ஒன்றே குலம் ஒருவனே இறைவன் என்ற முழக்கத்தையும் யாதும் ஊரே யாவரும் உறவே என்ற முழக்கத்தையும் பலரும் முழங்கினாலும் அதை அன்றாட வாழ்வில் நடைமுறைப் படுத்திக் காட்டும் இடம் பள்ளிவாசல்கள் மட்டுமே! உயர்ந்தவர், தாழ்ந்தவர், ஏழை, பணக்காரர், எளியவர், வெள்ளையர், கறுப்பர் என்ற வேறுபாடின்றி தீண்டாமை எழுவதற்கு வழியின்றி எல்லோரும் வரிசையில் நின்று தொழும் இடம் பள்ளிவாசல். படைத்தவனுக்கு முன் அனைவரும் சமம் என்ற கொள்கையை மக்கள் உள்ளங்களில் ஆழமாக விதைக்கும் இடம் அதுவே!
பள்ளிவாசல்கள் என்றால்
என்ன?
படைத்த இறைவனை பலரும்
கூட்டாக சேர்ந்து நின்று தொழுவதற்காக காட்டப்படும் ஆலயமே பள்ளிவாசல் என்பது. அங்கு வருவோர் கை, கால், முகம் இவற்றை கழுவுவதற்கு
வசதியாக தண்ணீர் தொட்டியோ குழாய்களோ முன்னால் காணப் படும். உள்ளே நீங்கள் சென்று
பார்த்தீர்களானால், உருவப் படங்களோ, சிலைகளோ எதுவுமே இராது. தரையில் பாய் விரிக்கப் பட்டு இருக்கும், சுவர்களில் எந்த வகையான சித்திரங்க இல்லாமல் காலியாக இருக்கும். 5 வேளைகளிலும் தொழுகைக்கான அழைப்பு
ஒலிபெருக்கி மூலம் விடப்படுகிறது.
இதைச் செவியுறும் ஆங்காங்கே உள்ள முஸ்லிம்கள் உடனடியாக தொழுகைக்கு
விரைவார்கள். அனைவரும் வந்ந்து சேர்ந்ததும் தோளோடு தோள் சேர்ந்து வரிசைகளில்
அணிவகுத்து நிற்பார்கள்.
தொழுகையாளிகளில் குரான்
அதிகம் அறிந்தவர் அணிவகுப்பில் தளபதியைப்
போல் முன் நின்று தொழுகையை நடத்துவார். அவருக்கு அரபு மொழியில் இமாம் என்று
கூறுவர். மற்றவர்கள் அவர் செய்வதைப் போலவே செய்து தொழுகையை நிறைவு செய்வார்கள்.
தொழுகை முடிந்ததும் தத்தமது இருப்பிடங்களுக்கும் அலுவல்களுக்கும் திரும்புவார்கள்.
இங்கு காசு, பணம், காணிக்கை,பழம், பூ போன்ற எந்த செலவுகளுக்கும் இடமில்லை. பொருட்செலவு இல்லாத சடங்குகள்
இல்லாத - இறைவனை நேரடியாக வணங்குவதற்கு உரிய இடம் பள்ளிவாசல்
சமத்துவமும்
சகோதரத்துவமும்
சமூகத்தில்
செல்வாக்குள்ளவர், அந்தஸ்துள்ளவர், படிப்பால் உயரந்தவர், செல்வம் படைத்தவர் என்ற கௌரவம்
பெற்றவர்கள் கூட பள்ளிவாசலுக்குள் வந்து விட்டால், தொழுகைக்காக நின்று விட்டால்
இறைவனின் அடிமைகள் என்ற நிலைப்பாட்டிலேதான் நிற்க வேண்டும். ஜனாதிபதியாக
இருந்தாலும், மந்திரிகளாக இருந்தாலும்
அவர்களும் சாதாரண குடிமக்களோடு தோளோடுதோள் இணைந்து வரிசைகளில் அணிவகுத்து நின்றே
தொழுகை நிறைவேற்ற வேண்டும். அவர்களுக்கான பிரேத்தியகமான இடமோ கவனிப்போ கிடையாது.
ஒரு நாளைக்கு ஐந்து நேர தொழுகையின் பயிற்சி இதுதான். இந்தப் பயிற்சியினை
பெற்றவர்களால் மட்டும்தான் உலகில் தீண்டாமையை ஒழிக்க முடியும். சகோரத்துவத்தை
வளர்க்க முடியும். சமூகத்தை சீரமைக்க முடியும்.
நபிகள் நாயகம் இஸ்லாத்தை
போதிக்க ஆரம்பித்ததன் பின் உலகில் நடந்துள்ள மாற்றங்களைப் பாருங்கள். உலகெங்கும்
வாழும் முஸ்லிம்களை எடுத்துக் கொள்ளுங்கள், உதாரணமாக இந்திய முஸ்லிம்களைப் பொறுத்த வரையில் இவர்கள் யாருமே அரபு
நாடுகளிலிருந்து வந்து குடியேறியவர்களோ நபிகள் நாயகத்தின் வாரிசுகளோ அல்ல. இவர்கள்
இதற்கு முன் இந்துக்களாகவோ கிறிஸ்துவர்களாகவோ இருந்து இஸ்லாத்தை வாழ்வியலாக
ஏற்றுக்கொண்டவர்களின் தலைமுறையினர்தான். இவர்கள் இந்த ஏக இறைகொள்கையை ஏற்றுக்
கொண்டபின் என்னென்ன புரட்சிகள் நடந்துள்ளது பாருங்கள். இன்று இவர்களுக்கு ஜாதிகள்
இல்லை. இவர்களிடையே தீண்டாமை இல்லை. ஒரு காலத்தில் தீண்டாமையால் மேல்ஜாதி, கீழ்ஜாதி என்று சிதறுண்டு கிடந்தார்கள். இம்மக்களை இன்று பள்ளிவாசல்களில்
தொழுகைக்காக ஒரே அணியில் தோளோடு தோள் நிற்க வைப்பதும் ஒரே தட்டில் பாகுபாடின்றி
உண்ண வைப்பதும் இந்த ஓரிறைக்கொள்கை நிகழ்த்தி வரும் அற்புதங்களே!
தனிநபர் நல்லொழுக்கமும்
பள்ளிவாசல்களும்
மக்கள் அங்கத் தூய்மை
பேணி தினசரி ஐந்து வேளைகள் இறைவன் முன்னால் பயபக்தியோடு நின்று தொழும்போது இறை
உணர்வு அவ்வப்போது புதுப்பிக்கப்படுவதால் மது போதை மட்டுமல்ல, மற்றெந்த பாவங்களின் பக்கமும் மனம் ஈர்க்கப்படுவதில்லை. மேலும் இந்தத்
தொழுகைகளை அவ்வப்போது பள்ளிவாசல்களில் ஒன்று கூடி நிறைவேற்றும்போது ஏனைய மக்களோடு
ஏற்படும் சகோதரத்துவ உணர்வும் தொடர்ச்சியான நல்லோர் சகவாசமும் பாவங்களில் இருந்து
பாதுகாக்கும் வலுவான அரணாக அமைகின்றன.
ஒவ்வொரு
வெள்ளிக்கிழமையும் குளிப்பதையும் அன்று மதியம் பள்ளிவாசல்களில் ஜும்ஆ எனப்படும்
கூட்டுதொழுகையில் கலந்து கொள்வதையும் கட்டாயமாக்கி உள்ளது இஸ்லாம். தொழுகைக்கு
முன் நடத்தப்படும் திருக்குர்ஆன் மற்றும் நபிமொழி போதனையும் மனிதனை
நல்வழிப்படுத்துபவையாக உள்ளன.
--------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக