இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 15 அக்டோபர், 2012

தர்காவுக்கும் இஸ்லாத்திற்கும் தொடர்பில்லை!


இஸ்லாத்தின் பெயரால் நடைபெற்று வரும்
தர்கா என்ற மோசடி பற்றி அறிவோம் :
லா இலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என்பது இஸ்லாத்தின் மூல மந்திரம். என்பதை நீங்கள் அறிவீர்கள். இதன் பொருள்: வணக்கத்துக்கு உரியவன் இறைவனைத் (அரபு மொழியில்  அல்லாஹ்) தவிர யாரும் இல்லை. முஹம்மது நபி இறைவனின் தூதராவார் என்பதே. இதை ஏற்றுக் கொள்பவரே முஸ்லிம், இந்தக் கொள்கையை ஏற்றுக் கொள்ளாத யாரும் முஸ்லிமாக முடியாது. இறைவனுக்கு பதிலாக இறந்தவர்களை அழைத்துப் பிரார்த்திப்பதோ, சமாதிகளுக்கு வணக்கம் செய்வதோ மன்னிப்பே இல்லாத பாவமாகும். இதைச்செய்பவர்கள் மறுமையில் நிரந்தரமாக நரக நெருப்பில் இருப்பார்கள் என்று குர்ஆன் எச்சரிக்கிறது
தர்கா என்பது என்ன? இவை எப்படி வந்தன?
எங்கு நீங்கள் தர்காவைப் பார்கிறீர்களோ அங்கு எல்லாம் முஸ்லிம் பெரியவர்கள்  வாழ்ந்திருந்தார்கள். அவர்கள்  மக்களுக்கு தன வாழ்நாளில் சிறந்த சேவைகள் ஆற்றினார்கள்.  "லா இலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்" என்ற கொள்கையை மக்களிடையே போதித்து வந்தார்கள். மக்களிடையே தங்கள் சேவை காரணமாக பிரபலமானார்கள். அவர்கள் இறந்தபின் என்ன நடந்தது? அவர்களுக்கு சமாதிகள் எழுப்பப்பட்டன. அவர்கள்  போதித்த கொள்கையை சரிவர புரிந்து கொள்ளாத சில மக்கள் அவர்கள் மீது இருந்த  அன்பின் காரணமாக அவர்களது சமாதிகளை அடிக்கடி கண்டு வரவும் அலங்கரிக்கவும் தொடங்கினர். அந்த பெரியவர்களை அழைத்துப் பிரார்த்திக்கவும் தொடங்கினர்.அப்பெரியவர்களின் உறவினர்களில் சிலர் மக்களின் இந்த மூட பழக்கத்தை முதலீடாக வைத்து பணம் சம்பாதிக்க தலைப்பட்டனர். சமாதியின் தலைமாட்டில் ஒரு உண்டியலை நிறுவினர். செல்வம் சேரத் தொடங்கியது.
மேலும் பல மூடநம்பிக்கைகள் பரப்பப்பட்டன. உங்களுக்கு குழந்தை பிறக்கவில்லையா?.... தீராத வயிற்று வலியா?.....  வியாபாரத்தில்  தோல்வியா?.... அனைத்துக்கும் இங்கு தீர்வுகள் உண்டு! இதோ இங்கு வந்து இந்த அவுலியாவிடம் கேளுங்கள்! இதோ இந்த தாயத்தை கட்டிக் கொள்ளுங்கள்!..... என்பன போன்ற விளம்பரங்கள் வயிறு வளர்போரால் பரப்பப்பட்டன. இவ்வாறு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இந்த தர்காக்கள் வளர்ந்து இன்று பாமரர்களின் அன்றாட உழைப்பின் கனிகளை கறந்து உண்ணக்கூடிய முதலைகளாக திகழ்கின்றன! 
எங்கெல்லாம் தர்க்காக்களைக் காண்கின்றீர்களோ அவையெல்லாம் ஏக இறை வழிபாட்டிலிருந்து மக்களை திசை திருப்புவதற்காக ஷைத்தான் செய்து வரும் சூழ்ச்சி என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்! 
இங்கு பள்ளிவாசலுக்கும் தர்காவுக்கும் என்ன வேறுபாடு ? என்பதையும் உங்களுக்கு தெளிவு படுத்துவது அவசியமாகிறது. தர்கா என்பது ஒரு இறந்து போன பெரியாரின் சமாதியைச் சுற்றி எழுப்பப்பட்ட ஆலயம். அங்கு சமாதியை பட்டுத் துணிகளால் அலங்கரித்து மலர் தூவி வைத்து இருப்பார்கள். வருவோர் அந்த சமாதியில் என்றோ அடக்கமாகியுள்ள பெரியாரின் பெயரைச் சொல்லி பிரார்த்திப்பார்கள்.
ஆனால் படைத்த இறைவனை பலரும் கூட்டாக சேர்ந்து நின்று தொழுவதற்காக காட்டப்படும் ஆலயமே  பள்ளிவாசல் என்பது. அங்கு வருவோர்  கை, கால், முகம் இவற்றை கழுவுவதற்கு வசதியாக தண்ணீர் தொட்டியோ குழாய்களோ முன்னால் காணப் படும். உள்ளே நீங்கள் சென்று பார்த்தீர்களானால், உருவப் படங்களோ, சிலைகளோ எதுவுமே இராது. தரையில் பாய் விரிக்கப் பட்டு இருக்கும், சுவர்களில் எந்த வகையான சித்திரங்களும் இல்லாமல் காலியாக இருக்கும். 5 வேளைகளிலும் தொழுகைக்கான அழைப்பு  ஒலிபெருக்கி மூலம் விடப்படுகிறது.   இதைச் செவியுறும் தொழுகையாளிகள் உடனடியாக தொழுகைக்கு விரைவார்கள். அனைவரும் வந்ந்து சேர்ந்ததும் தோளோடு தோள் சேர்ந்து வரிசைகளில் அணிவகுத்து நிற்ப்பார்கள். தொழுகையாளிகளில் குரான் அதிகம் அறிந்தவர் அணிவகுப்பில் தளபதியைப்  போல் முன் நின்று தொழுகையை நடத்துவார். அவருக்கு அரபு மொழியில் இமாம் என்று கூறுவர். மற்றவர்கள் அவர் செய்வதைப் போலவே செய்து தொழுகையை நிறைவு செய்வார்கள். தொழுகை முடிந்ததும் தத்தமது இருப்பிடங்களுக்கும் அலுவல்களுக்கும் திரும்புவார்கள். இங்கு காசு, பணம், காணிக்கை,பழம், பூ போன்ற எந்த செலவுகளுக்கும் இடமில்லை
பொருட்செலவு இல்லாத சடங்குகள் இல்லாத - இறைவனை நேரடியாக வணங்குவதற்கு உரிய இடம் பள்ளிவாசல். ஆனால் இதற்கு நேர் விபரீதமானது தர்கா என்பது. இதை வைத்து பிழைப்பு நடத்துபவர்கள் சிலர் முஸ்லிம் பெயர்தாங்கிகளாக இருக்கிறார்கள் என்பதைத் தவிர  இதற்கும் இஸ்லாத்துக்கும் எந்த தொடர்புமில்லை என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
------------------ 
இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!

1 கருத்து: