இஸ்லாத்தை ஒரு மதம் என்ற கண்ணோட்டத்தில் பார்க்காமல் ஒரு கொள்கை சார்ந்த வாழ்வியல் என்று பார்க்கும்போதுதான் இன்று பரவலாக மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டுள்ள காழ்ப்புணர்வுகள் அகலும். இதன் அருமை பெருமைகளும் இதன் தேவையும் புரியும். இன்று மனிதகுலத்திற்கு பெரிதும் தேவைப்படும் அமைதி என்பது இறைவன் வழங்கும் இந்த வாழ்வியலை மக்கள் ஏற்று வாழ முற்படும்போதுதான் ஏற்பட வழியுள்ளது. ஏனெனில் மனிதர்களுக்கிடையே சகோதரத்துவமும் சமத்துவமும் நிலைநாட்டப் படாதவரை அமைதி என்பது எட்டாக்கனியே!
'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்பதும் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்பதும் வெற்று முழக்கங்களாக இல்லாமல் நடைமுறைக்கு வரவேண்டுமானால் அதற்கான அஸ்திவாரம் ஏக இறைக் கொள்கையே! இறைவன் ஒருவன் மட்டுமே என்பதை உறுதியாக மக்கள் ஏற்றால் மட்டுமே மனித குல சமத்துவமும் சகோதரத்துவமும் சாத்தியப்படும். அதனால்தான் இஸ்லாத்தின் தூண்கள் என்று அறியப்படும் ஐம்பெரும் கடமைகளில் முதல் கடமையாக இதை ஆக்கியுள்ளது.
1. சமத்துவம் பேணுவேன் என்பதற்கான உறுதிமொழியே கலிமா
ஒருவர் இஸ்லாத்தை ஏற்க வேண்டுமானால் “லா இலாஹ இல்லல்லாஹ், முகம்மதுர் ரசூலுல்லாஹ்” என்ற கலிமாவை (உறுதிமொழியை) மனதார ஏற்று வாயால் மொழிய வேண்டும், அவ்வாறு மொழிந்த பின்னர்தான் அவர் “முஸ்லிம்” என்று அறியப்படுகிறார். இந்த உறுதிமொழியின் பொருள் “அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை மற்றும் முகமது நபி அவனுடைய திருத்தூதர்” என்பதாகும். இந்த வாசகத்தை மொழிவதன் மூலம் இனம், நிறம், இடம், மொழி போன்ற வேற்றுமைகளைக் கடந்து அனைத்துலகுக்கும் இரட்சகனான ஏக இறைவனை மட்டுமே வணக்கத்துக்குரியவனாகவும் அவனது தூதரை என் வாழ்க்கை வழிகாட்டியாகவும் ஏற்றுக்கொள்கிறேன் என்பதை அவர் உறுதிபட ஏற்கிறார்.
இதை ஏற்ற மாத்திரத்திலேயே அவர் பலதெய்வ வழிபாடு, ஆள் தெய்வ வழிபாடு, உருவ வழிபாடு போன்ற அனைத்துக் வித வழிபாடுகளில் இருந்தும் அவற்றோடு இணைந்த மூட நம்பிக்கைகளில் இருந்தும் சடங்குகளில் இருந்தும் இடைத்தரகர்களின் பிடியில் இருந்தும் பிரிவினை வாதங்களில் இருந்தும் விலகி பரிசுத்தமாகி விடுகிறார்.
கலிமா என்ற இந்த உறுதிமொழிக்கு அடுத்ததாக ஐவேளைத் தொழுகை நிறைவேற்றல் இஸ்லாமிய மார்க்கத்தில் அடுத்த கடமையாகும்.
2. சமத்துவத்தில் சகோதரத்துவத்தில் தொழுகையின் பங்கு
இந்த உலக வாழ்க்கை என்பது ஒரு பரீட்சை. இதில் மனிதன் தன் ஆசாபாசங்களுக்கும் மனோ இச்சைக்கும் உட்பட்டு காலப்போக்கில் கொண்ட கொள்கையில் இருந்து விலகிவிட வாய்ப்புகள் தாராளம் உள்ளன. எனவே இஸ்லாம் என்ற கொள்கையில் நிலைத்து நிற்க இறைவனால் ஏவப்பட்ட கடமையே தொழுகை என்பதை ஆராய்வோர் அறியலாம். அன்றாடம் ஐவேளை இறைவனின் தொடர்பையும் நினைவையும் புதுப்பிக்கும் நடவடிக்கை தொழுகை. உடல்தூய்மை பேணி தொழுகைகளை வேளாவேளை நிறைவேற்றுவதன் மூலம் இறை உணர்வும் இறைவனுக்கு பதில் சொல்லவேண்டும் என்ற பொறுப்புணர்வும் உண்டாவதால் அது மனிதனை பாவங்களில் இருந்து விலக்கி வைக்கிறது. இந்தத் தொழுகைகளைக் கூட்டாக நிறைவேற்றும் போது சமூகத்தில் சமத்துவமும் சகோதரத்துவமும் வலுவடைகிறது. தோளோடு தோள் சேர்ந்து வரிசைகளில் நெருக்கமாக அன்றாடம் தொழுகைக்காக நிற்கும்போது தீண்டாமை, தாழ்வு மனப்பான்மை, உயர்வு மனப்பான்மை, செருக்கு போன்ற தீய பண்புகள் மனித உள்ளங்களில் இருந்து களையப்படுகின்றன.
3. நோன்பின் மாண்பு
நோன்பின் மூலம் ஆன்மீகப் பரிசுத்தமும் சுயக் கட்டுப்பாடும் சமூகத்தின் தேவை உணரும் பண்பும் உருவாகின்றன. சக நோன்பாளிக்கு உணவளிப்பது அந்த நோன்பாளி பெறும் நற்கூலிக்கு சமமான கூலியைப் பெற்றுத்தரும் என்பது நபிமொழி. இதன் காரணமாக ரமலான் மாதத்தில் பள்ளிவாசல்களில் செல்வந்தர்கள் முன்வந்து ஏற்பாடு செய்யும் நோன்புக் கஞ்சி விருந்தும் இப்தார் உணவுவிருந்துகளும் சகஜமாக நடைபெறுவதைக் காணலாம். இந்த விருந்துகளில் ஏழை பணக்காரன், மொழி வேற்றுமை போன்றவை மறந்து அனைவரும் சமபந்திகளில் அமர்ந்து உணவுண்பதும் நடைபெறுகின்றன.
4. வறுமை ஒழிப்பில் ஜகாத்
செல்வம் என்பது இறைவனுக்கு சொந்தமானது, அது தற்காலிகமாக தன்னிடம் தரப்பட்டுள்ளது என்ற உணர்வை தனிமனிதனிடம் உண்டாக்கி அதை ஏழைகளோடு பங்கிட்டு உண்ணச் செய்கிறது ஜகாத் என்ற கட்டாய தர்மம். இதை இஸ்லாமியர்கள் கூட்டுமுறையில் ஆங்காங்கே நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். உண்மையில் சமூகத்தில் குற்றங்கள் பெருகக் காரணங்களில் ஒன்று வறுமை. ஜகாத் விநியோகம் நிறைய ஏழைகளின் வறுமை நீங்க ஏதுவாகிறது. செல்வந்தர்கள் தமக்கு வாய்த்த செல்வத்தின் மூலம் சக மனிதனின் துயர் துடைக்கும் நடவடிக்கையே ஜகாத்!
5. ஹஜ் என்ற உலக முஸ்லிம்கள் சங்கமம்!
போதிய பொருள் வசதியும் ஆரோக்கியமும் கொண்ட முஸ்லிம்கள் மீது வாழ்வில் ஒரு முறையேனும் ஹஜ் என்ற புனித யாத்திரை மேற்கொள்வது கடமையாக்கப்பட்டுள்ளது. உலக முஸ்லிம்கள் இனம், நிறம், மொழி, இடம் போன்ற வேற்றுமைகள் மறந்து சகோதரர்களாக சங்கமிக்கும் நிகழ்வே வருடாவருடம் மக்காவில் நடைபெறும் ஹஜ். இஹ்ராம் என்ற வெள்ளை சீருடை அணிந்து மக்காவில் அமைந்துள்ள கஅபா என்ற புனித ஆலயத்தை வலம் வருதல், சஃபா மற்றும் மர்வா என்ற குன்றுகளுக்கு இடையே ஓடுதல், மினா என்ற பள்ளத் தாக்கில் தங்குதல், அரபா பெருவெளியில் ஒன்று கூடுதல், தொழுகைகள் மற்றும் பிரார்த்தனைகள் நிறைவேற்றுதல் போன்ற பல சடங்குகள் ஹஜ்ஜ் என்ற கடமையின் அம்சங்களாகும். ஒன்றே மனிதகுலம் ஒருவனே இறைவன் என்ற கொள்கை முழக்கத்தை நடைமுறை வடிவில் உலகறியச் செய்து உலகளாவிய சகோதரத்துவத்தை பறைசாற்றுகிறது ஹஜ் என்ற கடமை!
=====================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக