இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 14 அக்டோபர், 2026

நல்லதொரு குடும்பம் -ஆரோக்கியமான சமூகத்தின் அடிப்படை!


 குடும்பங்களே ஒரு சமூகத்தின் அடிப்படைக்கூறுகள். குடும்ப உறவுகளும் ஒழுக்கங்களும் எந்தளவிற்கு ஆரோக்கியமாக இருக்கின்றனவோ, அந்தளவிற்குச் சமூகமும் வலுவானதாக அமையும்; நாடும் அமைதியான வாழ்விடமாக மாறும். இவை அனைத்திற்கும் முதன்மையான அடிப்படை தனிமனித நல்லொழுக்கமே ஆகும்.

தனிமனித நல்லொழுக்கத்தின் ஊற்றுக்கண்

தனிமனித நல்லொழுக்கத்தைப் போதிக்கச் மிக முக்கிய அடிப்படையாக "மனிதகுலம் ஒன்றே; இறைவன் ஒருவனே" என்ற சத்தியத்தை நினைவூட்டி, அதில் நிலைத்திருக்க வலியுறுத்துகிறது இஸ்லாம். இறைவன் தன் இறுதி வேதத்தில் கூறுகிறான்:

"மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள்; அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான்; அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான். பின்னர் இவ்விருவரிலிருந்தும் அநேக ஆண்களையும் பெண்களையும் பரவச் செய்தான். ஆகவே அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்..."

(திருக்குர்ஆன் 4:1)

(குறிப்பு: அல்லாஹ் என்றால் 'வணக்கத்திற்குரிய ஒரே இறைவன்' என்று பொருள்)

கட்டுப்பாட்டைத் தரும் உண்மையான இறையச்சம்

மனிதன் தவறு செய்யாமலும், பாவம் செய்யாமலும் வாழ வேண்டுமானால், அவனுக்குள் உண்மையான இறையச்சம் (தக்வா) இருக்க வேண்டும். "என்னைப் படைத்தவன் என்னை எப்போதும் கண்காணித்துக் கொண்டிருக்கிறான்; நான் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் அவனிடம் நாளை விசாரணை உண்டு; பாவம் செய்தால் அவன் என்னைத் தண்டிப்பான்" என்ற உணர்வு மனத்தினுள் ஆழமாக விதைக்கப்பட வேண்டும்.

இந்த உணர்வு இல்லாத பட்சத்தில், எந்தப் பாவத்தையும் செய்ய மனிதன் சிறு தயக்கமும் இன்றித் துணிகிறான். இன்று நாட்டில் உயிரற்ற, உணர்வற்ற உருவங்களைக் காட்டி, "இவைதான் கடவுள்" என்று சிறுவயது முதலே கற்பிக்கப்படுவதால், மனிதனிடம் இறைவனைப் பற்றிய மெய்யான பயமே இல்லாமல் போய்விடுகிறது.

இஸ்லாம் தனது தெளிவான கடவுள் கொள்கையின் மூலம் இந்த அபாயகரமான போக்கைத் தடுக்கிறது:

நபியே! நீர் கூறுவீராக: "இறைவன் - அவன் ஒருவனே! அவன் தேவைகள் ஏதும் இல்லாதவன். அவன் எவரையும் பெற்றெடுக்கவில்லை; அவனையும் யாரும் பெற்றெடுக்கவில்லை. அன்றியும், அவனைப் போல் எவரும் எதுவும் இல்லை."

(திருக்குர்ஆன் 112:1-4)

இவ்வாறு இறைவனின் தூய தன்மைகளைத் தெளிவாகப் போதித்து, அவனை மட்டுமே வணங்க வேண்டும் என்றும், இடைத்தரகர்கள் இன்றி நேரடியாகவே வழிபட வேண்டும் என்றும் கற்றுத் தருகிறது.

மறுமை விசாரணையும் வாழ்வின் இலக்கும்

இவ்வுலக வாழ்வின் நோக்கம் மனிதனைச் சோதிப்பதே ஆகும். இங்கு மனிதன் செய்யும் செயல்களுக்கு மறுமையில் விசாரணை உண்டு என்பத்தையும்; நல்வினையாளர்களுக்குச் சொர்க்கமும், தீயோருக்கு நரகமும் காத்திருக்கிறது என்பதையும் திருக்குர்ஆன் அறிவுப்பூர்வமாகச் சுட்டிக்காட்டுகிறது:

"ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைத்தே ஆக வேண்டும். இறுதித் தீர்ப்பு நாளில்தான் உங்களுக்கான பிரதிபலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும். எனவே, எவர் நரக நெருப்பிலிருந்து பாதுகாப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ, அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்! இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப) பொருளேயன்றி வேறில்லை."

(திருக்குர்ஆன் 3:185)

அந்த நிரந்தர இன்பங்கள் நிறைந்த சொர்க்கத்தை அடைவதையே லட்சியமாகக் கொண்டு, இறைவன் விதித்த ஏவல்-விலக்கல்களைப் பேணி வாழ்வதில் சில சிரமங்கள் இருந்தாலும், அவை வீண்போவதில்லை என்ற நம்பிக்கையைத் தனிமனித ஒழுக்கத்திற்கு அடிப்படையாக்குகிறது இஸ்லாம்.

சீர்திருத்தத்திற்கான ஒரே வழி!

இந்த அஸ்திவாரத்தை அனைவரும் பேணி வாழ்ந்தால், அங்கு ஆரோக்கியமான சமூகம் மலரும். சுயகட்டுப்பாடு, பொறுப்புணர்வு, சகிப்புத்தன்மை, தியாகம் போன்ற அரிய பண்புகள் தனிநபர்களிடம் உருவாகும். பரஸ்பர அன்பு, உரிமைகள் மற்றும் கடமைகளைப் பேணுதல், விட்டுக் கொடுத்தல், கூட்டுறவு ஆகியவற்றால் குடும்ப உறவுகள் செழித்தோங்கும்.

எனவே, சமூகச் சீர்திருத்தத்திற்காக நாம் காலதாமதமின்றிச் சரியான வழியைக் கையாள வேண்டும். "ஒன்றே குலம், ஒருவனே இறைவன்; அவனிடமே நம் மீட்சி" என்ற உறுதியான நம்பிக்கையை மனித மனங்களில் நிலைநிறுத்த வேண்டும். இறைவன் கற்பிக்கும் கட்டளைகளைப் பேணி வாழும் பண்பைச் சிறுவயது முதலே பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்க ஆவன செய்ய வேண்டும்.

அப்போதுதான்...

  • பெற்றோர் மீது அன்பும் மரியாதையும் செலுத்தும் பிள்ளைகளும்,

  • கடமையுணர்வும் பொறுப்பும் உள்ள பெற்றோர்களும்,

  • பரஸ்பரம் கண்ணியப்படுத்தும் கணவன் - மனைவியரும்,

  • சகோதரத்துவமும் சமத்துவமும் பேணும் சமூகமும் உருவாகும்!

அப்போதுதான் இந்த பூமியே மனிதகுலம் வாழ்வதற்கு ஏற்ற சிறந்த வாழ்விடமாக மாறும் என்பதில் ஐயமில்லை!

===================== 

இஸ்லாம் என்றால் என்ன? முஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!
இதைப் படிக்காவிட்டால் இழப்பு! பேரிழப்பு!
நாம் ஏன் பிறந்தோம்?
இதயங்களை வென்ற இறைத்தூதர்
நாம் பின்பற்றவேண்டிய தலைவர் யார்?
http://quranmalar.blogspot.com/2012/11/blog-post_9390.html