இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 26 அக்டோபர், 2012

தொழுகை நடத்திவரும் புரட்சிகள்


உலகமெங்கும் ஐவேளை இறைவிசுவாசிகளால் நிறைவேற்றப்படும் தொழுகையை சற்றே கூர்ந்து கவனியுங்கள்.

= உலகின் அத்தனை இறைவிசுவாசிகளும் எந்த மூலை முக்கிலிருந்தாலும் மையப்புள்ளியாக ஒரே இலக்கான மக்காவிலிருக்கும் ஆதி இறைப்  பள்ளியான கஅபா வை நோக்கியே தொழுகை நிகழ்த்துகிறார்கள். இதன் சூட்சுமம் அளவிலடங்காதது

= படைத்தவனை மட்டுமே வணங்குவோம் படைப்பினங்கள் வணக்கத்துக்கு உரியவை அல்ல என்ற கொள்கை முழக்கம் பூமி உருண்டையின் மீது அயராது ஒலிப்பது உங்களுக்குக் கேட்கிறதா?

= என் உடல்,பொருள் ஆவி அனைத்தும் உனக்கே சொந்தம்! இறைவா நீயே  மிகப்பெரியவன்! என்று அனைத்து அலுவல்களையும் ஒதுக்கி விட்டு  இறைவிசுவாசிகள் உலகெங்கும் ஆங்காங்கே உள்ள பள்ளிவாசல்களுக்கு விரையும் காலடி ஓசை உங்களுக்குக் கேட்கிறதா?

= ஜாதி, மதம், மொழி, இனம், நாடு, நிறம் என்று நம்மைப் பிரித்து வைத்திருந்த தடைகளை உடைத்தெறிந்து ஒன்றே குலம் ஒருவனே இறைவன் என்ற கொள்கையின் கீழ் உலகோர் அனைவரும் ஒருங்கிணையும் காட்சி உங்களுக்குப் புலப்படவில்லையா?

= ஐங்கால தொழுகைகளின் நேர அட்டவணையை நோக்கினால் அந்தந்த இடத்திற்குண்டான சூரியனின் உதயநிலை உச்சி நிலை, அஸ்தமன நிலையைக் கொண்ட தொழுகை நேரங்கள். இதன் மூலம் அகில உலகத்திலும் 24 மணி நேரமும் சதா ஒரு விநாடி விடாது தொழுகைகள் நடந்து கொண்டே இருக்கிறது. இந்த ஆச்சரியமான விந்தை புலப்படவில்லையா?

 = சிதறிக்கிடக்கும் பாமரனையும் படித்தவனையும் ஏழையையும் செல்வந்தனையும் பெரியவர்களையும் சிறுவர்களையும் பாகுபாடின்றி ஒருசில நொடிகளில் உலகெங்கும் ஆங்காங்கே சீராக அணிவகுக்கச் செய்யும் விந்தையை எந்த இராணுவமும் செய்யக் கண்டிருக்கிறீர்களா?  

 = ஒவ்வொரு தொழுகைக்கும்  ஒழு (அதாவது அங்கத்தூய்மை) செய்யும் பொழுதும் கைகள், பற்கள், வாய் , நாசித்துவாரங்கள், கண்கள், முகம், தலை, பிடரி, கால்கள் சுத்தமாகி உட‌ற்சுகாதார‌ம் எவ்வாறு பேணி க‌டைப் பிடிக்கப்ப‌டுகின்ற‌து என்ப‌தை சிந்தித்தீர்க‌ளா?

 

= தொழுகையாளிகளின் வாழ்விலிருந்து சோம்பலை விரட்டி அவர்களது வாழ்வை திட்டமிட்டு அமைத்துக்கொள்ள தொழுகை வழிவகுப்பதைக் கண்டீர்களா?

 = ஐவேளை இறைவனோடு தொடர்பு கொள்வதன் மூலம் உலக கடமைகளை புறந்தள்ளிவிடாமலும் உலகாத‌ய‌ சூழ்நிலைக‌ளிலேயே மூழ்கி கிட‌ந்திடாம‌லும் இருக்கும் வண்ணம் நடுநிலையான வாழ்க்கைத் திட்டத்தை தொழுகை அமுல் படுத்துவதைக் கண்டீர்களா?

 = தொழுகையாளிகளின் வாழ்வில் சுத்தம், கடமை, கட்டுப்பாடு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை, உடல் நலம், இறைதொடர்பு, சமுதாய தொடர்பு, வேற்றுமை பாராட்டாமை மேலும் பல சிறப்புகளை அன்றாடம் அடைந்து கொண்டிருப்பதை கவனித்தீர்களா?.

= தொழுகைகளில் சிறிதேநேரமே ஆனாலும் ஆன்மீக ரீதியாக அடையும் பெரும்பலன்களுடன் நெற்றி, மூக்குமுனை, உள்ளங்கைகள், முழங்கால் முட்டுக்கள்,கால் பெருவிரல்கள் ஆகியவைகள் பூமியில் படிய‌ சஜ்தா (சாஷ்டாங்கம்) செய்யும்பொழுது நம் உடலுக்கு பூமியின் மூலமாக பல சூட்சுமமான நன்மைகளையும் அடைகிறோம் என்றால் வியப்பாக உள்ளதா?

= உடல் ரீதியாக எல்லா உடற்ப்பயிற்ச்சிகளுக்கும் மேலான உள்ளத்துக்கும் உடலின் சகலத்துக்கும் பயன் தரும் உடற்பயிற்ச்சியை அவர் அறியாமலே செய்து பல பலன்களையும் பெற்று விடுகிறார். இவ்வாறு தொழுகையினால் கண்காணா, உணர முடியா, அடையாள படுத்தமுடியா, எண்ணிக்கையிலடங்கா பலன்கள் தொழுகையாளிகளுக்குள்ளன.

இவ்வளவு புரட்சிகளை நிகழ்த்தி மானிடர்க்கு அளவில்லா நன்மைகளைத் தந்து கொண்டிருக்கும் இவ்வுலகளாவிய இயக்கத்தில் இணையாமல் நீங்கள் ஒதுங்கி நிற்கலாமா? சிந்தியுங்கள் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக