இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 16 டிசம்பர், 2014

பயங்கரவாதக் குற்றச்சாட்டுக்களின் பின்னணி!

  பிற நாடுகளையும் அதன் வளங்களையும் கொள்ளை அடித்து ஆதிக்கம் செய்து வாழவேண்டும் என்ற சில சுயநலவாதிகளின் வக்கிர ஆசையே உலகப் போர்களுக்கு மட்டுமல்ல, எல்லாப் போர்களுக்கும் கலவரங்களுக்கும் முக்கிய காரணமாக இருந்தது. தொடர்ந்து இருந்து வருகிறது. கோடிக்கணக்கில் அப்பாவி உயிர்கள் மாய்வது இவர்களுக்கு ஒரு பொருட்டேயல்ல! முழுக்கமுழுக்க தங்கள் சுயநலம் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு இக்கொடியவர்கள் நடத்தும் அன்றாடக் கொலைகளும் கொள்ளைகளும் உலகின் பெரும்பாலான மக்களின் கண்களில் இருந்து மிகமிகத் தந்திரமாக மறைத்துவைக்கப் படுகிறது. இவர்களின் ஊடக வலிமையினாலும் இவர்கள் கையாளும் இன்னபிற தந்திரங்களாலும் உலகம் இன்னும் இவர்களை அப்பழுக்கற்றவர்களாகவும் சமாதானப் பிரியர்களாகவும் நம்பிக்கொண்டிருக்கிறது. 
  
= காலனி ஆதிக்கம் மூலம் இவ்வாறு நாடுகளை கொள்ளையடித்து  ஆதிக்கம் செய்தவர்கள் இன்றும் அந்த நாடுகளை தங்கள் கையாட்களையும் கைப்பாவை அரசர்களையும் வைத்துக்கொண்டு உலகை ஆண்டு வருகிறார்கள் என்பதே உண்மை! அந்நாட்டு வளங்களை தொடர்ந்து கொள்ளையடிக்கும் விதமாக வணிக நிறுவனங்களையும் தந்திர ஒப்பந்தங்களையும் வகுத்து நிறைவேற்றி வருகின்றனர். அரபு நாட்டு எண்ணெய் வளங்களை இங்கு உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம்.  இந்த அடிமை நாடுகளின் மக்கள் பயன்படுத்தும் பற்பசை, குளிர்பானங்கள் முதற்கொண்டு மருந்துகள் வரை பெரும்பாலும் ஆதிக்கநாடுகளின் உற்பத்திப் பொருட்களே என்பதையும் நீங்கள் கவனிக்கலாம். இந்நாட்டு கைப்பாவை அரசர்களின் சொத்துக்கள் சுவிஸ் வங்கிகளில் சேமிக்கப் படுவதையும் அறிவீர்கள். 
=  தங்கள் நாட்டுவளங்கள் இவ்வாறு கொள்ளை போவதைக் கண்டு பாமரர்கள் விழிப்புணர்வு பெறும்போது இவர்களுக்கு எதிராக திரும்புகிறார்கள். தங்கள் அரசாங்கங்களுக்கு எதிராக தங்கள் உரிமைகளுக்காகவும் நாட்டு நலனுக்காகவும் போராட்டங்கள் நிகழ்த்தும்போது அவர்களை கிளர்ச்சியாளர்கள் அல்லது தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தி தங்கள் சக்திவாய்ந்த ஊடகங்கள் மூலம் உலகுக்கு முன் சித்தரிக்கிறார்கள். இந்த உண்மையை புரிந்துகோண்டாலே இன்று இஸ்லாமியர்களை ஏன் தீவிரவாதிகளாக ஊடகங்கள் சித்தரிக்கின்றன என்பதை விளங்க முடியும். 
= இஸ்லாம் என்றாலே அமைதி என்பதும் அமைதியை பூமியில் நிலைநாட்டுவதே அதன் குறிக்கோள் என்பதையும் அறிவீர்கள். அந்த அமைதி நிலைநாட்டப் படவேண்டுமானால் அநியாயங்களும் மனித உரிமை மீறல்களும் தடுக்கப்படவேண்டும். இறைநம்பிக்கையின் ஒரு பாகமாகவே இதைக் கற்பிக்கிறது இஸ்லாம்:
இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

உங்களில் எவரேனும் தீமையைக் கண்டால் கையால் தடுக்க வேண்டும். இயலாவிட்டால் நாவால் தடுக்க வேண்டும். அதற்கும் இயலாவிட்டால் மனதால் வெறுக்க வேண்டும். இதுதான் இறைநம்பிக்கையின் இறுதிநிலையாகும். (நூல்: முஸ்லிம் 78)

 இன்று உலகில் இஸ்லாம் என்ற கொள்கை அதிவேகமாகப் பரவி வருவது இந்த ஆதிக்க சக்திகளுக்கு பலத்த இடியாக அமைந்து வருகிறது. இஸ்லாத்தின் மூலம் விழிப்புணர்வு பெற்றுவரும் மக்கள் இவ்வாதிக்க சக்திகளின் கையாட்களுக்கும் இவர்களால் நியமிக்கப்பட்ட கைப்பாவை அரசுகளுக்கும் எதிராகத் திரும்புகிறார்கள் என்பது இவர்களின் உறக்கத்தைக் கெடுத்து வருகின்றன. 
= உலக அளவில் பார்க்கும்போது அமெரிக்காவுக்கும் G-8 நாடுகளுக்கும் ஆயுத விற்பனைதான் முக்கியமான வருமானம் ஈட்டும் வியாபாரம். உலகிலேயே அதிநவீன தொழில்நுட்பம் வாய்ந்த விமானங்கள், ஏவுகணைகள், நீர்மூழ்கிக் கப்பல்கள். அணுவாயுதங்கள் மற்றும் இன்னபிற இராணுவத் தளவாடங்கள் இவர்களின் கைவசம் இருப்பதால்தான் உலகநாடுகள் அனைத்தையும் இவர்களால் அச்சுறுத்தி தங்களின் அடிமைகளாக அடக்கிவைக்க முடிகிறது. உதாரணமாக மத்திய கிழக்கில் எண்ணைவள நாடுகளான சௌதி அராபியா, குவைத், துபாய், கத்தர், போன்ற நாடுகள் இவர்களால் நியமிக்கப்பட்ட கைப்பாவை அரசர்களால் ஆளப்படுகின்றன.
= ஆயுதங்களை உலக சந்தையில் விற்பனை செய்ய வேண்டும் என்பதற்காக சிறு சிறு நாடுகளுக்கு இடையே பகைமையை மூட்டி ஒருவர்க்கொருவர் அடித்துக் கொள்ள வைப்பார்கள். அல்லது நாடுகளுக்குள்ளேயே சிறுசிறு குழுக்களைத் தூண்டி அரசுகளுக்கு எதிராக கிளர்ச்சி செய்யத் தூண்டுவார்கள். ஆயிரக் கணக்கில் அல்லது இலட்சக்கணக்கில் மனித உயிர்கள் மாய்வது இவர்களுக்கு ஒரு பொருட்டல்ல. தங்கள் வருமானமும் ஆதிக்கமும் தடைபெறக் கூடாது. இது ஒன்றுதான் இவர்களின் இலட்சியம். இந்த இலட்சியத்தை அடைவதற்காக ஒருபுறம் இராணுவ அடக்குமுறைகளையும் மறுபுறம் தங்கள் கைவசம் உள்ள பத்திரிகை, டிவி, ரேடியோ போன்ற ஊடகங்களையும் தந்திரமான முறையில் கையாள்கிறார்கள். இவர்களின் கைப்பாவை அரசுகளுக்கு எதிராக மனித உரிமைகள் கோரி புரட்சி செய்பவர்கள் உலகுக்கு முன் தீவிரவாதிகளாகவும் பயங்கரவாதிகளாகவும் சித்தரிக்கப்படுகிறார்கள். இவர்கள் தங்கள் ஆதிக்கத்திற்குள் கொண்டுவர நினைக்கும் நாடுகளுக்குள் கிளர்ச்சியாளர்களை உருவாக்கி அவர்களை உலகுக்கு முன் புரட்சியாளர்களாகவும் விடுதலைப் போராளிகளாகவும் சித்தரிக்கிறார்கள். அப்படிப்பட்ட நாடுகளில் கிளர்ச்சியாளர்களுக்கு இராணுவ பலமளித்து அந்நாடுகளைக் கைப்பற்றி கிளர்ச்சியாளர்களின் தலைவரை தங்கள் கைப்பாவை அரசராக அல்லது அதிபராக நியமிப்பார்கள். (சமீபத்திய உதாரணங்கள் : ஈராக், ஆப்கானிஸ்தான்) ..தொடர்கிறது....

அதிநவீன இராணுவத் தளவாடங்களே இவர்களது முக்கிய விற்பனைப் பொருள். அவற்றை உலக நாடுகளில் விற்க வேண்டுமானால் அவ்வாயுதங்களின் செயல்திறனை உலகுக்கு முன் காட்டியாக வேண்டும். அதற்காக சிறு நாடுகளுக்கிடையே இவர்கள் மூட்டிவிடும் போர்களுக்குப் புறம்பாக ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கு இடையே குறைந்தபட்சம் ஒருமுறை பெரிய அளவிலான போரை எப்படியாவது நிகழ்த்துகிறார்கள். உலகெங்கும் ஊடகங்கள் மூலமாக மக்களை மூளைச்சலவை செய்து அதை நியாயப் படுத்தவும் செய்வார்கள். மக்கள் அதைப் பார்க்கிறார்கள். அப்படியே நம்பவும் செய்கிறார்கள். இப்படி அப்பாவி மக்களின் இரத்தத்தை ஆறாக ஒட்டி அதன்மீது ஆயுதக் கண்காட்சி நடத்துவது இவர்களது வாடிக்கை! இக்கண்காட்சியை தவறாது நடத்துவதன் மூலம் இவர்களுக்கு இரண்டு நேட்டங்கள்: ஒன்று ஆயுத விற்பனை. மற்றது உலக நாடுகளை பயமுறுத்தி தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்துவது. அவர்களின் சதியின் ஒரு பாகமே இது. பாதிக்கப்படும் பாமரர்களுக்கு இன்று இஸ்லாம்தான் இந்த அராஜகத்தை தடுக்க உள்ள ஒரே வழி. இஸ்லாமின் வளர்ச்சியும் அது ஏற்படுத்தும் விழிப்புணர்வும் மக்களை இவர்களுக்கு எதிராகத் திருப்புகின்றன.
இஸ்லாம் பயங்கரவாதத்தை கையாளும் வழியல்ல, மாறாக வல்லரசு பயங்கரவாதத்தை முறித்து பூமியில் அமைதியை நிலைநாட்ட வந்த மார்க்கமே என்பதை சிந்திப்போர் உணரலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக