= மனிதர்களே! நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைத்தோம். பிறகு நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்ளும் பொருட்டு உங்களை சமூகங்களாகவும் கோத்திரங்களாகவும் அமைத்தோம். உண்மையில், உங்கள் இறைவனிடம் அதிக கண்ணியம் வாய்ந்தவர் உங்களில் அதிக இறையச்சம் கொண்டவர்கள்தாம். திண்ணமாக, அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவனாகவும், தெரிந்தவனாகவும் இருக்கின்றான். (திருக்குர்ஆன் 49:13)
ஒரே ஒரு மனித ஆண்-பெண்
ஜோடியில் இருந்துதான் மனித குலம் உருவாயிற்று என்ற உண்மையை இஸ்லாம் உறுதிபடச்
சொல்கிறது. உலகில் பரவியுள்ள அனைத்து மனிதர்களும் ஒரே போல உடலமைப்பையும்
இயற்கையையும் பெற்றிருப்பதே இதற்கு மாபெரும் சான்றாக விளங்குகிறது. இதுதான் மனித
சமத்துவத்துக்கும் உலகளாவிய சகோதரத்துக்கும் அடிப்படை ஆதாரம்.
ஒருபுறம் கடவுளின்
பெயரால் சிலர் இனவெறியும் தீண்டாமையும் விதைத்துக்கொண்டிருக்க மறுபுறம் நாத்திகமும் தன்
அறியாமைக் கொள்கைகளின் காரணமாக மனித சமத்துவத்தை மறுத்தது. உறுதியான ஆதாரங்கள் அறவே ஏதும்
இல்லாத பரிணாமவியல் என்ற ஊகக் கோட்பாட்டை அறிவியல்
என்ற பெயரில் போதித்தது அது. அதன்படி இவ்வுண்மையை மறுத்து குரங்கில் இருந்துதான்
மனிதன் உருவானான் என்ற ஆதாரமற்ற ஊகத்தைப் பரப்பியது.
கொடூர விளைவுகள்:
அதனால் வரலாற்றில் உண்டான விளைவுகள் கொஞ்ச நஞ்சமல்ல! ஒவ்வொரு இனத்துக்கும் மூதாதையர் குரங்குகள் வேறுவேறு என்ற காரணம் காட்டி மனிதனின் தோற்றம், நிறம், கலாச்சாரம் போன்றவற்றின் அடிப்படையில் உயர்வு தாழ்வு கற்பிக்கும் வழக்கமும் உருவானது. பல்லாயிரக்கணக்கான மக்களை அது காவுகொண்டது. உதாரணமாக ஹிட்லர் தன் நாஜி இனமே உலகில் மற்றெல்லாவற்றையும் விட உயர்ந்தது என்று கூறி மற்ற நாடுகளை அடிமைபடுத்தவும் மக்களைக் கொன்று குவிக்கவும் செய்தார். கருப்பர்கள் (நீக்ரோக்கள்) ஒருபோதும் வெள்ளை இனத்தாருக்கு சமமாக முடியாது என்று சொல்லி அவர்களை தாழ்த்தி வைக்கவும் செய்தார்.
கொஞ்சநஞ்சம் மக்களிடம் இருந்து வந்த இறையச்சம் என்ற பொறுப்புணர்வை அறவே துடைத்தெறிந்தது நாத்திகம். யாருக்கு எந்தக் கொடுமைகள் செய்தாலும் தட்டிக்கேட்க யாரும் இல்லை என்ற உணர்வை ஆதிக்க சக்திகளுக்குள் அது புகுத்தியது. ஆயுத ஆதிக்கம் வாய்த்த வெள்ளையர்கள் அவர்கள் பிடித்தெடுத்த கண்டங்களில் வாழ்ந்து கொண்டிருந்த பழங்குடியினரை ஈவிரக்கமின்றி கொன்று குவிப்பதற்கும் ஆப்பிரிக்கக் காடுகளில் வாழ்ந்து கொண்டிருந்த கறுப்பின
மக்களை ஆயுத முனையில் கீழடக்கி அமேரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு கடத்திச்சென்று அடிமை வாணிபம் செய்ததற்கும் நாத்திகக் கொள்கை உருவாக்கிய மனோநிலை பெரிதும் துணைபோயிருக்கிறது என்பதே உண்மை.
இறைவனின் எச்சரிக்கை
இறைவனின் பெயரால் இனவெறி
கடைபிடித்த ஆத்திகர்களாயினும் சரி இறைமறுப்பை கைகொண்டு இனவெறி பாராட்டிய
நாத்திகர்களாயினும் சரி அவர்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் சரி இறுதித் தீர்ப்பு
நாளன்று இறைவன் முன்னால் விசாரிக்கப்பட உள்ளார்கள் என்பது மட்டும் உறுதி. இறைவன்
கற்பித்த மனித சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் மறுத்து சக மனிதனின் உரிமைகளை
சூறையாடிய ஆத்திகர்களுக்கும் நாத்திகர் களுக்கும் கடுமையான தண்டனைகள் இறைவனிடம்
உள்ளன.
= வரவிருக்கும் அந்நாளில்
(ஏற்படக்கூடிய அவமானத்திலிருந்தும் தண்டனைகளிலிருந்தும்) நீங்கள் உங்களை தற்காத்துக்
கொள்ளுங்கள்! அன்று இறைவனின் பக்கம் நீங்கள் திரும்பக் கொண்டுவரப்படுவீர்கள்.
பிறகு ஒவ்வொருவருக்கும் அவரவர் சம்பாதித்தவற்றிற்கான (நன்மை அல்லது தீமைக்கான)
கூலி முழுமையாகக் கொடுக்கப்படும். இன்னும் எவர் மீதும் அநீதி இழைக்கப்பட மாட்டாது.
(திருக்குர்ஆன் 2:281)
= “நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள்: மறுமை நாளில் உரிமைகளை உரியவர்களிடம் நிச்சயமாக நீங்கள்
ஒப்படைப்பீர்கள். எந்தளவுக்கென்றால், கொம்பில்லாத ஆட்டுக்காக (அதை முட்டிய) கொம்புள்ள ஆட்டிடம் பழிவாங்கப்படும்” (அறிவிப்பாளர் அபூஹுரைரா
(ரலி) நூல்: முஸ்லிம் 5038).
= “மறுமை நாளுக்காக நீதியான
தராசுகளை நிறுவுவோம். எவருக்கும் சிறிதளவும் அநீதி இழைக்கப்படாது. ஒரு கடுகு விதை
அளவே இருந்த போதும் அதையும் நாம் கொண்டுவருவோம். கணக்கெடுக்க நாமே போதும்”. (திருக்குர்ஆன் 21:47)
===============
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக