இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 28 ஏப்ரல், 2025

உழைப்பின் சிறப்பும் உழைப்போர் உரிமையும்


சமூக ஒழுங்குக்கும் தனிநபர் ஒழுக்கத்துக்கும் மூன்று நம்பிக்கைகளை அடிப்படையாக்குகிறது இஸ்லாம். அதனால் மக்கள் இறைவன் கூறும் அறிவுரைகளையும் வாழ்வியல் வழிகாட்டல்களையும் ஒரு காதில் கேட்டுவிட்டு மறுகாதில் விட்டு விடாமல் அவற்றை வாழ்வில் பின்பற்றுகிறார்கள். அதனால் சமூகத்தை ஒழுங்குபடுத்துவதும் எளிமையாகிறது.

  •  மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்; ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்; மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்) - நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான். (திருக்குர்ஆன் 4:1) 

(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்பது பொருள்)

மேற்கண்ட இறைவசனத்தில் 1. ஒன்றே மனித குலம் (சக மனிதன் சகோதரனே சரிசமமே) 2. படைத்தவன் ஒருவனே இறைவன் (படைப்பினங்கள் கடவுளல்ல) 3. இறைவனிடமே மீளுதல் மற்றும் இறுதி விசாரணை என்ற மூன்று அடிப்படை விடயங்களும் கூறப்பட்டு இருப்பதைக் காணலாம்.

அதாவது மனிதனைப் பொறுத்தவரையில் அவன் இங்கு தான்தோன்றித்தனமாக வாழக் கூடாது. மாறாக தனது செயல்கள் அனைத்தும் இறைவனால் பதிவு செய்யப்பட்டு மறுமை வாழ்வில் இறுதித் தீர்ப்பு நாளன்று விசாரிக்கப்பட உள்ளோம் என்ற பொறுப்புணர்வை இவ்வசனம் மனித மனத்தில் விதைக்கிறது. சிறுவயது முதலே இந்த அடிப்படைகளை மனித மனங்களில் விதைத்து சமூக உருவாக்கம் நிகழுமானால் அங்கு மனித உரிமைகளைப் பேணுதல் எளிதாகிறது.

திருக்குர்ஆனில் உழைப்புக்கு மதிப்பு:

வப்தஊ மின் ஃபழ்ளில்லாஹ்  (திருக்குர்ஆன் 62:10)

பொருள்: இறைவனின் அருட்கொடையை நீங்கள் தேடி சம்பாதித்துக் கொள்ளுங்கள்

'வ அன் லய்ச லில் இன்சானி இல்லா மா சஆ'
பொருள்: இன்னும், மனிதனுக்கு அவன் முயல்வதல்லாமல் வேறில்லை. (திருக்குர்ஆன் 53:39)

விளக்கம்: மனிதனுக்கு அவனது உழைப்புக்கு ஏற்றவாறே பலன் கிடைக்கும். ஆகவே உழைப்பு எப்போதும் மதிக்கப்பட வேண்டும் என்பதைக் குறிப்பிடுகிறது.

உழைப்பின் மகிமை ப்பற்றி நபிமொழிகள்

  • உழைத்து உண்ணும் உணவே நீங்கள் சாப்பிடுகின்ற உணவில் மிகச் சிறந்ததாகும் என்றும் நபியவர்கள் கூறினார்கள். (திர்மிதீ)
  • இறைத்தூதரே! பரிசுத்தமான தொழில் எது? என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. ஒரு மனிதன் தனது கையால் உழைப்பதும், (மோசடியில்லாத) நல்ல ஒவ்வொரு வியாபாரமும் என்று நபியவர்கள் கூறினார்கள். (நூல் : அஹ்மத்)
  •  நபி (ஸல்) கூறினார்கள்:  ''உங்கள் பணியாளர்கள் உங்களுடைய சகோதர்கள், அவர்களை உங்களுக்குக் கீழே நியமித்தவன் இறைவனே! எனவே, ஒருவர் தமது பொறுப்பின் கீழ் இருக்கும் சகோதரர்க்கு தான் உண்பவற்றிலிருந்து உணவளிக்கட்டும். தாம் உடுத்துவதைப் போன்றே அவருக்கும் ஆடைகள் அளிக்கட்டும். அவர்களின் சக்திக்கு மீறிய பணிகளை அவர்களுக்கு கொடுக்காதிருக்கட்டும். அப்படி (அவர் சக்திக்கு மீறிய பணியை) கொடுக்க நேரிட்டால் அவர்களுக்கு அப்பணியில் தாமும் உதவி செய்யட்டும்.'' அறிவிப்பாளர் : அபூதர் (ரலி) நூல்: புகாரி, முஸ்லிம்.)
உழைப்பு பற்றிய நபிமொழிகள்:
  • ”உங்களில் ஒருவன் ஒரு கயிற்றை எடுத்துக் கொண்டு தன்னுடைய முதுகில் விறகுக்கட்டைச் சுமந்து விற்று வாழ்வது மக்களிடம் யாசகம் கேட்பதை விடச் சிறந்ததாகும். இதன் மூலம் இறைவன் அவனுக்கு இழிவு ஏற்படாமல் தடுத்து விடுவான். மக்கள் அவனுக்குக் கொடுக்கவும் செய்யலாம் அல்லது மறுக்கவும் செய்யலாம். ”என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார். (புகாரி)
நபித்தோழர்கள் பலர் உழைத்து உண்பவர்களாக இருந்தனர். இதனால் அவர்களிடம் (வியர்வை) வாடை வீசும். இதன் காரணமாகவே ‘நீங்கள் குளிக்கக் கூடாதா?’ என்று அவர்களிடம் கூறப்பட்டது. இதை ஆயிஷா(ரலி) அறிவித்தார். (புகாரி)

உழைக்க வழிகாட்டிய நபிகளார்
நபிகளாரிடம் மதீனாவாசியான ஒரு தோழர் தன் தேவையைக் கூறி உதவி தேடினார். தங்களிடம் ஒன்றுமே இல்லையா? என நபியவர்கள் வினவ, முரட்டுக் கம்பளி போர்வையும், ஒரு கோப்பையும் எனது வீட்டில் இருக்கிறது எனக் கூறினார். பாதியை விரித்தும், பாதியைப் போர்த்தியும் கொள்வேன். பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பேன் என்றார். அதைக் கொண்டு வருமாறு நபியவர்கள் கூற, அதை அவர் கொண்டு வந்தார்.

அவ்விரு பொருட்களையும் நபியவர்கள் ஏலம்விட, ஒரு திர்ஹத்திற்கு அதை வாங்கிக்கொள்ள ஒரு தோழர் முன்வந்தார். அதைவிட அதிகமாக வாங்குபவர் உண்டா? என நபியவர்கள் மூன்று முறை கூற, இரண்டு திர்ஹங்களுக்கு வாங்கிக் கொள்கிறேன் எனக் கூறி மற்றொரு தோழர்  அதை வாங்கிக் கொண்டார்.

பின்பு அந்த மதீனா தோழரை அழைத்து இதில் ஒரு திர்ஹத்திற்கு வீட்டிற்கு தேவைப்படும் உணவுப் பொருளையும், மற்றொரு திர்ஹத்திற்கு ஒரு கோடாரியும் வாங்கி என்னிடம் கொண்டு வாருங்கள் எனக் கூறி, அவ்விரு திர்ஹங்களையும் அவரிடம் நபியவர்கள் ஒப்படைத்தார்கள். 
அவர் அவ்வாறே செய்தார். நபியவர்கள் தனது கரத்தால் அந்தக் கோடாரிக்கு கணை போட்டு அவரிடம் அதைக் கொடுத்து, இதை எடுத்துச் சென்று விறகு வெட்டி சம்பாதியுங்கள்; பதினைந்து நாட்களுக்குப்பின் இங்கு வாருங்கள். அதற்கு முன்பு வர வேண்டாம் எனக் கூறியனுப்பினார்கள். அவரும் அவ்வாறே செய்தார்.

சில நாட்களில் அவர் பத்து திர்ஹங்களை சம்பாதித்தார். அதில் அவருக்குத் தேவைப்படும் துணிகளையும், வீட்டிற்குத் தேவையான தானியங்கள் மற்ற பொருட்களையும் வாங்கியிருந்தார். இந்நிலையில் அவரைக் கண்ட நபியவர்கள், "நீர் பிறரிடம் தேவை உடையவராகி அருவறுப்பான அடையாளங்களோடு மறுமையில் வருவதைவிட தற்போது நீர் இருக்கும் நிலை எவ்வளவு அழகானது" எனப்பாராட்டினார்கள்.

 அதாவது உழைப்பால் உயர்வும், யாசகத்தால் இம்மை – மறுமையில் இழிவும் ஏற்படும் என்பதை நபியவர்கள் தெளிவாக சுட்டிக் காட்டினார்கள்.
இதனைக் கேட்ட மற்ற நபித் தோழர்கள், “இனி நாங்கள் எவரிடமும், எதற்காகவும் கையேந்த மாட்டோம்; கடினமாக உழைப்போம்” என்று உறுதியளித்தார்கள். (நூல்: அபூ தாவூத்))
=============== 
இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!
இதைப் படிக்காவிட்டால் இழப்புபேரிழப்பு!

நாம் ஏன் பிறந்தோம்?
இதயங்களை வென்ற இறைத்தூதர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக