நபிகளார் ரசூல் (ஸல்) உருவாக்கிய மதீனத்து சந்தை
இஸ்லாமிய பொருளாதாரக் கொள்கைகளை முதன்முதலாக அமல்படுத்த நபிகள் நாயகம் முஹம்மது ஸல் அவர்களால் முன்மாதிரியாக அறிமுகப்படுத்தப்பட்டது தான் இந்த மதினா நகர் சந்தை.
அரபியில் சூக் எனவும் உருது மற்றும் பாரசீக மொழிகளில் சவ்க் என அழைக்கப்படும் இந்தச் சந்தையில் இஸ்லாமியர்கள் மாத்திரமல்லாது, அப்போது உடன் வாழ்ந்த பெரும்பான்மை யூதர்களும், கிறுஸ்தவர்களும், பல கடவுள் வழிபாட்டாளர்களும் மற்றும் உலகம் முழுவதிலும் இருந்து வந்து வணிகர்களும் வர்த்தகம் செய்யும் அளவுக்கு பரந்துபட்ட வியாபாராத்தலமாக அது அமைக்கப்பட்டது.
624 ல் காப் அல் அஷ்ராஃப் என்ற தங்கப்பட்டறை வைத்திருந்த ஒருத்தன் முஸ்லிம்களுடன் ஏற்பட்ட பத்ரு போரில் தோல்வியுற்றதை மனதில் வைத்துக்கொண்டு, அங்கே அவனது பனூ கைனுக்கா கூட்டத்து யூதர்கள் அமைத்திருந்த சந்தை ஒன்றுக்கு பொருட்களை விற்க வந்திருந்த முஸ்லிம் பெண்ணை முக்காட்டை கழற்றும்படி பிடித்து இழுத்து அவமானப்படுத்தினான். அதைப் பார்த்த அன்ஸாரி ஒருவர் அவனைக் கொன்றுவிட அன்ஸாரியை சுற்றிவளைத்த யூதர்கள் அவரை கொன்றுவிட்டனர்.
இந்த பிரச்சனை அப்போது மதினாவின் அரசியல் தலைவராக இருந்த ரசூலுல்லாஹ் ஸல் அவர்களிடம் வர, அவர்கள் பனூ கைனுக்கா கூட்டத்தாரை மதினாவைவிட்டு வெளியேறும்படி உத்தரவிட்டனர்.
பிறகு முஸ்லிம்களுக்காக தனி சந்தை வேண்டுமென்ற கட்டாயத்தில் மதினா முனவ்வராவுக்கு நெருக்கமாக வடமேற்கு திசையில் இருந்த கஜ்ரா பழங்குடிக்கூட்டமான பனீ சாய்தாவினருக்கு சொந்தமான ஒரு பழைய கபுரிஸ்தானில் திறந்தவெளி சந்தை அமைத்துக்கொள்ள உத்தரவிட்டார்கள்.
யூதர்களுடைய சந்தையில் புரையோடிப்போயிருந்த வட்டி, கடனுக்கு வாங்குதல், மலிவான பொருட்களை விற்றல், லஞ்சம் மற்றும் இடைத்தரகர், அளவு நிறுவையில் மோசடி ஆகியவற்றை அகற்றி நேர்மையும் நாணயமும் வட்டியும் இல்லாத ஒரு சுத்தமான சந்தையை உருவாக்கினார்கள்.
சந்தைப்பகுதி குறுகலாக இருக்க கூடாது, கடைகளுக்கான வரி வசூலிக்க கூடாது, ஒருத்தருடைய கடையை இன்னொருத்தர் அபகரிக்க கூடாது, குறித்து கொடுக்கப்பட்ட நிலத்தை மீறி கடைகளை விரிக்க கூடாது மற்றும் தரமற்ற பொருட்களை விற்க கூடாது போன்ற நிபந்தையுடன் மதினாவின் முதல் திறந்தவெளி சந்தை ஒன்றை அமைத்தார்கள் .
மதினா நகரின் நுழைவாயிலிலேயே சந்தை அமைந்துவிட்டதால் எல்லா தரப்பிலிருந்தும் வர்த்தகர்களும் வியாபாரிகளும் நகருக்குள் நுழைந்து குடியிருப்புகளை இடைஞ்சல் செய்யாது ஒட்டகம், குதிரைகள் மற்றும் வாகனங்கள் எதுவும் நகரத்திற்குள் புகுந்து சேதப்படுத்தாத வண்ணம் அந்த சந்தை பாதுகாப்பாக அமைக்கப்பட்டது.
நிரந்தரமாக அங்கே கட்டிடமோ அல்லது கூடாரோ அமைக்க கூடாது என்பதே அங்கே போடப்பட்ட முதல் சட்டமாகும்.
அந்த சந்தை அமைக்கப்பட்டு எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஆமில் அலா அல்'சூக் என்ற நிர்வாகப் பதவியை உருவாக்கி சந்தைக்கான பரிசோதக அதிகாரி ஒருவரை நியமித்தார்கள்.
அங்கு அந்த அதிகாரியால் மக்கள் கடைபிடிக்க வேண்டிய பொது ஒழுக்கங்கள், பொருளின் தரம், லஞ்சம் ஊழல் நடக்கிறதா , அளத்தல் நிறுவை போன்றவற்றில் மோசடி நிகழாமல் உள்ளதா என்பன போன்றவற்றை கண்காணிக்க வேண்டிய பொறுப்புகளை அவருக்கு ஒப்படைத்தார்கள்.
முழுமையான கட்டட அமைப்புகள் கொண்ட சந்தை வளாகம் கிபி.1359 ல் பாக்தாதில் அமைக்கப்படுவதற்கு முன்னோடியாக முஹம்மது ஸல் அவர்கள் அமைத்த திறந்தவெளி சந்தைகளே இஸ்லாமிய உலகின் வளர்ச்சிக்கு அடையாளமாகவும் வியாபாரத்தலங்கள் அமைப்பதன் அடித்தளமாகவும் இருந்தன.
குறிப்பு: பனூ கைனுகா கூட்டத்தார் பற்றிய பதிவும் முன்னர் இட்டுள்ளேன்.
நன்றி: Nasrath S Rosy
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக