இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 23 ஏப்ரல், 2016

நாம் திருந்த நாடும் திருந்தும்!


‘பாருக்குள்ளே நல்ல நாடு பாரத நாடு’ என்பது கவிதை வரிகளானாலும் அது உண்மையே என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்தே இருக்கிறோம். பல்வேறு மதங்களும், மொழிகளும், இனங்களும் கலந்துறவாடும் இந்நாடு அவ்வப்போது சுயநல அரசியல் சக்திகளால் கலவர பூமியாக்கப் பட்டாலும் காலப்போக்கில் அனைத்தையும் மறந்து நாம் மனிதர்கள் என்ற அடிப்படையில் இணைந்து வாழும் விந்தையை பாரில் எங்குமே காண முடியாது. கருத்து வேறுபாடுகளும் மொழிகளும், நிறங்களும் நம்மைப் பிரித்தாலும் நாட்டின் நலன் என்பது நாம் அனைவரும் நாடும் ஒன்று.
இறைவன் நமக்கு வழங்கியுள்ள அருட்கொடைகளான மழை, காற்று, விளைச்சல்கள் போன்றவற்றை அனுபவிக்கும்போது நமது பேதங்கள் குறுக்கே நிற்பதில்லை. அதே போல இயற்க்கை சீற்றங்களும், ஆபத்துக்களும் நம்மைத் தாக்கும்போது நமது பேதங்கள் மறந்தே அவற்றை எதிர்கொள்ளவும் அவற்றில் இருந்து தற்காத்துக் கொள்ளவும் செய்கிறோம். அவ்வாறே இன்று நாட்டைத் தாக்கி நிற்கும் அரசியல் சூதாட்டத்தையும் எதிர்கொள்ளவேண்டிய முறையில் எதிர்கொண்டு ஆவன செய்யாவிட்டால் நாம் அனைவருமே அழிவுக்கு உள்ளாவோம் என்பது உறுதி. அந்த வகையில் நம் நாட்டை பீடித்துள்ள இந்த நோயில் இருந்து காப்பாற்ற ஒரு அருமையான வழிமுறையை இஸ்லாம் முன்வைக்கிறது.
சீர்திருத்தத்தின் அடிப்படை
அதைப் பகிர்ந்து கொள்ளும் முன்னால் நாம் முன்வைக்கும் சீர்திருத்த திட்டத்தின் அடிப்படை என்ன என்பதை முதலில் விளக்குவோம்.
நாம் அன்றாட வாழ்வில் மிக்ஸி, துணி துவைக்கும் இயந்திரம், ஸ்கூட்டர் போன்ற பல கருவிகளையும் உபகரணங்களையும் வாகனங்களையும் பயன்படுத்துகிறோம். இவற்றை பக்குவமாக பழுதில்லாமல் நீண்ட காலம் பயன்படுத்த வேண்டுமானால் அவற்றை உண்டாக்கியவர்கள் நமக்கு வழங்கும் கையேட்டில் கூறியுள்ளபடியே பயன்படுத்த வேண்டும் என்பதையும் நன்றாக அறிவோம். பொருளை தயாரித்தவர்களுக்கே அவற்றின் நுணுக்கங்கள் நன்றாக தெரியும் என்பதாலேயே நாம் அவ்வாறு செய்கிறோம் அல்லவா? ஆனால் மிக்சி, ஸ்கூட்டர் இவற்றை விட பல்லாயிரம் மடங்கு நுணுக்கங்களை (complications) சுமந்து நடப்பவர்கள் நாம்! அவற்றை நாம் செய்யவும் இல்லை. உள்ளிருந்து கொண்டு இயக்குவதும் நாமல்ல! அப்படியிருக்க நம்மைப் படைத்தவனும் நம்மை பரிபாலித்து வருபவனும் ஆன இறைவன் இவற்றை எப்படி பயன்படுத்தவேண்டும் என்று கூறியிருக்க அப்படி பயன்படுத்துவதுதானே முறை?  
நாம் இவ்வுலகில் அமைதியாக வாழ நம்மைப் படைத்தவன் வழங்கிய வாழ்க்கைத் திட்டம்தான் இஸ்லாம் என்று அரபு மொழியில் அறியப்படுகிறது. இவ்வார்த்தைக்கு அமைதி என்றும் கீழ்படிதல் என்றும் இரண்டு பொருள்கள் உண்டு. இறைவனின் கட்டளைகளுக்கு கீழ்படிந்து வாழ்ந்தால் இவ்வுலகிலும் அமைதியைக் காண முடியும். மறுமையிலும் அமைதியை –மோட்சத்தை- அடைய முடியும் என்பது இஸ்லாம் முன்வைக்கும் தத்துவமாகும்.
இந்த சீரிய வாழ்க்கைத் திட்டம் தனிநபர் வாழ்விலும் குடும்ப வாழ்விலும் சமூக வாழ்விலும் ஏற்படுத்தும் சீர்திருத்தங்களை  இதைப் பின்பற்றுவோர் நன்றாக அறியவும் அனுபவிக்கவும் செய்கிறார்கள். இது இவ்வுலகைப் படைத்து பரிபாலிப்பவனான நம் இறைவன் தரும் வாழ்க்கைத் திட்டம் என்பதால் இதில் மனிதன் சந்திக்கக்கூடிய அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை நம்மால் காணமுடிகிறது.
திரண்டெழும் மக்கள் சக்தி
தனிமனிதனுக்குள் இஸ்லாம் ஏற்படுத்தும் மனமாற்றம் அவனை நல்லொழுக்கம் உள்ளவனாக ஆக்குவதோடு அவனை சமூகப் பொறுப்புள்ளவனாகவும் ஆக்குகிறது. அதன் காரணமாக நன்மைகளை ஏவவும் தீமைகளைத் தடுக்கவும் அவன் தயாராகிறான். சக மனிதன் சகோதரனே என்ற உணர்வும் இறையச்சமும் மறுமை மீது உள்ள நம்பிக்கையும் அவனை சமூகத்திற்காக தியாகங்கள் மேற்கொள்ளத் தூண்டுகின்றன. வெறும் நம்பிக்கையோடு நில்லாமல் ஐவேளைத் தொழுகைகளைக் கூட்டாக நிறைவேற்றுதல், ஜக்காத் என்ற ஏழைவரி போன்ற இஸ்லாமியக் கடமைகள் மனித சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் வலுவாக வளர்க்கின்றன. இவ்வாறு உருவெடுத்து வளரும் மக்கள் சக்திக்கு முன்னால் தீய சக்திகள் ஆட்டம்கண்டு அழிந்து போகின்றன. சமூகத்தில் மறுமலர்ச்சியும் உண்மையான சீர்திருத்தங்களும் உண்டாகின்றன. இனம், நிறம், மொழி, இடம் போன்ற தடைகளை மீறி உருவாகும் இந்த மனிதகுல ஒற்றுமை அகில உலகுக்கும் நன்மை பயக்கக்கூடிய ஒன்றாக மாறுகிறது.

வாருங்கள் நாம் மேலே பட்டியல் இட்டுள்ள குறைபாடுகளை இஸ்லாம் எவ்வாறு நீக்குகிறது என்பதைக் காண்போம்:

மேலே பட்டியலில் இடம்பெற்றுள்ளவையும் இன்னும் இடம்பெறாதவையும் ஆன அனைத்து குறைபாடுகளையும் நிவர்த்தி செய்ய முதன்மையாக இஸ்லாம் தனிமனித நல்லொழுக்கத்தை அடிப்படையாக்குகிறது. அதாவது ‘முதலில் உங்களை நீங்கள் சீர்திருத்திக் கொள்ளுங்கள். நாடு தானே சீர்திருந்தும்!’ என்பது இஸ்லாம் மனிதகுலத்துக்கு கற்பிக்கும் முதல் பாடமாகும். இறைதூதர்களை அவ்வப்போது இறைவன் அனுப்பி வந்ததன் நோக்கமும் இதுவேயாகும். தர்மத்தை பூமியில் நிலைநாட்ட வந்த அனைத்து இறைதூதர்களும் கடைப்பிடித்த வழிமுறை இதுவேயாகும். அந்த தூதர்கள் வரிசையில் இந்த பூமிக்கு இறுதியாக வந்த முஹம்மது நபி(ஸல்) அவர்கள் தனது வாழ்நாளில் இவ்வாறுதான் கொடூரர்களாக வாழ்ந்துகொண்டு இருந்த அரபு நாட்டு மக்களை பண்படுத்தி ஒழுக்க சீலர்களாக ஆக்கியதோடு மட்டுமல்லாமல் அந்த நாட்டில் வறுமை முற்றிலும் ஒழிந்த ஒரு வளமான பேரரசையும் நிறுவிக் காட்டினார்கள். அதோடு நில்லாமல் இறைவனுக்கு பதில் சொல்லியாக வேண்டும் என்ற பொறுப்புணர்வு மிக்க ஜனாதிபதிகள் பிற்காலத்தில் உருவாக வழிவகை செய்தார்கள். 

எத்தனைக் காலம்தான் ஏமாறுவோம் இந்த நாட்டிலே? http://quranmalar.blogspot.com/2016/04/blog-post_22.html

நாட்டின் அவல நிலைக்குக் காரணங்கள்  
http://quranmalar.blogspot.com/2016/04/blog-post_27.html

வெள்ளையன் வெளியேறவில்லை
 http://quranmalar.blogspot.com/2016/04/blog-post_92.html

தனிநபர் நல்லொழுக்கம் எவ்வாறு? 
http://quranmalar.blogspot.com/2016/04/blog-post_42.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக