சந்தேகத்துக்கு இடமின்றி உலகில் அதிவேகமாகப் பரவும் வாழ்வியல் கொள்கை இஸ்லாம். தனது பகுத்தறிவு பூர்வமான கொள்கைகளால் உலகில் ஏறக்குறைய மூன்றில் ஒருவரை தன்னுள் ஈர்த்து நிற்கிறது இஸ்லாம்! இந்த அழகிய வாழ்வியல் கோடிக்கணக்கான உலக மக்களை அவர்களைப் பீடித்திருந்த மூடநம்பிக்கை, மதச் சுரண்டல்கள், தீண்டாமை, ஜாதிக் கொடுமைகள், இனவெறி, அடிமைத்துவம் போன்ற பலசமூகத் தீமைகளில் இருந்து விடுவித்துள்ளது. இன்னும் தொடர்ந்து விடுவித்து வருகிறது என்பது உலகம் அனுபவித்து அறியும் உண்மை! இந்த உலகளாவிய மக்கள் விடுதலை இயக்கத்தின் முன்னோடியாகத் திகழ்ந்த நபிகள் நாயகத்தின் ஆரம்பகால வரலாற்றில் துயரம் மிக்க ஒரு நாளைத்தான் இங்கு காணவிருக்கிறோம். இதை அவரே தனது வாழ்வில் துயரமிக்க நாள் என்று கூறியுள்ளார்..
தாயிப் நகரத்து வீதியிலே...
மக்காவிலிருந்து 80 கி.மீ. தொலைவில் அமைந்திருந்த மலைவாசத்தலம் தாயிப். குளு குளு பிரதேசம்.
10 ஆண்டுகள் மக்காவில் தொடர்ச்சியாக இஸ்லாம் கற்பிக்கும் ஓரிறைக் கொள்கையை மக்களுக்கு எடுத்துரைக்கும் பணிகளில் ஈடுபட்டு அந்த திருச் செய்தியை யாரும் ஏற்காததால் நபி இன்னொரு களத்தை தேர்வு செய்கிறார்கள்; அதுதான் தாயிப் நகரம்!
அந்த சம்பவம் இதுதான்:
தாயிப் நகரின் சகீப் கோத்திரத்து பெருந்தலைவர்களை நபிகளார் சந்திக்க திட்டமிட்டு அவர்களை அணுகவும் செய்தார்கள். தங்களது திருச்செய்தியை அவர்கள் முன் சமர்பிக்கும்போது அவர்களில் ஒருவன் சொன்னான்: "உம்மைவிட்டால் வேறு யாரும் இறைவனுக்குத் தூதராக கிடைக்கவில்லையோ?"
அடுத்தவனோ, "நீர் உண்மையிலேயே இறைத்தூதராக இருப்பின் எனக்கு உம்மோடு பேசத்தகுதியில்லை! அப்படி இல்லையென்றால்.. என்னோடு பேச உமக்குத் தகுதி இல்லை!"- என்றான் கிண்டலுடன்.
மூன்றாமவன் இவர்களுக்குச் சற்றும் சளைத்தவனாக இல்லை. சொன்னான்: "உம்மை இறைத்தூதராக ஏற்றுக் கொள்வதைவிட அந்த கஅபாவின் திரைச்சீலையை கிழித்தெறிந்துவிடுவேன்!"
அவமானங்களின் மொத்த உருவமாக அவர்கள் இருந்ததோடு மட்டுமல்லாமல் மக்கள் ஈடேற்றம் பெறுவதற்காக தன்னலம் கருதாமல் அவர்களை நேர்வழிப்படுத்த சென்ற நபிகளார் மீது வன்முறையாளர்களை ஏவிவிட்டார்கள்; மன காயங்களோடு உடல் காயங்களை, ஏற்படுத்துவதற்காக.
கேலி, கிண்டல்கள், கூச்சல் ஆர்ப்பாட்டங்களோடு வெறி கொண்ட அந்த கூட்டம் நபிகளாரை தாயிப் நகரின் தெருக்களில் ஓட விட்டார்கள்.
சொல்லடியுடன், கல்லடியும் சேர நபியின் திரு உடலெங்கும் குருதிமயம்.
கால் செருப்புகள் குருதியின் ஈரத்தால் அன்பு நபியை சறுக்கிவிட அண்ணலார் விழுவதும், எழுவதுமாய் அங்கிருந்து சென்றார்கள்.
வன்முறைப் போக்கு ஊர் எல்லைவரைத் தொடர்ந்தது.
இந்தக் காட்சிகளை தன் துணைவியார் ஆயிஷா(ரலி) யிடம் விளக்கிக் கொண்டிருந்த நபிகளார், "அந்த சூழலில் நான் எங்கே சென்று தப்பித்துக் கொள்வது என்று திசைத் தெரியாமல் ஊருக்கு வெளியே இருந்த ஒரு திராட்சைத் தோப்புக்குள் தஞ்சம் புக வேண்டி வந்தது ஆயிஷா!"என்றார்கள் அன்பு நபி.
நபிகளாரின் பிரார்த்தனை
உடலெல்லாம் வலிக்க மனம் அதைவிட அதிகமாக வலிக்க.. அன்பு நபியின் இருகரங்கள் வானத்தை நோக்கி விரிந்தன.தனது இயலாமையை இறைவனிடமே முறையிடுகிறார்கள். பெரும் பிரார்த்தனையாய் அது வரலாற்றில் பதியப்படுகிறது. இதோ கேளுங்கள்:
"ஓ! இறைவா! எனது பலவீனத்தை, நாதியற்ற நிலையை, மக்கள் முன் எனக்குள்ள இழிநிலையை உன்னிடமே நான் முறையிடுகின்றேன்.
நீயே எனது எஜமானன்.
என்னை யாருடைய கையில் நீ ஒப்படைக்க போகிறாய்?
என்னைத் துன்புறுத்தக்கூடிய தூரத்து அந்நியன் ஒருவனிடமா? அல்லது என்னை எதிர்க்கவென நீ நாடியுள்ள ஒரு பகைவரிடமா?
அதெற்கெல்லாம் நான் கவலைப்படவில்லை. நீ மட்டும் என்னிடம் கோபம் கொண்டுவிடாதே!
உனது உதவியை அகன்றதொரு பாதையாக மாற்றிவிடு!
உன் பேரருள் பிழம்பின் ஒளியிலேயே நான் அடைக்கலம் தேடுகின்றேன்.
அதன் மூலமே அனைத்து இருள்களிலிருந்தும் ஒளி கிட்டுகின்றது.
அதன் மூலமே இம்மை-மறுமை அம்சங்கள் யாவும் ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளன.
உனது கோபத்தை என் மீது இறக்கிவிடாதே! உன் சோதனை என்னைப் பீடிக்கச் செய்துவிடாதே! நீ திருப்தி அடையும்வரை என்னை நீ கடிந்து கொள்வாய்! உன் மூலமே அன்றி எந்தவொரு அதிகாரமும் சக்தியும் எனக்கில்லை!"
உடன் வந்த வானவர் படை
இந்த சம்பவம் நிகழ்ந்ததும், தமது தலைக்கு மேலாக கருமேகம் கருத்து வருவதை நபிகளார் கண்டார்கள்.
வானவர் தலைவர் நபிகளார் முன் தோன்றுகிறார்.
"முஹம்மதுவே! (ஸல்) உமதிறைவன் உமது மக்கள் உம்மிடம் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதை கண்டான். அவர்கள் என்ன சொன்னார்கள் என்பதையும் கேட்டுக் கொண்டான். உமக்கு உதவியாக என்னை அனுப்பி வைத்துள்ளான்.
இதோ! இந்த மலைக்கு பொறுப்பு வகிக்கும் வானவர்கள் என்னோடு இருக்கிறார்கள். நீங்கள் ஒரே ஒரு ஆணையிடுங்கள், இரு மலைகளுக்கு இடையுள்ள இந்த தாயிப் நகர மக்களை நாங்கள் நசுக்கிவிடுகின்றோம்!"
நபிகளாரின் திருமேனியிலிருந்து வழிந்து கொண்டிருந்த உதிரப்போக்கு இன்னும் நிற்கவில்லை. கல்லடிப்பட்ட இடங்களின் வலியும்-வேதனையும் இன்னும் குறையவில்லை.
கருணையே வடிவான அண்ணலார்
இந்நிலையில் பதறியவாறு அன்பு நபிகளார் சொல்கிறார்கள்: "வேண்டாம்..! வேண்டாம்! இவர்களை விட்டு விடுங்கள். நாளை, இவர்களின் சந்ததிகளாவது எனது செய்தியை ஏற்கலாம். வேண்டாம்! வேண்டாம்..! இவர்களை விட்டுவிடுங்கள்!"
சாதாரண மனிதர்கள் யாராயினும் அங்கு உடனே எழுவது பழிவாங்கும் உணர்வு! அல்லது கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி அந்த மக்கள் மீது தான் யார் என்று தன்னைப் பெரிதாகிக் காட்டிக் கொள்ளும் உணர்வு! ஆனால் அண்ணல் நபிகளார் இங்கு இவை அனைத்தையும் தவிர்த்து தொலைநோக்கோடு செயல்படுவதைக் காணுங்கள். தன் வலிகளை விட தன் இலட்சியம் முக்கியம் என்பதால் அம்மக்களை அப்படியே மன்னிக்கிறார்கள்!
எதிரிகளை பழிவாங்கும் உணர்வில்லை. எதிரிகள் மீது எந்தவிதமான காழ்புணர்ச்சிகளும் இல்லை. அனைத்தும் அந்த நொடியில் மறைந்து போனது அங்கே!
அறியாமை இருளில் மூழ்கிக் கிடக்கும் மக்களை சீர்திருத்துவதே தன் பணி, இன்றில்லாவிடினும் என்றாவது நாம் முன்வைத்த கருத்தை இம்மக்கள் சீர்தூக்கிப்பார்த்து திருந்த வழி உண்டு, இந்த மக்கள் ஏற்காவிடினும் இவர்களது தலைமுறைகளாவது இந்த சத்தியத்தை ஏற்கக்கூடும், அதற்கு என்னுள் எழும் பழிவாங்கல் உணர்வோ காழ்ப்புணர்வுகளோ தடையாக நின்றிடக் கூடாது என்று மிக கவனமாக பொறுமையோடு சூழலைக் கையாள்கிறார்கள் கருணை நபிகளார்!
மக்களை சீர்திருத்த விழையும் அனைவருக்கும் இதை ஒரு அடிப்படைப் பாடமாக கற்பிக்கிறார்கள் அருமை நபிகளார்!
அகிலத்தைப் படைத்தவனே அவரைப்பற்றிக் கூறுவதைப் பாருங்கள்:
அண்ணல் நபிகளார் உலக மக்கள் மீது கொண்டிருந்த நேசமோ அளவிடமுடியாதது. இறைவனே அதுபற்றிக் கூறுகிறான்:
அவர்கள் நம்பிக்கையாளர்களாக ஆகவில்லை என்பதற்காக நீங்கள் உங்களை துக்கத்தால் கொன்று கொள்ளப் போகிறீர்கள் போலும். (திருக்குர்ஆன் 26:3)
நபிகளார் தன்னைப் பற்றி சொல்வதைக் கேளுங்கள்:
"ஒரு மனிதர் இரவில், காட்டில் தீ மூட்டினார். அந்த தீயின் ஒளியால் ஈர்க்கப்பட்ட விட்டில் பூச்சிகள் தங்களை மாய்த்துக் கொள்ள நெருப்பருகே வருகின்றன. அதைக் கண்ட அவர் பதறியவராய் இரு கரங்களால் ஓடி ஓடி தடுத்துக் கொண்டிருக்கிறார்.
இந்த உவமைக்கு சற்றும் குறைந்தல்ல என்னுடைய உதாரணமும்!
இந்த மக்கள், நரக நெருப்பை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறார்கள். நான் அவர்களின் இடுப்பை பிடித்திழுத்து தடுத்துக் கொண்டிருக்கின்றேன்!"
இத்தகைய ஒரு உன்னத நோக்கத்தைக் கொண்டவரை பின்பற்றி வாழ்வதாக உறுதிமொழி ஏற்றிருப்பவர்கள்தான் முஸ்லிம்கள்.
-------------------
நபிகள் நாயகம் - வாழ்க்கை, போதனைகள், சாதனைகள், விமர்சனங்கள் - நூல் பெறுவதற்கு இந்த லிங்கை க்ளிக் செய்யுங்கள்
===================
இஸ்லாம் என்றால் என்ன? முஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!
இதைப் படிக்காவிட்டால் இழப்பு! பேரிழப்பு!
நாம் ஏன் பிறந்தோம்?
இதயங்களை வென்ற இறைத்தூதர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக