Search This Blog

Thursday, September 6, 2012

7.தர்மமும் பயங்கரவாதமும் (part-7)நபிகள் நாயகம் பயங்கரவாதத்தை எவ்வாறு எதிர்கொண்டார்கள்?

தங்களது சத்தியப் பிரச்சாரத்தின் விளைவாக நபிகள் நாயகமும் அவரது ஆதரவாளர்களும் அதர்மவாதிகளின் அடக்குமுறைகளுக்கும் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கும் ஆளாகி தாயகமான மக்காவைத் துறந்து மதீனாவில் தஞ்சம் அடைந்தனர். அங்கும் மக்காவாசிகள் இஸ்லாத்தை அழிக்கும் நோக்கோடு மதீனா வரை வந்து தொடுத்த தொடர் போர்களின் இறுதியில் சத்தியமே வென்றது. முடிவாக நபிகள் நாயகமும் தோழர்களும் மக்காவை கத்தியின்றி இரத்தமின்றி வென்றார்கள். அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கினார்கள். மக்கள் அதிகமதிகமாக தங்களை இஸ்லாத்தில் இணைத்துக்கொண்டனர் என்பதையெல்லாம் சென்ற இதழ் வரை கண்டோம்.  
 மக்கா வெற்றியைத் தொடர்ந்து சிலைவணக்கக் கலாச்சாரமும் மூடநம்பிக்கைகளும் அராபிய மண்ணில் வேரோடு அழிந்தன. மக்கள் அசத்தியத்தில் இருந்து சத்தியத்தைப் பிரித்து அறிந்து கொண்டனர். ஹிஜ்ரி 9, 10 ஆகிய ஆண்டுகளில் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள மதீனாவை நோக்கி ஒன்றன் பின் ஒன்றாக மக்களின் குழுக்கள் வரத் தொடங்கின
(குறிப்பு: நபிகளார் தமது தாயகத்தைத் துறந்து மதீனா நோக்கி சென்ற பயணத்தில் இருந்து கணக்கிடப் படுவதே ஹிஜ்ரி ஆண்டு என்பது )
  நபிகள் நாயகம்)ஸல்(  தமது 63 ஆம் வயதில் மதீனாவில் மரணிக்கும் போது இன்றைய இந்தியாவை விட அதிக நிலப்பரப்பு அவரது ஆளுகையின் கீழ் வந்திருந்தது . சக்தி வாய்ந்த அரசியல் தலைமையும் ஆன்மீகத் தலைமையும் ஒருசேரப் பெற்றிருந்தாலும் மக்களின் மீது இஸ்லாத்தைத் திணிக்கவில்லை.
2:256. “இம்மார்க்கத்தில் எந்த வற்புறுத்தலும் இல்லை. வழி கேட்டிலிருந்து நேர்வழி தெளிவாகி விட்டது. தீய சக்திகளை மறுத்து அல்லாஹ்வை நம்புபவர் அறுந்து போகாத பலமான கயிற்றைப் பிடித்துக் கொண்டார். அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன்.”
என்ற இறைவனின் கட்டளைப்படி இம்மார்க்கத்தை ஏற்றுக் கொள்வதும் மறுப்பதும் தனிநபர் சுதந்திரத்தில் உள்ள உரிமை என்ற அடிப்படையில் நபிகளாரின் ஆளுகையின் கீழ் எவரையும் இம்மார்க்கத்தை ஏற்றுக் கொள்ளுமாறு கட்டாயப்படுத்தவில்லை. யூதர்களும் கிறிஸ்தவர்களும் அவரவர் மதங்களை பின்பற்றி வாழ்ந்தனர்.
மாற்றுமத மக்களோடு நபிகளார் எப்படி நடந்துகொண்டார்கள் என்பதை அறிய பின்வரும் சம்பவத்தை சற்று பாருங்கள்:
யூதப் பெண்ணொருத்தி நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்கு நஞ்சூட்டப்பட்ட ஆட்டைக் கொண்டு வந்து கொடுத்தார். அதை நபி(ஸல்) அவர்கள் சாப்பிட்டார்கள். அவள் நபி(ஸல்) அவர்களிடம் அழைத்து வரப்பட்டு அவளிடம் இதுபற்றி விசாரித்தார்கள். 'உங்களைக் கொல்லும் நோக்கத்தில் அவ்வாறு செய்தேன்' என்று அவள் கூறினாள். அல்லாஹ் உனக்கு அந்தப் பொறுப்பைத் தரவில்லை என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். 'இவளைக் கொன்று விடட்டுமா? என நபித்தோழர்கள் கேட்டதற்கு 'கூடாது' என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம், அஹ்மத் ஆகிய நூல்களிலும் இந்த வரலாற்று நிகழ்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது)
தனக்கு எதிராக யார் எந்தக் குற்றங்களைச் செய்த போதும் மன்னித்தே வந்திருக்கிறார்கள் ஆனால் மார்க்கத்திற்கு எதிராக - தர்மத்திற்கு எதிராக -  யாரேனும் குற்றம் புரிந்தால் அதை தண்டிக்காமல் விட்டதில்லை என்று அவரது உற்ற தோழர்கள் அறிவிப்பது ஹதீஸ் நூல்களில் பதிவாகி உள்ளது.

பூமியில் இறைவனின் பெயரால் பொய்களைப் பரப்பி மக்கள் ஏமாற்றப் படுவதையும் சுரண்டப்படுவதையும் அதர்மம் பரவுவதையும் தடுத்து நிறுத்த உலகைப் படைத்து பரிபாலித்துவரும் ஏக இறைவனால் முழு அதிகாரத்தோடு அனுப்பப்படுபவர்களே இறைத்தூதர்கள் என்பதை நாம் நினைவு கூர வேண்டும். அவர்களின் முக்கியப் பணி மக்களிடையே ‘இறைவனுக்குக் கீழ்படிதல்’ (அரபு மொழியில் இஸ்லாம்) என்ற உயரிய சீர்திருத்தக் கொள்கையை மக்களிடையே பரப்பி அவர்களை நேர்வழிப் படுத்துவதே. மூட நம்பிக்கைகளில் மூழ்கிக் கிடக்கும் மக்களிடம் தெளிவான கடவுள் கொள்கையையும் மறுமை நம்பிக்கையையும் விதைப்பதன் மூலம்  அவர்களைத் திருத்தி இறைவனுக்குக் கட்டுப் பட்டவர்களாக மாற்றி அம்மக்களை ஈருலகிலும் – அதாவது இவ்வுலகிலும் மறுமை வாழ்விலும் – வெற்றி அடையச் செய்வதே இஸ்லாம்  
 அதே வேளையில் அதர்மத்தின் காவலர்களும் அக்கிரமசீலர்களும் ஆதிக்க வர்க்கமும் இந்த சீர்திருத்தப் பணிக்கு எதிராக அணிதிரண்டு வரும்போது அவர்களுக்கு அடிபணிந்தால் தர்மம் பரவாது. அதர்மமும் அமைதியின்மையுமே அராஜகமுமே இவ்வுலகில் பரவும்.  அவர்கள் இப்பணிக்கு முட்டுக்கட்டைகளாக வரும்போது அவற்றை எவ்வாறு பக்குவமாகக் கடந்து தர்மத்தை நிலைநாட்டுவது  என்பதுதான் நபிகளாரின் நடைமுறையிலிருந்து  நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடமாகும். 

No comments:

Post a Comment