இவ்வுலகம் எவ்வாறு உண்டானது எனும் கேள்விக்கு நாத்திகர்களின் பதில் 'அது உண்டாக வேண்டிய அவசியம் இல்லை. அது எப்போதுமே இருந்து கொண்டிருக்கிறது' என்பதாக இருந்தது. ஆனால் பெருவெடிப்புக் கொள்கை மிக உறுதியாக நிரூபனமானதைத் தொடர்ந்து நடந்த ஆராய்ச்சிகளில் இந்தப் பேரண்டம் விரிவடைந்து கொண்டிருக்கிறது என்ற உண்மையும் கண்டறியப்பட்டது. இது நாத்திகர்களின் வாதத்திற்குப் பேரிடியாக அமைந்தது.
பெருவெடிப்பு (big bang)
20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ரஷ்ய இயற்பியல் விஞ்ஞானி அலெக்சாண்டர் ஃபிரைட்மேனும் பெல்ஜிய விஞ்ஞானி லேமைட்ரீயும் பிரபஞ்சத்தின் விரிவடைதலை கண்டறிந்தனர். இந்த உண்மை 1929ல் தொலைநோக்கி சோதனை மூலம் விஞ்ஞானி எட்வின் ஹப்பிளால் நிரூபிக்கப்பட்டது. மேலும் நட்சத்திரங்கள் மற்றும் விண்மீன் திரள்கள் ஒன்றையொன்று விலகிச் செல்வதையும் தனது சோதனையில் கண்டறிந்தார் ஹப்பிள். அவை விலகிச்செல்வது நிரூபணம் ஆனபோது அந்த இயக்கத்தின் துவக்கத்தில் அவை ஒன்றாக இருந்தன என்பதும் ஒரு திட்டமிடப்பட்ட அறிவார்ந்த பேராற்றல் கொண்ட கட்டளை மூலம் அவை வெடித்துச் சிதறின என்பதும் நிரூபணமாயிற்று. அந்நிகழ்வையே பெருவெடிப்பு (big bang) என்று அறிவியல் அழைக்கிறது.
பெருவெடிப்புக் கொள்கையைப் பற்றியும் பிரபஞ்சத்தின் விரிவாக்கம் பற்றியும் இவ்வுலகைப் படைத்த இறைவன் தனது இறுதி மறையாம் திருக்குர்ஆனில் பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னரே வெளிப் படுத்தியுள்ளான் என்பது இங்கு கவனத்திற்குரிய விடயமாகும்.
= நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் சத்திய மறுப்பாளர்கள் பார்க்கவில்லையா? அவர்கள் நம்பிக்கை கொள்ள வில்லையா? (அல்குர்ஆன் 21:30)
= வானத்தை நாம் ஆற்றலைக் கொண்டு படைத்தோம்: நிச்சயமாக நாம் அதை விரிவாக்கம் செய்பவராவோம்.' (அல்குர்ஆன் 51:47)
(திருக்குர்ஆன் வசனங்கள் அன்று வாழ்ந்த பாலைவன பாமர மக்களையும் அறிவியல் முன்னேற்றம் கண்டு வாழும் இன்றைய மக்களையும் நோக்கி பேசுகின்றன என்பதையும் வானங்கள் என்பது பற்றி அவரவர் புரிதல் மாறுபடும் என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்.)
பிரபஞ்சம் உருவாக
படைப்பாளன் தேவையா?
இப்பேரண்டத்தின் படைப்பு எல்லையற்ற ஆற்றலும் விரிவாக்க இயலாத நுண்ணறிவும் பெற்ற ஒரு படைப்பாளன் இல்லாமல் தான்தோன்றியாக நடைபெற்ற நிகழ்ச்சி இல்லையென்பதை பெருவெடிப்பு நிகழ்ச்சியும் அதைத் தொடர்ந்து ஒழுங்குற அமைந்த பிரபஞ்சத்தின் உருவாக்கமும் இயக்கமும் பறைசாற்றி நிற்கின்றன.
ஒரு ராக்கெட் பூமியின் மீதிருந்து புறப்பட்டுச் செல்வதாக வைத்துக் கொள்வோம். ராக்கெட்டின் ஆரம்ப கட்டத்தில் இருக்க வேண்டிய வேகம் எக்காரணத்தைக் கொண்டும் ஒரு குறிப்பிட்ட அளவைக்கு (உதாரணமாக வினாடிக்கு ஏழு மைல்) சற்றே குறைந்தாலும் கூட ராக்கெட் புவிஈர்ப்பு விசையால் கட்டுப்படுத்தப்பட்டு அது மீண்டும் பூமியில் வீழ்ந்து விடும் என்பதை அறிவீர்கள்..
இப்படி ஒரு திட்டமிட்ட வேகத்தை ராக்கெட் பெற வேண்டுமானால் எந்த ராக்கெட்டும் தான்தோன்றித்தனமாக அதைப் பெற்று விடுவதில்லை.
அப்படி ஒரு ராக்கெட் பூமியை விட்டுப் புறப்பட வேண்டுமானால் அதற்குப் பின்னால் என்னென்ன காரியங்கள் நடைபெற வேண்டும் என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள்.
உங்களுக்கு முடிந்தால் உங்கள் அருகாமையில் உள்ள ஏதேனும் ஒரு வாகனத் தயாரிப்பு தொழிற்சாலைக்கு சென்று அங்கு ஒரு வாகனம் தயாராகி வெளிவருவதற்குள் நடக்கும் ஆரம்பம் முதல் இறுதிவரையிலான செயல்பாடுகளை சற்று நோட்டமிட்டு வாருங்கள்.
இங்கே மேற்கூறப்பட்ட ஒரு ராக்கெட் தயாரிக்கப்பட்டு விண்வெளிக்கு ஏவப்படும் வரையிலான தேவைகளை மிகச்சுருக்கமாக பட்டியலிடுவோம்.
இவை ஒவ்வொன்றும் நடைபெற வேண்டுமானால் அவற்றுக்குப் பின்னுள்ள தேவைகளையும் இவற்றுக்கு இடையிலான தேவைகளையும் நீங்களே ஊகித்துக்கொள்ள முடியும் என்பதால் அவற்றை விட்டுவிடுவோம்:
= பல்லாயிரம் வருடங்களில் தலைமுறை தலைமுறையாக நாம் பெற்ற படிப்படியான அறிவியல் அறிவு.
= புவிஈர்ப்பு விசையைக் கண்டுபிடித்தல், அதைக் கணக்கிடுதல்.
= அதைத் தாண்டிச் செல்வதற்குரிய வேகத்தை மிகத் துல்லியமாகக் கண்டுபிடித்தல்.
= அந்த வேகத்தை அடைவதற்குரிய ஆற்றலைக் கண்டுபிடித்தல், அதை நடைமுறைக்கு சாத்தியமாக்குவதற்கான கருவியை (எஞ்சின்) வடிவமைத்தல்,
= அதற்கான மூலக்கூறுகளை முதலில் தயாரித்து அவற்றை உரிய முறையில் பொருத்திப் பரிசோதித்து அக்கருவியை உண்டாக்குதல். (கட்டுப்படுத்தும் உபகரணங்கள் தனி)
= அந்த ராக்கெட்டை வடிவமைப்பு (design) செய்தல்.
= அதன் எஞ்சின் உட்பட வெளி மற்றும் உள் உறுப்புக்களைத் துல்லியமாக கணக்கிட்டு வடிவமைத்தல்.
= வடிவமைத்த பாகங்களுக்கான மூலப்பொருட்களைத் திரட்டுதல் பக்குவப்படுத்துதல்.
= தொழிற்சாலை அல்லது பட்டறை நிறுவுதல்
= வடிவமைத்த பாகங்களை துல்லியமாகத் தயாரித்தல்,
= தரக்கட்டுப்பாடு, உறுப்புக்களை ஒன்றோடு ஒன்று இணைத்தல், பொருத்துதல், பரீட்சித்தல், பறக்க விடுதல்...
... இவையெல்லாம் இங்குள்ள பொருள், ஆள், அறிவு, ஆற்றல் என பலவற்றையும் குறிப்பிட்ட அளவில் திரட்டிச் செய்யப்படும் ஒரு நடவடிக்கை என்பதை நாம் கவனிக்கவேண்டும்.
பெருவெடிப்பை நிகழ்த்தியது யார்?
பேரண்டத்தோடு ஒப்பிடும் போது கடுகினும் சிற்றளவுள்ள இந்த பூமியின் ஈர்ப்பு விசையை மீறுவதற்கே இவ்வளவு பிரச்சனைகள் இருந்தால் பேரண்டம் படைக்கப்படும் முன்னரே அதன் ஈர்ப்பு விசையை முன்கூட்டிக் கணித்து அதற்கேற்ற ஆற்றலுடன் பெருவெடிப்பை நிகழ்த்தியது யார்?
இயற்கை என்பார் நாத்திகர்கள்.
ஒரு பொருளுக்குள் அமைந்த இயல்புகளின் தொகுப்புக்கே இயற்கை என்று கூறப்படும். இயற்றியவன் இன்றி இயற்கையும் அங்கு இல்லை என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். அதாவது ஒரு பொருளோ அல்லது அதன் மூலக்கூறுகளோ இன்ன விதத்தில் இயங்க வேண்டும் என்ற விதியை அப்பொருள் உண்டாக்கப்படும் போதே அதற்கு கற்பித்தால்தான் அவ்வாறு இயங்கும். அவ்வாறு கற்பித்து கட்டுப்படுத்துபவன் இல்லாமல் இயற்கை என்பதும் இல்லை. நாத்திகர்கள் இயற்கை என்று வாதிடுவது அர்த்தமற்ற ஒன்றாகும் என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.
இயற்கையும் சோதிடமும்
ராக்கெட் உதாரணத்தில் ராக்கெட்டின் தொடக்க வேகம் வினாடிக்கு ஏழு மைலுக்கு மேல் இருக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டதையும் அதை விடக் குறைவாக தொடக்க வேகம் அமைந்து விட்டால் ராக்கெட் திரும்பவும் பூமியில் விழுந்து விடும் எனக் குறிப்பிட்டதையும் பார்த்தோம். இதைப் போன்று பெருவெடிப்பின் ஆற்றலும் இவ்வளவு காலமாக வீழ்ந்து விடாமல் இப்போதும் விரிவாகிக் கொண்டிருக்க வேண்டுமானால் பெருவெடிப்பின் தொடக்க வேகமும் பெரு வெடிப்புக்கு முன்னர் நிர்ணயிக் கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் பெரு வெடிப்பே படைப்பின் தொடக்கம் என்பதும் அதற்கு முன் எதுவுமே இல்லை என்பதுமே பெருவெடிப்புக் கோட்பாடாக இருக்கும்
பெருவெடிப்பு தொடங்குவதற்கு முன்னரே நிர்ணயிக்கப்பட்டிருக்க வேண்டிய அதனுடைய தொடக்க வேகத்தை நிர்ணயித்தது யார்?
இயற்கையா?
பெருவெடிப்புக்கு முன்னர் ஏது இயற்கை?
இயற்கை என்ற பெயரில் ஏதேனும் ஒன்று செயல்பட வேண்டுமானால் பொருட்கள் இருக்க வேண்டும். எனவே பொருள் இல்லையேல் இயற்கையும் இல்லை. பெரு வெடிப்புக்கு முன்னால் பொருட்கள் ஏதும் இல்லையென்பதால் அந்த நேரத்தில் இயற்கையும் இல்லை. இயற்கையே இல்லாத போது பெரு வெடிப்பின் விரிவாக்க வேகத்தை நிர்ணயித்தது யார்? இயற்கையின் இடத்தில் இறைவனையே அன்றி வேறொன்றையும் வேறொருவரையும் காணமுடியாது என்பதையே இது காட்டுகிறது.
மற்றொரு கோணத்தில் பார்த்தால் பெருவெடிப்புக்கு முன்பே இயற்கை இருந்தது என ஒரு வாதத்திற்காக வைத்துக் கொண்டால் கூட அந்த இயற்கையால் பேரண்டத்தின் விரிவாக்க வேகத்தை நிர்ணயித்திருக்க இயலாது. ஏனெனில் இயற்கைக்கு சோதிடம் கிடையாது. புலனறிவுக்கு உட்பட்டதை வைத்தே இயற்கை தீர்மானங்களை எடுக்க முடியும். பூமியின் ஈர்ப்பு விசையை அதன் இயற்கை என்று கூறினால் பூமி இருப்பதால் தாம் அதில் அதன் இயற்கையாம் ஈர்ப்பு விசை தோன்றியது. இல்லாத பூமியில் இயற்கை தோன்றாது. இயற்கையின் இயற்கையே இப்படியென்றால் பெருவெடிப்பிற்கு முன் இல்லாத பேரண்டத்தின் ஈர்ப்பாற்றலை இயற்கையால் எப்படித் தெரிந்து கொள்ள முடியும்? பெருவெடிப்பிலிருந்து தோன்றப் போகும் இம்மாபெரும் பேரண்டத்தின் பொருண்மையைக் கவனித்துக் கண்டுபிடிக்க வேண்டுமானால் பேரண்டம் தோன்றிய பிறகே அதைச் செய்ய முடியும்.
பேரண்டம் தோன்ற வேண்டுமானால் பெருவெடிப்பு நிகழ வேண்டும். பெருவெடிப்பு நிகழ வேண்டுமானால் அதனுடைய விரிவாக்க வேகம் நிர்ணயிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் பெருவெடிப்பின் விரிவாக்க வேகம் நிர்ணயிக்கப்பட வேண்டுமானால் பெரு வெடிப்புக்குப் பிறகு தோன்றப் போகும் பேரண்டத்தின் ஈர்ப்பாற்றல் என்ன என்பது மிகத் துல்லியமாக பெரு வெடிப்புக்கு முன்னரே தெரிந்திருக்க வேண்டும். இயற்கையால் அது சாத்தியமா?
எதிர்காலத்தில் நடக்கப் போகும் ஒன்றை அதற்கான அறிகுறிகள் எதுவுமில்லாமல் அறிதல் என்பது காலவேற்றுமைகளால் பாதிக்கப்படாத் முக்காலமும் உணர்ந்த மேலும் சரியாகக் கூறினால் ஒரே நேரத்தில் முக்காலங்களிலும் நிலை கொள்கின்ற சிறப்பியல்பை தனக்குள் பெற்றுக் கொண்ட ஒருவனாலன்றி வேறொருவராலும் இயலாத காரியமாகும். எனவே அப்படிப்பட்ட இயல்பைக் கொண்டவன் யாரோ அவனையே நாம் இறைவன் என்று அழைக்கிறோம். ஒருகால் கடவுளை மறுப்பதற்காக இயற்கையாலும் இப்படியெல்லாம் முடியும் என்று வாதிடும் அளவிற்கு இந்த விஷயத்தில் யாரேனும் பேதமை காட்ட முயன்றால் கடவுளைப் பெயர் மாற்றம் செய்து இயற்கை எனக் கூறுவதற்கு ஒப்பானதாகி விடுமே அன்றி படைப்பாளனின் இடத்திலிருந்து அவனை ஒரு போதும் அகற்றிப் பார்க்க முடியாது.
பகுத்தறிவற்ற வாதம்
பெருவெடிப்பு ஒரு இயற்கை நிகழ்ச்சி எனக் கூறுவது கடுகளவும் பகுத்தறிவைப் பயன்படுத்தாத வாதமாகும். ஏனெனில் நிகழ்ச்சிகள் என்பது பொருட்களின் செயல் களாகும். எனவே பொருட்கள் இல்லையேல் செயல்களும் இருக்க முடியாது என்பது மிக மிக எளிய செய்தியாகும். இதைப் புரிந்து கொள்வதற்கு மிகச் சாதாரண அறிவே போதுமானதாகும். இருப்பினும் நாம் இயற்கை வாதிகளுக்கு சாதகமாக பெருவெடிப்பு இயற்கையாகவே தோன்றியது என்பதையும் அதிலிருந்து தப்பித்தவறி ஒரு பேரண்டம் தோன்றி விட்டதாகவும் கற்பனை செய்வோம். இவ்வாறு ஒரு பேரண்டம் தோன்றினால் கூட அந்த வேகத்திலேயே அப்பேரண்டம் தோன்றிய புள்ளியிலேயே வீழ்ந்து விடும்படி அப்பேரண்டத்தின் சொந்த ஈர்ப்பாற்றலே அதை நிர்பந்தம் செய்யும்.
அதற்கு மாறாக நாம் வாழ்வதைப் போன்ற சீரானதும் (ளலளவநஅயவiஉ) இவ்வளவு வழவழப்பானதுமான (ளஅழழவா) பேரண்டம் ஒரு போதும் உருவாக முடியாது.
எனவே நாம் வாழ்ந்து கொண்டிருப்பதைப் போன்ற பேரண்டம் உருவாக வேண்டு மென்றால் பெருவெடிப்பின் ஆரம்ப வேகம் மிக மிகத் துல்லியமாக நிர்ணயிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதையே இது காட்டுகிறது.
இறைவன் அவனை மறுப்போரிடம் கேட்கும் கேள்வி இங்கே மிகப்பொருத்தமாக அமைந்துள்ளதைப் பாருங்கள்:
= அல்லது அவர்கள் எந்தப் பொருளின்றியும் (தாமாகவே) படைக்கப்பட்டனரா? அல்லது அவர்கள் (எதையும்) படைக்கிற (சக்தியுடைய)வர்களா? அல்லது வானங்களையும் பூமியையும் அவர்கள் படைத்தார்களா? அல்ல. அவர்கள் உறுதி கொள்ளமாட்டார்கள். (திருக்குர்ஆன் 52:35-36)
அறிவியல் தகவல்கள் : ஏ.கே.அப்துர் ரஹ்மான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக