இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 22 ஏப்ரல், 2016

எத்தனைக் காலம்தான் ஏமாறுவோம் இந்த நாட்டிலே?


உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற பெருமை கொண்டது நம் நாடு. இன்று ஜனநாயகம் என்ற பெயரில் நம் மனதுக்கு விருப்பமானவர்களை ஆட்சித்தலைவர்களாகத்  தேர்ந்தெடுக்கிறோம். சுயநலமற்றவர்கள், நாட்டுக்காக அனைத்தையும் தியாகம் செய்பவர்கள்,  பொறுப்புணர்வு மிக்க தொண்டர்கள் என்றெல்லாம் அவர்கள் கூறும் வாய்வார்த்தைகளை நம்பி அவர்களுக்கு வாக்களிக்கிறோம். ஆனால் இவ்வாறு ஆட்சிப் பொறுப்பை ஏற்றவர்கள் நமக்களித்த வாக்குறுதிகளை மீறுவதோடு மட்டுமல்லாமல் தாங்கள் ஏற்றெடுத்த பொறுப்பை நிறைவேற்றாததோடு நமக்குப் பலவிதத்திலும் மோசடி செய்கிறார்கள். அவர்களின் முழு நோக்கமும் பணமும் பதவியும்தான் என்பதைத் தவிர வேறு எதுவும் இல்லை என்பதை அவர்கள் நிரூபிக்கிறார்கள். தங்களின் மற்றும் தங்கள் வாரிசுகளின் பொருளாதார மேம்பாடு மற்றும் புகழ் என்பவை மட்டுமே இவர்களின் குறிக்கோளாக இருந்து வருகிறது. 
இது நமது கண்முன்னே காலாகாலமாக நடைபெற்று வரும் நாடகம். எந்த ஒரு கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இந்த நடைமுறையில் மாறுதல் இல்லை என்பதை நாம் பல காலமாகக் கண்டு வருகிறோம். ஆட்சிக் கட்டிலை அடைவதற்காக எல்லா குறுக்கு வழிகளையும் அக்கிரமங்களையும் அடக்குமுறைகளையும் எவ்வித தயக்கமும் இன்றி கைகொள்கின்றனர். மதம், இனம் ஜாதி, மொழி, இடம் இவற்றின் அடிப்படையில் கட்சிகள் அமைத்துக் கொண்டும் மக்களின் இன உணர்வுகளையும் மத உணர்வுகளையும் தூண்டி கலவரங்களும் கலகங்களும் உண்டாக்கி அவற்றால் தங்கள் வாக்கு வங்கிகளை வலுப்படுத்திக் கொள்கிறார்கள். இணக்கத்தோடு வாழநினைக்கும் பன்மை சமூகங்களுக்குள் வீண்பகை மூட்டி வன்முறைகளுக்கு மக்களை பலியாக்குகிறார்கள். சட்டம் ஒழுங்கு நீதி இவற்றை கட்டிக்காக்க வேண்டிய இவர்கள் தங்கள் சுயநல நோக்கங்களுக்காக இவற்றை அப்பட்டமாக மீறுகிறார்கள். இவற்றை வைத்துக்கொண்டே அப்பாவி குடிமக்கள் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுகிறார்கள். இவர்கள் ஆட்சிப்பீடத்தில் அமர்ந்திருந்தாலும் இல்லாவிட்டாலும் இவர்களின் போக்கு இதுதான். நாட்டு மக்கள் இவர்களின் அராஜகங்களுக்கு பயந்தே வாழவேண்டிய சூழ்நிலையில் உள்ளார்கள். வேறு வழிகள் ஏதும் இல்லாத காரணத்தால் இக்கொடுமைகளை நாம் சகித்தே வாழவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
ஒரு கொடுங்கோலனிடம் இருந்து விடுதலை பெற இன்னொரு கொடுங்கோலனிடம் அபயம் தேடும் அவலம்! ஆள்வதற்கு அறவே தகுதி இல்லாத திரைப்படக் கலைஞர்களிடமும் கொள்ளைக்காரர்களிடமும் கொலைகாரர்களிடமும் நாடு மாறி மாறி ஒப்படைக்கப் படும் அவலம்!  மக்களின் உழைப்பின் கனிகளை எல்லாம் வரிகளாகக் கறந்து அவற்றை வைத்துக் கொண்டே அவர்களை அடக்கியாளும் கொடுமை!
ஒருபுறம் தேசத்தை நேசிப்பவர்களாகக் காட்டிக்கொண்டு மறுபுறம் நாட்டுமக்களுக்கு வஞ்சகம் இழைக்கும் வண்ணம் நாட்டுவளங்களையும் நீர்நிலைகளையும் அப்பாவிகளின் உடமைகளையும் அந்நிய முதலாளித்துவ சக்திகளுக்கு தாரை வார்க்கிறார்கள். அதன் காரணமாக ஏழை விவசாயிகளின் அல்லது வியாபாரிகளின் பிழைப்பில் மண்விழுந்து அவர்கள் ஆங்காங்கே தற்கொலை செய்து கொள்ளும் செய்திகளை அன்றாடம் கேட்கிறோம்.

செழிப்பான நாட்டு வளங்களும் மனித வளங்களும் அறிவு வளமும் பாரெங்கும் காணாத அளவு நம் நாட்டில் இருந்த போதும் இவை அனைத்தும் இன்று நடக்கும் அரசியல் சூதாட்டத்துக்கு பலியாகும் நிலை. தொடர்ந்து மக்கள் வறுமையிலும் அச்சத்திலும் நீடிக்கும் நிலை. கொலை கொள்ளை விபச்சாரம் சூதாட்டம் மது போதைப்பொருள் போன்ற தீமைகளின் ஆதிக்கத்தில் இருந்து விடுதலை என்ற பேச்சுக்கே இடமில்லை என்பது மட்டுமல்ல, இவற்றை சட்டபூர்வமாக்கி இவற்றைக் கொண்டே நாட்டின் வருவாயையும் ஆளுபவர்களின் வருவாயையும் பெருக்கிக்கொள்ளும் அவலம். அவலங்களின் பட்டியல் இன்னும் நீளும் என்பது யாரும் அறிந்த உண்மை!

ஏன் இந்த அவலங்கள்? ஏன் இவ்வாறு தொடர்ந்து ஏமாற்றப் படுகிறோம்? காரணங்களையும் தீர்வுகளையும் அறிய கீழ்கண்ட தலைப்புகளைப் படியுங்கள்: 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக