இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 5 அக்டோபர், 2012

உலக பயங்கரவாதத்தின் மூலகாரணம்



இன்று ஊடகங்கள் போட்டிபோட்டுக் கொண்டு உலகில் நடக்கும் பயங்கரவாத செயல்களை இஸ்லாத்தோடு முடிச்சு போட முனைவதை நாம் கண்டு வருகிறோம். ஆனால் அதே ஊடகங்கள் மற்ற மதத்தைச் சேர்ந்த யாரேனும் அப்படிப்பட்ட செயல்களைச் செய்யும்போது அவர்களை அந்த மதத்துடன் இணைத்துப் பேசுவதில்லை. ஏன் இந்த பாரபட்சம்? இக்கேள்வி விடைபெறாமல் தொடர்வதை நாம் அனைவரும் அறிந்தே இருக்கிறோம்.
உலக பயங்கரவாதத்தின் உண்மை முகம் ஊடகங்களால் மூடி மறைக்கப் படுவதை பெரும்பான்மை மக்கள் உணராமலேயே இருக்கிறார்கள். மக்களின் இந்த அறியாமையை உலகின் சுயநல சக்திகள் தங்களுக்கு ஆதரவாக பயன்படுத்திக் கொள்கின்றன. நம்நாட்டு அரசியல் கட்சிகளும் வகுப்புவாத சக்திகளும் இதை தங்களுக்கு வேண்டியவாறு பயன்படுத்திக் கொள்கின்றன.
 உலக அளவில் பார்க்கும்போது அமெரிக்காவுக்கும் G-8 நாடுகளுக்கும் ஆயுத விற்பனைதான் முக்கியமான வருமானம் ஈட்டும் வியாபாரம். உலகிலேயே அதிநவீன தொழில்நுட்பம் வாய்ந்த விமானங்கள், ஏவுகணைகள், நீர்மூழ்கிக் கப்பல்கள். அணுவாயுதங்கள் மற்றும்  இன்னபிற இராணுவத் தளவாடங்கள்  இவர்களின் கைவசம் இருப்பதால்தான் உலகநாடுகள் அனைத்தையும் இவர்களால் அச்சுறுத்தி தங்களின் அடிமைகளாக அடக்கிவைக்க முடிகிறது. இந்நாடுகளின் வளங்களைக் கொள்ளை அடிக்கமுடிகிறது. உதாரணமாக மத்திய கிழக்கில் எண்ணைவள நாடுகளான சௌதி அராபியா, குவைத், துபாய், கத்தர், போன்ற நாடுகள் இவர்களால் நியமிக்கப்பட்ட கைப்பாவை அரசர்களால் ஆளப்படுகின்றன.
ஆயுதங்களை  உலக சந்தையில் விற்பனை செய்ய வேண்டும் என்பதற்காக சிறு சிறு நாடுகளுக்கு இடையே பகைமையை மூட்டி ஒருவர்க்கொருவர் அடித்துக் கொள்ள வைப்பார்கள். அல்லது நாடுகளுக்குள்ளேயே சிறுசிறு குழுக்களைத் தூண்டி அரசுகளுக்கு எதிராக கிளர்ச்சி செய்யத் தூண்டுவார்கள். ஆயிரக் கணக்கில் அல்லது இலட்சக்கணக்கில் மனித உயிர்கள் மாய்வது இவர்களுக்கு ஒரு பொருட்டல்ல. தங்கள் வருமானமும் ஆதிக்கமும் தடைபெறக் கூடாது. இது ஒன்றுதான் இவர்களின் இலட்சியம். இந்த இலட்சியத்தை அடைவதற்காக ஒருபுறம் இராணுவ அடக்குமுறைகளையும் மறுபுறம் தங்கள் கைவசம் உள்ள பத்திரிகை, டிவி, ரேடியோ போன்ற ஊடகங்களையும் தந்திரமான முறையில் கையாள்கிறார்கள். இவர்களின் கைப்பாவை அரசுகளுக்கு எதிராக மனித உரிமைகள் கோரி புரட்சி செய்பவர்கள் உலகுக்கு முன் தீவிரவாதிகளாகவும் பயங்கரவாதிகளாகவும் சித்தரிக்கப்படுகிறார்கள். இவர்கள் தங்கள் ஆதிக்கத்திற்குள் கொண்டுவர நினைக்கும் நாடுகளுக்குள் கிளர்ச்சியாளர்களை உருவாக்கி அவர்களை உலகுக்கு முன் புரட்சியாளர்களாகவும் விடுதலைப் போராளிகளாகவும் சித்தரிக்கிறார்கள். அப்படிப்பட்ட நாடுகளில் கிளர்ச்சியாளர்களுக்கு இராணுவ பலமளித்து அந்நாடுகளைக் கைப்பற்றி கிளர்ச்சியாளர்களின் தலைவரை தங்கள் கைப்பாவை அரசராக அல்லது அதிபராக நியமிப்பார்கள். (சமீபத்திய உதாரணங்கள் : ஈராக், ஆப்கானிஸ்தான்)
  அதிநவீன இராணுவத் தளவாடங்களே இவர்களது முக்கிய விற்பனைப் பொருள். அவற்றை உலக நாடுகளில் விற்க வேண்டுமானால் அவ்வாயுதங்களின் செயல்திறனை உலகுக்கு முன் காட்டியாக வேண்டும். அதற்காக சிறு நாடுகளுக்கிடையே இவர்கள் மூட்டிவிடும் போர்களுக்குப் புறம்பாக ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கு இடையே குறைந்தபட்சம் ஒருமுறை பெரிய அளவிலான போரை எப்படியாவது நிகழ்த்துகிறார்கள். உலகெங்கும் ஊடகங்கள் மூலமாக மக்களை மூளைச்சலவை செய்து அதை நியாயப் படுத்தவும் செய்வார்கள். மக்கள் அதைப் பார்க்கிறார்கள். இப்படி அப்பாவி மக்களின் இரத்தத்தை ஆறாக ஒட்டி அதன்மீது ஆயுதக் கண்காட்சி நடத்துவது இவர்களது வாடிக்கை! இக்கண்காட்சியை தவறாது நடத்துவதன் மூலம் இவர்களுக்கு இரண்டு நேட்டங்கள்: ஒன்று ஆயுத விற்பனை. மற்றது உலக நாடுகளை பயமுறுத்தி தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்துவது.
   இப்போது கூறுங்கள், யார் பயங்கரவாதிகள்? இவர்களாஇல்லை சொந்த மண்ணிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு தங்களது நாட்டை மீட்பதற்காகப் போராடுபவர்கள்களா? அல்லது தங்களது மனைவி மக்களையும் உற்றார் உறவினர்களையும் இவர்களின் சூழ்ச்சிகளினால் பறிகொடுத்துவிட்டு தங்கள் உரிமைகளை மீட்பதற்காக போராட்டங்கள் நடத்துபவர்களா? அல்லது தங்களது நாடுகளில் இவர்களின் கைப்பாவை அதிபர்களுக்கு எதிராகக் குரல் கொடுத்து நாட்டையும் நாட்டின் வளங்களையும் காப்பாற்றுவதற்காக முனைபவர்களா?
ஆனால் என்ன நடக்கிறது?  இன்று ஊடகங்களின் ஆதிக்க பலத்தினால் உலகளாவிய முறையில்  கொடுங்கோலர்கள் சமாதானப் பிரியர்களாகவும் இழந்த உரிமைகளையும் உடமைகளையும் மீட்பதற்காகவும் சமாதானத்தை நிலைநாட்டவும் போராடுபவர்கள் பயங்கரவாதிகளாகவும் சித்தரிக்கப் படுகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக