இன்று நம் நாடு பல்வேறுவிதமான கற்பனை உருவங்களாலும் மாயைகளாலும் மூடநம்பிக்கைகளாலும்
ஆளப்பட்டு அனைவரையும் அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது. அவற்றில் ஒன்றுதான் இந்த
எல்லைக்கோடு என்பது. உதாரணமாக மேலே கூறப்பட்ட இரு மாநிலங்களை எடுத்துக்
கொள்ளுங்கள். கர்நாடகாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையில் காவிரி நீர் பங்கீடு
காரணமாக ஒவ்வொரு வருடமும் நடைபெறும் கலவரங்களையும் அவற்றைத் தொடர்ந்து ஏற்படும் உயிர்
மற்றும் உடமை இழப்புக்களையும் நாம் அனைவரும் அறிவோம்.
இப்படிப்பட்ட தீராத பிரச்சினைகளுக்கு
என்ன காரணம்? வேறு எதுவுமல்ல, எல்லைக்கோடு என்ற ஒரு கற்பனைக் கோடுதான்! தொலைநோக்கிகள்
கொண்டும் நுண்ணோக்கிகள் கொண்டும் பூமியை ஆராய்ந்தாலும் அகப்படாத ஒன்று.இது. இன்று நவீன
தொழில் நுட்பத்தின் உதவியால் செயற்கைக்கோள்களில் இருந்து பூமியை அங்குலம்
அங்குலமாக படம்பிடித்து கணிணியில் ஆராய வழிவகை உள்ளது. எப்படி ஆராய்ந்தாலும்
தட்டுப்படாத ஒன்று இது! முல்லைப்பெரியாறு விஷயமாக தமிழகத்துக்கும் கேரளாவுக்கும்
இடையே உள்ள பிரச்சினைகளுக்கும் காரணம் இந்த எல்லைக்கோடுதான். நிர்வாக வசதிக்காக
எப்போதோ உருவாக்கப்பட்ட இவை இன்று பாமரர்களின் உயிர்குடிக்கும் காரணிகளாக
மாறியுள்ளன.
கர்நாடகாவில் வாழும் மக்களும் சரி தமிழ்நாட்டில் வாழும் மக்களும் சரி கேரளாவில்
வாழும் மக்களும் சரி.... அனைவரும் அடிப்படையில் மனிதர்களே. ஒரே மனித இனத்தைச்
சார்ந்தவர்களே. ஒரே மாதிரியான உருவ அமைப்பு, உடல், இரத்தம், சதை என அனைத்தும்
ஒன்று. உணவு, காற்று நீர் என்று அனைவரின் தேவைகளும் ஒன்று. அவற்றைத்
தீர்த்துக்கொள்ளும் விதமும் ஒன்றே. இவ்வாறு இருக்கும்போது இவர்களைப் பிரித்து
வைத்திருப்பது எது? ஒரே நீர் ஆறாக ஓடி ஒரு கற்பனையான கோட்டைக் கடக்கும்போது எப்படி
பிரச்சினை உண்டாகிறது? ஒரு மாநிலத்துக்குள் அது ஓடும்போது இல்லாத பிரச்சினை எல்லைக்
கோட்டைத் தாண்டி ஓடும்போது எப்படி
முளைக்கிறது?
இதைப் போலவே மனித உறவையும் சமூக அமைதியையும் இடைவிடாது பாழ்படுத்திக் கொண்டிருக்கும் இன்னும் சில
கற்பனைப் பொருட்களையும் உருவங்களையும் மாயைகளையும் மூடத்தனமான நம்பிக்கைகளையும் நாம்
அடையாளம் கண்டு அவற்றைக் களைய ஆவன செய்யக் கடமைப்பட்டுள்ளோம்.
மொழி என்பது ஒரு தகவல்தொடர்புக்கான சாதனம். அதனை நாம் அவ்வாறே புரிந்து
கொள்ளவேண்டும். மாறாக இன்ன மொழி பேசும் ஊரில் அல்லது குடும்பத்தில் பிறந்தோம்
என்பதற்காக மாற்றார்களை இழிவாகப் பார்க்க நமக்கு எந்த உரிமையும் கிடையாது.
மட்டுமல்ல மொழியைக் கடவுளாக சித்தரிப்பதும் மொழியின் பெயரால் தமிழ்த்தாய் அல்லது
கன்னடமாதே என்று கற்பனை உருவங்களும் சிலைகளும் செய்து அவற்றை வழிபடுவதும்
வழிபடாதவர்களை மிரட்டுவதும் துன்புறுத்துவதும் எந்த வகையில் நியாயம்? சில
கவிஞர்களும் ஓவியர்களும் எப்போதோ புனைந்த இந்த “மொழித்” தாய்கள் எங்கே
வாழ்கிறார்கள்? யாராவது காட்ட முடியுமா? இன்ன இடத்தில் இன்ன மொழிதான் பேச
வேண்டும். இல்லையேல் நீ அந்நியன், நீ இங்கிருந்து வெளியேற வேண்டும் என்றெல்லாம்
கோஷமிடுவதும் அவ்வாறு பாமரர்களை அக்கிரமமாக வெளியேற்றுவதும் இன்று பரவலாகவும்
சகஜமாகவும் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த அக்கிரமங்களுக்கு பகடைக்காய்களாக அந்த
கற்பனைத் ‘தாய்மார்கள்’ பயன்படுத்தப் படுகிறார்கள்.
இதைப் போலவே நம் நாட்டை வெகுவாக பாதித்து வரும் பெரிய தீமை ஜாதிப்பிரிவினை.
யாரோ சிலர் இறைவனின் பெயரால் நம்முள் புகுத்திய சில மூடநம்பிக்கைகள் இன்றும்
தொடர்ந்து நம்மில் சிலர் சிலரைத் தாக்கி அழிக்க எதுவாக உள்ளன. இவ்வுலகத்தைப்
படைத்துப் பரிபாலிப்பவன் எவனோ அவன் மட்டுமே உண்மை இறைவன் என்பதை பகுத்தறிவு கொண்டு
சிந்திப்போர் யாரும் ஐயமின்றி உணரலாம். ஆனால் நம் முன்னோர்களிடம் சில இடைத்தரகர்கள் படைத்த இறைவனுக்கு பதிலாக பல்வேறுவிதமான
படைப்பினங்களையும் உயிரும் உணர்வும் இல்லாத உருவங்களையும் எல்லாம் காட்டி அவற்றையெல்லாம்
கடவுள் என்று கற்பித்தார்கள். நம் முன்னோர்கள் அவற்றை நம்பியதால் ஒவ்வொரு
கடவுளர்களையும் வணங்கும் கூட்டாத்தார் ஒவ்வொரு ஜாதிகளாயினர். இந்த இடைத்தரகர்கள்
அவற்றை உயர்ந்த ஜாதிகள் என்றும் தாழ்ந்த ஜாதிகள் என்றும் தாமாகத் தரம்பிரித்து
அவற்றிற்கிடையே பாகுபாட்டை கற்பித்தனர். இதனால் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று இறைவனை
எளிமையாகவும் நேரடியாகவும் வணங்கிவந்த மக்களிடையே பாகுபாடும் பகைமை உணர்வுகளும்
குலவெறியும் ஜாதிவெறியும் தோன்றின. முன்னோர்களின் வழிமுறைகள் என்று சொல்லி இவை
இன்றும் தொடர்கின்றன.
இது கற்காலமல்ல! கல்லாமை ஒழிந்து மக்களிடையே அறிவு வளர்ச்சியும் அரசியல் விழிப்புணர்வும்
பெருகிவரும் காலகட்டம் இது. பிரச்சினைகளுக்கு அறிவியல் ரீதியாகவும் பகுத்தறிவு
பூர்வமாகவும் தீர்வுகளைத் தேடி ஆராயும் தலைமுறைகள் உருவாகி வரும் காலம் இது.
முன்னோர்கள் பின்பற்றினார்கள் என்ற ஒரே காரணத்துக்காக நாமும் மேற்படி பழக்கவழக்கங்களை கண்மூடித்தனமாக
பின்பற்றுதல் நியாயமா? மேற்கூறப்பட்ட கற்பனை வஸ்துக்களும் உருவங்களும் மடத்தனமான
நம்பிக்கைகளும் நம்மை அழிவின் விளிம்பிற்க்குக் கொண்டு செல்கின்றன என்பது
நிதர்சனமான உண்மை. இருந்தும் நம்மில் பெரும்பாலோரும் மௌனம் சாதிப்பது கொடுமையே!
ஆனால் இவ்வுலகின் அதிபதி இந்த மௌனத்தைப் பற்றியும் நாளை மறுமையில்
விசாரிப்பான். எனவே நாம் பொறுப்புணர்வோடு நடந்துகொள்ள வேண்டும். மேற்கூறப்பட்ட
தீமைகள் நம்மை பாதிக்காமல் இருக்க நம்மைப் படைத்த இறைவன் தன் திருமறை மூலமும் தனது
தூதர் மூலமும் நமக்குப் பரிந்துரைக்கும் வாழ்க்கைத் திட்டத்தை ஏற்றுக்கொண்டு அதன் அடிப்படையில்
சமூகத்தைக் கட்டமைக்கப் பணிக்கிறான். அந்த வாழ்க்கைத் திட்டத்திற்குப் பெயர்தான்
அரபு மொழியில் இஸ்லாம் என்று அறியப்படுகிறது. இத்திட்டம் முன்வைக்கும் கீழ்கண்ட
மூன்று நம்பிக்கைகளை மனித மனங்களில் ஆழமாக விதைத்தால் மனிதனை மூடநம்பிக்கைகளில்
இருந்தும் பிரிவினை வாதங்களில் இருந்தும் விடுவித்து உலகளாவிய சகோதரத்துவத்தையும்
மனித சமத்துவத்தையும் நாடுகளிடையே ஒற்றுமையையும் நிலைநாட்டலாம்.
1. ஒன்றே குலம்:
மனிதர்களே! உங்களை
ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப்
படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும்,பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான்.368 எவனை
முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை
அஞ்சுங்கள்! உறவினர்கள் விஷயத்திலும் (அஞ்சுங்கள்!) அல்லாஹ் உங்களைக்
கண்காணிப்பவனாக இருக்கிறான். (திருக்குர்ஆன் 4:1)
(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்கு த் தகுதி வாய்ந்த ஒரே
இறைவன் என்று பொருள்)
2.. ஒருவனே இறைவன்:
சொல்வீராக: இறைவன் ஒருவனே, அவன் தேவைகள் அற்றவன் அவன்
யாரையும் பெற்றேடுக்கவும் இல்லை. அவனையும் யாரும் பெற்றேடுக்கவும் இல்லை. அவனுக்கு
நிகராக யாரும் எதுவும் இல்லை. (திருக்குர்ஆன் 112:1-4)
இறைவனின் தன்மைகளை
இவ்வாறு புரிந்துகொண்டு அவனை நேரடியாக வணங்க வேண்டும். இடைத்தரகர்களுக்கோ
மூடநம்பிக்கைகளுக்கோ வீண் சடங்குசம்பிரதாயங்களுக்கோ இடம் அளிக்கக் கூடாது. இறைவன்
அல்லாத கற்பனை உருவங்களுக்கோ உயிரும் உணர்வும் அற்ற படங்களுக்கோ சிலைகளுக்கோ எந்த
இறைத்தன்மையும் கிடையாது. அவற்றை வணங்குவதோ அவற்றுக்கு மரியாதை செய்வதோ பெரும்
பாவமாகும்.
அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை
அல்லாஹ் விலக்கப்பட்டதாக ஆக்கிவிட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த
உதவியாளர்களும் இல்லை” (திருக்குர்ஆன் 5:72)
3. இறைவனின்
நீதிவிசாரனையும் மறுமை வாழ்வும்.
ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்;. எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ. அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்;. இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை. (திருக்குர்ஆன் 3:185)
ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்;. எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ. அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்;. இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை. (திருக்குர்ஆன் 3:185)
அதாவது, இவ்வுலகில் நாம் செய்யும் பாவங்களுக்கும் அத்துமீறல்களுக்கும்
தண்டனையாக நரகமும் புண்ணியங்களுக்கும் தியாகங்களுக்கும் பரிசாக சொர்க்கமும்
கிடைக்கும்.
இந்த நம்பிக்கைகள் மனித மனங்களில் மெல்ல மெல்ல வேரூன்ற நாளடைவில் மொழி, நிறம்,
இடம் செல்வம் போன்ற எதுவும் மனித இனத்தைப் பிரிக்கமுடியாது. சமத்துவமும்
சகோதரத்துவமும் தானாகவே சமூகத்தில் மலரும். உலக வளங்கள் சகோதர உணர்வோடும்
இறைவழிகாட்டுதல்களின் அடிப்படையிலும்
பங்கிட்டுக்கொள்ள மக்களே முன்வருவார்கள். அதனால் ஏற்படும் இழப்புகளை
இறைப்போருத்தத்திற்காக மனமுவந்து ஏற்றுக் கொள்வார்கள்! அவ்வாறு கர்நாடமும்
தமிழகமும் மட்டுமல்ல. எல்லைக் கோடுகள் மறைந்து அகண்ட பாரதமும் உருவாகும்! நாடுகள்
மறைந்து அனைத்து உலகும் ஒன்றாக யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கனவு நனவாகும்!
இது ஒரு மாயையோ அல்லது வெற்றுக்கோஷமோ அல்ல. இந்த நம்பிக்கையின் துளிகளை
நீங்கள் உலகெங்கும் காண்கிறீர்கள். ஆம், உலகெங்கும் இக்கொள்கை பரவப்பரவ அதன்
தாக்கத்தினால் ஒருகாலத்தில் ஜாதி, நிறம் இடம் போன்றவற்றால் பிளவுண்டு கிடந்த
சமூகங்கள் பள்ளிவாசல்களில் அணியணியாக அணிவகுப்பதிலும் ஒரே சீருடையில் ஹஜ்ஜின் போது
சங்கமிப்பதிலும் காண்கிறீர்கள்
=================
http://quranmalar.blogspot.com/2015/06/blog-post_11.html
நல்லொழுக்கம் பேணுதலே இஸ்லாம்
http://quranmalar.blogspot.com/2015/06/blog-post_11.html
நல்லொழுக்கம் பேணுதலே இஸ்லாம்
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!
இதைப் படிக்காவிட்டால் இழப்பு! பேரிழப்பு!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக