கீழானவற்றுக்கு முன்னாலோ தலை சாய்த்தல் என்பது அறவே சமூகத்திலிருந்து ஒழிக்கப்படுகிறது. சுயமரியாதை பேணும்  சமுதாயம் அங்கு உடலெடுத்து ஓங்கி வளர்கிறது.
  • தொழுகைகளில் வரிசைகளில் நிற்கும்போது பாதங்கள் முன்பின் என்றிராமல் சீராக அமைய வேண்டும் அவ்வாறு இல்லாவிட்டால் விட்டால் உங்கள் தொழுகைகள் ஏற்றுக்கொள்ளப் படமாட்டாது என்பது நபிகளாரின் கூற்று. ஏழை பணக்காரன் அரசன், ஆண்டி படித்தோன், பாமரன் என அனைவரும் ஒரே வரிசையில் சீராக இடைவெளியின்றி ஐவேளையும் நின்று பழகும்போது மனிதர்களுக்கிடையே நிலவும் தாழ்வுமனப்பான்மை, உயர்வுமனப்பான்மை போன்றவை அறவே துடைத்து எறியப்படுகின்றன.
இன்னும் இவைபோன்ற பற்பல நன்மைகளை தாங்கி நிற்கிறது ஐவேளைத் தொழுகை!
.நிச்சயமாகத் தொழுகைத் மானக்கேடானவற்றை விட்டும் தீயவைகளை விட்டும் தடுக்கின்றது.' (அல்-குர்ஆன் 29:45;).

செவ்வாய், 2 அக்டோபர், 2012

இறைவழி நின்று இலஞ்ச ஊழலை ஒழிப்போம்.


நம்மைச் சுற்றி பற்பல தீமைகள் கட்டுக்கடங்காமல் பெருகிக் கொண்டு வந்தாலும் இன்று அனைவரின் உள்ளத்திலும் ஒரு தீமை அதிகமாக உறுத்திக்கொண்டே இருப்பதை நாம் வெளிப்படையாகக் காண முடிகிறது. அதுதான் நம் நாட்டை வெகுவாக அச்சுறுத்தி வரும் இந்த இலஞ்ச ஊழல் எனும் தீமை! இதை எப்படியாவது முடிவுக்குக்கொண்டு வரவேண்டும் என்று கங்கணம்கட்டிக் கொண்டு பலரும் களம் இறங்கிப்போராடுவதை நாம் அன்றாடம் கண்டு வருகிறோம். ஒருசிலர் உண்மை உணர்வோடும் சிலர் சுய விளம்பரத்திற்காகவும் சிலர் அரசியல் ஆதாயம் தேடியும் இன்னும் சிலர் தங்களின் பாவ மூட்டைகளை மறைப்பதற்காகவும் போராட்டக் களத்தில் உள்ளனர்.
எது எப்படியானாலும் இறைவனில் நம்பிக்கை கொண்டவர்கள் நம்மைச்சுற்றி நடக்கும் அநியாயங்களைக் கண்டு அலட்சியமாக இருக்க முடியாது. நாமும் களம் இறங்கியாக வேண்டும். விளம்பரத்துக்காகவோ அல்லது வேறு ஆதாயங்களுக்காகவோ அல்ல. ஆனால் இந்த பூமியில் தர்மத்தை நிலை நாட்டவேண்டிய பொறுப்பை நம் மீது இறைவன் சுமத்தியுள்ளான் என்ற காரணத்தால்!  அது இறைநம்பிக்கையின் ஒரு பாகமாகும். நாளை மறுமையில் இறைவனால் இதுபற்றி நாம் விசாரிக்கப் படுவோம் என்ற பொறுப்புணர்வு நமக்கு இருக்கவேண்டும். இறைமார்க்கம் அல்லது இஸ்லாம் என்பது வெறும் தொழுகை, தியானம், விரதம் மற்றும் இன்னபிற சடங்குகளுக்குப் பெயரல்ல. மாறாக நம்மைச்சுற்றி நன்மைகளை வளர்க்க வேண்டும். நடக்கும் தீமைகளைத் தடுக்கவும் வேண்டும். இதோ தனது இறுதிவேதம் மூலம் நாம் எப்படிப்பட்டவர்கள் என்று இறைவன் கூறுகிறான்  :
மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்; தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்; இன்னும் அல்லாஹ்வின்மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள்...... (திருக்குர்ஆன்  - 3:110)
(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்கு உரிய ஒரே இறைவன் என்று பொருள்)
மேலும் இறைத்தூதர் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

உங்களில் எவரேனும் தீமையைக் கண்டால் கையால் தடுக்க வேண்டும். இயலாவிட்டால் நாவால் தடுக்க வேண்டும். அதற்கும் இயலாவிட்டால் மனதால் வெறுக்க வேண்டும். இதுதான் இறைநம்பிக்கையின் இறுதிநிலையாகும். (நூல்: முஸ்லிம் 78)

ஆக, ஒரு இறைநம்பிக்கையாளனைப் பொறுத்தவரை அவன் தீமைகளை எதிர்த்து எவ்வாறெல்லாம் முடியுமோ அவ்வாறு போராடக் கடமைப்பட்டிருக்கிறான். எனவே  இன்று நாம் உள்ள நிலையில் எந்தத் தீமைகளை நாம் கையினால் நேரடியாகத் தடுக்க முடியமோ அந்தத் தீமைகளை நேரடியாகத் தடுக்கவேண்டும். நமது நாடு இன்று ஜனநாயக நாடாக உள்ளது. அரசியல் சாசனங்களுக்கு உட்பட்டு நாம் காணும் தீமைகளுக்கு எதிராகக் களம் இறங்க வேண்டும். ஆனால் போராட்டம் என்ற பெயரில் பொதுமக்களுக்கு இடையூறு தரும் அல்லது  பொதுசொத்துக்களைப்  பாழ்ப்படுத்தும் செயல்களை இறைவன் ஒருபோதும் அனுமதிப்பதில்லை என்பதையும் அது நமக்கு பாவமாகப் பதிவு செய்யப்படும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
எவ்வாறு போராடுவது?
தீமைகளை எவ்வாறு சமூகத்தில் இருந்து களைவது என்பதையும் அதை மீறி அந்தத் தீமைகள் சமூகத்தில் உடலெடுத்து தலைவிரித்து ஆடும்போது அவற்றை எவ்வாறு கட்டுக்குக் கொண்டுவருவது என்பதையும் எல்லாம் வல்ல இறைவனே நமக்குக் கற்றுத் தருகிறான்.

  1. ஒழுக்கம் விதைப்போம்!
இலஞ்ச ஊழலை மட்டுமல்ல அனைத்து தீமைகளையும் ஒழிக்க தனிமனிதன் திருந்தினால்தான் முடியும். தனிமனிதன் திருந்தவேண்டும் என்றால் மனிதனுக்குள் உண்மையான இறைநம்பிக்கை விதைக்கப்பட வேண்டும். படைத்த இறைவனைப் பற்றிய உண்மையான நம்பிக்கையை பகுத்தறிவு ஏற்றுக்கொள்ளும் விதத்தில் விதைக்க வேண்டும்.
 அதாவது இவ்வுலகத்தைப் படைத்து பரிபாலித்து வரும் அந்த சர்வவல்லமை கொண்ட அந்த இறைவன் ஒரே ஒருவனே. அவன் மட்டுமே வணக்கத்துக்கு உரியவன். அவன் இவ்வுலகை ஒரு பரீட்சைக் கூடமாக ஆக்கியுள்ளான் இந்த தற்காலிக வாழ்வில் மனிதர்கள் செய்யும் பாவங்களுக்கு தண்டனையாக நரகமும் புண்ணியங்களுக்குப் பரிசாக சொர்க்கமும் மறுமையில் கிடைக்கும் என்ற உண்மையை மக்களுக்கு சிறுவயதுமுதலே ஊட்டி வளர்க்க வேண்டும்.   அப்போதுதான் உண்மையான இறையச்சம் உருவாகும்.
 மாறாக உயிரும் உணர்வும் இல்லாத உருவங்களைக் காட்டி அவற்றையெல்லாம் கடவுள் என்று கற்பித்தால் குற்றங்கள் செய்ய அஞ்சாத தலைமுறைகள்தான் உருவாகும்.. இன்று அதுதானே நாட்டில் நடைபெற்றுக்கொண்டு வருகிறது! சிறுவயதுமுதலே முன்னோர்களின் வழக்கம் என்ற பெயரில் உயிரும் உணர்வும் இல்லாத உருவங்களையும் சிலைகளையும் சமாதிகளையும் எல்லாம் காட்டி இதுதான் கடவுள் அதுதான் கடவுள் என்று கற்றுக் கொடுத்து குழந்தைகளை வளர்த்து வருகிறோம். அதனால் பாவம் செய்ய சிறிதும் கூச்சமில்லாத தலைமுறைகள் பெருகி நம்மை அலைக்கழிக்கின்றன. இந்நிலை மாற படைத்தவனை நேரடியாக வணங்க கற்றுக்கொடுக்க வேண்டும்.

  1. இறைசட்டங்களை அமுல்படுத்துவோம்!

தீமைகள் பெருகுவதற்கு அடுத்த காரணம் படைத்த இறைவன் வகுத்துத் தரும் வாழ்க்கைத் திட்டங்களையும் சட்டங்களையும் புறக்கணித்துவிட்டு மனிதன் மனம்போன போக்கில் உருவாக்கியவற்றை செயல்படுத்துவதுதான். மனிதனின் இயற்கையை நன்கறிந்தவன் இறைவன் மட்டுமே. அவன் நமக்கு வகுத்தளித்துள்ள வாழ்வியல் சட்டங்களையும் குற்றவியல் சட்டங்களையும் அமுல்படுத்தினாலே நாட்டில் குற்றங்கள் வெகுவாகக் குறைந்துவிடும். உதாரணமாக, இலஞ்ச ஊழல் தொடர்புள்ள இரு சட்டங்களை மட்டும் இங்கு காண்போம்.
குற்றவியல் சட்டம் :
நமது  நாட்டில் இலஞ்சம், மோசடி, திருட்டு, கொலை, கொள்ளை போன்றவை கட்டுக்கடங்காது பெருகுவதற்கு நமது நாட்டின் குற்றவியல் சட்டங்கள் மிகவும் துணை போகின்றன. திருடனுக்கும் மோசடிக்காரர்களுக்கும் கருணை காட்டும்விதம் அவை அமைந்துள்ளதால் திருடர்கள் மீண்டும் மீண்டும் திருடுகிறார்கள் என்பது மட்டுமல்ல சிறைச்சாலைகளில் இருந்து வெளியே வரும்போது புதுப்புது கலைகளையும் கற்றுக்கொண்டு வருகிறார்கள். ஆனால் இறைவன் வழங்கும் குற்றவியல் சட்டம் திருடனின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவனது முன்கையை பொதுமக்கள் சாட்சியாக வெட்டிவிடச் சொல்கிறது. அதை நடைமுறைப்படுத்தி  இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பினால் என்ன நடக்கும்?..... சற்று யோசித்துப் பாருங்கள்! திருடர்களும் மோசடிக்காரர்களும் உண்மையாக தண்டிக்கப்படுவார்கள் என்பது மட்டுமல்ல நாட்டுமக்களுக்கும் ஒரு பாடமாக அமையும். இச்சட்டம் அமலுக்கு வந்தால் இன்று நீங்கள் காண்பதுபோல் இலஞ்ச ஊழல் தலைவிரித்தாடும் நிலையையோ ஊழல்பேர்வழிகள் நாட்டைக் கொள்ளையடித்து ஆளும் நிலையையோ காணமுடியாது.
நியாயமான வரிவிதிப்பு:   
இலஞ்சமும் ஊழலும் பெருகுவதற்கும் கறுப்புப் பணம் அதிகரிப்பதற்கும் முறையற்ற வரிவிதிப்பும் காரணமாக உள்ளது. சம்பாதிப்பதில் நாற்பது சதவீதத்தை அரசுக்கு வரியாக செலுத்து என்று வற்புறுத்தப் படும்போது பணத்தைப் பதுக்க வழி தேடுவது மனித இயல்பு! அதைத்தான் இன்று நம் நாட்டில் கண்டு வருகிறோம்! நம் நாட்டில் சம்பாதிக்கப்பட்ட பணம் நம் நாட்டில் புழக்கத்தில் இருக்கவேண்டிய பணம் சுவிஸ் வங்கிகளில் அடைக்கலம் தேடுகிறது. இதற்கு மாற்றாக இறைவன் கூறும் ஜகாத் அமைப்பை நடைமுறைப்படுத்திப் பாருங்கள்.
 நியாயமான முறையில் எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதித்துக் கொள்! உனது சேமிப்பில் இரண்டரை சதவீதம் எழைவரியாக செலுத்து என்கிறது ஜகாத் சட்டம். இதை நம் நாட்டில் சட்டமாக்கினால் யோசித்துப்பாருங்கள்! மக்கள் தாங்களாகவே முன்வந்து வரியை செலுத்தமாட்டார்களா? வரிசெலுத்தும்போது இறைப்பொருத்தமும் கிடைக்கும் என்று மக்கள் அறிந்துகொள்வார்களானால் வரிஏய்ப்பு என்பது நடக்குமா? இலஞ்ச ஊழல் மன்னர்கள் நாட்டில் உருவாகுவார்களா?
  1. பயனுள்ள கல்வி   
குழந்தைகளுக்கு வீணானவற்றை போதிப்பதை விட பயனுள்ள கல்வியை கற்றுக் கொடுக்க சொல்கிறது இஸ்லாம். படைத்த இறைவனை முறைப்படி வணங்கக் கற்றுக் கொடுப்பதோடு பள்ளிப் பாடத்திட்டத்தில் அரசு அலுவலகங்களின் நடைமுறைகளைப் பற்றியும் சட்டதிட்டங்கள் மற்றும் வரைமுறைகள் பற்றிய பாடங்களை  உட்படுத்தி மக்களின் அறியாமையைப் போக்கினால் இடைத்தரகர்களும் இலஞ்ச ஊழல்களும் ஒழிந்தே போகும்.