இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 21 செப்டம்பர், 2021

எரிப்பதா? புதைப்பதா? படைத்தவன் என்ன சொல்கிறான்?


மனித உடல் என்பது அனைத்து மனிதகுலத்துக்கும் ஒரே மாதிரியானது . ஒரே இயற்கையைக் கொண்டது.  மதங்களைப் பொறுத்தோ, நம்பிக்கைகளைப் பொறுத்தோ நாட்டைப் பொறுத்தோ அதன் இயற்கை மாறுபடுவதில்லை. 
மரணத்திற்குப் பின் மனித சடலத்தை எரித்தாலும் புதைத்தாலும் என்ன நடக்கும்? எது மனிதனுக்குப் பாதுகாப்பானது? என்பது அடிக்கடி விவாதப்பொருள் ஆவதை நாம் கண்டு வருகிறோம்.
இக்கேள்விகளை ஒட்டி  சுற்றுப்புறச் சூழல் மாசுபாடு கண்ணோட்டத்தில் பலரும் விவாதிப்பதை நாம் கண்டுள்ளோம். ஆனால் மரணித்த மனிதனுக்கு உயிர் போவதோடு உணர்வுகளும் போய்விடுகின்றன என்பது உண்மையானால் புதைத்தாலும் சரி, எரித்தாலும் சரி என்று நாம் அச்சமற்று இருக்கலாம். மாறாக உயிர் போவதோடு உணர்வுகளும் போவது இல்லை என்பது உண்மையானால் நாம் அச்சமற்று இருக்க முடியுமா? 

உதாரணமாக இங்கு தகன மேடையில் எரிக்கப்படும் உடல் உங்களுக்கு மிகமிக நெருங்கிய ஒருவருடையது என்றால் தைரியமாக எரிப்பீர்களா?

இக்கட்டான கேள்வி 


புதைப்பதா எரிப்பதா எது பாதுகாப்பானது என்ற கேள்விக்கு மரணம் அடைந்தவர்கள் யாரும் வந்து பதில் சொல்ல மாட்டார்கள் என்பது தெளிவு. ஆனால் நாம் ஒவ்வொருவரும் மரணத்தை சந்திக்க இருக்கிறோம் என்ற காரணத்தால் இதைப் பற்றி அறிந்து கொள்வது நமக்கும் நம்மைச் சார்ந்தவர்களுக்கும் கண்டிப்பாக நன்மை பயக்கும்.  

இந்தக் கேள்விகளுக்கு விடை காணும் முன்னர் மனிதர்களாகிய நம்மைப் பற்றிய சில உண்மைகளை நினைவு கூருதல் நலம். 

சில மறுக்க முடியாத உண்மைகள்:

= நாம் அல்லது மனிதன் என்பது வெற்று உடலோ அல்லது ஏதேனும் உறுப்போ அல்லது முகமோ அல்ல. மாறாக உடலும் உயிரும் இன்னும் நமக்குப் புரியாத சிலவும் சேர்ந்ததே நாம் அல்லது மனிதன் என்பது. உடல் என்பது நமது ஐம்புலன்களுக்கு தட்டுப்படுவது (sensible) ஆனால் உயிர் அப்படியல்ல. ஐம்புலன்களுக்கு தட்டுப்படும் தகவல்களை வைத்துக்கொண்டு பகுத்து அறியப்படுவது. 

= இம்மாபெரும் பிரபஞ்சத்தில் நாம் பரவிக்கிடக்கும் கோடானுகோடி பந்துகளில் ஒரு பந்தான பூமிப் பந்தின்மீது ஒட்டிக்கொண்டு இருக்கும் ஒரு நுண்ணிய துகள் போன்றவர்கள் நாம். நம்மில் ஓவ்வொருவரது ஆயுளும் நீர்க்குமிழி போல மிகமிக அற்பமானதே.

= இவற்றின் படைப்பிலோ இயக்கத்திலோ கட்டுப்பாட்டிலோ ஒரு துளியளவு கூட நம் பங்களிப்பு என்பது இல்லை.
= மட்டுமல்ல, நாம் நமது என்று சொல்லிக்கொள்ளும் நம் உடல் பொருள் ஆவி என இதில் எதுவுமே நமது அல்ல, இவற்றின் கட்டுப்பாடும் முழுமையாக நம் கைவசம் இல்லை.
= நாம் இங்கு வருவதும் போவதும் - அதாவது நம் பிறப்பும் இறப்பும் – நம் விருப்பப்படியோ திட்டப்படியோ  நடப்பது அல்ல. அனைத்தும் நம்மைப் படைத்துப் பரிபாலித்து வருபவனின் இயக்கத்திலேயே உள்ளன. 
= இனி மரணம் என்பது எவ்வாறு நிச்சயமான ஒன்றோ அதைப் போலவே அதைத் தொடரும் வாஸ்தவத்தை மனிதன் அனுபவிக்கப்போவதும் நிச்சயம் என்றே நாம் புரிய முடிகிறது. 
அந்த வகையில் மேற்படி கேள்விகளுக்கு மனித ஊகங்களைப் பின்பற்றுவதை விட நம்மைப் படைத்தவன் ஏதாவது இவ்விடயத்தில் வழிகாட்டி உள்ளானா என்று ஆராய்ந்து அதன்படி நடந்து கொள்வதே அறிவுடைமை!
அவன் நமக்கு எதைச் சொல்கிறானோ அதைப் பின்பற்றுவதே நல்லது என்று பகுத்தறிவு நமக்கு சொல்கிறது.  

இறைவேதமும் இறுதி இறைத் தூதரின் கூற்றுக்களும் 

மரணித்த மனிதர் உணர்வுடனேயே இருப்பார் என்பதை  இஸ்லாமிய ஆதாரங்களில் இருந்து அறிய முடிகிறது. மரணம் முடிவல்ல, மாறாக உண்மை வாழ்கையின் தொடக்கமே என்கிறது இஸ்லாம். 

1 . இக்குறுகிய வாழ்வு ஒரு பரீட்சையே!

 = உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன்மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்மேலும்அவன் (யாவரையும்) மிகைத்தவன்மிக மன்னிப்பவன்.(திருக்குர்ஆன்  67:2) 

2 . ஒவ்வொரு உயிரும் மரணத்தை சுவைத்தே தீரும் என்பதும்  மறுமையில் உயிர்த்தெழுதலும் விசாரணையும் சொர்க்கமும் நரகமும் உண்டு என்பது இறைவன் விதித்த விதியில் உள்ளது. 

= ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில்தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்; எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்; இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை. (திருக்குர்ஆன் 3:185)

“நீங்கள் எதை விட்டும் விரண்டு ஓடுகிறீர்களோ, அந்த மரணம் நிச்சயமாக உங்களை சந்திக்கும்; பிறகு, மறைவானதையும் பகிரங்கமானதையும் நன்கறிந்தவனிடம் நீங்கள் கொண்டு மீட்டப்படுவீர்கள் - அப்பால், அவன் நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி உங்களுக்கு அறிவிப்பான்” (என்று) (நபியே!) நீர் கூறுவீராக. (திருக்குர்ஆன் 62:8.)

3. மனிதன் மரணிக்கும் தருவாயில் நடக்கும் நிகழ்வுகள்  பற்றி திருக்குர்ஆன் :

= அவன் தன் அடியார்களை அடக்கியாளுபவனாக இருக்கிறான்; அன்றியும், உங்கள் மீது பாதுகாப்பாளர்களையும் அனுப்புகிறான்; உங்களில் ஒருவருக்கு மரணம் வந்துவிடுமானால், நம் வானவர்கள் அவர் ஆத்மாவை எடுத்துக் கொள்கிறார்கள் - அவர்கள் (தம் கடமையில்) தவறுவதில்லை. (திருக்குர்ஆன் 6:61)

= நிச்சயமாக எவர்கள் ‘எங்கள் இறைவன் அல்லாஹ்தான்’ என்று கூறி, (அதன் மீது) உறுதியாக நிலைத்து நின்றார்களோ, அவர்கள்பால் மலக்குகள் இறங்கி, ‘நீங்கள் பயப்படாதீர்கள்; கவலையும் பட வேண்டாம் – உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவர்க்கத்தைக் கொண்டு மகிழ்ச்சி பெறுங்கள்’ (எனக் கூறுவார்கள்)’
(அல் குர்ஆன் 41:30)

(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்பது பொருள்)

 = வானவர்கள் சத்திய மறுப்பாளர்களின்  உயிர்களைக் கைப்பற்றும் போது நீங்கள் பார்ப்பீர்களானால், வானவர்கள் அவர்களுடைய முகங்களிலும், முதுகுகளிலும் அடித்துக் கூறுவார்கள்: “எரிக்கும் நரக வேதனையைச் சுவையுங்கள்” என்று (திருக்குர்ஆன் 8:50)

4. மரணித்த உடலில் உணர்வுகள் இருக்கும் என்பதை கீழ்கண்ட நபிவழி செய்திகள் மூலமாக அறிகிறோம்:

“ஓர் அடியானது உடலைக் கப்ரில் (சமாதியில்) அடக்கம் செய்துவிட்டு, அவனுடைய தோழர்கள் திரும்பும்போது அவர்களின் செருப்பின் ஓசையை அந்த மய்யித் (மரணித்த நபர்)  செவியேற்கும். அதற்குள் இரண்டு வானவர்கள் அவனிடம் வந்து அவனை எழுப்பி உட்கார வைத்து, ‘முஹம்மத் என்பவரைப் பற்றி நீ என்ன கருதிக் கொண்டிருந்தாய்?’ எனக் கேட்பர். அதற்கவன், ‘அவர் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாவார் என நான் சாட்சி கூறுகிறேன்’ என்பான். பிறகு ‘(நீ கெட்டவனாக இருந்திருந்தால் நரகத்தில் உனக்கு கிடைக்கவிருந்த) தங்குமிடத்தைப் பார்! (நீ நல்லவனாக இருப்பதால்) அல்லாஹ் அதற்குப் பதிலாக உனக்குச் சொர்க்கத்தில் தங்குமிடத்தை ஏற்படுத்தியுள்ளான்’ என்று அவனிடம் கூறப்பட்டதும் அவன் அவ்விரண்டையும் ஒரே நேரத்தில் காண்பான். மரணித்தவன் சத்திய மறுப்பாளனாகவோ  நயவஞ்சகனாகவோ இருந்தால் கேள்வி கேட்கப்பட்டதும், ‘எனக்குத் தெரியாது; மக்கள் சொல்வதையே நானும் சொல்லிக் கொண்டிருந்தேன்’ என்பான். அப்போது அவனிடம் ‘நீயாக எதையும் அறிந்ததுமில்லை; (குர்ஆனை) ஓதி(விளங்கி)யதுமில்லை என்று கூறப்படும். பிறகு இரும்பாலான சுத்தியால் அவனுடைய இரண்டு காதுகளுக்குமிடையே (பிடரியில்) ஓர் அடி கொடுக்கப்படும். அப்போது மனிதர்ளையும் ஜின்களையும் தவிர மற்ற அனைத்தும் செவியேற்குமளவுக்கு அவன் கதறுவான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் – அறிவிப்பவர் அனஸ் (ரலி) (நூல்கள் – புகாரி 1338, 1374. முஸ்லிம் 5505. நஸயீ, அபூதாவூத், அஹ்மத்)

= இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘இறந்தவரின் உடல் (எடுத்து செல்ல தயாராக) வைக்கப்பட்டு அதை ஆண்கள் தங்கள் தோள்களில் தூக்கிச் செல்லும் போது, அந்த பிரேதம் நல்லறங்கள் புரிந்ததாக இருக்குமானால் என்னை விரைந்து கொண்டு செல்லுங்கள்: என்னை விரைந்து கொண்டு செல்லுங்கள்: என்று கூறும். அது நல்லறங்கள் புரியாததாக இருக்குமானால் கை சேதமே! என்னை எங்கு கொண்டு செல்கின்றீhகள்! என்று கூறும். இவ்வாறு கூறும் சப்தத்தை மனிதர்களைத் தவிர அனைத்தும் செவியுறும். மனிதன் அதைச் செவியுற்றால் மயங்கி விழுந்து விடுவான் ‘.
(அபூ ஸயிதுல் குத்ரி (ரலி) புகாரி: 1380)

5. மரணித்த சடலத்தை மற்றவர்கள் எவ்வாறு கையாள வேண்டும் என்பதைக் குறித்த இஸ்லாமிய அறிவுறுத்தல்களில் இருந்தும் மரணித்த பின் உணர்வுகள் தொடர்கின்றன என்பதை அறியலாம். உயிருடன் இருப்பவர்களின் அங்கங்களை சிதைப்பதை இஸ்லாம் தடுப்பது போன்று மரணித்தவர்களின் உடல்களை சிதைப்பதை இஸ்லாம் தடுக்கிறது. பிரேத உடலை பிறர் அருவருப்பாகவும் கண்ணியக் குறைவுடனும் பாவிப்பது போலல்லாமல் முஸ்லிம்கள் அதை கண்ணியமாகவும் அமானிதமாகவும் கையாள வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது.

= மரணித்தவர்களை உயிருடன் உள்ளவர்களை குளிப்பாட்டி சுத்தம் செய்வது போல சுத்தம் செய்த பின்னரே அடக்கம் செய்யவேண்டும் என்பதை இஸ்லாம் கடமையாக்கி உள்ளது.

= மரணித்த உடலை தாமதியாமல் விரைவாக அடக்கம் செய்ய வேண்டும் என்பதையும் இஸ்லாம் வலியுறுத்தியுள்ளது.

= குளிப்பாட்டும் போதும் ஜனாஸா தொடர்பான எல்லா செயற்பாடுகளிலும் நிதானமும் மென்மைப் போக்கும் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

=  'உங்களில் ஒருவர் ஜனாஸாவை(மரணித்த உடலை)க் கண்டால் அதனுடன் அவர் நடப்பவராக இல்லையென்றால் அது கடக்கும் வரை எழுந்து நிற்க வேண்டும்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி 1308 

= ‘மரணித்தவரின் எலும்பை முறிப்பது உயிருடன் இருப்பவரின் எலும்பை முறிப்பது போன்றதாகும்’ என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
(அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்கள்: இப்னுமாஜா: 1616, அபூதாவூத்: 3207, அஹ்மத்: 25356)

= "உங்களில் ஒருவர், ஒரு நெருப்புக்கங்கின் மீது அமர்ந்து அது அவரது ஆடையைக் கரித்து அவரது சருமம்வரை சென்றடைதல் என்பது, சமாதி மீது அவர் உட்காருவதைவிட அவருக்குச் சிறந்ததாகும்" என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அபூஹுரைரா(ரலி), முஸ்லிம்)

= சமாதியின் மீது அமர்ந்திருந்தவரைப்பார்த்து நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"கபுரிலிருந்து (சமாதி மேல் இருந்து) இறங்குங்கள்; கபுருவாசிக்கு தீங்கு செய்யாதீர்கள்." (அஹ்மத்)
= (போரில் கொல்லப்பட்ட உடல்களில்) கொள்ளையடிப்பதையும், ஒருவரின் அங்கங்களைச் சிதைப்பதையும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.
(அப்துல்லாஹ் இப்னு யஸீத்(ரலி), புகாரி)

புதைப்பதே  இறைவனின் பரிந்துரை:

உலகில் நடந்த முதல் கொலையை விவரிக்கும் அதே வேளையில், ஒருவர் இறந்து விட்டால் அவரைப் புதைக்க வேண்டும் என்ற முன் மாதிரியை  திருக்குர்ஆன் மனித குலத்திற்குக் கற்றுக் கொடுப்பதைக் காணலாம்.  அதாவது முதல் மனிதர் ஆதம் அவர்களின் புதல்வர்களில் ஒருவர் மற்றவரைக்  கொலை செய்தபின் கொலையுண்ட உடலை என்ன செய்ய வேண்டும் என்பதை அறியாமல் தவித்தபோது இறைவன் காகங்களை அனுப்பி சடலங்களை புதைக்கும் வழிமுறையைக் கற்றுக் கொடுத்ததை திருக்குர்ஆன் கூறுகிறது: 

தனது சகோதரரின் உடலை எவ்வாறு மறைப்பது என்று அவனுக்குக் காட்ட அல்லாஹ் ஒரு காகத்தை அனுப்பினான். அது பூமியைத் தோண்டியது. “அந்தோ! இந்தக் காகத்தைப் போல் இருப்பதற்குக் கூட என்னால் இயலவில்லையே! அவ்வாறு இருந்திருந்தால் என் சகோதரரின் உடலை மறைத்திருப்பேனே” எனக் கூறினான். கவலைப்பட்டவனாக ஆனான்.(அல்குர்ஆன் 5:31)

 


1 கருத்து: