இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 16 செப்டம்பர், 2024

தொழுகை நடத்திவரும் அற்புதங்கள்


 ஏக இறைவனின் திருநாமத்தால்.. 

இஸ்லாம் என்றால் என்ன?

இஸ்லாம் என்ற வார்த்தையின் பொருள் அமைதி என்பதாகும். அதன் இன்னொரு பொருள் கீழ்படிதல் என்பதாகும் . அதாவது, இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்த ஏக இறைவன் கற்பிக்கும் ஏவல் - விலக்கல்களை வாழ்க்கையில் ஏற்று அதன்படி ஒழுக்கமான வாழ்வு வாழும்போது ஏற்படும் அமைதிக்குப் பெயரே இஸ்லாம் எனலாம். 

தொழுகை என்பது என்ன? 

இஸ்லாம் என்ற வாழ்வியல் கொள்கையை ஏற்று வாழ்வோருக்கு ஐந்து கட்டாயக் கடமைகள் விதிக்கப்பட்டு உள்ளன. முதலாவது கடமை "லா இலாஹ இல்லல்லாஹ், முஹம்மதுர் ரசூலுல்லாஹ்" (பொருள்: வணக்கத்துக்குத் தகுதிவாய்ந்த இறைவன் அல்லாஹ் ஒருவனே, மற்றும் முஹம்மது நபி அவர்கள் இறைவனின் தூதர் ஆவார்) என்பதை மனதார ஏற்று வாயால் மொழிவதாகும். அதற்கு அடுத்த கடமை தினசரி ஐந்து வேளை இறைவன் கற்பித்த முறையில் அவனைத் தொழுவதாகும். 

ஜகாத் எனும் ஏழைகள் வரி, ரமலான் மாதம் நோன்பு நோற்றல், ஹஜ் எனும் புனிதப் பயணம் மேற்கொள்ளல் என்பவை மீதமுள்ள மூன்று கடமைகள் ஆகும். 

தொழுகையின் சிறப்பு: 

இன்று இஸ்லாம் உலகின் நான்கில் ஒரு பங்கு மக்களால் பின்பற்றப்பட்டு வருகிறது.  உலகமெங்கும் ஐவேளை இறை விசுவாசிகளால் நிறைவேற்றப்படும் இந்தத் தொழுகையை சற்றே கூர்ந்து கவனியுங்கள்.

= உலகின் அத்தனை இறைவிசுவாசிகளும் எந்த மூலை முடுக்கிலிருந்தாலும் உலகின் மையப்புள்ளியாக ஒரே இலக்கான மக்காவிலி ருக்கும் ஆதி இறைப்  பள்ளியான கஅபாவை நோக்கியே தொழுகை நிகழ்த்துகிறார்கள். இதன் சூட்சுமம் அளவிலடங்காதது.

= படைத்தவனை மட்டுமே வணங்குவோம், படைப்பி னங்கள் வணக்கத்துக்கு உரியவை அல்ல என்ற கொள்கை முழக்கம் பூமி உருண்டையின் மீது அயராது ஒலிப்பது உங்களுக்குக் கேட்கிறதா?

= ஒரு காலத்தில் நாங்கள் படைப்பினங்களை வணங்கி வந்தோம், இடைத்தரகர்களை நம்பி வந்தோம், அவர்கள் கற்பித்த மூடநம்பிக்கைகளை அப்படியே பின்பற்றினோம். இன்று அவற்றைக் கைவிட்டு விட்டவர்களாக எங்களைப் படைத்த இறைவன்பால் திரும்பியுள்ளோம் என்ற அவர்களின் சீர்திருத்த முழக்கம் உங்களுக்குக் கேட்கிறதா?

= என் உடல்,பொருள் ஆவி அனைத்தும் உனக்கே சொந்தம்! இறைவா நீயே  மிகப்பெரியவன்! என்று அனைத்து அலுவல்களையும் ஒதுக்கி விட்டு  இறைவிசுவாசிகள் உலகெங்கும் ஆங்காங்கே உள்ள பள்ளிவாசல்களுக்கு விரையும் காலடி ஓசை உங்களுக்குக் கேட்கிறதா?

= ஜாதி, மதம், மொழி, இனம், நாடு, நிறம் என்று மனிதகுலத்தைப் பிரித்து வைத்திருந்த தடைகளை உடைத்தெறிந்து ஒன்றே குலம் ஒருவனே இறைவன் என்ற கொள்கையின் கீழ் உலகோர் அனைவரும் ஒருங்கிணையும் காட்சியே அது என்பது உங்களுக்குப் புலப்படவில் லையா? 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற தமிழ் முழக்கம் அங்கு நடைமுறைக்கு வருவதை கவனித்தீர்களா?

= உலகின் பல்வேறு மூலைகளில் சிதறிக்கிடக்கும் பாமரனையும் படித்தவனையும் ஏழையையும் செல்வந்தனையும் பெரியவர் களையும் சிறுவர்களையும் பாகுபாடின்றி ஒரு சில நொடிகளில் உலகெங்கும் ஆங்காங்கே சீராக வரிசைகளில் தோளோடு தோள் உரச  அணிவகுக்கச் செய்யும் விந்தையை எந்த இராணுவமும் செய்யக் கண்டிருக்கிறீர்களா?  

= ஐங்கால தொழுகைகளின் நேர அட்டவணையை சற்றே நோக்கினால் அந்தந்த இடத்திற்குண்டான சூரியனின் உதயநிலை, உச்சி நிலை, அஸ்தமன நிலையை அடிப்படை யாகக் கொண்டவை  தொழுகை நேரங்கள். இதன் மூலம் அகில உலகத்திலும் 24 மணி நேரமும் சதா ஒரு விநாடி விடாது தொழுகைகள் நடந்து கொண்டே இருக்கிறது. இந்த ஆச்சரியமான விந்தை புலப்படவில்லையா?

= ஒவ்வொரு தொழுகைக்கும்  ஒழு (அதாவது அங்கத்தூய்மை) செய்யும் பொழுதும் கைகள், பற்கள், வாய் , நாசித் துவாரங்கள், கண்கள், முகம், தலை, பிடரி, கால்கள் சுத்தமாகி உடற்சுகாதாரம் எவ்வாறு பேணி கடைப் பிடிக்கப்படுகின்றது என்பதை சிந்தித்தீர்களா?

= அங்கத்தூய்மை செய்யும் முன் தொழுகையாளி தாம்பத்திய உறவு கொண்டிருந்தாலோ அல்லது விந்து வெளிப்பட்டு இருந்தாலோ குளித்து தூய்மை அடையக் கடமைப் பட்டிருக்கிறார். அந்த வகையிலும் உடற்தூய்மை பேணப்படுகிறது என்பதையும் கவனியுங்கள்.   

= தொழுகையாளிகளின் வாழ்விலிருந்து சோம்பலை விரட்டி அவர்களது வாழ்வை நேரப்படி திட்டமிட்டு அமைத்துக்கொள்ள தொழுகை வழிவகுப்பதைக் கண்டீர்களா?

= உடல்தூய்மை பேணி தொழுகைகளை வேளாவேளை நிறைவேற்றுவதன் மூலம்  இறை நினைவும் இறைவனுக்கு பதில் சொல்லவேண்டும் என்ற பொறுப்புணர்வும் உண்டாவதால் அது மனிதனை பாவங்களில் இருந்து விலக்கி வைக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக இறைவன் தன்னோடு துணையிருக்கிறான் என்ற உணர்வு அவனுக்கு அலாதியான தன்னம்பிக்கையைத் தருகிறது. அது அவன் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் சவால்களையும் சோதனைகளையும் சாதனைகளாக மாற்ற உதவுகிறது.

= ஐவேளை இறைவனோடு தொடர்பு கொள்வதன் மூலம் உலக கடமைகளை புறந்தள்ளிவிடாமலும் உலகாதய சூழ்நிலைகளிலேயே மூழ்கி கிடந்திடாமலும் இருக்கும் வண்ணம் நடுநிலையான வாழ்க்கைத் திட்டத்தை தொழுகை அமுல் படுத்துவதைக் கண்டீர்களா?

= தொழுகையாளிகளின் வாழ்வில் சுத்தம், கடமை, கட்டுப்பாடு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை, உடல் நலம், இறைதொடர்பு, சமுதாய தொடர்பு, வேற்றுமை பாராட்டாமை மேலும் பல சிறப்புகளை அன்றாடம் அடைந்து கொண்டிருப்பதை கவனித்தீர்களா?

= தொழுகைகளில் சிறிது நேரமே ஆனாலும் ஆன்மீக ரீதியாக அடையும் பெரும்பலன்களுடன் நெற்றி, மூக்கு, உள்ளங்கைகள், முழங்கால் முட்டுக்கள்,கால் பெருவிரல்கள் ஆகியவைகள் பூமியில் படிய சஜ்தா (சாஷ்டாங்கம்) செய்யும் பொழுது நம் உடலுக்கு பூமியின் மூலமாக பல சூட்சுமமான நன்மைகளையும் அடைகிறோம் என்றால் வியப்பாக உள்ளதா? அன்றாடம் செல்பேசிகள் மூலம் தலைக்கேறும் கதிர்வீச்சின் பாதிப்புகள் தொழுகையாளி சஜ்தாவில் தன் நெற்றியை தரையில் வைப்பதோடு அவை தரையிறங்கும் விந்தையையும் கவனியுங்கள். 

= உடல் ரீதியாக எல்லா உடற்ப்பயிற்சிகளுக்கும் மேலானதும் உள்ளத்துக்கும் உடலின் சகலத்துக்கும் பயன் தரும் உடற்பயிற்சியை அவர் அறியாமலே செய்து பல பலன்களையும் பெற்று விடுகிறார். இவ்வாறு தொழுகையினால் கண்காணா, உணர முடியா, அடையாள படுத்தமுடியா, எண்ணிக்கையிலடங்கா பலன்கள் தொழுகையாளிகளுக்கு உள்ளன.

கூட்டாகத் தொழுவதன் பயன்கள்  

= “தனித்துத் தொழுவதை விட ஜமாஅத்துடன் (கூட்டாகத்) தொழுவது இருபத்தேழு மடங்கு சிறந்ததாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரீ) 

= இல்லங்களில் சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரும் ஐவேளைத் தொழுகைகளைக் கூட்டாக நிறைவேற்றும்போது அங்கு குறிப்பாகக் குழந்தைகளுக்கு ஒழுக்கமும் நேரக்கட்டுப்பாடும் பயிற்றுவிக்கப்படுகிறது.

= இதைப் பள்ளிவாசல்களில் கூட்டாக வரிசைகளில் அணிவகுத்து நிறைவேற்றும்போது சக மனிதர்களோடு சகோதரத்துவமும் சமத்துவமும்  பேணும் பண்பு இயற்கையாகவே வந்துவிடுகிறது.

= நம்நாட்டில் நூற்றாண்டுகளாகத் தொடரும் தீண்டாமைத் தீமையில் இருந்து இந்த இறைமார்க்கத்தை ஏற்றுக்கொண்ட மக்கள் விடுதலை பெற்று வருவதை அனைவரும் அறிவோம். ஒரு காலத்தில் தீண்டாமையால் பிரிந்திருந்தவர்கள் இன்று பள்ளிவாசல்களில் தோளோடு தோள் நின்று அணிவகுத்து தொழுவதும் ஒரே தட்டில் பகிர்ந்து உண்ணுவதும் சாதாரணப் புரட்சிகள் அல்ல. 

= படைத்த இறைவன் மட்டுமே வணக்கத்திற்கு உரியவன் என்ற கொள்கை காரணமாக இன்ன பிற மனிதர்கள் முன்னாலும் தன்னைவிடத் தாழ்ந்த படைப்பினங்களுக்கு முன்னாலும் இம்மார்க்கத்தை ஏற்றுக்கொண்டவர்கள் தலை சாய்க்கவோ வணங்கவோ முற்படுவதில்லை. அதனால் மனிதனின் சுயமரியாதை உணர்வு நிலைநிறுத்தப்படுகிறது.

சமூக சேவை மையங்களாக பள்ளிவாசல்கள்

= மேலும் பள்ளிவாசல்களில் மக்கள் வேளாவேளை பரஸ்பரம் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு ஏற்படுவதால் சமூக உறவுகள் வலுப்படுவதோடு சமூகத்தின் குறைகளையும் பிரச்சினைகளையும் தீர்க்கும் குழுக்கள் அல்லது கூட்டமைப்புகள் உருவாகின்றன. 

= இந்த கூட்டமைப்புகளின் சேவைகள் இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து சமூகங்களையும் அரவணைப்பதாக மாறுகின்றன. " பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள்; வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான்" என்பது நபிமொழி. எனவே இந்த நபிமொழியின் அடிப்படையில் பல இஸ்லாமிய அமைப்புகள் செயல்படுவதை நீங்கள் அறிவீர்கள். 

= அவர்கள் சென்னை பெருவெள்ளம், தென்மாவட்டங்களை பாதித்த புயல்கள், பெருமழை, கொரோனா தோற்றுநோய் போன்ற அவசர சூழல்களில் வெகுவாக களமிறங்கி நாட்டு மக்களுக்காக  போராடியதை அறிவீர்கள். 

= கொரோனா பாதிப்பில் இறந்த சடலங்களை அவற்றின் உறவினர்களே புதைக்க முன்வராத நிலையில் தங்கள் உயிரைப் பணயம் வைத்து இஸ்லாமியர்கள்தான் முன்வந்தார்கள் என்பதை நீங்கள் மறந்து இருக்க மாட்டீர்கள். 

ஆக, மதம்கடந்த மனித நேயத்துக்கும், உச்சகட்ட நாட்டுப் பற்றிற்கும், உண்மையான மக்கள் நல்லிணக்கத்திற்கும் இந்தத் தொழுகைகள் வித்திடுவதை நீங்கள் காணலாம். 

================= 

இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!
இதைப் படிக்காவிட்டால் இழப்புபேரிழப்பு!
நாம் ஏன் பிறந்தோம்?
இதயங்களை வென்ற இறைத்தூதர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக