உலகைப் படைத்தவனும் பாதுகாவலனுமான ஏக இறைவனால் அவனது தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மூலமாக மனித குலத்திற்கு அருளப்பட்ட கடைசி வேதமே திருக்குர்ஆன். நபிகளாரின் வரவுக்குப் பிறகு உலகின் இறுதிநாள் வரை இனி இங்கு வாழவிருக்கின்ற அனைத்து மனிதர்களுக்கும் வாழ்வியல் வழிகாட்டியாக அருளப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று வாழும் அனைத்து மனிதர்களும் இந்த வேதம் கூறும் ஏவல்- விலக்கல்களுக்கு ஏற்ப தங்கள் வாழ்வை அமைத்துக் கொள்ள கடமைப் பட்டு இருக்கிறார்கள். அவ்வாறு வாழ்க்கையை அமைத்துக் கொள்பவர்களுக்கு இம்மை வாழ்வும் குறைகளின்றி செம்மையாய் அமைகிறது. மறுமையில் அதற்கு பரிசாக சொர்க்கமும் வாய்க்கிறது. மாறாக யார் இறைவனையும் அவன் தரும் வழிகாட்டுதலையும் புறக்கணித்து வாழ்கிறார்களோ அவர்களைப் பொறுத்தவரை இம்மை வாழ்விலும் அவர்களுக்கு அமைதியின்மை உண்டாகிறது. மறுமையில் அவர்களுக்கு நரக வாழ்வு தண்டனையாக கிடைக்கிறது.
'குர்ஆன்' என்ற சொல்லுக்கு 'ஓதுதல்', அல்லது 'ஓத வேண்டியது' மற்றும் 'ஓதப்படுவது' என்ற பொருள்கள் உள்ளன. பெயருக்கேற்ப இந்தத் திருக்குர்ஆன் உலகில் உள்ள பல்லாயிரக்கணக்கான இறை விசுவாசிகளால் அதிகமாக ஒதப்படுவதையும் பின்பற்றப்படுவதையும் நீங்கள் காணலாம்.
புர்கான் (நன்மை- தீமை களை பிரித்தறிவிக்கும் நூல்)
தன்மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கு, குர்ஆன் என்பது உண்மை மற்றும் பொய்யை பகுத்தறிவதற்கான அளவுகோலாகும். அதில் கட்டளையிடப்பட்டுள்ள அனைத்தும் நன்மையாகவும், அதில் தடை செய்யப்பட்டவை அனைத்தும் தீமையாகவும் அவர்கள் புரிந்து கொள்கிறார்கள். உண்மையில், குர்ஆன் தன்னை "ஃபுர்கான்" என்று அறிமுகப்படுத்துகிறது, அதாவது "உண்மையும் பொய்யையும் பகுத்தறிய தூண்டுகின்ற அளவுகோல்" என பொருள்படும்.
2:185. ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது;25:1. உலகத்தார் யாவரையும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக (சத்தியத்தையும், அசத்தியத்தையும் தெளிவாகப்) பிரித்தறிவிக்கும் இவ்வேதத்தைத் தன் அடியார் மீது இறக்கியவன் மிக்க பாக்கியமுடையவன்.
மனிதனின் மீட்சியே இலக்கு
குர்ஆனின் முக்கிய தலைப்பு மனிதனின் மீட்சியே. சுய விருப்பப்படி செயல்படக்கூடிய ஒரே படைப்பான மனிதன், தன் வாழ்வையும் வளர்ச்சியையும் முன்னெடுப்பதற்காக சில சட்டங்களைப் பின்பற்ற வேண்டும். பிரபஞ்சத்தில் உள்ள எல்லா பொருட்களும் தானாகவே இறைவன் விதித்த சட்டங்களைப் பின்பற்றுகின்றன. உண்மையில், அவற்றுக்கு அந்த சட்டத்திலிருந்து விலகும் வாய்ப்பு இல்லை. மனித உடலின் முறைமையான செயல்பாடுகளும் இறை சட்டங்களை கட்டாயமாகவே பின்பற்றுவதை நாம் காணலாம். அதனால் அவை சீராக இயங்குவதைக் காணலாம். ஆனால், சில வரையறுக்கப்பட்ட துறைகளில் மனிதனுக்கு சுதந்திரமான செயல் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்தத் துறைகளிலும், இறைவனின் கட்டளைகளைப் பின்பற்றினால் மட்டுமே மனிதன் மீட்சியை அல்லது இரட்சிப்பை அடைய முடியும்.
இஸ்லாம் என்றால் இதுவே
அவ்வாறு இறைவனின் கட்டளைகளுக்குக் கீழ்படிந்து மனிதன் வாழும் நிலையே இஸ்லாம் என்று அறியப்படுகிறது.
பகுத்தறியத் தூண்டும் மறை
திருக்குர்ஆன் பேசுவது மனித குலத்திடம்தான். மனிதனை இரட்சிப்பின்பால் திருக்குர்ஆன் அழைக்கிறது. இயற்கையின் மாறுபட்ட மற்றும் அதியற்புதமான நம்பமுடியாத நிகழ்வுகளின் மீது அவனது கவனத்தைத் திருப்புவதன் மூலம் படைப்பாளன் இறைவன் இருப்பதை அவருக்கு உணர்த்துகிறது. இவ்வுலக வாழ்வின் நிலையற்ற தன்மையையும், இங்குள்ள சுகபோகங்களுக்காக வாழ்நாள் முழுவதையும் வீணடிப்பதன் அர்த்தமற்ற தன்மையையும் அது அவரிடம் பேசுகிறது. நரகத்தின் எல்லையில் இருந்து பாதுகாப்பாக சொர்க்கத்தில் நுழைவதற்குத் தகுதியான அந்த ஆசீர்வதிக்கப்பட்ட குழுவைச் சேர்ந்தவராக இருப்பதற்காக அவர் பின்பற்ற வேண்டிய பாதையை அது அவருக்குத் தெளிவுபடுத்துகிறது.
சொர்க்க வாழ்வும் நரக வாழ்வும்
அது இந்த உலகின் சுகங்களைப் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் நரகத்தின் தண்டனையை வாங்கியவர்களின் வரலாற்றில் அவன் கவனத்தை ஈர்க்கிறது. மேலும் தூய்மைமிக்க வாழ்க்கையை வாழ்ந்ததால் சொர்க்கத்தில் நுழைவு கிடைத்தவர்களைப் பற்றியும் அது கூறுகிறது.
சுருங்கக் கூறினால்..
சுருக்கமாகச் சொன்னால், இறைக் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதன் மூலம் மனிதனை இம்மையிலும் மறுமையிலும் இரட்சிப்பைப் பெறுவதற்கு அல்குர்ஆன் தயார்படுத்துகிறது.
குர்ஆன் தன்னுள் படைத்த இறைவனின் வார்த்தைகளை உள்ளடக்கியது. மனிதகுலமே அதன் நெறிமுறை மற்றும் பிரசங்கத்தின் இலக்கு.
குர்ஆன் மனிதனை இரட்சிப்பின் மீட்சியின் பாதையில் நடத்துகிறது. இதற்காக, அறிவியல் மற்றும் வரலாற்றின் பாடங்களைப் பயன்படுத்துகிறது. சாந்தமான செய்திகளும், கடுமையான எச்சரிக்கைகளும் அதன் வசனங்களில் இடம் பெறுகின்றன. நம்பிக்கை வழியினை பின்பற்றினால் கிடைக்கும் பலன்களை, அதற்கு விரோதமான பாதையைப் பின்பற்றினால் ஏற்படும் மோசமான விளைவுகளை தெளிவாகச் சொல்லுகிறது. மனிதன் தனது சுற்றுப் புறங்களைக் கண்பார்த்து, தன் அறிவு மற்றும் விவேகத்தைப் பயன்படுத்தி, குர்ஆனின் செய்தியின் உண்மையை உணர வேண்டும் என்று அது அழைக்கிறது. இவை அனைத்தும் முழுவதுமாக ஒருங்கே கலந்து வழங்கப்பட்டுள்ளது. குர்ஆனின் இந்த நடைமுறை ஆணைகளை விளக்குவதில், உலகில் உள்ள உளவியலாளர்களுக்கும் சாதாரண மக்களுக்கும் சமமாக தாக்கம் ஏற்படுத்தும் வகையில் அல்லாஹ் இந்த முறைமையைத் தேர்ந்தெடுத்துள்ளார்.
தெய்வீகம்
குர்ஆன் தெய்வீகத்தன்மை கொண்டது என்பதை ஆதரிக்கும் சில சான்றுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
1. இது தானாகவே தன்னை ஒரு தெய்வீக நூல் என்று அறிவிக்கிறது.
2. இறுதி நாள்வரை மாற்றமின்றி நிலைத்திருக்கும்.
3. அதில் கூறப்படும் நெறிமுறை வழி பிழையற்றது.
4. அதில் கூறப்பட்டவை நடைமுறையில் பயன்படுத்தக்கூடியவை.
5. அதில் சொல்லப்பட்ட வரலாறு முழுமையாக உண்மையானது மற்றும் கலப்படமற்றது.
6. அதன் இலக்கியம் ஒப்பிட முடியாதது.
7. அதில் செய்யப்படும் தீர்க்கதரிசனங்கள் உண்மையாகியுள்ளன.
8. இயற்கையின் பல்வேறு நிகழ்வுகளை கடவுளின் அடையாளங்களாகக் குறிப்பிடுவதில் சர்ச்சை இல்லாமல் இருப்பது.
9. இதில் அறிவியலுக்கு முரணான எந்தக் குறிப்பும் இல்லை.
10. இது முழுவதுமாக முரண்பாடுகளிலிருந்து விடுபட்டுள்ளது.
11. இதன் எந்த ஒரு அதிகாரத்தையாவது நிகரானதாக உருவாக்கும்படி எவரும் சவாலுக்கு எதிர்கொள்ள முடியவில்லை.
12. இதனை உலகில் எடுத்துச்சொன்ன நபர் நேர்மை மற்றும் தன்னலமற்ற குணநலன்களைக் கொண்டிருந்தார்.
==========
இஸ்லாம் என்றால் என்ன? முஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!
இதைப் படிக்காவிட்டால் இழப்பு! பேரிழப்பு!
நாம் ஏன் பிறந்தோம்?
இதயங்களை வென்ற இறைத்தூதர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக