இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 19 மார்ச், 2023

படைத்தவனைப் படைத்தது யார் ?


இந்த உலகைப் படைத்தவனையே இறைவன் என்கிறோம் என்று ஆத்திகர்கள் கூறும்போது நாத்திகர்கள் அடிக்கடி முன்வைக்கும் கேள்வி இது..

அந்தப் படைத்தவனை படைத்தது யார்?
ஒரு படைபாளன் இல்லாமல் படைப்பினங்கள் எதுவும் உருவாக முடியாது என்ற லாஜிக் மறுக்க முடியாதது. எனவே படைப்பாளன் இருப்பதை ஏற்றால் கடவுளின் இருப்பை ஏற்றுக் கொண்டாக வேண்டுமே.. இதைத் தவிர்ப்பதற்காக நாத்திகர்களால் உருவாக்கப்பட்ட ஒரு அர்த்தமற்ற கேள்விதான் இது!
# அந்த தச்சனை உண்டாக்கிய நாற்காலி எது?
# அந்த சிற்பியை செதுக்கிய சிற்பம் எது?
# ஒரு சிற்பியால் சிற்பத்தை உண்டாக்க முடியும் என்றால் ஒரு சிற்பத்தால் ஏன் சிற்பியை உண்டாக்க முடியாது?
# இன்று என் தந்தைக்குப் பிறந்த குழந்தை ஆணா? பெண்ணா? சொல் பார்க்கலாம்..
என்ற அர்த்தமற்ற பிதற்றல் கேள்விகள் போன்றதுதான் படைத்தவனைப் படைத்தது யார்? என்ற கேள்வி.
"பகுத்தறிவாளர்கள்" அல்லது "முற்போக்காளர்கள்" என்று தங்களுக்குத் தாங்களே பட்டம் சூட்டிக்கொண்டு அர்த்தமற்ற கேள்விகள் கேட்டால் பாமரர்கள் குழம்பிப் போய் விடுகிறார்கள். ஆனால் உண்மையான பகுத்தறிவாளர்கள் இந்தக் கேள்வியின் முட்டாள்தனத்தை அடையாளம் கண்டு கொள்வார்கள்.

பகுத்தறிவு பூர்வமாகவும் நீங்கள் யோசித்துப் பாருங்கள்..
ஒன்று இன்னொன்றைப் படைத்தது, அது இன்னொன்றைப் படைத்தது என்று அடுக்குவோமானால் இந்த படைப்பு சங்கிலி ஓர் இடத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் மட்டுமே படைப்புகள் உருவாக வாய்ப்பு உள்ளது. இங்கு நம் கண் முன்னே இம்மாபெரும் பிரபஞ்சம் உருவாகி இயங்கிக் கொண்டு இருப்பதால் அந்த படைப்பு சங்கிலி ஒரு புள்ளியில் துவங்கியிருக்க வேண்டும் என்பது பாமரனுக்கும் புரியும் லாஜிக்.. ஆக, அந்த மூலசக்தியின் உள்ளமை என்பது மிகத் தெளிவான ஒன்று! அதை அறியாமைத் தனமான கேள்விகள் கேட்பதன் மூலம் மறுக்க முடியாது என்பதும் தெளிவு!
அந்த மூல சக்தியையே-அல்லது பேராற்றலையே கடவுள் என்கிறார்கள் ஆத்திகர்கள். இதைத் தொடர்ந்து அந்த மூலத்தை - அதன் தன்மைகளை - பகுத்தறிவுபூர்வமாக ஆராயும்போது அது கடவுளா இல்லை வேறு எதுவுமா என்பது நமக்கு தெரியவரும்.

அந்த மூலப் பேராற்றல் எப்படிப்பட்டது?
இனி அந்த மூலத்தை x என்று வைத்துக் கொள்வோம். அந்த x ன் குணாதிசயங்களை சற்று சிந்தித்துப்பாருங்கள்.
அ) அதுதான் அனைத்துக்கும் மூலம் என்பதால் அது ஒற்றை. (single)
ஆ) அது எதையும் சார்ந்தது அல்ல (independent), அது எதையாவது சார்ந்திருந்தால் அது x ஆகிவிடும் என்பதை கவனிக்கவும்.
இ) அது ஆதியும் அந்தமும்- ஆக்கமும் அழிவும்- இல்லாத ஒன்று. அதாவது x திடீரென தோன்றாத ஒன்று. 'தோன்றுதல்' என்பது இல்லாத ஒன்றே ஒன்று அது மட்டும்தான். எல்லாக்காலங்களிலும் நிலைநிற்கக் கூடியது.
ஈ) தன்னிகரற்றது, தனக்குவமை இல்லாதது.
உ) இவ்வுலகில் காணும் அனைத்து அறிவுக்கும் மூலம் அது என்பதால் அது சர்வஞானம் (omniscient) கொண்டது
ஊ) அனைத்து ஆற்றலுக்கும் மூலம் என்பதால் சர்வசக்தி (omnipotent) கொண்டது. ...
இன்னும் பல உள்ளன. விரிவஞ்சி சுருக்கிக்கொள்வோம்.
ஆக அந்த x என்பது ஆத்திகர்கள் கூறும் கடவுளுக்குத்தான் பொருந்தும் என்பது தெளிவான உண்மை! இங்கு x இன் இடத்தில் -- இயற்கை/ பதார்த்தம் என்றெல்லாம் சொல்லி - நீங்கள் வேறு எதைக் கற்பனை செய்தாலும் பொருந்துவதில்லை என்பதையும் பகுத்தறிவோடு ஆராய்வோர் அறியலாம்.
இதோ அந்த இறைவனின் தன்மைகளாக திருக்குர்ஆன் கூறுவதைப் பாருங்கள்:
சொல்வீராக: இறைவன் ஒருவனே, அவன் தேவைகள் அற்றவன் அவன் யாரையும் பெற்றேடுக்கவும் இல்லை. அவனையும் யாரும் பெற்றேடுக்கவும் இல்லை. அவனுக்கு நிகராக யாரும் எதுவும் இல்லை. (திருக்குர்ஆன் 112:1-4)

அறிவியல் உண்மைகளையே ஆராயுங்கள்:
இன்னும் இறைவனை ஏற்க மறுப்பவர்கள் இன்று அறிவியல் உறுதி செய்துள்ள தகவல்களை சற்று ஆராய்ந்தாலே அதுவும் இறைவனின் உள்ளமையை உணரவைக்கும் சான்றுகளாக விளங்குவதைப் பார்க்கலாம். உதாரணமாக பிரபஞ்சத்தின் ஆரம்ப நிலைபற்றி அறிவியல் கூறுவதை சற்று சிந்தியுங்கள். இந்த உண்மைகளும் திருக்குர்ஆனில் இறைவனால் கூறப்பட்டுள்ளன என்பதையும் கவனியுங்கள்:

பிரபஞ்சத்தின் ஆரம்ப நிலை:
இந்தப் பிரபஞ்சம் அனைத்தும் மிகமிகச்சிறியதொரு புள்ளியாக ஒரு நுண்ணிய கருவில் ஒடுங்கியிருந்தது. அந்தக் கரு ஒரு குறித்த கணத்தில் திடீரெனப் பிரமாண்டமாக வெடித்துச் சிதறியது. கோடானகோடி அணுகுண்டுகளை ஒன்றாய்ச் சேர்த்து வெடித்தது போல இருந்த அந்தப் பெருவெடிப்பைத்தான் 'பிக்பாங்க்' (Big bang) என்று குறிப்பிடுகிறார்கள். வெடித்த அடுத்த நொடியிலேயே அது பேரண்டமாக விரிவடைந்தது. 
= சத்தியமறுப்பாளர்கள் பார்க்கவில்லையா நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதை? (திருக்குர்ஆன் 21:30)

  மிகச் சிறியதொரு புள்ளி ஒருநொடிக்கும் குறைந்த நேரத்துக்குள் பேரண்டமாக விரிவடைந்தது. அந்த விரிவாக்கம் தொடர்ந்து முடுக்கப்பட்ட வேகத்தோடு நடைபெற்று வருகிறது என்பதையும் அறிவியல் நிரூபித்து நிற்கிறது.
 அதையே கருஞ்சக்தி (dark energy) என்றும் அந்த விரிவாக்கத்துக்கு எதிரான எதிர்சக்தியையே கரும்பொருள் (dark matter) என்றும் அறிவியல் பெயரிட்டு அழைக்கிறது. (அவை இன்னும் முழுமையாக அறிவியலால் அறியப்படாதவை என்பதால்தான் அந்தப் பெயர்கள்!)

கீழ்கண்ட வசனங்களில் இறைவன் இவ்வுண்மைகளை எடுத்துரைப்பதைப் பாருங்கள்:
= மேலும், நாம் வானத்தை (நம்) சக்தி கொண்டு அமைத்தோம்; நிச்சயமாக நாம் விரிவாக்கும்  ஆற்றலுடையவராவோம். (திருக்குர்ஆன் 51:47)

= நிச்சயமாக வானங்களும் பூமியும் அவை இரண்டும் விலகிவிடாதவாறு நிச்சயமாக அல்லாஹ்வே தடுத்துக் கொண்டிருக்கின்றான்; அவை இரண்டும் விலகுமாயின், அதற்குப் பிறகு வேறெவரும் அவ்விரண்டையும் தடுத்து நிறுத்தமுடியாது. நிச்சயமாக அவன் பொறுமையுடையவன்; மிக மன்னிப்பவன். (திருக்குர்ஆன் 35:41)

(அல்லாஹ் என்றால் ‘வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன்’ என்பது பொருள்)

 இல்லாமையில் இருந்து உள்ளமைக்கு வந்த ஆரம்பக் கரு!
அந்தக் கருவும் கூட அதற்குமுன் இல்லாமையில் இருந்தது என்பதும் இன்னும் ஆச்சரியத்தை உண்டாக்கக்கூடிய உண்மை! உருவான அந்தக் கருவின் நிலை பற்றி சிந்தித்துப்பாருங்கள்.. ஒரு மரத்தின் விதையில் அது தொடர்பான அனைத்து பாகங்களின் இயல்பும் மென்பொருளும் ஆற்றல்களும் உள்ளடக்கப் பட்டதன் காரணமாக மரமும் தொடர்ந்து பழங்களும் விதைகளும் உருவாகி அவற்றின் மூலம் இனப்பெருக்கமும் நடந்து கொண்டு வருகிறன என்பதை நாம் அறிகிறோம். அதுபோன்று இப்பிரபஞ்சத்தின் ஆரம்பக் கருவிற்குள்ளும் இந்தப் பிரபஞ்சத்தில் இன்று காணும் அனைத்து கூறுகளின் – பெரியதும் நுண்ணியதுமான அனைத்தின் - இயல்புகளும் இயங்கு விதிகளும் மென்பொருளும் எல்லாம் அந்த ஆரம்பக் கருவில் எழுதப்பட்டு இருக்கவேண்டும்.
 அக்கருவை இல்லாமையில் இருந்து தோன்றவைத்து அதிலிருந்து இன்று காணும் இப்பேரண்டத்தை உருவாக்கி பரிபாலித்து வரும் அந்த மாபெரும் சக்தியையே தமிழில் இறைவன் என்றும் அரபுமொழியில் அல்லாஹ் என்றும் அழைக்கிறோம். 
(நபியே!) உயர்வான உம் இறைவனுடைய திருப் பெயரைத் துதிப்பீராக! அவன் எத்தகையவன் எனில், அவன்தான் படைத்தான்; பொருத்தமாகவும் பக்குவமாகவும் அமைத்தான்; மேலும், அவனே (அவற்றுக்கு வேண்டிய அனைத்தையும்) அளவுபட நிர்ணயித்து (அவற்றைப் பெறுவதற்கும் இயங்குவதற்கும்) வழிகாட்டினான். (திருக்குர்ஆன் 87:1-3)
ஆம் அந்த இறைவனே அனைத்தையும் படைத்து பக்குவமாகப் பரிபாலித்து வருகிறான். ஒரு அற்ப துகள் மீது ஒட்டிக்கொண்டிருக்கும் இன்னொரு அற்ப துகள் போன்ற அற்ப மனிதர்கள் நாம். தம் நிலை இவ்வாறிருக்க,  தம் பார்வைக்கு எட்டினால்தான் அந்த இறைவனை ஏற்போம் என்று இறுமாந்து பகுத்தறிய மறுக்கும் கூட்டம் தனது அறியாமையை இறுதித் தீர்ப்பு நாள் அன்று உணரும். ஆனால் அப்போது அவர்கள் கொள்ளும் இறைநம்பிக்கை பயன் தராது. 
அப்படியல்ல; அவர்கள்அறிவால் அறிந்து கொள்ள இயலாததை அதன் விளக்கம் அவர்களுக்கு எட்டாத நிலையில்பொய்யெனக் கூறுகிறார்கள்; இவர்களுக்கு முன் இருந்தவர்களும் இவ்வாறே (தாங்கள் அறிந்து கொள்ள முடியாதவற்றை) பொய்ப்பித்தார்கள். ஆகவே அந்த அநியாயக்காரர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதை (நபியே!) நீர் நோக்குவீராக. (திருக்குர்ஆன் 10:39)
================== 
இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக