ஏதேனும் ஒரு இயங்கும் பொருளை – உதாரணமாக
கடிகாரம், ஸ்கூட்டர், கால்குலேட்டர் – காணும்போது நமது பகுத்தறிவு என்ன சொல்கிறது?
இவையெல்லாம் திட்டமிடுதலும் வடிவமைத்தலும்
உருவாக்கியவனும் இல்லாமல் உருவாக
முடியாது என்றும் இவை இயங்க தொடர்ச்சியான மின்சாரம் போன்ற இயங்கு சக்தி தேவை
என்பதையும் உறுதியாகச் சொல்லும். ஏற்கெனவே கிடைக்கக் கூடிய பொருட்களை சிதைத்து
அல்லது உருமாற்றி அவற்றை ஒன்று சேர்த்து முறைப்படிப் பொருத்தி உருவாக்கப் படுபவையே
மேற்கண்ட பொருட்கள். இந்த தயாரிப்புக்களுக்குப் பின்னே என்னென்ன அறிவு சார்ந்த
நடவடிக்கைகள் உள்ளன என்பதை நீங்கள் உணர்ந்தால் ஒரு அறிவார்ந்த உருவாக்குபவன்
அல்லது குழு இல்லாமல் இவை உருவாக முடியாது என்றே உறுதியாகச் சொல்வீர்கள்.
ஆனால் அறவே இல்லாமையில் இருந்து அதிபக்குவம்
வாய்ந்த பொருட்கள் உருவாகி இயங்கி வரும் அற்புதத்தை மட்டும் தானாக உருவானவை என்று
அறிவுள்ள எவராலும் சொல்ல முடியுமா? உருவாகுவது மட்டுமல்ல, தானியங்கியாக அவை
தாங்களாகவே இனப்பெருக்கமும் செய்வதைக் கண்டால் இவற்றின் பின்னுள்ள நுண்ணறிவாளனை
சர்வ வல்லமை கொண்டவனை எவ்வாறு மறுக்க இயலும்?
=
இறைவன் எவ்வாறு முதன் முறையாகப் படைக்கின்றான்
என்பதையும்,
பிறகு எவ்வாறு அதை
மீண்டும் படைக்கின்றான் என்பதையும் அவர்கள் என்றுமே கவனித்ததில்லையா? (மீண்டும் படைப்பது எனும்) இந்தப் பணி திண்ணமாக, இறைவனுக்கு எளிதானதாகும். (திருக்குர்ஆன் 29:19)
= இவர்களிடம் கூறும்: பூமியில் சுற்றித் திரிந்து பாருங்கள்; எவ்வாறு அவன் முதன் முறையாகப் படைத்துள்ளான் என்று! பின்னர், இறைவன் இன்னொரு தடவையும் வாழ்வை நல்குவான். திண்ணமாக, இறைவன் ஒவ்வொரு பொருளின் மீதும் பேராற்றலுள்ளவன். (திருக்குர்ஆன் 29:20)
= இவர்களிடம் கூறும்: பூமியில் சுற்றித் திரிந்து பாருங்கள்; எவ்வாறு அவன் முதன் முறையாகப் படைத்துள்ளான் என்று! பின்னர், இறைவன் இன்னொரு தடவையும் வாழ்வை நல்குவான். திண்ணமாக, இறைவன் ஒவ்வொரு பொருளின் மீதும் பேராற்றலுள்ளவன். (திருக்குர்ஆன் 29:20)
உடல் என்ற பெரும் பாடம்
நம்
உடலையே உதாரணத்திற்கு எடுத்துக்கொள்ளுங்கள்... அவற்றுக்குள் இருக்கும்
உறுப்புக்களும் அவற்றின் பல்வேறு விதமான கட்டமைப்புகளும் அவற்றின்
ஒழுங்குப்படுத்தப்பட்ட இயக்கங்களும் ஒருபுறம் இருக்கட்டும். ஆனால் முதன்முறைப்
படைக்கும்போதே அவை தானியங்கியாகவே தங்கள் சந்ததிகளையும் வழிவழியாக உருவாக்கிக் கொள்ளும்
அற்புதத்தை என்னவென்று சொல்வது?
மனிதர்களும் விலங்குகளும் தாவரங்களும் இன்னபிற ஜீவராசிகளும் இன்னும்
நம் கண்களுக்குப் புலப்படுவதும் புலப்படாததுமான எண்ணிலாப் படைப்பினங்களும்
தங்களைத் தாங்களே இனவிருத்தி செய்து கொள்ளுதல் என்பது தற்செயலான ஒன்றா? எந்த ஒரு வடிவமைத்தலும் திட்டமிடுதலும் மென்பொருளும் இல்லாமல் இவை நடக்க
முடியுமா?
= நாமே உங்களைப் படைத்தோம். எனவே, (நாம் கூறுவதை) நீங்கள் உண்மையென்று நம்ப வேண்டாமா? (கர்ப்பப் பையில்) நீங்கள் செலுத்தும் இந்திரியத்தைக்
கவனித்தீர்களா? அதை நீங்கள் படைக்கிறீர்களா? அல்லது நாம் படைக்கின்றோமா?(திருக்குர்ஆன் 56:57-59)
= . நீங்கள் எப்படி இறைவனை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே
உயிரூட்டினான்;பின்பு அவன் உங்களை மரிக்கச்செய்வான்; மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான்; இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக் கொண்டுவரப்
படுவீர்கள். (திருக்குர்ஆன் 2:28)
விதை
எனும் அற்புதம்
= நீங்கள் விதைக்கின்ற இந்த விதையைப் பற்றி எப்போதாவது
நீங்கள் சிந்தித்ததுண்டா? இதன் மூலம் பயிர்களை
நீங்கள் விளைவிக்கின்றீர்களா? அல்லது நாம்
விளைவிக்கின்றோமா? நாம் நாடினால்
இவற்றைப் பதர்களாய் ஆக்கிவிட்டிருப்போம். அப்போது நீங்கள் பலவாறு
புலம்பிக்கொண்டிருப்பீர்கள் (திருக்குர்ஆன் 56:63)
ஒரு
விதையையோ கடுகையோ எள்ளையோ எடுத்து நோட்டமிடுங்கள். அதற்குள் அடங்கியுள்ள
மென்பொருளை – அதாவது
அதில் அடங்கியுள்ள மூலப்பொருட்களின் இயல்புகளை செயல்பாடுகளை நடத்தையை அல்லது
அதிலிருந்து முளைக்கப் போகும் தாவரத்தின் இலை, தண்டு,
காம்பு போன்றவற்றின் இயல்புகள், நிறங்கள்,
வடிவங்கள், போன்ற விவரங்கள் அல்லது எவை எவை
என்னென்ன விதத்தில் அளவையில் விகிதத்தில் இருக்கவேண்டும்
என்னும் விவரங்களை இன்னும் நாம் நம்மால் அறிய இயலாத ஏராளமான விவரங்களை கட்டளைகளை - முன்கூட்டியே எழுதியதும்
இயக்குவதும் கட்டுப்படுத்துவதும் யார்?
(நபியே!) உயர்வான உம் இறைவனுடைய திருப் பெயரைத் துதிப்பீராக! அவன் எத்தகையவன் எனில், அவன்தான் படைத்தான்; பொருத்தமாகவும் பக்குவமாகவும் அமைத்தான்; மேலும், அவனே (அவற்றுக்கு வேண்டிய அனைத்தையும்) அளவுபட நிர்ணயித்து
(அவற்றைப் பெறுவதற்கும் இயங்குவதற்கும்) வழிகாட்டினான். (திருக்குர்ஆன் 87:1-3)
பிரபஞ்சத்தின் ஆரம்ப விதை
இந்தப்
பிரபஞ்சம் அனைத்தும் மிகமிகச்சிறியதொரு
புள்ளியாக ஒரு கருவில் ஒடுங்கியிருந்தது. அந்தக் கரு ஒரு குறித்த கணத்தில் திடீரெனப் பிரமாண்டமாக வெடித்துச் சிதறியது. கோடானகோடி அணுகுண்டுகளை ஒன்றாய்ச் சேர்த்து வெடித்தது போல இருந்த
அந்தப் பெருவெடிப்பைத்தான் 'பிக்பாங்க்' (Bigbang) என்று குறிப்பிடுகிறார்கள். வெடித்த அடுத்த நொடியிலேயே
அது பேரண்டமாக விரிவடைந்தது. மிகச் சிறியதொரு புள்ளி ஒருநொடிக்கும் குறைந்த
நேரத்துக்குள் பேரண்டமாக விரிவடைந்தது. அந்த விரிவாக்கம் தொடர்ந்து முடுக்கப்பட்ட
வேகத்தோடு நடைபெற்று வருகிறது என்பதையும் அறிவியல் நிரூபித்து நிற்கிறது.
பெருவெடிப்பு பற்றிய குறிப்பை இறைவேதம் திருக்குர்ஆனில் காணலாம்:
= சத்தியமறுப்பாளர்கள் பார்க்கவில்லையா நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதை?... (திருக்குர்ஆன் 21:30)
பிரபஞ்ச விரிவு பற்றி படைத்தவன் கூற்றை நாம் இங்கு நினைவு கூருவோம்:
= மேலும், நாம் வானத்தை (நம்) சக்தி கொண்டு அமைத்தோம்; நிச்சயமாக நாம் விரிவாக்கும் ஆற்றலுடையவராவோம். (திருக்குர்ஆன் 51:47)
ஒரு மரத்தின் விதையில் அது தொடர்பான அனைத்து
பாகங்களின் இயல்பும் மென்பொருளும்
ஆற்றல்களும் உள்ளடக்கப் பட்டதன் காரணமாக மரமும் தொடர்ந்து பழங்களும்
விதைகளும் உருவாகி அவற்றின் மூலம் இனப்பெருக்கமும் நடந்து கொண்டு வருகிறன என்பதை
நாம் அறிகிறோம். இதே போல இந்தப் பிரபஞ்சத்தின் ஆரம்பக் கருவைப் பற்றி
சிந்தித்துப்பாருங்கள். அதற்குள்ளும் இந்தப் பிரபஞ்சத்தில் இன்று காணும் அனைத்து
கூறுகளின் – பெரியதும் நுண்ணியதுமான அனைத்தின் - இயல்புகளும் இயங்கு விதிகளும்
மென்பொருளும் எல்லாம் எழுதப்பட்டு இருக்கவேண்டும். அக்கருவை இல்லாமையில் இருந்து
தோன்றவைத்து அதிலிருந்து இன்று காணும் இப்பேரண்டத்தை உருவாக்கி பரிபாலித்து வரும்
அந்த மாபெரும் சக்தியையே தமிழில் இறைவன் என்றும் அரபுமொழியில் அல்லாஹ் என்றும் அழைக்கிறோம்.
= படைப்புகளின்
விதியை அல்லாஹ் வானங்க ளையும், பூமியையும்
படைப்பதற்கு ஐம்பது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதிவிட்டான் என்று நபி ஸல் அவர்கள்
கூறினார்கள்
அறிவிப்பு : அம்ரு இப்னு ஆஸ்(ரலி), முஸ்லிம், திர்மதி.
அற்பமானவனல்ல
இறைவன்
அந்த தன்னிகரற்ற சக்தி என்பது நம்மைப்போல் பலவீனமான ஒருமனிதனைப் போலவோ அல்லது
நம்மைவிடத் தாழ்ந்த ஒரு ஜீவியாகவோ அல்லது ஒரு வெறும் உணர்வற்ற ஒரு ஜடப்பொருளாகவோ இருக்க முடியாது
என்பதும் அதே பகுத்தறிவு
நமக்குச் சொல்லும் பாடமாகும்.
= சொல்வீராக: இறைவன் ஒருவனே, அவன் தேவைகள் அற்றவன் அவன்
யாரையும் பெற்றேடுக்கவும் இல்லை. அவனையும்
யாரும் பெற்றேடுக்கவும் இல்லை.அவனுக்கு நிகராக யாரும் எதுவும்
இல்லை. (திருக்குர்ஆன் 112:1-4)
----------------மறுக்க முடியுமா மறுமை வாழ்வை?
http://quranmalar.blogspot.com/2012/11/blog-post_6.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக