இளமையை எவ்வாறு கழித்தாய்?
ஒரு சமூகத்தின் அல்லது நாட்டின் ஜீவ நாடியாகவும் நிகரற்ற, மகத்தான வளமாகவும் அதன் உயிரோட்டமுள்ள ஓர் ஆக்க சக்தியாகவும் விளங்குபவர்கள் இளைஞர்கள் . அவர்களின் ஒழுக்கத் தரத்தைப் பொறுத்துதான் அந்த சமூகம் உயர்ந்த அல்லது உன்னத சமுதாயமாக வளர்ச்சி பெறுகிறது.
இளமைப் பருவம் என்பது தனிமனித ஆளுமை வளர்ச்சிப் படியில் (Development of human personality) மிக முக்கிய பருவமாகவும், படித்தரமாகவும் அமைந்து காணப்படுகிறது. உடலாரோக்கியமும் உணர்ச்சி உத்வேகமும், துடிதுடிப்பும் அதிகமாக அமையப் பெறும் இப்பருவத்தில், ஒழுக்க ரீதியான பக்குவப்படுத்தப்படல் மிக அவசியமாகும். உடல் வலிமை மிக்க இப்பருவத்தில் இளைஞர்களின் ஆற்றல்களும், ஆவல்களும், வேட்கைகளும், உணர்வுகளும் சரியான முறையில் வழிநடத்தப்படல் வேண்டும்.
அதேவேளையில் இதில் கவனக்குறைவோ அலட்சியமோ நிகழ்ந்தால் அந்த இளைஞர்களின் ஆற்றல்களும், திறமைகளும் அழிவு சக்திகளாக மாற்றப்படும். அவர்கள் மூளைச் சலவைக்கு உட்படுத்தப்பட்டு முழு சமூகத்திற்கும் நாட்டுக்கும் மட்டுமல்ல, அதுவே முழு மனித இனத்திற்கும் கூட அழிவையும், நாசத்தையும் விளைவித்து விடும்.
இன்று, உலகெங்கும் பரவலாகக் காணப்படும் ஒழுக்கக் கேடான நடவiடிக்கைகள், பாலியல் வன் கொடுமைகள், மது மற்றும் போதைபொருள் புழக்கங்கள், வன்முறை வெறியாட்டங்கள், கொலை, கொள்ளைச் சம்பவங்கள் போன்ற அனைத்தும் இளைஞர்களை மையமாகக் கொண்டே நிகழ்கின்றன. இவ்வாறு சமூகத்தின் ஆக்க சக்தியாக திகழ வேண்டிய இளைஞர்கள், அதன் அழிவு சக்தியாக மாறுவதற்குக் காரணம் அவர்களின் ஒழுக்கம் சார்ந்த விடயங்கள் பற்றிய அலட்சியமே.
இறையச்சம் விதைப்போம்!
இந்த இளமைப்பருவம் பயனுள்ளதாக ஆக்கபூர்வமானதாக அமைய வேண்டுமானால் அதற்கு மனித மனங்களுக்குள் இறையச்சம் என்ற விதையை ஆழமாக விதைக்க வேண்டும்.
இறையச்சம் என்றால் என்ன?
1. இவ்வுலக வாழ்க்கை என்பது ஒரு பரீட்சை போன்றது, இந்த உலகம் அதற்கான பரீட்சைக் கூடம் போன்றது.
2. இங்கு எனது செயல்கள் இறைவனால் கண்காணிக்கப் படுகின்றன.
3. நான் செய்யும் நற்செயல்கள் புண்ணியங்களாகவும் தீய செயல்கள் பாவங்களாகவும் பதிவாகின்றன.
4. ஒருநாள் இந்த பரீட்சைக் கூடம் இழுத்து மூடப்படும். அதற்குப் பிறகு இந்த பூமியில் (இந்த பரீட்சைக் கூடத்தில்) தோன்றி மறைந்த -முதல் மனிதனில் இருந்து இறுதி மனிதன் வரை- அனைவரும் உயிர்கொடுத்து எழுப்பப்பட்டு விசாரிக்கப் பட உள்ளார்கள்.
5. விசாரணைக்குப் பிறகு நம்முடைய நற்செயல் அல்லது தீய செயல்களின் எடையைப் பொறுத்து நமக்கு சொர்க்கமோ அல்லது நரகமோ விதிக்கப்பட உள்ளது.
6. மறுமை வாழ்விடம் - சொர்க்கத்திலோ அல்லது நரகத்திலோ - அதுதான் மனிதனின் நிரந்தர மற்றும் உண்மையான வாழ்விடம் ஆகும்.
மேற்கண்ட உண்மைகளை கருத்தில்கொண்டு அதற்கேற்ப வாழும்போது உண்டாகும் பொறுப்புணர்வுக்கே இறையச்சம் என்று கூறப்படும். அதாவது பூமியில் மனிதன் ஒழுக்கம் பேணி வாழ்வதற்கான அடிப்படையே இறையச்சம்!
இளமைப்பருவம் கேள்விக்குரியது:
= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'உனக்கு, ஐந்து விடயங்கள் வருவதற்கு முன்னர், ஐந்து அருட்கொடைகளை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள் அவை:
1. மரணம் வரமுன் வாழ்க்கையையும்.
2. நோய் வரமுன் உடல் ஆரோக்கியத்தையும்.
3. அதிக வேலைப்பழு வருமுன் ஓய்வு நேரத்தையும்.
4. முதுமை வருமுன் இளமைப் பருவத்தையும்.
5. வறுமை வருமுன் செல்வநிலையையும்'
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரழி (நூல் : நஸாயீ)
= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"மறுமை நாளில் ஓர் அடியான் நான்கு வினாக்களுக்கு விடையளிக்கும் வரை அவனது கால்கள் இரண்டும் நகர முடியாது. அவை:
1. தனது (உலக) வாழ்வை எவ்வாறு கழித்தான்?
2. தனது வாலிபப் பருவத்தை எவ்வழிகளில் ஈடுபடுத்தினாய்?
3. செல்வத்தை எவ்வாறு சம்பாதித்தாய்? அதை எவ்வாறு செலவழித்தாய்?
4. பெற்ற அறிவின் மூலம் என்ன செய்தாய்?'
அறிவிப்பவர் : முஆத் இப்னு ஜபல் (ரழி) (நூல் : தப்ரானி)
================