இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 20 ஏப்ரல், 2025

ஒரு கோப்பை பாலில் பலர் பசியாறிய விந்தை!!

 முதலில் கதையல்ல இது நிஜம்!

இதை வாசிக்கக்கூடிய மாற்றுமத அன்பர்கள் சிலருக்கு இப்படியெல்லாம் நிகழ வாய்ப்ப்புள்ளதா என்ற ஐயம் எழக்கூடும். ஆனால் இஸ்லாத்தைப் பொறுத்தவரையில் திருக்குர்ஆனிலோ ஹதீஸ்களிலோ ஊகங்களோ கற்பனைக் கதைகளோ பதிவு செய்யப்படவில்லை என்பதை நீங்கள் முதலில் கவனிக்க வேண்டும். அடுத்ததாக நபிகள் நாயகம் அவர்களுக்கு ஏனைய இறைத் தூதர்களின் வாழ்வுகளில் நிகழ்ந்தது போன்ற அற்புதங்கள் (அதாவது இயற்கைக்கு மாறான நிகழ்வுகள்) நிகழ்ந்துள்ளன என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும். மூன்றாவதாக நபிகள் நாயகம் என்ற ஒரு நபர் சரித்திரத்தில் வாழ்ந்தார் என்பது, எழுதப் படிக்கத் தெரியாத ஒரு மனிதர் மூலம் திருக்குர்ஆன் என்ற உயர்தர இலக்கிய அற்புதம் வழங்கப்பட்டது, அதில் இன்றைய அறிவியல் உண்மைகள் சொல்லப்பட்டு இருப்பது, குறைந்த எண்ணிக்கை கொண்ட படைகள் அன்றைய வல்லரசுகளை இல்லாமல் ஆக்கியது, என எல்லாமே அற்புதங்களின் அணிவகுப்புதான்!..


 இனி மேற்கொண்டு படியுங்கள்..
 

நபித்தோழர் அபூ ஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்கள்:

எவனைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறெவருமில்லையோ அத்தகைய அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் (கடும்) பசியினால் என் வயிற்றைத் தரையில் வைத்து அழுத்திக்கொண்டு படுத்திருக்கிறேன். மேலும், (கடும்) பசியினால் வயிற்றில் நான் கல்லை வைத்துக் கட்டிக் கொண்டதுமுண்டு. ஒரு நாள் நான் நபி(ஸல்) அவர்களும் தோழர்களும் (பள்ளி வாசலுக்குச்) செல்லும் பாதையில் அமர்ந்துகொண்டேன். அப்போது அபூபக்கர்(ரலி) அவர்கள் (என்னைக்) கடந்து சென்றார்கள். உடனே நான் இறைவேதத்திலுள்ள ஒரு வசனத்தைப் பற்றி அவர்களிடம் கேட்டேன். என் வயிற்றை அவர்கள் நிரப்புவார்கள் என்பதற்காகவே (அது குறித்து) அவர்களிடம் கேட்டேன். ஆனால் அவர்கள் கடந்து சென்றார்கள் (என் பசி நீங்க எதுவும்) அவர்கள் செய்யவில்லை.

பிறகு உமர்(ரலி) அவர்கள் என்னைக் கடந்து சென்றார்கள். உடனே நான் அவர்களிடமும் இறைவேதத்திலுள்ள ஒரு வசனம் குறித்துக் கேட்டேன். அவர்கள் என் வயிற்றை நிரப்புவார்கள் என்பதற்காகவே (அது குறித்து) அவர்களிடம் கேட்டேன். அவர்களும் (என் பசியைப் போக்க) ஒன்றும் செய்யாமல் போய்விட்டார்கள்.

பிறகு அபுல்காசிம் (நபி(ஸல்)) அவர்கள் என்னைக் கடந்து சென்றார்கள். என்னைக் கண்டு, எனக்கு ஏற்பட்டுள்ள (பசி) நிலையையும் என் முகமாற்றத்தையும் அவர்கள் புரிந்துகொண்டு புன்னகைத்தார்கள். பிறகு, அபூ ஹிர்ரே! (அபூ ஹுரைராவே!) என்று அழைத்தார்கள். நான் இதோ காத்திருக்கிறேன் இறைத்தூதர் அவர்களே! என்றேன். (என்னைப்) பின்தொடர்ந்து வா! என்று சொல்லி விட்டு நடந்தார்கள். நான் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றேன். நபி(ஸல்) அவர்கள் (தம் இல்லத்தில்) நுழைந்தார்கள். நான் (உள்ளே செல்ல) அனுமதி கோர, எனக்கு அனுமதியளித்தார்கள். நான் உள்ளே சென்றேன். அப்போது (வீட்டில்) ஒரு கோப்பையில் பாலைக் கண்டார்கள். உடனே (தம் மனைவியாரிடம்) இந்தப் பால் எங்கிருந்து வந்தது? என்று கேட்டார்கள். அவர்கள் இன்ன ஆண் அல்லது பெண் தங்களுக்கு இதை அன்பளிப்பாக வழங்கியுள்ளார் என்றார்கள். நபி(ஸல்) அவர்கள் அபூ ஹிர்! என அழைத்தார்கள். நான் இதோ வந்துவிட்டேன் இறைத்தூதர் அவர்களே! என்றேன். திண்ணைவாசிகளிடம் சென்று என்னிடம் அவர்களை அழைத்துவாருங்கள் என்றார்கள்.

திண்ணைவாசிகள் வருகை!

திண்ணைவாசிகள் (அஸ்ஹாபுஸ் ஸுஃப்பா) இஸ்லாத்தின் விருந்தினர்கள் ஆவர். அவர்கள் புகலிடம் தேட அவர்களுக்குக் குடும்பமோ செல்வமோ கிடையாது. வேறு யாரிடமும் செல்லவும் மாட்டார்கள். நபி(ஸல்) அவர்களிடம் ஏதேனும் தானப்பொருள்கள் வந்தால் அதனை இவர்களிடம் நபி(ஸல்) அவர்கள் அனுப்பிவிடுவார்கள். அதிலிருந்து தாம் எதையும் எடுத்துக் கொள்ளமாட்டார்கள். தம்மிடம் ஏதேனும் அன்பளிப்புப் பொருள்கள் வந்தால் இவர்களைத் தம்மிடம் அழைத்துவரும்படி ஆளனுப்பிவிடுவார்கள். (அவர்கள் வந்தவுடன்) அவர்களுடன் சேர்ந்து தாமும் உண்பார்கள்.

கவலைக்குள்ளான அபு ஹுரைரா

இப்போது நபி(ஸல்) அவர்கள் (திண்ணைவாசிகளை அழைத்துவரச்) சொன்னதால் எனக்குக் கவலைதான் ஏற்பட்டது. (இருப்பதோ சிறிதளவு பால்.) திண்ணை வாசிகளுக்கு இந்தப் பால் எம்மாத்திரம்? இதைச் சிறிதளவு பருகி என்னை ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்கு நானே பொருத்தமானவன். திண்ணை வாசிகள் வந்தால், நபியவர்கள் எனக்கு உத்தரவிட, நானே அவர்களுக்குக் கொடுத்து விட்டு (இறுதியில்) எனக்கு இந்தப் பாலில் ஒன்றும் கிடைக்காமல் போகலாம். இருப்பினும், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியாமல் இருக்க இயலாது என (மனத்துக்குள்) சொல்லிக் கொண்டேன்.

பிறகு, நான் திண்ணைவாசிகளிடம் சென்று அவர்களை அழைத்தேன். அவர்களும் (அழைப்பை ஏற்று) வந்து (வீட்டுக்குள் நுழைய) அனுமதி கோரினார்கள். நபி(ஸல்) அவர்கள் திண்ணைவாசிகளுக்கு அனுமதி வழங்கினார்கள். அவர்கள் அந்த வீட்டில் ஆங்காங்கே இடம்பிடித்து அமர லானார்கள்.

நபி(ஸல்) அவர்கள் அபூ ஹிர் என! அழைத்தார்கள். நான் “இதோ காத்திருக்கிறேன்; கூறுங்கள் இறைத்தூதர் அவர்களே!” என்றேன். நபி(ஸல்) அவர்கள் இதை எடுத்து இவர்களுக்குக் கொடுங்கள் என்றார்கள். நான் அந்தக் கோப்பையை எடுத்து ஒரு மனிதருக்குக் கொடுத்தேன். அவர் தாகம் தணியும் வரை குடித்தார். பிறகு அவர் என்னிடம் அந்தக் கோப்பையைத் திருப்பித் தந்தார். நான் அதை இன்னொரு மனிதரிடம் கொடுத்தேன். அவரும் தாகம் தீரும் வரை குடித்துவிட்டுக் கோப்பையை என்னிடம் தந்தார். பிறகு இன்னொருவர் தாகம் தீரும் வரை குடித்தார். பிறகு என்னிடம் அதைத் திருப்பித் தந்தார். இறுதியில் நான் நபி(ஸல்) அவர்களிடம் அதைக் கொண்டு சென்றேன். அப்போது மக்கள் அனைவரும் தாகம் தணிந்திருந்தினர்.

நபி(ஸல்) அவர்கள் அந்தக் கோப்பையை வாங்கித் தம் கையில் வைத்துக்கொண்டு என்னைக் கூர்ந்துப் பார்த்துப் புன்னகைத்தார்கள்.

பிறகு அபூ ஹிர்! என்று அழைத்தார்கள். நான் “இதோ காத்திருக்கிறேன் கூறுங்கள் இறைத்தூதர் அவர்களே!” என்று சொன்னேன்.

அதற்கவர்கள் “நானும் நீங்களும் (மட்டும்தான்) எஞ்சியுள்ளோம் (அப்படித்தானே?)” என்று கேட்டார்கள்.

நான் “இறைத்தூதர் அவர்களே! (ஆம்.) உண்மைதான்” என்றேன்.

நபி(ஸல்) அவர்கள் “உட்கார்ந்து (இதைப் பருகுங்கள்” என்றார்கள். நான் உட்கார்ந்து பருகினேன். இன்னும் பருகுங்கள் என்றார்கள். பருகினேன். இவ்வாறு அவர்கள் பருகுங்கள் என்று சொல்லிக்கொண்டேயிருக்க, நான் பருகிக்கொண்டேயிருந்தேன். இறுதியில் சத்திய (மார்க்க)த்தைக் கொண்டு தங்களை அனுப்பிவைத்த (இறை)வன் மீது ஆணையாக! இனிப் பருகுவதற்கு வழியே இல்லை என்றேன். நபி(ஸல்) அவர்கள் (சரி) அதை எனக்குக் கொடுங்கள் என்றார்கள். எனவே, நான் அவர்களிடம் அந்தக் கோப்பையைக் கொடுத்தேன். உடனே அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து அவனுடைய (திருப்)பெயர் கூறி எஞ்சியதைப் பருகினார்கள். (நூல்: புகாரி)

=================== 

இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!
இதைப் படிக்காவிட்டால் இழப்புபேரிழப்பு!

நாம் ஏன் பிறந்தோம்?
இதயங்களை வென்ற இறைத்தூதர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக