இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 25 செப்டம்பர், 2021

'நீட்'டோடு நிற்பதல்ல வாழ்க்கை!


= "விடிய விடியப்  படிச்சான். இரண்டு முறை தோல்வி அடைந்த அச்சத்தில் இப்படி செய்து கொண்டான். பரீட்சைக்கு போக டிரஸ் எல்லாம் தேச்சி வெச்சிருந்தோம். ஊரெல்லாம் நடந்தது, இப்ப என் வீட்லேயும் நடக்கும்னு கனவுலயும் நினைக்கல" என கண்ணீர் விடுகிறார் தற்கொலை செய்து கொண்ட தனுஷின் தந்தை சிவக்குமார்.

= “எங்கள் அப்பா உணவகத்தில் பாத்திரம் கழுவும் வேலை செய்கிறார். அம்மா 100 நாள் வேலை திட்டத்திற்கு செல்கிறார். இப்படி தினக்கூலி சம்பளத்திற்கு வேலைக்கு சென்று கடுமையான சூழலில்தான் தங்கையை பெற்றோர் படிக்க வைத்தனர்" என்று அழுகிறார் தற்கொலை செய்து கொண்ட சௌந்தர்யாவின் இரண்டாவது அக்கா கோடீஸ்வரி.

 தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக நீட் தேர்வு காரணமாக தற்கொலைகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. அனிதா தற்கொலை தொடங்கி வரிசையாக ஒவ்வோர் ஆண்டும் மாணவர்கள் நீட் தேர்வு அச்சத்தில் பலியாகி வருவது தொடர்கதையாகி வருகிறது. நீட் தேர்வு நடைபெறும்போதும், நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும்போதும் தோல்வி பயம் மற்றும் குறைந்த மதிப்பெண்கள் காரணமாக இந்த தற்கொலைகள் நிகழ்கின்றன. (ஆதாரம்: சமீபத்திய BBC தமிழ் செய்திகள்)

= இவைபோக இந்தியாவில் நாள் ஒன்றுக்கு சுமார் 28 மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதாக புள்ளி விவரங்கள் சொல்கின்றன.
மாணவர்களின் தற்கொலைகளுக்கு என்ன காரணம்?


கஷ்டப்பட்டு இரவு பகலாக உழைத்து சம்பாதிக்கிறார்கள் பெற்றோர்கள். தங்கள் பிள்ளைகளை வளர்க்க படாதபாடு படுகிறார்கள். தங்கள் பிள்ளைகள் முன்னேறவேண்டும் என்பதற்காக கடன் வாங்கியாவது பள்ளி மற்றும் கல்லூரிக் கட்டணங்களைக் கட்டி  அவர்களைப் படிக்க வைக்கிறார்கள். ஆனால் இறுதியில் தேர்வு முடிவுகள் வெளியாகும் போது .... இடிபோன்ற நிகழ்வுகள்! ... யாரால்தான் தாங்கிக்கொள்ள முடியும்? அதுவரை வளர்த்த ஆசைகளில் எதிர்பார்ப்புகளில் மண்ணை வாரிப்போட்டது போன்று பிள்ளைகளின் தற்கொலைகள்! .... என்ன காரணம்? .... சிலருக்கு தேர்வில் தோல்வியால் அவமானம், சிலருக்கு வகுப்பில் மற்ற மாணவனைவிட மதிப்பெண் குறைந்ததால் அவமானம்! சிலருக்கு ஒரு பாடத்தில் ஒரு மதிப்பெண் குறைந்ததால் அவமானம்! ... இப்படி பல காரணங்கள்! வாழ்வென்றால் அவ்வளவுதானா? அவ்வளவு அலட்சியம்!! அவ்வளவு காலம் இராப்பகலாக படித்ததும் பாடுபட்டதும் இந்த ஒரு முடிவிற்காகவா? படித்தும் அவர்களுக்கு அறிவு என்பது ஏன் வளராமல் போயிற்று? என்ன காரணம்?

இங்கு அடிப்படைக் காரணம் இதுதான்..

வாழ்க்கை என்றால் என்ன என்பதைப்பற்றிய அடிப்படைப் பாடத்தை அவர்களுக்கு யாரும் கற்பிக்கவில்லை என்பதுதான்!

பிள்ளைகளுக்கும் சரி, பெற்றோருக்கும் சரி, ஏன் வாழ்கிறோம் எதற்காக வாழ்கிறோம் என்ற உணர்வே இல்லை. அதை அறிய அவர்கள் முற்பட்டதும் இல்லை. கல்விக்கூடங்களுக்கும் அரசாங்கங்களுக்கும் அதுபற்றிய கவலைகள் சிறிதும் இல்லை! ... தங்கள் வருமானம் பாதிக்கப் படாதவரை.... தங்கள் ஆட்சிக் கட்டில் ஆட்டம் காணாதவரை ... அவர்கள் கவலைப்படப் போவதும் இல்லை!

இனியாவது திருந்த முயற்சிப்போம்!

 உங்கள் பிள்ளைகள் அல்லது வேண்டியவர்களுக்கு இது போன்றவை நேராமல் இருக்கவேண்டுமானால் வாருங்கள் இதைத் தொடர்ந்து படியுங்கள். இங்கு சொல்லப்படும் கருத்துக்கள் இறைவன் அனுப்பிய இறுதி வேதம் திருக்குர்ஆன் மற்றும் இறுதி இறைத்தூதர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் கூற்றுக்களை ஆதாரமாகக்கொண்டு சொல்லப்படுபவை. இவற்றை அனைத்து மதத்தைச் சார்ந்த அன்பர்களும் தங்கள் பிள்ளைகளை நெறிப்படுத்த கையாளலாம். இவற்றுக்குப் பகரமான மாற்றுத் திட்டம் கைவசம் இல்லாத பட்சத்தில் தங்கள் பிள்ளைகளின் நலனில் அக்கறை கொண்ட நாத்திகர்களும் இன்ன பிற கொள்கைவாதிகளும் இதைப் பற்றி ஆராயலாம்!

 கல்வி கற்பிப்பதோடு நாம் அடிப்படையாக இவ்வுலகைப் பற்றிய உண்மைகளையும் குழந்தைகளுக்கு உரிய பருவத்தில் உணர்த்தவேண்டும். தவறினால் மேற்கூறப்பட்ட விளைவுகள் ஏற்படுவது இயல்பே! மேலும் கல்வி கற்பிப்பதன் முக்கிய நோக்கம் அவர்களை விஞ்ஞானிகளாக ஆக்குவது என்பதை விட பண்புள்ள மனிதர்களாக ஆக்குவதுதான் என்பதை அவர்களுக்கு உணர்த்தவேண்டும்.

= மனித வாழ்வின் உண்மை நிலை

 மனித வாழ்வு இன்பம்துன்பம் என்ற இரு பகுதிகளையும் உள்ளடக்கியுள்ளது. இரு பகுதிகளும் மாறி மாறி வருவது பிரபஞ்ச விதியும் கூட. மனிதன் இயல்பிலேயே  இன்பத்தை விரும்புகிறான். துன்பம் கஷ்டம் பிரச்சினைகளை  வெறுக்கிறான். எனினும் பிரபஞ்ச விதிக்கு அவன் உட்பட்டே வாழவேண்டியிருக்கிறது.

 இன்று வாழும் வாழ்வு மட்டுமே வாழ்வு, இதுதான் எல்லாமே, இதற்குப் பிறகு ஒன்றும் இல்லை மனித வாழ்க்கைக்குப் பின்னால் எந்த நோக்கமும் இல்லை என்ற குறுகிய மனப்பான்மையில் வாழ்வோருக்கு பிரச்சினைகளை எதிர்கொள்ளும் துணிவு இருப்பதில்லை. அப்படிப்பட்டவர்கள் பிரச்சினைகளும் துன்பங்களும் தன்னை சூழ்ந்து கொள்கின்றபோது மனமுடைந்து போகிறார்கள். தற்கொலைகளில் தஞ்சம் புகுகிறார்கள்.

 ஆனால் இன்று நாம் வாழும் பூமி என்பது பரந்துவிரிந்த பிரபஞ்சத்தில் ஒரு சிறு துகள் போன்றது. இதன்மேல் ஒரு உயர்ந்த நோக்கத்துக்காகத்தான் படைக்கப்பட்டிருக்கிறோம் என்று விரிவாக சிந்திப்பவர்கள் இறைவன் கூறும் உண்மைகளைக் கண்டறிகிறார்கள். சோதனைகளும் துன்பங்களும் இவ்வாழ்வின் இன்றியமையாத பகுதிகளே என்பதை உணர்கிறார்கள் அதனால் தன்னம்பிக்கையோடு வாழ்வை எதிர்கொள்கிறார்கள்.

 = வாழ்வது எதற்காக?

இவ்விஷயத்தில் பலரும் பல கருத்துக்களைக் கொண்டிருந்தாலும் பலவாறு ஊகித்தாலும் இவ்வுலகத்தைப் படைத்த இறைவன் என்ன கூறுகிறானோ அதுமட்டுமே உண்மை, மற்றவை அனைத்தும் ஊகங்களே! அவன் கூறுவது என்னவென்றால், மரணம் என்பது வாழ்வின் முடிவல்ல, மாறாக ஒரு புதிய வாழ்வின் துவக்கமே என்பதே! தக்க காரணத்துடனேயே அன்றி இவ்வுலகைப் படைக்கவில்லை என்கிறான் இறைவன்.

 = “நாம் உங்களைப் படைத்ததெல்லாம் வீணுக்காக என்றும், நீங்கள் நம்மிடத்தில் நிச்சயமாக மீட்டப்பட மாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டீர்களா?”  (திருக்குர்ஆன்23:115) 

= ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது; பரீட்சைக்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர்,நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள். (திருக்குர்ஆன் 21:35)

அதாவது மறுமை என்ற முடிவில்லாத வாழ்க்கையில் நமது இருப்பிடம் சொர்க்கமா அல்லது நரகமா என்பதைத் தீர்மானிக்கும் ஒரு பரீட்சைக் கூடமே இந்த தற்காலிக இவ்வுலகம் என்பதை நாம் முதன்மையாக அறிந்து கொள்ள வேண்டும். இவ்வாழ்வில் இறைவன் அளித்த அருட்கொடைகளுக்கு நன்றிகூறும் முகமாக அவனுக்குக் கீழ்படிகிறோமா இல்லையா என்பதே இங்கு பரீட்சிக்கப்படுகின்றது. இப்பரீட்சையில் கீழ்படிபவர்களுக்குப் பரிசாக சொர்க்கமும் கீழ்ப்படியாமல் தான்தோன்றித்தனமாக வாழ்ந்தோருக்கு நரகமும் மறுமை வாழ்வில் வழங்கப்பட உள்ளன. 

 மறுமை என்ற நிரந்தர வாழ்க்கை: 

இவ்வுலகம் ஒருநாள் முழுக்க முழுக்க அழிக்கப்பட்டு பிறகு அனைத்து மனிதர்களும் இறுதித் தீர்ப்புநாள் அன்று மீணடும் உயிர்கொடுத்து எழுப்பப்பட்டு விசாரிக்கப்படுவர். அன்று முதல்தான் நமது நிரந்தர வாழ்வு ஆரம்பமாகிறது. பாவிகளுக்கு நரகவாழ்வும்  புண்ணியவான்களுக்கு சொர்க்க வாழ்வும் ஆரம்பிக்க உள்ளன.

= ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்;. எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ. அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்;இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை. (திருக்குர்ஆன் 3:185)

இந்த தற்காலிக உலகம் என்பது ஒரு பரீட்சைக் கூடம் என்பதால் இங்கு இன்பமும் துன்பமும் மாறிமாறி வரும், சோதனைகள் இங்கு சகஜமே என்று கூறுகிறான் இறைவன்:

நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும்,  பசியாலும்,  பொருள்கள்,  உயிர்கள்,விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்;. ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக! (திருக்குர்ஆன்   2:155)

ஆம், இங்கு சந்திக்கும் சோதனைகளுக்குப் பகரமாக இறைவனிடம் வெகுமதி காத்திருக்கிறது என்ற உணர்வும் பொறுமை மீறி இறைவன் தடுத்த காரியங்களில் ஈடுபாட்டால் இறைவனின் தண்டனைக்கு ஆளாக நேரிடும் என்ற உணர்வும் மனித மனங்களில் விதைக்கப்பட்டால் அந்த மனங்கள் தோல்விகளைக் கண்டோ துன்ப துயரங்களைக் கண்டோ சோர்ந்து போவதும் இல்லை, தற்கொலை போன்ற இறைவன் தடுத்த வழிகளை நாடுவதும் இல்லை. மாறாக இந்தப் பரீட்சையை முடித்துக்கொண்டு நம் இறைவனிடம் திரும்ப இருக்கிறோம் என்ற உணர்வில் அவற்றை பொறுமையோடு எதிர்கொள்வார்கள். தன்னம்பிக்கையோடு வாழ்வைத் தொடர்வார்கள்.

 = (பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, 'நிச்சயமாக நாம் இறைவனுக்கே உரியவர்கள்;  நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்'என்று கூறுவார்கள். இத்தகையோர் மீது தான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும்நற்கிருபையும் உண்டாகின்றனஇன்னும் இவர்கள் தாம் நேர்வழியை அடைந்தவர்கள். (திருக்குர்ஆன்  2:156,157)

இவ்வுலக இன்பங்களைவிட பன்மடங்கு மதிப்புள்ள சொர்க்கச் சோலைகளும் பூங்காவனங்களும் தெவிட்டாத உணவும் பானங்களும் தேனாறும் பாலாறும் அங்கே காத்திருக்கின்றன. பிணியும் மூப்பும் சோர்வும் இல்லாத இளமை வாய்ந்த உடலோடும் நல்லோரின் சகவாசத்தொடும் அமைதி மாறா சூழலோடும் அனுபவிக்க இருக்கின்ற சொர்கத்து இன்பங்கள் ஏராளம் ஏராளம்! இவையெல்லாம் வெறும் கற்பனைகள் அல்ல, மாறாக இவற்றை பகுத்தறிவு பூர்வமாக எடுத்துரைத்து நம்பிக்கை ஊட்டுகிறது இறைவனின் திருமறை.

மறுமையில் மீண்டும் உயிர்பிக்கப்பட்டு மனிதன் சொர்க்கத்திற்கோ அல்லது நரகத்திற்கோ அனுப்பப் படுவான் எனும் உண்மையை மறுப்போரைப் பார்த்து இறைவன் திருக்குர்ஆனில் பின்வருமாறு கேட்கிறான்:

வானங்களையும், பூமியையும் படைத்து அவற்றின் படைப்பால் எவ்வித சோர்வுமின்றி இருக்கின்றானே அல்லாஹ் அவன் நிச்சயமாக மரித்தோரை உயிர்ப்பிக்கும் ஆற்றலுடையவன்; ஆம்! நிச்சயமாக அவன் எல்லாப் பொருள்கள் மீதும் பேராற்றலுடையவன் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? (திருக்குர்ஆன்  46:33) 

================ 

இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக