தூத்துக்குடியைச் சார்ந்த பர்னபாஸ்
என்ற ஒரு கிறிஸ்தவ மதபோதகர் இஸ்லாம் எவ்வாறு வன்முறையை போதிக்கிறது பாருங்கள் என்று
சொல்லி அவர்கள் நபிமொழிகளில் இருந்தும்
பைபிளில் இருந்தும் வசனங்களை மேற்கோள்காட்டி அவற்றை ஒப்பிட்டு குர்ஆன் வன்முறையை
போதிக்கிறது என்றும் பைபிள் மென்முறையை போதிக்கிறது என்பதையும் பதிவை
அனுப்பியிருந்தார்.
விபச்சாரக் குற்றமும் தண்டனையும்
என்ற தலைப்பில் அவர் எடுத்துக் கட்டியுள்ள ஹதீசையும் பைபிள் வசனங்களையும் இங்கு ஆய்வுக்கு
எடுத்துக் கொள்வோம்:
முஹம்மது
நபி அவர்களின் நடைமுறை:
= இம்ரான் பின் ஹுஸைன் அவர்கள்
கூறியதாவது:
விபச்சாரத்தால் கர்ப்பமுற்றிருந்த
ஜுஹைனா குலத்தைச் சேர்ந்த ஒரு பெண் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, "இறைத்தூதரே!
தண்டனைக்குரிய ஒரு குற்றத்தை நான் செய்துவிட்டேன். என்மீது தண்டனையை நிலை
நாட்டுங்கள்" என்று கூறினார். நபியவர்கள் அப்பெண்ணின் காப்பாளரை அழைத்துவரச்
செய்து, "இவளை நல்ல
முறையில் கவனித்து வாருங்கள். குழந்தை பிறந்ததும் இவளை என்னிடம் அழைத்து
வாருங்கள்" என்று கூறினார்கள். காப்பாளர் அவ்வாறே செய்தார். பின்னர் நபியவர்கள்
உத்தரவிட அவள்மீது அவளுடைய துணிகள் சுற்றப்பட்டன. பிறகு நபியவர்கள் உத்தரவிட அவளுக்குக் கல்லெறி தண்டனை
நிறைவேற்றப்பட்டது. பிறகு நபியவர்கள்
அவளுக்காக இறுதித் தொழுகை நடத்தினார்கள்.
அப்போது உமர் அவர்கள், "அல்லாஹ்வின்
தூதரே! இவளுக்காகத் தாங்கள் தொழ வைக்கிறீர்களா? இவள்
விபச்சாரம் புரிந்தவள் ஆயிற்றே?" என்று
கேட்டார்கள்.
அதற்கு நபியவர்கள், "அவள் அழகிய
முறையில் மன்னிப்புத் தேடிவிட்டாள். மதீனா வாசிகளில் எழுபது பேரிடையே அது
பங்கிடப்பட்டாலும் அவர்கள் அனைவருக்கும் போதுமானதாக அமையும். உயர்ந்தோன்
அல்லாவுக்காகத் தன் உயிரையே அர்ப்பணித்த இப்பெண்ணின் பாவ மன்னிப்பை விடச் சிறந்ததை
நீர் கண்டுள்ளீரா?" என்று
கேட்டார்கள்.
(முஸ்லிம் : நூல் 29, ஹதீஸ் எண் 3501)
இயேசுவின்
நடைமுறை:
பைபிள் (யோவான் 8:3-11) -
அப்பொழுது விபசாரத்திலே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ஸ்திரீயை வேதபாரகரும் பரிசேயரும்
அவரிடத்தில் கொண்டு வந்து, அவளை நடுவே
நிறுத்தி:போதகரே, இந்த ஸ்திரீ
விபசாரத்தில் கையும் மெய்யுமாய்ப் பிடிக்கப்பட்டாள். இப்படிப்பட்டவர்களைக்
கல்லெறிந்து கொல்ல வேண்டும் என்று மோசே நியாயப்பிரமாணத்தில் நமக்குக் கட்டளை
இட்டிருக்கிறாரே, நீர் என்ன
சொல்லுகிறீர் என்றார்கள். அவர் மேல் குற்றம் சுமத்துவதற்கான காரணம் உண்டாகும்
பொருட்டு அவரைச் சோதிக்கும்படி இப்படிச் சொன்னார்கள். இயேசுவோ குனிந்து, விரலினால் தரையிலே எழுதினார்.
அவர்கள் ஓயாமல் அவரைக் கேட்டுக்கொண்டு இருக்கையில், அவர்
நிமிர்ந்து பார்த்து:உங்களில் பாவம் இல்லாதவன் இவள் மேல் முதலாவது கல்லெறியக்கடவன் என்று
சொல்லி, மறுபடியும்
குனிந்து, தரையிலே
எழுதினார். அவர்கள் அதைக் கேட்டு, தங்கள்
மனச்சாட்சியினால் கடிந்து கொள்ளப்பட்டு, பெரியோர்
முதல் சிறியோர் வரைக்கும் ஒவ்வொருவராய்ப் போய் விட்டார்கள். இயேசு தனித்திருந்தார், அந்த ஸ்திரீ நடுவே நின்றாள். இயேசு
நிமிர்ந்து அந்த ஸ்திரீயைத் தவிர வேறொருவரையுங் காணாமல்: ஸ்திரீயே, உன்மேல் குற்றஞ்சாட்டினவர்கள்
எங்கே? ஒருவனாகிலும்
உன்னை ஆக்கினைக்கு உள்ளாகத் தீர்க்கவில்லையா என்றார். அதற்கு அவள்: இல்லை, ஆண்டவரே, என்றாள். இயேசு அவளை நோக்கி: நானும்
உன்னை ஆக்கினைக்கு உள்ளாகத் தீர்க்கிறதில்லை; நீ போ, இனிப் பாவஞ் செய்யாதே என்றார்.
இவ்வாறு நபிகளார் விபச்சாரம் செய்த
குற்றவாளிக்கு கல்லெறி தண்டனை கொடுத்து மிகவும் கடுமையாக நடந்து கொண்டார்கள்
என்றும் இயேசு அதே குற்றவாளியை மன்னித்து விட்டார்கள் என்றும் பர்னபாஸ் அவர்கள்
குறிப்பிட்டு இருந்தார்கள்.
இந்தக்
குற்றச்சாட்டிற்கான விளக்கம்:
விளக்கம் கூறும்முன் நாம் கவனிக்கவேண்டிய
சில விடயங்கள் உள்ளன:
= இறைத்தூதர்கள் இந்த பூமிக்கு
அனுப்பப்படுவதன் நோக்கம் மக்களிடையே இறை உணர்வை ஊட்டி அவர்களை நல்லொழுக்கம்
பேணுபவர்களாக ஆக்குவதோடு இறைவனின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் சமூகத்தில்
தர்மத்தை நிலைநாட்டுவதும் ஆகும். அவ்வாறு தர்மத்தை, நீதியை, ஒழுங்கை நிலைநாட்ட
நன்மைகளை எவுவதோடு தீமைகளைத் தடுக்கவும் வேண்டும்.
= மனித சமூக அமைப்பின் அடிப்படையையே
தகர்த்தெறியும் மகாப்பாவம் விபச்சாரம்! தலைமுறைகளை பாதிக்கவும் குடும்ப அமைப்பில்
பல குழப்பங்களை உருவாக்கவும் செய்யும் பாவம் அது! பொறுப்புணர்வில்லா
பெற்றோர்களையும் தந்தைகளில்லா குழந்தைகளையும் அனாதைகளையும் உருவாக்கும் பாவம் அது!
இப்பாவத்தினால் நேரடியாக பாதிக்கப்பட்டு தாயையோ தந்தையையோ மனைவியையோ கணவனையோ
இழந்தவர்களைக் கேட்டால்தான் இப்பாவத்தின் கடுமை புரியும். சமூகத்தை சீர்குலைக்கும்
இந்தப்பாவத்தை தடுப்பது எப்படி என்பது சமூகத்தின் மீது அக்கறை கொண்ட ஒவ்வொருவரும்
விடைகாணத் துடிக்கும் கேள்வியாகும்.
= விபச்சாரம், திருட்டு, கொலை,
கொள்ளை போன்ற மற்ற மனிதர்களை பாதிக்கும் பாவங்களை சமூகத்தில் இருந்து ஒழிக்க
மக்களுக்கு உபதேசம் மட்டும் செய்தால் போதாது. மக்களின் குடும்ப வாழ்வையும் சமூக
அமைப்பையும் சீர்குலைக்கும் பாவங்களும் திருட்டு கொலை போன்ற பயங்கரவாத செயல்களும்
சமூகத்தில் பரவாமலிருக்க தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதற்கு
குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகளும் கொடுக்கப்பட வேண்டும்.
= பூமியில் தர்மத்தை நிலைநாட்டும்
பணியில் மக்களுக்கு முன்மாதிரிகளாக விளங்கும் இறைத்தூதர்கள் பொதுவாக மக்களோடு
இரக்ககுணத்தோடு நடந்துகொண்டாலும் மேற்படி தண்டனைகள் விஷயத்தில் கண்டிப்பு
காட்டாவிட்டால் அது நீதிக்குப் பங்கம் விளைவிக்கும் செயலும் தவறான முன்மாதிரியும்
ஆகிவிடும். பெருங்குற்றங்கள் செய்வோரை சர்வசாதாரணமாக மன்னித்துவிட்டால் என்ன
நடக்கும் என்பதை அனைவரும் அனுபவபூர்வமாகவே அறிவோம். நீதி, நேர்மை, சட்டம், ஒழுங்கு
என்பவை அர்த்தமற்றுப் போய் நாட்டில் தீராத குழப்பமே மிஞ்சும். மனிதன் வாழ்வதற்கே
வெறுத்துப் போகும் நிலை ஏற்படுத்தும். (தேசிய குற்றவியல் ஆவணக்காப்பகத்தின்
அறிக்கைப்படி இன்று இந்தியாவில் ஒவ்வொரு 4 நிமிடத்திற்கும் 30 வயதுக்கு உட்பட்ட ஒருவர் தற்கொலை செய்கிறார்) மேலும்
அக்குற்றங்களினால் பாதிக்கப்பட்டோருக்கு செய்யப்படும் பெரும் அநீதியாகவும் அது
ஆகிவிடும்.
மேற்படி விடயங்களைக்
கருத்திற்கொண்டு இங்கு எடுத்துக்காட்டப்பட்ட நபிமொழியையும் பைபிள் வசனத்தையும் இப்போது
படியுங்கள். குற்றம் சாட்டுபவரைப் பொறுத்தவரை, நபிகளார் விபச்சாரக் குற்றத்திற்கு
தண்டனை கொடுத்துள்ளதாகவும் இயேசு விபச்சாரிக்கு தண்டனை கொடுக்காமல் மன்னித்து
விட்டதாகவும் எடுத்துக் கூறுகிறார். இப்போது யாருடைய செயல்பாடு பாவத்தைத்
தடுக்கும், யாருடைய செயல்பாடு பாவத்தை வளர்க்கும் என்பதை சிந்தித்துப்பாருங்கள்.
நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட எது நடைமுறையான தீர்வைத் தரும் என்பதை
சீர்தூக்கிப் பாருங்கள். சமீபத்தில் நாட்டில் பரவலாகி வரும் பாலியல் வன்முறைக்கு
இஸ்லாமிய சட்டங்களே சிறந்த தீர்வு என்று நாடு உணர்ந்துவருவதை அனைவரும் அறிவோம்.
தர்மத்தை நிலைநாட்டிய இறைத்தூதர்கள்
இவ்வுலகுக்கு வந்த இறைத்தூதர்கள் அனைவரையும் புனிதர்களாகவே சித்தரிக்கிறது
இஸ்லாம். இறைத்தூதர்களிடையே பாரபட்சம் காட்டக்கூடாது என்று கற்பிக்கிறது. அவர்கள் அனைவரும்
நம் மனிதகுலத்திற்கு வழிகாட்டுவதற்காக வெவ்வ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு
நாடுகளில் இறைவனால் நியமிக்கப்பட்டவர்கள். அவர்கள் அனைவரும் நம் மனிதகுலம் என்ற
மாபெரும் குடும்பத்தவருக்கு வழிகாட்ட இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்களே. அவர்களின்
பெயரைக் கேட்கும்போது அலைஹிஸ்ஸலாம் (அவர்கள் மீது இறை சாந்தி உண்டாகட்டும்) என்று
பிரார்த்திக்கவும் கற்றுக் கொடுக்கிறது இஸ்லாம்.
இஸ்லாத்தின்
மீது களங்கம் கற்பிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு முன்பின் தொடர்புகளை மறுத்து (out of context)
உண்மையைத் திரித்துக் கூறுவதால் இங்கு இயேசுவைத் தவறாகப் புரிந்து விடாதீர்கள்.
இயேசு மற்ற இறைத்தூதர்களைப் போலவே தான் அனுப்பப்பட்ட இடத்தில் தர்மத்தை
நிலைநாட்டுவதற்கான அனைத்தையும் செய்தார் என்றே குர்ஆனும் நபிமொழிகளும் நமக்கு
அறிவிக்கின்றன.
மேற்படி
நபிமொழியை கவனமாகப் படிக்கும்போது நபிகளார் குற்றவாளியை உரிய முறையில் கவனித்து
குழந்தை பெற்ற பின்னரே தண்டனையை நிறைவேற்ற உத்தரவிடுகிறார்கள். வேறு ஒரு
அறிவிப்பில் குழந்தை பிறந்தபின் இரண்டு வருடம் தாய்ப்பால் ஊட்டியபின் தண்டனை
நிறைவேற்றப்பட்டது என்றும் கூறப்படுகிறது.
ஆக, நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் ஆட்சித் தலைவராக இருந்தபோது மக்களிடம் கருணை உள்ளத்தோடு நடந்து கொண்ட
போதும் நீதி வழுவாமல் நடந்து கொண்டார். இறைவனின் கட்டளைகளை முன்னுதாரணமாக நின்று நடைமுறைப் படுத்தினார். தன்
உணர்வுகளுக்கு ஆட்பட்டு சட்டத்தை நிலைநிறுத்துவதில் அவர் வளைந்து கொடுத்திருந்தால்
அந்த முன்னுதாணத்தின் அடிப்படையில் பிற்காலத்தில் மக்களால் சட்டம் வளைக்கப்
பட்டிருக்கும் என்பதை மேற்படி நிகழ்வில் இருந்து காணலாம்.
அதேவேளையில் இயேசு அவர்கள் விபச்சாரியை
மன்னித்ததாகக் கூறப்படும் நிகழ்வை முன்னுதாரணமாகக் காட்டி அதை
நடைமுறைப்படுத்தினால் உலகில் சட்டம் நீதி என்பவை என்ன விபரீதங்களுக்கு உள்ளாகும்
என்பதை அனைவரும் அறிவோம். பாவம் செய்யாதவர் மட்டுமே குற்றவாளியை தண்டிக்கலாம் என்ற
சட்டம் நடைமுறைக்கு வருமானால் சட்டம் ஒழுங்கு, காவல், நீதிமன்றம் இவை அனைத்துமே
கேலிக்குரியதாக ஆகிவிடும். ஆக, நீதியை, தர்மத்தை நிலைநாட்ட வந்த இயேசு
கிறிஸ்துவின் வாழ்வில் இப்படி ஒரு நிகழ்வு நிகழ்ந்ததா என்பது கேள்விக்குரியதே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக