இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 12 பிப்ரவரி, 2013

ஆதலினால் காதல் செய்யாதீர்!

பாலியல் உணர்வுகளுக்கு வடிகால் – திருமணம் மூலம் மட்டுமே!

மனிதனது வாழ்க்கை பல குழப்பங்கள், சிக்கல்கள், சஞ்சலங்கள் போன்ற எண்ணற்ற இடர்களுடன் பின்னிப்பினைந்த ஒரு கலவையாக இருப்பதனை நாம் உணர்கின்றோம். இந்த சிக்கல்களிலேயே மனிதனை ஆட்டிப்படைப்பது, அவனது பாலியல் உணர்வுகள் என்பதில் ஐயமில்லை. படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை இந்த விடயத்தில் தடம் புரழ்வதை நாம் கண்டு வருகிறோம். எனவே இந்த உணர்வுகளைப்படைத்த இறைவன் அதற்கான வடிகாலையும் செவ்வனே மனித சமூகத்திற்குத் தந்து இல்வாழ்க்கையென இனிக்க வைத்துள்ளமை ஒரு மாபெரும் அருட்கொடையே!
நீங்கள் மன நிம்மதி பெறுவதற்காக உங்களிலிருந்தே உங்கள் ஜோடிகளைப் படைத்திருப்பதும் உங்களிடையே அன்பையும், நேசத்தையும் உண்டாக்கிருப்பதும், அவனது அத்தாட்சிகளில் உள்ளதாகும். சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக இதில் (பற்பல) அத்தாட்சிகள் உள்ளன. (அல்குர்ஆன் 30:21)
ஒருபுறம் பாலியல் உணர்வுகளை எப்படி வேண்டுமானாலும் நிறைவேற்றிக்கொள்ளும் வரம்புகளற்ற காட்டுமிராண்டித்தனத்தையும் அதன் விளைவாக வளர்ந்து வரும் தந்தைகளற்ற தலைமுறைகளையும் காண்கிறோம்.
மறுபுறம் சிலர் மதக்கட்டுப்பாடுகள் என்று சொல்லியும் திருமணம் ஆன்மீகத்துக்கு எதிரானது என்று சொல்லியும் மனித இயற்க்கைக்கு எதிரான துறவறத்தை வலியுறுத்துவதையும் காண்கிறோம். அதன் விபரீதமான விளைவுகளை ஊடகங்கள் இன்று தோலுரித்துக் காட்டுவதையும் கண்டு வருகிறோம்!
ஆனால் மனித இயற்கையை வரைந்த இறைவனோ தனது மார்க்கத்தில் திருமணம் செய்து கொள்வதைக் கட்டாயமாக்குகிறான்.
 ‘உங்களில் வாழ்கை துணையில்லாதவருக்கும், உங்களுடைய ஆண் அடிமைகளுக்கும், இன்னும் நல்லொழுக்கமுள்ள அடிமைப் பெண்களுக்கும் திருமணம் செய்து வையுங்கள். அவர்கள் ஏழைகளாக இருந்தால் அல்லாஹ் தன்னுடைய பேரருளைக் கொண்டு அவர்களை செல்வந்தர்களாக்கி வைப்பான். மேலும் அல்லாஹ் மிக்க விசாலமானவன் நன்கறிந்தவன்  (அல்குர்ஆன்  24:32)
திருமண உறவுகளுக்கு அப்பாற்பட்ட அந்நிய ஆண்கள் மற்றும் அன்னியப் பெண்கள் இடையேயான அனைத்து உறவுகளும் இறைவனிடம் சட்ட விரோதமானவையே! காதல் என்ற பெயரில் இன்று நடந்துவரும் அந்நிய ஆண் பெண் பழகுதல், பேசுதல், ஒன்றாக இருத்தல் கூடிக்குலவுதல் போன்ற அனைத்துமே இறைவனிடம் தண்டனைக்குரிய குற்றங்களாகும்.
ஒரு ஆண் மனைவியை மட்டுமே காதலிக்க முடியும். ஒரு பெண் கணவனை மட்டுமே காதலிக்க முடியும்.இதற்கு அப்பாற்பட்ட அனைத்தும் கள்ளக்காதல்களே! இது ஒரு தீவிரவாதமாக சிலருக்குப் படலாம். ஆனால் ஒரு ஒழுக்கம் நிறைந்த சமுதாயம் உருவாக வேண்டும் என்று விரும்புவோர் மட்டுமே இதை நியாயம் என்று உணர்வார்கள்!
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
வாலிபர்களே உங்களில் யார் சக்தி பெறுவாரோ அவர் திருமணம் முடித்துக் கொள்ளட்டும். நிச்சயமாக அது (திருமணம்) கற்பைக் காத்துக் கொள்வதற்கும் பார்வையைத் தாழ்த்திக் கொள்ளுவதற்கும் (போதுமானது)…..’ (புகாரி)
(இங்கு சக்தி என்பது உடல்நலம் மற்றும் பெண்ணுக்கு நல்கவேண்டிய மகர் என்ற மணக்கோடையைக் குறிக்கும்)
சம்பந்தி உறவுகளை ஏற்படுத்தியவன் இறைவனே!
அவனே நீரிலிருந்து மனிதனைப் படைத்தான். அவனுக்கு (பிறப்பினால் வந்த) இரத்த சம்பந்தமான உறவுகளையும், (திருமணத்தால் வந்த) சம்பந்தி உறவுகளையும் ஏற்படுத்தினான்’. (திருக்குர்ஆன் 25:54 )
துறவறம் கூடாது :
இறைவன் அனுப்பிய திருத்தூதர்கள் அனைவரும் திருமணம் முடித்து இல்வாழ்க்கை வாழ்ந்து உண்மையான ஆன்மிகம் எது என்பதைக் கடைப்பிடித்து வாழ்ந்து காட்டிச் சென்றார்கள்.
உமக்கு முன் தூதர்களை அனுப்பினோம். அவர்களுக்கு மனைவியரையும் மக்களையும் ஏற்படுத்தினோம்’. (அல்குர்ஆன் 13:38)
 அவ்வழியில் இறுதியாக வந்த நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள் :
திருமணம் எனது வழிமுறையாகும். யார் எனது வழிமுறையைப் பின்பற்றவில்லையோ அவர் என்னைச் சேர்ந்தவர் அல்ல.
அவர்கள் தாமாகவே புதிதாக உண்டாக்கிக் கொண்ட துறவித்தனத்தை நாம் அவர்கள் மீது விதிக்க வில்லை. அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைய வேண்டியேயன்றி (அவர்களே அதனை உண்டுபண்ணிக் கொண்டார்கள்) (அல்குர்ஆன் 57:27)


மேற்கண்டவை அனைத்தும் பாலியல் தொடர்பான இறைவனின் வழிகாட்டுதல்கள். யாரேனும் இவற்றை மீறி தங்கள் பாலியல் உணர்வுகளை தீர்த்துக் கொண்டால் அவர்கள் விபச்சாரக் குற்றத்திற்கு ஆளாகிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு ஒரு இறைசட்டத்தை அடிப்படையாகக் கொண்ட அரசு இருக்குமானால் அவர்களுக்கு வழங்கப் படும் தண்டனையாவது பின்வருமாறு:

= குற்றவாளி திருமணம் ஆகாதவராக இருந்தால் அவருக்கு பொதுமக்கள் முன்பாக நூறு கசையடிகள் கொடுக்கப்படும்.
= குற்றவாளி திருமணம் ஆனவராக இருந்தால் பொதுமக்களுக்கு முன்பாக கல்லால் எறிந்து கொல்லப்படுவார்.
சரி, இந்த தண்டனை பெறாமல் பூமியின்மீது நடமாடிக் கொண்டிருபோரின் நிலை என்ன?
இந்தப் பாவத்திற்காக மனம் வருந்தி இறைவனிடம் மன்னிப்பு பெறாத நிலையிலேயே அவர்கள் மரணத்தைத் தழுவி விட்டால் அவர்களுக்கு மறுமையில் நரகநெருப்பின் தண்டனை காத்திருக்கிறது. அதிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது.
ஒரு ஆரோக்கியமான சமூகம் பூமியில் அமைக்க விரும்பும்  இறைவிசுவாசிகளுக்கு இறைவன் தன் திருமறையில் இவ்வாறு கூறுகிறான்:
நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள்; நிச்சயமாக அது மானக்கேடானதாகும். மேலும், (வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீய வழியாகவும் இருக்கின்றது” (அல்-குர்ஆன் 17:32)
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக