இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 16 செப்டம்பர், 2024

இயற்கைச் சான்றுகளும் இறைவனின் வசனங்களும்


 இயற்கைச் சான்றுகளும் இறைவனின் வசனங்களும்

திருக்குர்ஆன் என்பது இப்பிரபஞ்சத்தைப் படைத்தவனின் வார்த்தைகள் ஆகும். இவ்வேதத்தின் ஒவ்வொரு வசனத்திற்கும் அரபு மொழியில் 'ஆயத்' என்று வழங்கப்படுகிறது.. ஆயத் என்றால் சான்று அல்லது அத்தாட்சி என்பது பொருளாகும். இயற்கையில் நாம் காணும் மலைகள், மரங்கள், சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் போன்ற அனைத்தும் அதேபோல திருக்குர்ஆனின் வழக்கில் ஆயத் என்றே அழைக்கப் படுகின்றன. அதாவது இவை அனைத்தும் இறைவனின் உள்ளமையையும் வல்லமையையும் பறைசாற்றி நிற்கும் சான்றுகளாக விளங்கி நிற்பதே அதற்குக்காரணம் ஆகும்.
இறைவனின் படைப்புகளை ஆராய ஆராய எவ்வாறு அறிவும் அறிவியலும் வளர்கிறதோ அவ்வாறே திருக்குர்ஆனின் வசனங்களும் அவற்றில் பொதிந்துள்ள அரிய உண்மைகளை ஆராய்வோருக்கு வெளிப்படுத்துகின்றன. காரணம் இதை தனது தூதருக்கு இறக்கியருளிய இறைவனின் ஒப்பற்ற ஞானம் இதன் பின்னணியில் உள்ளது...
= இவ்வேதம், யாவரையும் மிகைத்தோனும் ஞானம் மிக்கோனுமாகிய அல்லாஹ்விடமிருந்தே இறக்கியருளப்பட்டது. (திருக்குர்ஆன் 45:2)
(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்பது பொருள்)
திருக்குர்ஆனின் பல்வேறு இடங்களில் இறைவனின் உள்ளமையையும் வல்லமையையும் ஆராய்ந்து அறியத் தூண்டும் வசனங்களைக் காணலாம்.
= இறைநம்பிக்கையாளர்களுக்கு நிச்சயமாக வானங்களிலும், பூமியிலும் (ஆயத்துகள்) அத்தாட்சிகள் இருக்கின்றன. (திருக்குர்ஆன் 45:3)
= இன்னும் வானங்களிலும் பூமியிலும் எத்தனையோ அத்தாட்சிகள் இருக்கின்றன, ஆனால் அவற்றை அவர்கள் புறக்கணித்தவர்களாகவே அவற்றினருகே நடந்து செல்கின்றனர். (திருக்குர்ஆன் 12:105)
அதேபோல இந்த தற்காலிக வாழ்வு ஒரு பரீட்சையே என்பதையும் இவ்வுலகம் அதற்கான ஒரு பரீட்சைக் கூடமே என்பதையும் இறுதித்தீர்ப்பு நாளும் மறுமை வாழ்வும் உண்மையானதே என்பதையும் நம்மைச்சுற்றி நடக்கும் நிகழ்வுகளையும் நாம் வாழும் பிரபஞ்சத்தின் இயல்புகளையும் ஆராயும்போது கண்டறிய முடியும். திருக்குர்ஆனின் வசனங்கள் அதற்குத் தூண்டுவதைக் காணலாம்:
= இன்னும் உங்களைப் படைத்திருப்பதிலும், அவன் உயிர்ப் பிராணிகளைப் பரப்பியிருப்பதிலும் (நம்பிக்கையில்) உறுதியுள்ள சமூகத்தாருக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன.(திருக்குர்ஆன் 45:4)
= மேலும் இரவு பகல் மாறி மாறி வருவதிலும், வானத்திலிருந்து அருள் மாரியை அல்லாஹ் இறக்கி வைத்து, இறந்து போன பூமியை அதைக் கொண்டு உயிர்ப்பிப்பதிலும்; காற்றுகளை மாறி மாறி வீசச்செய்வதிலும் அறிவுடைய சமூகத்தாருக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன. (திருக்குர்ஆன் 45:5)
பூமியெங்கும் பரவிக்கிடக்கும் இத்தகைய சான்றுகள் இறைத்தூதர்களும் இறைவேதங்களும் எடுத்துரைக்கும் செய்திகளை உறுதிப்படுத்தி நிற்பதைக் காணலாம்.
மறுமையில் நம் நிரந்தர இருப்பிடம் சொர்க்கம் அல்லது நரகம் இந்த இரண்டில் ஒன்றுதான் என்றிருக்கும்போது இறைவனின் செய்திகள் நம்மிடம் வரும்போது அலட்சியம் காட்டமுடியுமா?
= இவை அல்லாஹ்வுடைய வசனங்கள், இவற்றை (நபியே!) உம்மீது உண்மையுடன் ஓதிக் காண்பிக்கிறோம்; அல்லாஹ்வுக்கும் அவனுடைய வசனங்களுக்கும் பின்னர் இவர்கள் எதனைத்தான் நம்பப் போகிறார்கள். ? (திருக்குர்ஆன் 45:6)
===========
இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!
இதைப் படிக்காவிட்டால் இழப்புபேரிழப்பு!
நாம் ஏன் பிறந்தோம்?
இதயங்களை வென்ற இறைத்தூதர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக