இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 16 நவம்பர், 2026

திருந்தாத பிள்ளை இருந்தென்ன இலாபம்?

 

திருந்தாத பிள்ளை இருந்தென்ன இலாபம்?

நூஹ் நபியின் பிள்ளை விவகாரம்

உலக வாழ்க்கை என்பது ஒரு பரீட்சை. இதில் நம் பிள்ளைகள் உட்பட அனைவரும் நமக்கு இணக்கமாகவே நடப்பார்கள் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. நாம் எவ்வளவு தான் அறிவுரைகளையும் உபதேசங்களையும் கூறினாலும் சிலர் அதைக் கேட்காமல் தன் இஷ்டம் போல் தடம்புரண்டுச் செல்வார்கள். பெற்றோர்களின் சொல்லுக்கு கட்டுப்படமாட்டார்கள்.

இத்தகைய பிள்ளைகள் நமக்கு இருந்தால் அவர்களைத் திருத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். ஏனெனில் அவர்கள் நல்லவர்களாக இருந்தால் நாளை மறுமையில் நம்மோடு சொர்க்கத்தில் இணைந்திருப்பார்கள். ஆனால் அதேவேளையில் கெட்டவர்களாகவும் இறைமறுப்பாளர்களாகவும் இருந்தால் அவர்கள் நரகத்தில் இருப்பார்கள்.

எவர்கள் இறைவிசுவாசம் கொண்டு, அவர்களுடைய சந்ததியாரும் இறைவிசுவாசத்தில் அவர்களைப் பின் தொடர்கிறார்களோ, அவர்களுடைய அந்த சந்ததியினரை அவர்களுடன் (சுவனத்தில் ஒன்று) சேர்த்து விடுவோம். (இதனால்) அவர்களுடைய செயல்களில் எந்த ஒன்றையும், நாம் அவர்களுக்குக் குறைத்து விட மாட்டோம் - ஒவ்வொரு மனிதனும் தான் சம்பாதித்த செயல்களுக்குப் பிணையாக இருக்கின்றான். (திருக்குர்ஆன் 52:21)

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒவ்வொருவரும் ஒவ்வொருவருக்கு பொறுப்பாளிகள். உங்களின் பொறுப்பை பற்றி கேள்வி கேட்கப்படுவீர்கள். (புகாரி)

எவ்வளவு முயற்சி செய்தும் திருந்தாவிட்டால் இறைவன் நாடியவர்களுக்குத்தான் நேர்வழி கிடைக்கும் என்பதை கவனத்தில் வைத்து பொறுமை காக்க வேண்டும். அவனுக்கு நேர்வழியை தருமாறு இறைவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

மக்களை சீர்திருத்துவதற்காக அனுப்பப்பட்ட முன்னாள் இறைத் தூதர்களில் முக்கியமானவர் நூஹ் (அலை) அவர்கள். 950 வருடம் பிரச்சாரம் செய்தபின்னரும் அந்த மக்களில் பெரும்பாலானோர் திருந்தவில்லை. அவர்கள் கர்வம் கொண்டனர். நுஹையும் அவரோடு நம்பிக்கை கொண்டவர்களையும் ஏளனமும் செய்தனர். இறுதியில் நூஹ் நபி அந்த மக்களுக்கு எதிராகப் பிரார்த்தித்தார். ஒரு பெரும் கப்பல் கட்டி அதில் நம்பிக்கையாளர்களையும் ஒவ்வொரு பிராணியில் இருந்தும் ஒவ்வொரு ஜோடியை ஏற்றிக் கொள்ளுமாறு கட்டளையிடப்பட்டது தொடர்ந்து பல நாட்கள் தொடர்ந்து பெய்த பெருமழையில் கப்பலில் இருந்தவர்களைத் தவிர அனைவரும் அழிக்கப்பட்டனர்.

ஆணவத்தால் அழிந்த நூஹ் நபியின் மகன்  

ஆனால் அவர்களின் மகன் கெட்டவனாக இருந்தான். நூஹ் (அலை) அவர்களுக்கு அவன் கட்டுப்பட மறுத்தான். இறைமறுப்பாளனாக மரணித்தான். இந்த வரலாற்றை இறைவன் திருக்குர்ஆனில் கூறியுள்ளான்.

மலைகளைப் போன்ற அலை மீது அது அவர்களைக் கொண்டு சென்றது. விலகி இருந்த தன் மகனை நோக்கி “அருமை மகனே! எங்களுடன் ஏறிக்கொள்! (ஏக இறைவனை) மறுப்போருடன் ஆகி விடாதே!” என்று நூஹ் கூறினார்.

“ஒரு மலையில் ஏறிக் கொள்வேன்; அது என்னைத் தண்ணீரிலிருந்து காப்பாற்றும்” என்று அவன் கூறினான். “அல்லாஹ் அருள் புரிந்தோரைத் தவிர அல்லாஹ்வின் கட்டளையிலிருந்து காப் பாற்றுபவன் எவனும் இன்று இல்லை” என்று அவர் கூறினார். அவ்விருவருக்கிடையே அலை குறுக்கிட்டது. அவன் மூழ்கடிக்கப்பட்டோரில் ஆகிவிட்டான். (திருக்குர்ஆன் 11: 42-43)

நூஹ், தம் இறைவனை அழைத்தார். “என் மகன் என் குடும்பத்தைச் சேர்ந்தவன். உனது வாக்குறுதியும் உண்மையே. நீயே தீர்ப்பு வழங்குவோரில் மேலானவன்” என்றார்.

“நூஹே! அவன் உன் குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்லன். இது நல்ல செயல் அல்ல. உமக்கு அறிவு இல்லதாது பற்றி என்னிடம் கேட்காதீர்! அறியாதவராக நீர் இருக்கக் கூடாது என உமக்கு அறிவுரை கூறுகிறேன்” என்று அவன் கூறினான்.

“இறைவா! எனக்கு அறிவு இல்லாதது பற்றி உன்னிடம் கேட்பதை விட்டும் உன்னிடமே நான் பாதுகாப்புத் தேடுகிறேன். நீ என்னை மன்னித்து அருள்புரியா விட்டால் நஷ்டமடைந்தவனாக ஆகி விடுவேன்” என்று அவர் கூறினார். (திருக்குர்ஆன் 11: 45-47)

நம்மையும் நமது குழந்தைகளையும் இறைவன் நேரான வழியில் செலுத்துவானாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக