நபிகளாரின் எதிரி முன்வைத்த கேள்வி
நபிகள் நாயகம் அவர்கள் தங்கள் வாழ்நாளின் போது மக்கா நகரில் சத்தியப்
பிரச்சாரம் செய்து மக்களை நேர்வழிக்கு அழைத்துக் கொண்டிருந்தார்கள். சிலை
வழிபாட்டைக் கைவிட்டுவிட்டு படைத்தவனை நேரடியாக வணங்குங்கள், சக மனிதனை சமமாகவும்
சகோதரனாகவும் பாவியுங்கள், மனித உரிமை மீறலையும் பெண்களை அடிமைகளாக நடத்துவதையும் கைவிடுங்கள்,
பெற்றோரையும் உற்றாரையும் பேணுங்கள், ஒழுக்கம் பேணி வாழுங்கள் என்பனவே அவரது
அழைப்பின் சாரம்.
அவ்வாறு ஒழுக்கம் பேணாமல் தான்தோன்றித்தனமாக வாழ்வோருக்கு
மறுமையில் நரக தண்டனை காத்திருக்கிறது என்றும் எச்சரித்தார்கள். மூதாதையரின் மூடப்
பழக்க வழக்கங்களுக்கு அடிமைகளாயிருந்த மக்களில் பெரும்பாலோர் நபிகளாரது
பிரச்சாரத்திற்கு எதிராக நின்றார்கள். நபிகளாரின் பிரச்சாரத்தைக் கேட்டு மக்கள்
ஒழுக்க வாழ்வு வாழ ஆரம்பித்தால் தங்கள் ஆதிக்கமும் சுரண்டலும் தொடர முடியாது
என்பதை உணர்ந்த மக்காவின் ஆதிக்க வர்க்கமும் இடைத் தரகர்களும் அவரை முழு மூச்சாக
எதிர்த்தார்கள். நபிகளாரையும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட மக்களையும் துன்புறுத்தினார்கள்.
அடக்கு முறைகளையும் சித்திரவதைகளையும்
ஏவினார்கள்.
எதிரியை எதிர்கொண்ட நபிகளார்
ஒருநாள் நபிகளாரின் பிரச்சாரத்திற்கு பெரும் எதிரியாக விளங்கிய உபை
பின் கலஃப் என்பான் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தான். அவன் கையில்
மக்கிப்போனதோர் எலும்பு இருந்தது அதை அவன் நொறுக்கி , காற்றில் தூற்றியவாறு,
“முஹம்மதே அல்லாஹ் இதை மறுபடியும் உயிர் கொடுத்து எழுப்புவான் என்று கருதுகிறீரா?
" எனக் கேட்டான்.
நபி (ஸல்) அவர்கள், " ஆம் உயர்ந்தோன் அல்லாஹ் உன் உயிரைக் கைப்பற்றுவான் . பின்னர்
மறுபடியும் உயிர்கொடுத்து உன்னை எழுப்புவான் , பின்னர் உன்னை நாகத்திற்குக்
கொண்டுசெல்வான்" என்று உறுதியான மொழிகளில் பதிலளித்தார்கள் .
அப்போது இறைவன் புறத்திலிருந்து நபிகளாருக்கு இறங்கிய வசனங்களே
கீழ்கன்டவை:
= மனிதனை ஒரு துளி
இந்திரியத்திலிருந்து நாமே நிச்சயமாகப் படைத்தோம் என்பதை அவன் பார்க்கவில்லையா? அவ்வாறிருந்தும், அவன் (நமக்கு)
வெளிப்படையான தர்க்கவாதியாகி விடுகிறான். மேலும், அவன் தன் படைப்பை
(தான் படைக்கப்பட்டதெப்படி என்பதை) மறந்துவிட்டு, அவன் நமக்காக ஓர்
உதாரணத்தையும் கூறுகின்றான்;
“எலும்புகள் அவை மக்கிப் போய் விட்ட
பின் அவற்றை உயிர்ப்பிப்பது யார்?”
என்று. “முதல் முதலில்
அவற்றை உண்டு பண்ணியவனே (பின்னும்) அவற்றுக்கு உயிர் கொடுப்பான். அவன் எல்லாவகைப்
படைப்புகளையும் நன்கறிந்தவன்”
என்று (நபியே!) நீர் கூறுவீராக!
(திருக்குர்ஆன் 36:77-79)
அதாவது மறுபடியும் உயிர் கொடுத்து எழுப்பப்படுவதை மறுப்பவன், தொடக்கத்தில்
படைக்கப்பட்டதைச் சான்றாகக் கொள்ளமாட்டானா?
ஏனெனில் , அல்லாஹ் மனிதனைப் படைத்தது . ஓர் அற்பமான (விந்து) நீரின்
சத்திலிருந்துதான்-. அதாவது அற்பமான பலவீனமான ஒன்றிலிருந்தே- மனிதனைப் படைத்தான் .
வேறு வசனங்களில் இறைவன் குறிப்பிடுகின்றான்:
= “நாம் உங்களை அற்பமான நீரிலிருந்து படைக்கவில்லையா? (திருக்குர்ஆன் 77:20)
= “நாம் மனிதனை ( இரு உயிர்மூலக் கூறுகளின் ) கலவையான
விந்திலிருந்து -அதாவது பல்வேறு நீரியல் தாதுக்கள் கொண்ட விந்திலிருந்து - படைத்தோம்
(திருக்குர்ஆன் 7:62)
ஆக, இத்தகைய பலவீனமான விந்துத் துளியிலிருந்து மனிதனைப் படைத்த
இறைவனுக்கு . மனிதன் இறந்த பின் அவனை மறுபடியும் படைக்க இயலாதா? என்று
சிந்திக்கச் சொல்கிறான் இறைவன்.
படைப்பினங்களைக் கண்டு படைத்தவனின் வல்லமை அறிவாய்
இறைவனின் வல்லமையை ஆராய்ந்து அறிவோருக்கு மீண்டும் படைக்கப் படுதல்
சாத்தியமே என்பதை கண்டிப்பாக உணர முடியும். நாம் மூட்டும் நெருப்பும் எல்லை
அறியப்படாத வான மண்டலங்களும் நாம் வசிக்கும் பூமியும் எல்லாம் அந்த இறைவனின்
வல்லமையை எடுத்துரைக்கும் சான்றுகளாக நிற்கின்றன.
= அவன் எத்தகையவனென்றால், உங்களுக்காக பசுமையான மரத்திலிருந்து நெருப்பை உண்டாக்கினான், அப்போது அதிலிருந்து நீங்கள் (நெருப்பை) மூட்டுகிறீர்கள்.
வானங்களையும் பூமியையும்
படைத்தவன், அவர்களைப் போன்றவர்களைப் படைக்கச் சக்தியற்றவனா? ஆம் (சக்தியுள்ளவனே!) மெய்யாகவே, அவனே (பல வகைகளையும்) படைப்பவன்; யாவற்றையும் நன்கறிந்தவன். அவன் ஏதாவது ஒருபொருளைப் படைக்க நாடினால், அவன் செய்வது ‘ஆகுக!’ என்று அதற்கு ஆணை
இடுவதுதான்; உடனே அது ஆகிவிடுகின்றது! (திருக்குர்ஆன்
36:80- 82)
= சகலவற்றின் அதிகாரமும் எவனுடைய
கையில் இருக்கின்றதோ அவன் மிகப் பரிசுத்தமானவன். அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு
வரப்படுவீர்கள். (திருக்குர்ஆன் 36:83)
================