Search This Blog

Sunday, October 28, 2012

படைத்தவன்பால் திரும்புவோம் பாரதத்தைக் காப்போம்

Related image
இன்று நாம் அனைவருமே பல்வேறுவிதமான பாவங்களின் பெருக்கத்தால் பாதிப்புக்குள்ளாகி தவித்துக் கொண்டிருக்கிறோம். அமைதி என்பது கண்ணுக்கெட்டாத தூரத்துக் கனவாகவே தொடர்கிறது.
  • கொலை கொள்ளை, மோசடி, விபச்சாரம், பாலியல் பலாத்காரங்கள், இலஞ்சம், ஊழல், அடக்குமுறைகள், கட்டப்பஞ்சாயத்து, வன்முறைகள்  என்று ஒருபுறம்.
  • தனிநபர் வாழ்வில் பொய், புரட்டு, புறம் பேசுதல், நம்பிக்கை மோசடி, தாய்தந்தையரைப் புறக்கணித்தல், பெண்ணுரிமை பறித்தல், வரதட்சணைக் கொடுமைகள், சிசுக்கொலைகள், உறவுகளை முறித்தல்...... என்பன போன்றவை இன்னொரு புறம்.
  • மனித வாழ்வின் அடிப்படைத் தேவைகளான உணவு, நீர், காற்று இவற்றில் கண்மூடித்தனமான கலப்படங்கள் செய்தும் பயிர்களின் அமோக விளைச்சல்களுக்காக உயிர்கொல்லி இரசாயனங்களை பயன்படுத்தியும்  மீளமுடியாத நோய்களுக்கு மனிதகுலத்தை கொண்டு செல்லும் சுயநலக் கூட்டங்கள் ஒருபுறம். 
  • ஒரே மனித இனத்திற்குள் மதம், இனம், நாடு , மொழி, நிறம் இவற்றின் பெயர்களால் வெறியூட்டி ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு மாய்வது ஒருபுறம்......
  • நலிந்த நாடுகளில் மனித உயிர்களையும், அவர்களின் உழைப்புகளையும் மாய்ப்பதையே தங்கள் நாடுகளின் முக்கிய முதலீடாகக் கொண்டு தங்களின் ஆயுத விற்பனை செய்து உலகெங்கும் பயங்கரவாதத்தை வளர்த்துவரும் வல்லரசு நாடுகளும் அவற்றின் கூட்டாளிகளும் ஒருபுறம்.....
பட்டியலிட இன்னும் பல இருந்தாலும் விரிவஞ்சி இத்துடன் நிறுத்திக் கொள்வோம். இவ்வாறு பலவிதமான கொடுமைகளும் குற்றங்களும் பாவங்களும் மனித சமுதாயத்தை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கின்றன.
 இவற்றிலிருந்து எப்போது விடிவு ஏற்படும் என்று ஏங்காத இதயங்கள் கிடையாது. ஆனால் எவ்வாறு இவற்றைக் களைவது? மனித இதயங்கள் திருந்தினால் மட்டுமே இது சாத்தியம். ஒரு ஆக்கப்பூர்வமான ஒரு செயல்திட்டம் இதற்குத் தேவை.
 வெறும் நீதி போதனைகளோ அறிவுரைகளோ மனிதனை ஒருபோதும் திருத்தாது. கடுமையான சட்டங்களோ காவல்துறை கட்டுப்பாடுகளோ மனிதனைத் திருத்த முடிவதில்லை என்பதேயும் நாம் கண்டுவருகிறோம். அன்பினால் எதையும் வெல்லலாம் என்றும் ஒரு கன்னத்திலடித்தால் மறு கன்னத்தைக் காட்டு என்றெல்லாம் தேனொழுகும்  வசனங்களைப் போதிப்பதனாலும் பாவங்களின் பெருக்கத்தை கட்டுப் படுத்த முடிவதில்லை என்பதையும் நாம் காண்கிறோம்.
பிறகு என்னதான் வழி?
 முதலில் மனிதன் பாவங்களிருந்து தவிர்ந்து வாழ வேண்டுமானால் என்ன தேவை எனபதை ஆராய்வோம். அதற்கு முக்கியமாக மனித மனங்களுக்குள் இரண்டு அடிப்படை விஷயங்கள் விதைக்கப் படவேண்டும். முதலாவதாக என்னைப் படைத்து பரிபாலிக்கக்கூடிய இறைவன் ஒருவன் எனக்கு மேலே இருக்கிறான். அவன் என்னைக் கண்காணித்து வருகிறான் என்ற உணர்வு  மிகமிக முக்கியமானது. அடுத்த படியாக அந்த இறைவனுக்கு நான் பதில் சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன், நான் தவறு செய்தால் அவன் என்னை தண்டிப்பான் என்ற பய உணர்வும் நல்லது செய்தால் பரிசளிப்பான் என்ற எதிர்பார்ர்ப்பும் மிக முக்கியமானது. 
 இந்த இரண்டு உணர்வுகளும் இல்லை என்றால் மனிதன் எந்தப் பாவத்தையும் துச்சமாகவே கருதுவான். தன் மனோ இச்சைகளை நிறைவேற்றிக்கொள்ள எப்பாவத்தைச் செய்யவும் துணிவான்.
 ஆனால் இன்று என்ன நடக்கிறது?
= படைத்த இறைவன்தான் வணங்குவதற்குத் தகுதியானவன் என்று மக்களுக்குக் கற்றுக் கொடுப்பதை விட்டுவிட்டு, குழந்தைப் பருவம் முதல் உயிரற்ற உணர்வற்ற பொருட்களையும் உருவங்களையும் சமாதிகளையும் எல்லாம் காட்டி இதுதான் உன் கடவுள் என்று போதிக்கப் படுகிறது. அதனால் சிறுவயதிலேயே கடவுளைப் பற்றிய உணர்வு மழுங்கடிக்கப்பட்டு சிறிதளவும் பயம் என்பதே இல்லாமல் தலைமுறைகள் வளர்கின்றன. பாவங்களும் பாவிகளும் கட்டுக்கடங்காமல் பெருகி அப்படிப்பட்டவர்களால் நாடு ஆளப்படுகிறது. நாட்டின் பொருளாதாரமும் வளங்களும் அரசாட்சியும் அவர்களின் கைகளில் சிக்கி அதன் விளைவாக அராஜகமும் கொடுங்கோன்மையும் கோலோச்சுகின்றன.
 = சில சிந்திக்கக்கூடிய குழந்தைகள் வழிபடும் உருவங்களைக் காட்டி, இது எப்படியப்பா கடவுளாகும்? என்று எதிர்கேள்வி எழுப்பினாலும் பெற்றோர்கள் கண்டித்து டேய், கடவுளைப்பற்றி அதையெல்லாம் கேட்கக்கூடாது, சொல்லப் பட்டதை அப்படியே நம்பு! என்று குழந்தைகளின் பகுத்தறிவை முடமாக்குவதையும் நாம் கண்டு வருகிறோம்.
  =  இவ்வாறு வளரும் தலைமுறைகளிடையே போலிக் கடவுள்களின் பெயரால் மக்களை ஏமாற்றி வயிறு வளர்க்கும் இடைத்தரகர்களும் பலவிதமான மூடநம்பிக்கைகளைப் புகுத்தி அவர்களைத் தங்களுக்கு அடிமையாக்குகின்றனர். வழிபாடு என்ற பெயரிலும், சடங்கு, சம்பிரதாயம், தோஷம், பரிகாரம் போன்ற பெயர்களில் மோசடிகள் செய்து  அவர்களின் சம்பாதியங்களை  கொள்ளை அடிக்கின்றனர். இயற்கை வளத்தாலும் மனித வளத்தாலும் அறிவு வளத்தாலும் உலகில் முன்னிலையில் உள்ள நம்நாட்டின் செல்வங்கள் கடவுளின் பெயரால் சூறையாடப் படுவதால் இன்று நாட்டின் பாதிக்கு மேற்பட்ட மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழே வாழும் நிலை ஏற்படுகிறது.
  = அது போக, ஒரு சில மனிதர்களை மக்கள்  கடவுளின் அவதாரங்கள் என்றும் கடவுளின் நெருக்கத்தைப் பெற்றவர்கள் என்றும் கண்மூடித்தனமாக நம்புவதால் அவர்கள் ஆங்காங்கே ஆசிரமங்களை அமைத்து தங்களது செல்வாக்கினால் நாட்டைக் கொள்ளையடிக்கும் கறுப்புப் பண முதலைகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் அடைக்கலம் கொடுகிறார்கள். அதனால் அவர்கள் சட்டத்தின் பிடியில் சிக்காமல் தொடர்ந்து நாட்டைச் சூறையாடுகிறார்கள்.  
 = இவ்வாறு மக்கள் கடவுள் அல்லதவற்றை எல்லாம் கடவுள் என்று நம்பத் தலைப்படும் போது அவற்றை வழிபடுவோர் தனித்தனி குழுக்களாகப் பிரிந்து மதங்களும் ஜாதிகளும் உருவாகின்றன. ஒரே இயற்க்கை அமைப்பைக் கொண்ட மனித இனத்தில் என்றும் இணையவே முடியாத பிரிவுகள் உண்டாகி ஒருவரையொருவர் அடித்து மாய்த்துக் கொள்ளும் நிலை ஏற்படுகிறது. நமது உழைப்புக்களும் சம்பாத்தியங்களும் விளைச்சல்களும் கலவரங்களில் தீக்கிரையாகின்றன.
   இவ்வளவும் எதனால்? ........ படைத்த இறைவனை விட்டு விட்டு அவனது படைப்பினங்களை மக்கள் வணங்கத் துணிந்ததால்தானே!
 ஆனால் படைத்தவனை வழிபடுவதற்கு எந்த இடைத் தரகர்களும் சடங்குகளும் தேவை இல்லை. அவனுக்கு எந்த காணிக்கைகளும் செலுத்தவேண்டியதில்லை. சர்வ வல்லமையும் சர்வஞானியும் ஆன அவனை நேரடியாக அணுகி வணங்கவும் அவனிடம் பிரார்த்திக்கவும் வேண்டும். அப்படிப்பட்ட தூய்மையான வழிபாட்டு முறையைத்தான் எல்லா காலத்திலும் வந்த இறைவனின் தூதர்கள்  நமக்குக் கற்றுத் தந்தார்கள். அதையே இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களும் அவர் மூலமாக அருளப்பட்ட இறுதி இறைவேதமான  திருக்குர்ஆனும் கற்றுத்தருவதை நீங்கள் காணலாம்.
   நபியே நீர் கூறுவீராக! இறைவன்- அவன் ஒருவனே. அவன் தேவைகள் ஏதும் இல்லாதவன். அவன் எவரையும் பெற்றெடுக்கவில்லை அவனையும் யாரும் பெற்றெடுக்கவில்லை. அன்றியும் அவனைப்போல் எவரும் எதுவும் இல்லை.  (திருக்குர்ஆன் 112: 1-4)
.(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; 'நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன். பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்;. என்னை நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்' என்று கூறுவீராக. (திருக்குர்ஆன் 2:186)

மேற்கண்ட இலக்கணங்களோடு உள்ளவனே இறைவன் என்று உறுதியாக நம்பி அவனை நேரடியாக மக்கள் என்று வணங்க முற்படுகிறார்களோ அன்றுமுதல்தான் மாற்றங்கள் நிகழும். நாடும் அழிவிலிருந்து காப்பாற்றப்படும். 
   படைத்த இறைவனை புறக்கணித்து அவனைச் சிறுமைப் படுத்தும் விதமாக அவனுக்கு உருவங்கள் சமைத்து அவன் நமக்குத்தந்து கொண்டிருக்கும் அருட்கொடைகளுக்கு செய்நன்றி கொன்று வாழ்ந்தால் அவனது கோபத்திற்கு நாம் ஆளாவோம். அதனால் இம்மையில் அமைதியின்மையும் மறுமையில் நரகவாழ்வும் அனுபவிக்க வேண்டி வரும். 

நல்லொழுக்கம் பேணுதலே இஸ்லாம் 

http://quranmalar.blogspot.in/2015/06/blog-post_11.html

மறுக்க முடியுமா மறுமை வாழ்வை?

http://quranmalar.blogspot.in/2012/11/blog-post_6.html


No comments:

Post a Comment