மறுமை வாழ்க்கையே உண்மையானது
ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது பரீட்சைக்காக கெடுதியையும் நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர் நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள். (திருக்குர்ஆன் 21:35)
இங்கு இறைவனுக்கு கட்டுப்பட்டு வாழ்பவர்களுக்கு மறுமையில் சொர்க்கத்தைப் பரிசாக வழங்குகிறான். கட்டுப்படாமல் தான்தோன்றித் தனமாக வாழபவர்களுக்கு தண்டனையாக நரகத்தை வழங்குகிறான்.
· நமது உண்மையான மற்றும் நிலையான முடிவில்லாத வாழ்க்கை என்பது மரணத்துக்குப் பிறகு உள்ள வாழ்க்கைதான். அது ஒன்று சொர்க்கத்தில் அமையும் அல்லது நரகத்தில் அமையும். இவை இரண்டும் அல்லாத வேறு ஒரு வாழ்க்கை கிடையாது.
· இன்று நமக்கு கிடைத்திருக்கும் வாழ்க்கை என்ற வாய்ப்பு ஒரே ஒரு முறை கிடைப்பது. மீண்டும் மீண்டும் பிறப்பது என்பது கிடையாது. அதுவும் அவரவரது மரணம் வரை மட்டுமே இவ்வாய்ப்பு நீடிக்கும்.
ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும் அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான் உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்¢ எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்; இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை. (திருக்குர்ஆன் 3:185)
· எனவே இவ்வாழ்க்கை என்ற பரீட்சையில் சஞ்சலங்களுக்கு இடம் கொடாமல் உன்னிப்பாக, கவனமாக ஒழுங்குற செயல்பட்டால் நாம் நிரந்தர இன்பங்கள் நிறைந்த மற்றும் சொர்க்கத்தை சென்றடைவோம். ஆனால் இப்பரீட்சையை உதாசீனமாக எடுத்துக்கொண்டு தான்தோன்றித்தனமாக செலவிட்டால் நாம் சென்று வீழ்வது நரகப்படுகுழியில்தான் அதுவோ முடிவில்லாத நிரந்தரமான இருப்பிடமாகும்.
மறுமை சாத்தியமா?
· சொர்க்கம் நரகம் என்பது கற்பனையோ மாயையோ அல்ல என்பதை சற்று சிந்தித்தால் உணரலாம். சாதாரண ஒரு இந்திரியத் துளியில் இருந்து உருவாகி இன்று பூமியில் நடமாடிக்கொண்டிருக்கிறோம். இது எப்படி வாஸ்தவமோ அதைவிட வாஸ்தவம் அது, இதை நடத்திக்கொண்டிருக்கும் இறைவனுக்கு நம்மை மீண்டும் படைப்பது என்பது கடினமானது அல்ல.
''மனிதனை ஒரு துளி இந்திரியத்திலிருந்து நாமே நிச்சயமாகப் படைத்தோம் என்பதை அவன் பார்க்கவில்லையா? அவ்வாறிருந்தும், அவன் (நமக்கு) வெளிப்படையான தர்க்க வாதியாகி விடுகிறான்.மேலும், அவன் தன் படைப்பை (தான் படைக்கப்பட்டதெப்படி என்பதை) மறந்துவிட்டு, அவன் நமக்காக ஓர் உதாரணத்தையும் கூறுகின்றான்; ''எலும்புகள் அவை மக்கிப் போய் விட்ட பின் அவற்றை உயிர்ப்பிப்பது யார்?'' என்று. (நபியே!) நீர் கூறுவீராக! ''முதல் முதலில் அவற்றை உண்டு பண்ணியவனே (பின்னும்) அவற்றுக்கு உயிர் கொடுப்பான். அவன் எல்லாவகைப் படைப்புகளையும் நன்கறிந்தவன்'' என்று' (திருக்குர்ஆன் 36: 77-79)
· இறுதித்தீர்ப்பு நாளின்போது ஒவ்வொரு மனிதனும் இப்பூமியின் மீது செய்த புண்ணியங்களும் பாவங்களும் எடுத்துக்காட்டப் படும். புண்ணியங்களை அதிகமாக சம்பாதித்தவர்களுக்கு சொர்க்கம் விதிக்கப்படும் பாவங்களை அதிகமாக சம்பாதித்தவர்களுக்கு நரகம் விதிக்கப்படும்.
சொர்க்கம் என்பது எப்படி இருக்கும்?
· அது ஓர் சாந்தியும் சமாதனமுமான இருப்பிடம். அங்கு கவலை, தீமை, பகை, சோர்வு, நோய், முதுமை, பஞ்சம், போன்ற எதற்குமே இடம் இல்லை. திகட்டாத இன்பங்களில் ஊறித் திளைக்கும் இடம் அது.. தோட்டங்களும் பூங்காவனங்களும் மாசற்ற நீரூற்றுகளும் உயர் மாளிகைகளும் சுவைமிக்க கனிகளும் உணவுகளும் பானங்களும் அளவின்றி அனுபவிக்க இறைவன் ஏற்பாடு செய்த இடம்! என்றும் இளமையோடு இருக்கும் இடம்! காரணம் மரணம் என்பது இனி இல்லையல்லவா?
இதோ தனது திருமறையில் இறைவன் கூறுகிறான்:
நிச்சயமாக எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு அவர்களுடைய இறைவன் அவர்கள் இறைநம்பிக்கை கொண்ட காரணத்தினால் நேர் வழிகாட்டுவான் இன்பமயமான சுவனபதிகளில் அவர்களுக்குக் கீழ் நதிகள் ஓடிக் கொண்டிருக்கும். (திருக்குர்ஆன் 10:9)
பொன் தட்டுகளும், கிண்ணங்களும் அவர்களைச் சுற்றிக் கொண்டேயிருக்கும் இன்னும் அங்கு அவர்கள் மனம் விரும்பியதும், கண்களுக்கு இன்பம் தருவதும் அதிலுள்ளன. இன்னும், 'நீங்கள் இங்கு என்றென்றும் தங்கியிருப்பீர்கள்!' (என அவர்களிடம் சொல்லப்படும்.) (திருக்குர்ஆன் 43:71)
பயபக்தியுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள சுவர்க்கத்தின் உதாரணமாவது: அதில் மாறுபடாத தெளிந்த நீரைக் கொண்ட ஆறுகளும், தன் சுவை மாறாத பாலாறுகளும், அருந்துவோருக்கு இன்பமளிக்கும் மது ரச ஆறுகளும், தெளிவான தேன் ஆறுகளும் இருக்கின்றன. இன்னும், அதில் அவர்களுக்கு எல்லா விதமான கனிவகைகளும், தங்கள் இறைவனின் மன்னிப்பும் உண்டு. (இத்தகையோர்) நரகத்தின் எவன் என்றென்றுமே தங்கியிருந்து, கொதிக்கும் நீர் புகட்டப்பட்டு (அதனால்) குடல்களெல்லாம் துண்டு துண்டாகிவிடுமோ அவனுக்கு ஒப்பாவாரா? (திருக்குர்ஆன் 47:15)
எவர்கள் இறைநம்பிக்கை; கொண்டு, நற்காரியங்கள் செய்கிறார்களோ அவர்களை, சதா கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதியிலுள்ள உயர்ந்த மாளிகைகளில், நிச்சயமாக நாம் அமர்த்துவோம். அவற்றில் அவர்கள்நிரந்தரமாக (நிலைத்து) இருப்பார்கள். (இவ்வாறாக நற்)செயல்கள் புரிவோரின் கூலியும் பாக்கியம் மிக்கதாகவே உள்ளது. (திருக்குர்ஆன் 29:58)
· சொர்க்கத்தைப் போலவே நரகமும் மறுபுறம் காத்திருக்கிறது. அது இறைவனின் அருட்கொடைகளுக்கு நன்றி மறந்து தான்தோன்றித்தனமாக வாழ்ந்த கொடியோருக்காகவும் இறைவனையும் அவன் தூதர்களையும் வேதங்களையும் நிராகரித்தோருக்காகவும் காத்திருக்கிறது. கொழுந்துவிட்டு எரியும் நெருப்பின் நடுவே மரணமற்ற வாழ்வும் அகோர பசியும் தாகமும் அதைத்தீர்க்க உணவாக முட்செடிகளும் கொதிநிலை அடைந்த பானங்களும் என்று தொடர் வேதனைகளின் இருப்பிடமாக இருக்கும். நரக வேதனைகள் பற்றி திருக்குர் ஆன் எச்சரிக்கிறது:
நிச்சயமாக எவன் தன் இறைவனிடத்தில் குற்றவாளியாக வருகிறானோ, அவனுக்கு நரகம் நிச்சயமாக இருக்கிறது¢ அதில் அவன் மரிக்கவும் மாட்டான் வாழவும் மாட்டான். (திருக்குர்ஆன் 20:74)
அவர்களுக்கு நரகத்தில் (நெருப்பு) விரிப்புகளும், (போர்த்திக் கொள்வதற்கு) அவர்களுக்கு மேலே நெருப்புப் போர்வைகளும் உண்டு - இன்னும் இவ்வாறே அநியாயம் செய்பவர்களுக்கு நாம் கூலி கொடுப்போம். (திருக்குர்ஆன் 7:41)
யார் நம் வேதவசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்களை நாம் நிச்சயமாக நரகத்தில் புகுத்தி விடுவோம்¢ அவர்கள் தோல்கள் கருகிவிடும் போதெல்லாம் அவையல்லா (வேறு) தோல்களை, அவர்கள் வேதனையைப் (பூரணமாக) அனுபவிப்பதற்கென, அவர்களுக்கு நாம் மாற்றிக் கொண்டே இருப்போம் - நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான். (திருக்குர்ஆன் 4:56)
(நரக) நெருப்பு அவர்களுடைய முகங்களை கரிக்கும்¢ இன்னும் அதில் அவர்கள் உதடு சுருண்டு (முகம் விகாரமானவர்களாக) இருப்பார்கள். (திருக்குர்ஆன் 23:104)
ஆனால் எவர்கள் (வரம்பு மீறிப்) பாவம் செய்தார்களோ, அவர்கள் தங்குமிடம் (நரக) நெருப்புத்தான் - அவர்கள் அதை விட்டு வெளியேற நாடும் போதெல்லாம் அதிலேயே மீண்டும் தள்ளப்பட்டு: 'எதனை நீங்கள் பொய்ப்பித்துக் கொண்டிருந்தீர்களோ அந்த (நரக) நெருப்பின் வேதனையை அனுபவியுங்கள்'' என்று அவர்களுக்குச் சொல்லப்படும். (திருக்குர்ஆன் 32:20)
நிச்சயமாக நரகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது. வரம்பு மீறியவர்களுக்குத் தங்குமிடமாக! அதில் அவர்கள் பல யுகங்களாகத் தங்கியிருக்கும் நிலையில். அவர்கள் அதில் குளிர்ச்சியையோ குடிப்பையோ சுவைக்கமாட்டார்கள்!...... கொதிக்கும் நீரையும் சீழையும் தவிர.! (திருக்குர்ஆன் 78:21)
(நபியே!) இன்னும் நீர் கூறுவீராக: 'இந்தச் சத்திய (வேதம்) உங்கள் இறைவனிடமிருந்து (வந்து)ள்ளது¢' ஆகவே, விரும்புபவர் (அதனை) நம்பி கொள்ளட்டும். விரும்புபவர் (அதனை) நிராகரிக்கட்டும். அநியாயக் காரர்களுக்கு (நரக) நெருப்பை நிச்சயமாக நாம் சித்தப்படுத்தியுள்ளோம் (அந்நெருப்பின்) சுவர் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும்¢ அவர்கள் (தண்ணீர் கேட்டு) இரட்சிக்கத் தேடினால் உருக்கப்பட்ட செம்பு போன்ற தண்ணீரைக் கொண்டே இரட்சிக்கப்படுவார்கள். (அவர்களுடைய) முகங்களை அது சுட்டுக் கருக்கி விடும்¢ மிகக் கேடான பானமாகும் அது! இன்னும் இறங்கும் தலத்தில் அதுவே மிகக் கெட்டதாகும். (திருக்குர்ஆன் 18:29)
ஆக, நரக வேதனை என்பது தாங்க முடியாதது. அதிலிருந்து தப்பிக்க வேண்டுமானால் நாம் மரணத்திற்கு முன்பாக இறைவனிடம் மன்னிப்பு கோரி திருந்திய வாழ்க்கை வாழவேண்டும். இறைவன் நம் அனைவரையும் நரகிலிருந்து காப்பானாக! சொர்க்கம் செல்லும் நன்மக்களில் நம்மை சேர்த்து வைப்பானாக!
===================
இஸ்லாம் என்றால் என்ன? முஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!
இதைப் படிக்காவிட்டால் இழப்பு! பேரிழப்பு!
நாம் ஏன் பிறந்தோம்?
இதயங்களை வென்ற இறைத்தூதர்
நாம் பின்பற்றவேண்டிய தலைவர் யார்?
http://quranmalar.blogspot.com/2012/11/blog-post_9390.html


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக