இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 21 ஏப்ரல், 2016

மரணம் நெருங்கும்போது நிதானம்


மரணத்தின் அறிகுறிகளைக் காணும் சிலர் சீக்கிரம் நாம் மரணித்து விட்டால் நல்லது என்று சில வேளை நினைப்பார்கள். முதுமையின் காரணமாக மற்றவர்களுக்குப் பாரமாகி,  சொந்த பந்தங்கள் கூட அலட்சியப்படுத்துவதைக் காணும் போது ஏன் இவ்வுலகில் நாம் வாழ வேண்டும்? என்று எண்ணுவார்கள். இறைவா! சீக்கிரம் என்னை மரணிக்கச் செய்து விடு!  என்று பிரார்த்தனையும்  செய்து விடுவார்கள்.
வாழ்க்கை எனும் பரீட்சை
ஆனால் ஒரு இறைவிசுவாசியைப் பொறுத்தவரை இந்த தற்காலிக வாழ்க்கை என்பது ஒரு பரீட்சை எனவும் இவ்வுலகம் அதற்கான பரீட்சைக்கூடம் என்பதையும் எப்போதும் மறந்துவிடக்கூடாது. இறைவன் தன் திருமறையில் ஒரு விசுவாசி எப்படி இருக்கவேண்டும் என்பதை இவ்வாறு கூறுகிறான்:
2:155நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும்பசியாலும்பொருள்கள்உயிர்கள்விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக!
2:156(பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்” என்று கூறுவார்கள்.
2:157இத்தகையோர் மீது தான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும்நற்கிருபையும் உண்டாகின்றனஇன்னும் இவர்கள் தாம் நேர் வழியை அடைந்தவர்கள்.

 (அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள்)

மரணத்தை இறைவனிடம் வேண்டக்கூடாது

எந்த நிலையிலும் யாரும் மரணத்தை இறைவனிடம் கேட்கவும் கூடாது மனதால் அதற்கு ஆசைப்படவும் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்.
= தனக்கு ஏற்பட்ட துன்பத்தின் காரணமாக உங்களில் யாரும் மரணிக்க ஆசைப்படக் கூடாது. அப்படிச் செய்ய வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டால் இறைவா! நான் வாழ்வது எனக்குச் சிறந்ததாக இருக்கும் வரை என்னை வாழ வை! நான் மரணிப்பது எனக்கு நல்லதாக இருந்தால் என்னை மரணிக்கச் செய் என்று கூறட்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி) நூல்: புகாரி 5671, 6351
இதற்கான காரணத்தையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாக விளக்கியுள்ளார்கள்.
= ஒரு மனிதருக்கு (மறுமையில்) நன்மை செய்ய இறைவன் நாடினால் இவ்வுலகிலேயே அவருக்குரிய தண்டனையை முன்கூட்டியே அளித்து விடுவான். ஒரு மனிதருக்கு (மறுமையில்) அல்லாஹ் தீமையை நாடினால் அவருடைய பாவங்களை நிலுவையில் வைத்து நியாயத் தீர்ப்பு நாளில் கணக்குத் தீர்ப்பான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல்: திர்மிதீ 2319
= இறை நம்பிக்கையுடைய ஆணும் இறை நம்பிக்கையுடைய பெண்ணும் தமது விஷயத்திலும், தமது பிள்ளைகள் விஷயத்திலும், தமது செல்வங்களிலும் தொடர்ந்து துன்பங்களுக்கு உட்படுத்தப்படுவார்கள். இறைவனைச் சந்திக்கும் நாளில் அவர்கள் மீது எந்தக் குற்றமும் மீதமிருக்காது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்கள்: திர்மிதீ 2323, அஹ்மத் 7521

எனவே நோய் நொடி, முதுமை, குடும்பத்தாரின் அலட்சியம், உடல் உபாதை மற்றும் மன உளைச்சலின் காரணமாக நாம் மரணத்திற்கு ஆசைப்படக் கூடாது. மறுமையில் நமக்குக் கிடைக்கவுள்ள தண்டனையைக் குறைக்க இறைவன் நமக்குத் தந்துள்ள பரிகாரம் என்று துன்பங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக