இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 16 மார்ச், 2023

ஒழுக்க வீழ்ச்சியால் அழியும் மனித இனம்!


#மக்கள்தொகை_வீழ்ச்சி_அபாயம்!
பல ஐரோப்பிய நாடுகள், கனடா, ஜப்பான், சீனா உள்ளிட்ட பல முன்னேறிய நாடுகள் மக்கள்தொகை வீழ்ச்சியால் கடுமையான மனித வள பற்றாக்குறைக்கு ஆளாகியுள்ளன. . சொந்த மக்கள் சுய இன அழிவுக்கு உள்ளாகிக் குறைந்தும் மறைந்தும் போகும் நிலையில் அவை தங்கள்
தொழில் முன்னேற்றத்தைத் தக்கவைக்க பிறநாட்டு தொழிலாளர்களை இறக்குமதி செய்யும் நிலைக்கு ஆளாகி உள்ளன! அதேவேளையில் பிறப்பு விகிதம் கடுமையாகக் குறையும் சூழலில் தங்கள் இனத்தாரின் அழிவைத் தடுக்க வழியேதும் அறியாமல் விழிபிதுங்கி நிற்கின்றன. 
இன அழிவுக்குக் காரணங்கள்!
= இறைவனையும் மறுமை வாழ்வையும் பற்றிய நம்பிக்கை இல்லாததால் எப்படியும் வாழலாம், யாருக்கும் பதில் சொல்லவேண்டியதில்லை என்ற பொறுப்பின்மை மேலிடுகிறது. அதனால் மனம்போன போக்கில் பாலியல் உணர்வுகளை தணித்துக் கொள்ளும் போக்கு! மறைவில் செய்யப்படும் குற்றங்களுக்கும் இறைவனிடம் விசாரணையும் தண்டனையும் உண்டு என்பதை அறியாதவர்களும் இருக்கிறார்கள். அதை மறுப்பவர்களும் இருக்கிறார்கள்.
= திருமணம் என்ற உறவின் புனிதத்தை அறவே அலட்சியப் படுத்துதல். அதன் மூலம் உண்டாகும் பொறுப்புகளைக் கண்டு வெருண்டோடுதல்.
= திருமணம் இன்றியே முடிந்த வரை ஆண்- பெண் இணைந்து வாழுதல். பாலியல் உறவுகளை மனம்போன போக்கில் தணிக்கும்போது கருவுருவதைத் தவிர்த்தல். அதை மீறி உருவானாலும் அக்கருவை அல்லது சிசுவை ஈவிரக்கமின்றிக் கொல்லுதல். இங்கு விபச்சாரத்திற்கான குற்றமும் கொலைக்கான குற்றமும் இறைவனிடம் பதிவாகிறது என்பது பற்றி அறியாமை!
= ஓரினச்சேர்க்கை, லெஸ்பியன் மற்றும் இயற்கைக்கு மாறான தான்தோன்றித்தனமான பாலியல் செயல்பாடுகள்.
= திருமணங்கள் நடந்தாலும் குழந்தைகள் பெற்றுக் கொள்வதில் ஆர்வமின்மை. அத்துடன் குழந்தைப் பேற்றை எப்படியாவது தடுக்கப் முனைப்போடு செயல்படும் அரசாங்கங்களும் அவற்றுக்குத் துணைபோகும் ஊடகங்களும் சூழலும். வறுமைக்கு பயந்தும் வசதிகள் குறையும் என்று பயந்தும் சுயநல மனப்பான்மையாலும் குழந்தைப் பேறுகள் தடைபடுகின்றன. கருக்கொலையும் சிசுக்கொலையும் எந்தவிதக் குற்ற உணர்வுமின்றி சர்வசாதாரணமாக எடுத்துக் கொள்ளப்படுகின்றன.
= திருமண வயதைத் தள்ளிப் போடுதல். வரதட்சணைக் கொடுமை, குடும்ப அமைப்பு, உறவுகள் இவற்றை விட பணத்திற்கும் பதவிக்கும் முக்கியத்துவம் கொடுத்தல் போன்ற இன்னும் பல காரணிகள் இந்த அவலத்திற்கு வெகுவாகத் துணைபோகின்றன.
சுயநல "முற்போக்கு" சிந்தனை!
இவ்வளவு நடக்கும்போதும் சிலர் இப்படியும் எண்ணலாம்.... இப்போது இல்லாத சந்ததிகளுக்காக ஏன் கவலைப் படவேண்டும்? இருப்பவர்களைப் பற்றி கவலைப் படுவோமே... என்று.
ஆனால் ஒன்றை நாம் சிந்திக்க வேண்டும். இவ்வுலகில் வாழ நமக்கு எவ்வளவு உரிமை உள்ளதோ அதே அளவு உரிமை அவர்களுக்கும் இருந்திருக்கிறது. ரயில்வண்டியில் முதல் ஸ்டேஷனில் ஏறியவர்கள் தங்களுக்கே இரயில் சொந்தம் என்று பாவித்து இருக்கைகளில் கால்நீட்டிப் படுத்து சொந்தம் கொண்டாடினால் அதை அனுமதிக்க முடியுமா? அல்லது அவர்கள் பெட்டிகளுக்கு தாழிட்டுவிட்டு அடுத்த ஸ்டேஷனில் காத்திருந்த பயணிகளுக்கு அனுமதி மறுத்தால் அதைத்தான் ஏற்றுக்கொள்ள முடியுமா? அதுபோலத்தான் இதுவும்!
இவ்வுலகிற்கு நுழைவு மறுக்கப்பட்ட சந்ததிகளின் உரிமைகளை தடுத்ததற்கான குற்றத்திற்காக இவ்வுலக அரசாங்கங்களோ நீதிமன்றங்களோ நம்மை தண்டிக்க மாட்டா. ஆனால் அனைத்தையும் கண்டுகொண்டு இருக்கும் இவ்வுலகின் அதிபதி அனைத்து உரிமை மீறல்களையும் குற்றங்களையும் அழியாத பதிவேடுகளில் ஆழமாகப் பதிவு செய்துள்ளான். இவை இறுதி நாளில் தவறாமல் விசாரிக்கப்பட உள்ளன!
= உயிருடன் புதைக்கப்பட்ட பெண் (குழந்தை) வினவப்படும் போது- 'எந்தக் குற்றத்திற்காக அது கொல்லப்பட்டது?' என்று- (திருக்குர்ஆன் 81: 8,9)
= அந்நாளில், மக்கள் தங்கள் வினைகள் காண்பிக்கப்படும் பொருட்டு, பல பிரிவினர்களாகப் பிரிந்து வருவார்கள். எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார். அன்றியும், எவன் ஓர் அனுவளவு தீமை செய்திருந்தாலும், அ(தற்குரிய பல)னையும் அவன் கண்டு கொள்வான். (திருக்குர்ஆன் 99:6-8

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக