இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 5 பிப்ரவரி, 2013

வலிய வந்து தண்டனை பெற்ற குற்றவாளி!



பாலியல் வன்முறைகள் – தீர்வுகள் 
விபச்சாரம் என்பது குடும்ப அமைப்புகளையும் தலைமுறைகளையும் சின்னாபின்னமாக்கும் ஒரு பெருங்குற்றம் என்பதை அனைவரும் அறிவோம்..  இவ்வுலகின் அதிபதியும் தனது உலகில் இதைச் செய்ய அனுமதி மறுக்கிறான். இது இவ்வுலகிலேயே திருத்தப்பட வேண்டியது ஒன்றாகும். இப்பாவத்தை செய்வோருக்கு இறை சட்டத்தின் அடிப்படையில் அமைந்த அரசு இருந்தால் அவ்வரசு தண்டனை கொடுக்க வேண்டும் என்பது இறைவனின் ஆணை! எனவே இப்பாவத்தைச் யாரேனும் செய்தால் அந்த தண்டனையைப் பெற்றுக்கொண்டு இறைவனிடம் பாவமன்னிப்பு தேடினால் மறுமையில் நரக நெருப்பின் தண்டனையில் இருந்து தப்பிக்கலாம். இல்லையேல் அவர் மரணிக்கும்போது பாவியாகவே மரணிக்கிறார் என்பதுதான் அப்பட்டமான உண்மை.
இந்த தண்டனைகளைப் பொறுத்தவரை ஆண்கள் பெண்கள் என்ற பிரிவினைகள் ஏதும் இல்லை.
திருமணமாகாதவர்களுக்கான தண்டனையானது திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது: 
விபச்சாரியும், விபச்சாரனும் இவ்விருவரில் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள், மெய்யாகவே, நீங்கள் இறைவனின் மீதும், இறுதிநாள் மீதும் நம்பி க்கை கொண்டவர்களாக இருந்தால், இறைவனின் சட்டத்(தை நிறைவேற்றுவ)தில், அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம், இன்னும் அவ்விருவரின் வேதனையையும் விசுவாசிகளில் ஒரு கூட்டத்தார் (நேரில்) பார்க்கட்டும்’ (அல்குர்ஆன் 24:2) 
திருமணமானவர்களாக இருந்தால் அவர்களைக் கல்லால் எறிந்து கொல்லவேண்டும் என்பது இறைக்கட்டளை. நபிகள் நாயகம் (ஸல்) அந்த முறையில் தண்டனைகளை நிறைவேற்றியுள்ளார்கள். (ஆதாரம்:நூல்கள்: புகாரி, திர்மிதி 1451)
நபிகளார் காலத்தில் நிறைவேற்றப்பட்ட தண்டனை
 நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆட்சித் தலைவராக இருந்தபோது மக்களிடம் கருணை உள்ளத்தோடு நடந்து கொண்ட போதும் நீதி வழுவாமல் நடந்து கொண்டார். இறைவனின்  கட்டளைகளை முன்னுதாரணமாக நின்று நடைமுறைப் படுத்தினார். தன் உணர்வுகளுக்கு ஆட்பட்டு சட்டத்தை நிலைநிறுத்துவதில் அவர் வளைந்து கொடுத்திருந்தால் அந்த முன்னுதாணத்தின் அடிப்படையில் பிற்காலத்தில் மக்களால் சட்டம் வளைக்கப் பட்டிருக்கும் என்பதை மனதில் இருத்தி பின்வரும் நிகழ்வைப் படியுங்கள்:
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, தான் விபச்சாரம் செய்ததாக ஒப்புக் கொண்டார். நபி (ஸல்) அவர்கள் அவரைக் கண்டு கொள்ளாமல் இருந்தார்கள். மீண்டும் கூறினார். அப்போதும் நபி (ஸல்) அவர்கள் அவரைக் கண்டு கொள்ளாமல் இருந்தார்கள். முடிவில் நான்கு தடவை தனக்கு சாட்சியம் கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘உமக்கு பைத்தியம் ஏதும் பிடித்துள்ளதா?’ என்று கேட்டார்கள். அவர் இல்லை என்றார். நீர் மணமுடித்தவரா? என்று கேட்டார்கள். அவர் ஆம் என்றார். அதன் பின் நபி (ஸல்) அவர்கள் கல்லெறியுமாறு கட்டளையிட முஸல்லா என்ற இடத்தில் கல்லெறியப்பட்டார். கல்லெறி விழுந்ததும் அவர் ஓடலானார். பிடிக்கப்பட்டு மீண்டும் கல்லெறியப்பட்டு மரணித்தார். நபி (ஸல்) அவர்கள் அவரைப் புகழ்ந்துரைத்தார்கள். (நூல்கள்: புகாரி, திர்மிதி 1451)
குற்றம் செய்துவிட்டு தலைமறைவாகி விடும் குற்றவாளிகளைத்தான் உலகம் கண்டிருக்கிறது. ஆனால் இங்கு குற்றவாளி தண்டனையை அதுவும் மரண தண்டனையை வலிய வந்து கேட்கிறார். என்ன ஒரு அற்புதம்?
குற்றம் செய்த நபர் வலியவந்து தானாகவே குற்றத்தை ஒப்புக்கொண்டு அதற்குரிய தண்டனை பெறக் காரணம் அவர் மறுமையில் நரக தண்டனை என்பது இதைவிட பலமடங்கு கடினமானதாக இருக்கும் என்பதை மனப்பூர்வமாக உணர்ந்திருந்தனால்தான்! அவரது உள்ளத்தில் ஏற்கனவே புகுந்திருந்த பகுத்தறிவு பூர்வமான இஸ்லாமிய கடவுள் கொள்கையும் மறுமைக் கொள்கையும்தான் குற்றம் செய்த பின்னும் அவரை விடாமல் உறுத்தியிருக்கிறது. ஒருகணம் சிந்தித்துப் பாருங்கள், இவ்வாறு தெளிவான கடவுள் கொள்கையையும் மறுமைக் கொள்கையையும் பள்ளிக் கூடங்களிலேயே போதித்திருந்தால் பாவம் செய்யும் தலைமுறைகள் நாட்டில் உருவாகுமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக