இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 20 மார்ச், 2023

அறிவியலைக் கூறி படைத்தவனை மறுக்க முடியுமா?



அறிவியல் உறுதி செய்யும் வரை நாங்கள் கடவுளை ஏற்க மாட்டோம் என்பது சில நாத்திகர்களின் வாதம். ஒரு கிணற்றில் பிறந்து வளர்ந்த தவளைகள் அந்த கிணற்றின் நீள அகலங்களை கூறி இந்தக் கிணறு எவ்வளவு விசாலமானது என்று பெருமை பேசிக்கொண்டு இருந்தன. அவற்றை அப்படியே ஒரு வாளியில் அள்ளிக்கொண்டு வெளியே கொண்டுவந்து போடும்போதுதான் கிணறு என்பது எவ்வளவு சிறியது என்பதையும் தங்களின் அறியாமையையும் உணரும். 

"அறிவியல்தான் அல்டிமேட்" என்றும்  "அறிவியலே அனைத்துக்கும் தீர்ப்பு சொல்லும்" என்றும்  "அறிவியல் சொன்னால்தான் எதையும் ஏற்போம்" என்றும் யாராவது கூறினால் அது அறிவியலைப் பற்றி அறியாதவர்களின் கூற்று  என்பதைப் புரிந்து கொள்ளலாம். அது மேற்கூறப்பட்ட  கிணற்றுத்தவளைகளின் பேச்சு போன்றதே! உண்மையில் இதை ஒருவிதமான மூடநம்பிக்கை என்றே கூறவேண்டும்!

அறிவியலில் எல்லைகள் 

உண்மயில் அறிவியல் என்றால் என்ன, அதன் எல்லைகள் எதுவரை என்பதை அறிய முற்படாமையே மேற்படி தடுமாற்றத்திற்குக் காரணமாகிறது.
அறிவியல் என்றால் என்ன? என்ற அடிப்படைக் கேள்விக்குப் பலரும் பல்வேறு விதமான விடைகளைத் தரக்கூடும். பெரும்பாலும் ஏற்றுக் கொள்ளப்படும் விடை, “நம்மைச்சுற்றியுள்ள அனைத்தையும் புரிந்துகொள்ளவும், உலகமும் இயற்கையும் எப்படி இயங்குகின்றன என்பதைத் தெரிந்துகொள்ளவும் மனிதர்கள் மேற்கொள்ளும் ஒரு தொடர்ச்சியான, ஒருமுகப்படுத்தப்பட்ட முயற்சியே அறிவியல்” என்பதுதான்.

இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால், மனித மூளைதான் அறிவியலின் மையக்கருவாக உள்ளது என்பதுதான்! அதாவது அற்ப ஆயுள் கொண்ட ஆறடி மனிதனின் புலன்களுக்கு நேரடியாகவும் கருவிகள் மூலமாகவும் வந்தடையும் தகவல்களை (sensible data) அடிப்படையாக்கொண்டு உருவாவதே அறிவியல். இம்மாபெரும் பிரபஞ்சத்தில் தற்காலிகமாக மின்னி மறையும் ஒரு மிகமிக நுண்ணிய துகள் போன்ற ஒரு ஜீவி அதற்கு மட்டும் விசேஷமாகக் கொடுக்கப்பட்டுள்ள பகுத்தறிவு என்ற ஆற்றலைக் கொண்டு இப்பிரபஞ்சத்தில் புதைந்து கிடக்கும் இரகசியங்களை துருவித்துருவி ஆராய்ந்தறியும் முயற்சியே அறிவியல் என்றும் கூறலாம்.
மனிதமூளையின் ஆற்றல் வரம்புகள்:
உதாரணமாக நீங்கள் கடுமையான ஆராய்ச்சிகளுக்குப் பிறகு ஒரு ரோபோவை( Robot) உருவாக்கி அதற்கு செயற்கை சிந்திக்கும் திறனையும் (artificial intelligence) இன்ன பிற திறன்களையும் வழங்கியுள்ளீர்கள் என்று எடுத்துக் கொள்வோம். பிறகு அதனிடம் நீங்கள் இவ்வாறு கூறுகிறீர்கள்: "எங்கே சொல் பார்க்கலாம்... "என்  அப்பா அம்மா யார்?" "நான் எந்த ஊரில் பிறந்தேன்?"  "என் தாத்தாவுடைய தாத்தாவின் பெயர் என்ன?" ..  சொல் பார்க்கலாம்? இதெல்லாம் எவ்வளவு அறியாமைத் தனமானதோ அது போன்ற ஒரு செயல்தான் அறிவியல் இப்பிரபஞ்சத்தின் படைப்பாளனைப் பற்றி சொல்லும் என்று எதிர்பார்ப்பதும்!
நீங்கள் உருவாக்கிய ரோபோவுக்கு நீங்கள் எதைக் கற்றுக் கொடுத்தீர்களோ அதை அடிப்படையாகக் கொண்ட தகவல்களை மட்டுமே அதனால் கணித்து சொல்லமுடியும் என்பது தெளிவு! அதற்கப்பால் அதற்கு எதுவும் தெரிய வாய்ப்பில்லை. அதேபோல் ஒப்பற்ற படைப்பாளனாகிய இறைவனின்  படைப்பாகிய அற்ப மனித மூளை தன்னைப் படைத்த  இறைவனின் உள்ளமை பற்றி என்ன சொல்ல முடியும்? அவ்வாறு ஏதேனும் பகுத்தறிந்து கூறுவதாக இருந்தால்...
1. தனக்கு ஒரு படைப்பாளன் இருக்கிறான் என்பதை உறுதியாக சொல்லும். 
2. ஏனைய படைப்பினங்கள் பற்றி அதற்குக் கிடைக்கும் தகவல்களைப் பகுத்தாய்ந்து என்ன  கூறமுடியுமோ அதை மட்டும்தான் கூறமுடியும். 

அறிந்தது கைமண் அளவு!

அறிவியல் எனும் படைப்பினங்களை ஆராயும் இந்த சிறு முயற்சியில் மனித அறிவுக்கு எட்டிய அறிவு என்பது இன்னும் எட்டாத அறிவோடு ஒப்பிடுகையில் கடலில் ஒரு துளி போன்றதே. ஆனால் அதுவே அனைத்துக்கும் இறுதியானது (ultimate) என்று இறுமாந்திருப்பது அறிவின்மை அல்லவா? அறிவியல் ஆராய்ச்சிகளின் அடிப்படையே ‘அறிந்தது கைமண் அளவு அறியாதது உலகளவு’ என்ற உண்மைதான். அனைத்தையும் அறிந்துவிட்டோம் மேற்கொண்டு அறிவதற்கு எதுவும் இல்லை என்ற நிலை வந்துவிட்டால் அறிவியல் ஆராய்ச்சிகள் அர்த்தமற்றவை. நாம் வாழும் பேரண்டத்தைப் பொறுத்த ஆராய்ச்சிகளிலும் சரி அணுகூறுகளுக்கு உள்ளே நிகழும் ஆராய்ச்சிகளிலும் சரி வெளி எல்லையும் உள் எல்லையும் இன்னும்கண்டறியப்படாதவை என்பதை அறிவோம். கண்டறியப்படாதவை என்பதை விட அருகே கூட அறவே நெருங்க முடியாதவை என்பதே உண்மை. ஏனெனில் நமது அறிவாற்றல் என்பதும் மிகமிக அற்பமான ஒன்றே.

அனைத்தையும் அறிய முடியாது
மனிதனுக்கு இறைவன் வழங்கிய ஏனைய ஆற்றல்களைப் போல அறிவாற்றலும் இறைவனால் வரையறுக்கப்பட்ட ஒன்றே. இறைவனின் இறுதித்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் காலத்தில் யூதர்கள் சிலர் ரூஹ் (உயிர்) என்பது என்ன? என்ற கேள்வியை எழுப்பினார்கள் அப்போது இறைவனிடம் இருந்து கீழ்கண்ட வசனம் அருளப்பட்டது:
= நபியே!) ரூஹைப் பற்றி (யூதர்களாகிய) அவர்கள் உங்களிடம் கேட்கிறார்கள். அதற்கு நீங்கள் "அது எனது இறைவனின் கட்டளையால் ஏற்பட்டது. (அதைப் பற்றி) வெகு சொற்ப ஞானமேயன்றி உங்களுக்குக் கொடுக்கப்படவில்லை. (ஆதலால், அதன் நுட்பங்களை நீங்கள் அறிந்துகொள்ள முடியாது)" என்று கூறுங்கள். (திருக்குர்ஆன் 17:85
நூல்: புகாரி 
அறிவியலாளர் தீர்ப்பு சொல்லமுடியாது 
எவ்வளவுதான் உலகம் போற்றும் அறிவியல் மேதையாயினும் ஒருவர் அற்பமான அறிவை தற்காலிகமாகத்  தாங்கி நின்று மறைந்து போகும் மனித இனத்தைச் சார்ந்தவர் என்பதால் அவரது அறிவியல் சார்ந்த கருத்தேயானாலும் அது இறுதியானது அல்ல என்பதை நாம் புரிந்துகொள்ள கடமைப்பட்டுள்ளோம். காரணம் இங்கு மேலே குறிப்பிட்டவாறு ஆராய்ச்சி எல்லைகள் வரையறுக்கப் படாதவையாக இருக்கின்றன. அவ்வாறிருக்கும்போது அறிவியலுக்கு அப்பாற்பட்ட கருத்துக்களை எப்படி இறுதியானவை என்று கொள்ள முடியும்?

அறிவியலையே முடக்கும் நிலைப்பாடு
புலன்களால் அல்லது கருவிகளால் அறியமுடியாத அல்லது அறியாத எதையும் அப்பட்டமாக ‘இல்லை’ என்று மறுப்பது அறிவியல் ஆராய்ச்சிகளை முடக்கிப்போடும் செயலாகும். மாறாக ‘தெரியாது’ என்ற நிலைப்பாட்டைத் தொடர்ந்து ‘அது இருக்கக்கூடும்’ அல்லது ‘ அதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளன’ என்ற நிலைபாட்டை மேற்கொள்வதால்தான் அறிவியல் முன்னேற்றமே சாத்தியமாகிறது. உதாரணமாக அணு என்பதுதான் உடைக்கமுடியாத மிகச்சிறிய பதார்த்தம்என்ற நிலைப்பாட்டுக்கு ஒரு காலத்தில் வந்தது. அப்போது அதுவே இறுதியானது என்று முடிவெடுத்திருந்தால் அதற்குப்பின் நடந்த எவ்வளவு அறிவியல் முன்னேற்றங்களை அது முடக்கிப்போட்டு இருக்கும் என்பதை நீங்கள்ஊகிக்க முடியும்.

உதாரணமாக அண்டவியலில் பிரபஞ்ச விரிவாக்கத்தின் பின்னணியில் காலக்சிகளுக்கு இடையே அவற்றைப் பிணைத்து வைத்திருக்கும் சக்தியும் அபாரமான வேக வளர்ச்சியோடு விரிவாக்கத்தை நிகழ்த்திக்கொண்டிருக்கும் சக்தியும் என்னவென்றே அறியப்படாதவை. அந்தக் காரணத்துக்காக அவற்றை இல்லையென்று மறுக்காமல் அவற்றை கரும்பொருள் மற்றும் கருஞ்சக்தி (dark matter, dark energy) என்று பெயரிட்டு அவற்றின் இருப்பை ஏற்பதைத்தான் அறிவியல் அணுகுமுறையிலும் காண்கிறோம். ஆனால் தன் ஆய்வு எல்லைக்கே தட்டுப்படாதவற்றை இல்லை என்று அப்பட்டமாக மறுத்தால் அது அறிவீனமும் அராஜகமும் அல்லாமல் வேறு என்ன? அந்த அராஜகத்தின் விளைவாக சமூகத்தில் உருவாகும் தான்தோன்றித்தனத்திற்கும் குழப்பங்களுக்கும் ஒழுக்க சீர்கேடுகளுக்கும் இறைவனிடம் தண்டனைகள் காத்திருக்கின்றன.

= அப்படியல்ல; அவர்கள்அறிவால் அறிந்து கொள்ள இயலாததை அதன் விளக்கம் அவர்களுக்கு எட்டாத நிலையில்பொய்யெனக் கூறுகிறார்கள்; இவர்களுக்கு முன் இருந்தவர்களும் இவ்வாறே (தாங்கள் அறிந்து கொள்ள முடியாதவற்றை) பொய்ப்பித்தார்கள். ஆகவே அந்த அநியாயக்காரர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதை (நபியே!) நீர் நோக்குவீராக. (திருக்குர்ஆன் 10:39)

ஆன்மீகத்தோடுள்ள அணுகுமுறை
காலம் செல்லச்செல்ல இவ்வுலகில் காணும் படைப்பினங்களைப் பற்றிய அறியாமையை அகற்றும் வேலையை தனது அயராத ஆராய்ச்சிகள் மூலம் அறிவியல் செய்துவருகிறது. ஆனால் மனித வாழ்வின் அனைத்து துறைகளுக்கும் அதுவே தீர்வு வழங்கும் என்று நம்பியிருப்பது பெரும் ஏமாற்றத்தையும் இழப்பையுமே கொண்டுவரும். உதாரணமாக மனிதவாழ்வின் நோக்கம், மனிதன் இங்கு வந்ததன் பின்னணி, மனித வாழ்வில் சரி எது தவறு எது, நியாயம் எது அநியாயம் எது என்பதற்கான அளவுகோல் போன்ற பலவற்றையும் அறிவியல் நமக்கு சொல்லித்தராது. அறிவியல் சொல்லட்டும் பிறகு பார்க்கலாம் என்று காத்திருந்தால் பல முக்கியமான விடயங்களை நாம் இழக்கவேண்டி வரும். அது இழப்பு என்பதை விட கடுமையான விபரீதங்களையும் சந்திக்க நேரிடலாம். அறிவியல் கூறுவதுதான் இறுதி (ultimate) என்று எடுத்துக் கொண்டு அதற்கு அப்பாற்பட்டவற்றை அப்பட்டமாக மறுத்தால் ஆன்மிகம் கூறும் மறுமை வாழ்வில் நரகத்தையும் ஒருவர் அடைய நேரிடலாம். அதுவும் நிரந்தர வாழ்விடம்!
= (நபியே!) எவன் நம்முடைய அறிவுரையைப் புறக்கணிக்கின்றானோ, மேலும், உலக வாழ்க்கையைத் தவிர வேறெந்த குறிக்கோளும் அவனுக்கு இல்லையோ அவனை அவனது நிலையிலேயே விட்டுவிடும். இவர்களின் அறிவின் எல்லை அவ்வளவுதான்! அவனுடைய பாதையை விட்டுப் பிறழ்ந்தவர் யார்; நேரான வழியில் இருப்பவர் யார் என்பதனை இறைவனே நன்கறிகின்றான்! (திருக்குர்ஆன் 53: 29,30) 
=============== 
தொடர்புடைய ஆக்கங்கள்:
படைத்தவனைப் படைத்தது யார் ?
https://www.quranmalar.com/2023/03/blog-post_19.html
இல்லாமையில் இருந்து உண்டாக்குபவனே இறைவன்
https://www.quranmalar.com/2019/02/blog-post.html
படைத்தவன் இல்லாமல் படைப்பினங்களா?
https://www.quranmalar.com/2023/02/blog-post_17.html
பிரபஞ்சத்தின் ஆரம்பக் கரு என்ற பேரற்புதம்!
அடிப்படையில்லா நாத்திகம்
https://www.quranmalar.com/2022/07/blog-post_15.html
அழகிய மனிதனை மிருகமாக்கிய நாத்திக சிந்தனை!
https://www.quranmalar.com/2022/03/blog-post_23.html
இனவெறிக்கு வித்திட்ட ஆத்திகமும் நாத்திகமும்
https://www.quranmalar.com/2018/09/blog-post.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக