இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 29 செப்டம்பர், 2021

இன்றைய மக்களுக்கு மோட்சத்திற்கு வழிகாட்டி !


 படைத்தவன் மட்டுமே வணக்கத்துக்கு உரியவன்
படைப்பினங்கள் வணக்கத்துக்கு உரியவை அல்ல என்ற ஏக இறைக்கொள்கையை பூமியில் நிலைநாட்ட இறைவனால் இறுதியாக அனுப்பப்பட்டவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். முந்தைய இறைத்தூதர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட மக்களுக்காக அனுபப்பட்டார்கள். ஆனால் அவர்களைப் போலல்லாமல் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் அனைத்து உலக மக்களுக்காகவும் பொதுவாக அனுப்பபட்டவர் ஆவார்கள். இந்த உண்மையை பலவழிகளிலும் நாம் உறுதியாக அறிந்து கொள்ள முடியும்.

1.   இறுதி இறைத்தூதராக வந்திருப்பது.

2.   அவர் மூலம் அருளப்பட்ட வேதம் மூல மொழியிலேயே எந்தவிட சிதைவுக்கும் உட்படாமல் பாதுகாக்கப்படுவது. #ஒப்பிலா_இறைமறை_திருக்குர்ஆன் 

3.   இவரது போதனைகளும் நடைமுறை வாழ்க்கையும் அட்சரம்பிசகாமல் பாதுகாக்கப்பட்டு வருவதும் கோடிக்கணக்கான மக்களுக்கு முன்மாதிரியாக இருந்து வருவது. #அண்ணல்_நபி_அழகிய_முன்மாதிரி 

4.   முந்தைய இறைத்தூதர்கள் கடவுளாக்கப் பட்டதைப் போல் இவரை யாரும் வணங்காமல் இருப்பது.

என பல உண்மைகளும் அவர்தான் இன்று வாழும் மக்களுக்கான மோட்சத்துக்குரிய வழி என்பதை உணர்த்துகின்றன.

வணங்கப்படாத ஒரே தலைவர்

நபிகளார் உயிரோடு இருந்தபோது மக்கள் தன்னை வணங்குவதற்கோ தன்  காலில் விழுவதற்கோ சற்றும் அனுமதிக்கவில்லை. ஏன், தனக்காக எழுந்து நிற்பதையும் தன்னை அளவுக்குமீறி மக்கள் புகழ்வதையும் கூட தடைசெய்தார்கள்.

  சரி, தான் இறந்தபின்னர் மக்களை எப்படிக் கட்டுப்படுத்துவது? ஆம், அதையும் செய்துவிட்டுத்தான் சென்றார்கள் நபிகள் நாயகம்(ஸல்). இறந்தபின்னர் தான் வழிபாட்டுப் பொருள் ஆகிவிடக்கூடாது என்பதற்காக அதற்கான வாசல்கள் அனைத்தையும் இறுக அடைத்துவிட்டு மரணித்தார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே! இன்று அதற்கு நீங்களே சாட்சியாக இருந்துக்கொண்டு இருக்கிறீர்கள்! உலகில் இன்று கோடிக்கணக்கான மக்களால் உயிருக்குயிராக நேசிக்கப் படுபவர் நபிகள் நாயகம். ஆனாலும் இந்த பூமியின் மேற்பரப்பில் எங்குமே அவரது சிலையோ உருவப் படமோ காணக் கிடைப்பதில்லை! மிகப்பெரிய ஆச்சரியம் அல்லவா இது?

தனது மரணத் தருவாயிலும் மக்களை இதுகுறித்து எச்சரித்தார்கள்.

 நபி (ஸல்) அவர்கள் இறப்பதற்கு ஐந்து நாட்களுக்கு முன், "அறிந்து கொள்ளுங்கள்உங்களுக்கு முன்னிருந்த (சமுதாயத்த)வர்கள் தங்களுடைய நபிமார்கள் மற்றும் சான்றோர்களின் அடக்கத்தலங்களை வழிபாட்டுத் தலங்களாக ஆக்கிக் கொண்டார்கள்எச்சரிக்கைநீங்கள் அடக்கத் தலங்களை வழிபாட்டுத் தலங்களாக ஆக்கி விடாதீர்கள்அவ்வாறு செய்ய வேண்டாம் என்று உங்களுக்கு நான் தடை விதிக்கிறேன்'' என்று கூறுவதை நான் கேட்டேன்.

அறிவிப்பவர்ஜுன்தப் பின் அப்தில்லாஹ் (ரலி) நூல்முஸ்லிம்

 உயிரோடு இருக்கும்போது ஏகத்துவம் முழங்கிய முன்னாள் இறைத் தூதர்களையும் பிற்கால மக்கள் தெய்வங்களாக்கி வழிபடுவதை உலகம் கண்டது. புகழாசை காரணமாக உயிரோடிருக்கும்போதே தங்களுக்காக சிலைகளும் நினைவுச் சின்னங்களும் நிறுவிவிட்டுச் செல்லும் அரசியல் மற்றும் ஆன்மீகத் தலைவர்களையும் உலகம் கண்டது. ஆனால் உலகளாவிய மற்றும்  காலங்களைக் கடந்து மக்கள் உள்ளங்களில் ஆட்சி செலுத்திவரும் இத்தலைவர் தனித்துவம் மிக்கவரே.

இன்று வாழும் மக்களுக்கு மோட்சத்திற்கு உரிய வழியும் இவரே என்பதை இறைவன் கூறுவதைக் காணுங்கள்:

(நபியே!) நீர் கூறுவீராக: மனிதர்களே! மெய்யாக நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறேன்; வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சி அவனுக்கே உரியது, அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறுயாருமில்லை - அவனே உயிர்ப்பிக்கின்றான்; அவனே மரணம் அடையும்படியும் செய்கின்றான் - ஆகவே, அல்லாஹ்வின் மீதும், எழுதப்படிக்கத்தெரியா நபியாகிய அவன் தூதரின் மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள், அவரும் அல்லாஹ்வின் மீதும் அவன் வசனங்களின் மீதும் நம்பிக்கை கொள்கிறார் - அவரையே பின்பற்றுங்கள்; நீங்கள் நேர்வழி பெறுவீர்கள்.” (திருக்குர்ஆன் 7:158)

(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்பது பொருள்)

#இதயங்களை_வென்ற_இறைத்தூதர்
இறைத்தூதரோடு நமக்கென்ன தொடர்பு?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக