இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 18 ஏப்ரல், 2024

இஸ்லாமிய வரலாற்றில் முதல் அறப்போர் (பத்ருப்போர்)

 (382) புனிதமான பத்ருப்போர்

**********************************************
அனஸ்(ரலி) அறிவித்தார். ஹாரிஸா இப்னு சுராகா(ரலி) அவர்களின் தாயாரான உம்மு ருபைய்யிஉ பின்த்து பராஉ(ரலி), நபி(ஸல்) அவர்களிடம் வந்து, “இறைத்தூதர் அவர்களே! ஹாரிஸாவைப் பற்றி தாங்கள் எனக்குச் செய்தியறிவிக்க மாட்டீர்களா? அவர் பத்ருப் போரன்று கொல்லப்பட்டிருந்தார்; அவரின் மீது எங்கிருந்தோ வந்த அம்பு ஒன்று பாய்ந்து விட்டிருந்தது. அவர் சொர்க்கத்தில் இருந்தால் நான் பொறுமையைக் கைக்கொள்வோன்; அவர் வேறெந்த (துன்ப) நிலையிலாவது இருந்தால் அவருக்காக நான் கடுமையாக அழுவேன்” என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் “ஹாரிஸாவின் தாயே! சொர்க்கத்தில் பல (படித்தரங்கள் கொண்ட) தோட்டங்கள் உள்ளன. உன் மகன் (அவற்றில்) மிக உயர்ந்த ஃபிர்தவ்ஸ் என்னும் சொர்க்கத் (தோட்டத்)தை (தன் உயிர்த் தியாகத்திற்கான பிரதிபலனாகப்) பெற்றார்” என்று பதிலளித்தார்கள்.
ஷஹீஹ் புகாரி 2809
அபூ உஸைத்(ரலி) அறிவித்தார். பத்ருப் போரின்போது நாங்கள் குறைஷிகளுக்கெதிராகவும் குறைஷிகள் எங்களுக்கெதிராகவும் (போர் வியூகம் அமைத்து) அணிவகுத்து நின்றபோது நபி(ஸல்) அவர்கள், “(குறைஷிகள்) உங்களை நெருங்கினால் நீங்கள் அம்புகளைப் பயன்படுத்துங்கள்” என்று கூறினார்கள்.
ஷஹீஹ் புகாரி .2900
. நபி(ஸல்) அவர்கள் (பத்ருப் போரின் போது) ஒரு கூடாரத்தில் இருந்தபடி, “இறைவா! நான் உன் உறுதிமொழியையும் வாக்குறுதியையும் உன்னிடமிருந்து கோருகிறேன். இறைவா! உன்னுடைய நாட்டம் (முஸ்லிம்களாகிய) நாங்கள் தோற்றுப் போக வேண்டும் என்று) இருக்குமானால் இன்றைக்குப் பிறகு உன்னை வணங்குவது நின்று போய் விடும். (மக்கள் கற்பனையான பொய்க் கடவுள்களையே வணங்கிக் கொண்டிருப்பார்கள்)” என்று (முஸ்லிம்களுக்கு வெற்றியைத் தரும்படி) மன்றாடிப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள். அபூ பக்ர்(ரலி) நபி(ஸல்) அவர்களின் கையைப் பிடித்துக் கொண்டு, “போதும், இறைத்தூதர் அவர்களே! தங்கள் இறைவனிடம் தாங்கள் நிறையவே மன்றாடி விட்டீர்கள்“ என்று கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் கவச உடை அணிந்திருந்தார்கள். பிறகு “இந்த (இறைமறுப்பாளர்) படை விரைவில் தோற்கடிக்கப்படும்; மேலும், இவர்கள் புறமுதுகிட்டு ஓடுவார்கள். ஆயினும், இவர்களின் (கணக்கைத் தீர்த்திட) வாக்களிக்கப்பட்ட நேரம் மறுமை நாளாகும். மறுமை நாளோ மிகக் கடுமையானதும், மிகக் கசப்பானதும் ஆகும்” என்னும் திருக்குர்ஆன் வசனத்தை (திருக்குர்ஆன் 54:45, 46) ஓதியபடி அங்கிருந்து நபியவர்கள் வெளியேறினார்கள். என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். மற்றோர் அறிவிப்பில், “பத்ருப் போரின் போது” என்னும் வாசகம் அதிகப்படியாக இடம் பெற்றுள்ளது.
ஷஹீஹ் புகாரி 2915
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். (ஒரு முறை) நபி(ஸல்) அவர்கள் கஅபாவின் நிழலில் தொழுது கொண்டிருந்தார்கள். அப்போது அபூ ஜஹ்லும் குறைஷிகளில் சிலரும் (ஒட்டகத்தின் கருப்பைச் சவ்வுகளைக் கொண்டு வரும்படி) உத்தரவிட்டார்கள். அப்போது மக்காவின் ஒரு பகுதியில் ஒட்டகம் ஒன்று அறுக்கப்பட்டிருந்தது. (அதை எடுத்து வர அவர்கள்) ஆளனுப்பினார்கள். பின்னர், அதன் கருப்பைச் சவ்வை எடுத்து நபி(ஸல்) அவர்களின் (தோள்) மீது போட்டார்கள். அப்போது ஃபாத்திமா(ரலி) வந்து, அதை நபி(ஸல்) அவர்களின் மீதிருந்து அப்புறப்படுத்தினார்கள். அப்போது, நபி(ஸல்) அவர்கள், “இறைவா! குறைஷிகளை நீ கவனித்துக் கொள். இறைவா! குறைஷிகளை நீ கவனித்துக் கொள். ஹாஷிமின் மகன் அபூ ஜஹ்லையும் உத்பா இப்னு ரபீஆ, ஷைபா இப்னு ரபீஆ, வலீத் இப்னு உத்பா, உபை இப்னு கலஃப் மற்றும் உக்பா இப்னு அபீ முஐத் ஆகியோரையும் (நீ தண்டித்து விடு)” என்று அவர்களுக்குக் கேடு நேரப் பிரார்த்தித்தார்கள். இவர்களை நான் (பின்னாளில்) பத்ரின் ஒரு பாழுங் கிணற்றில் கொல்லப்பட்டவர்களாக (எறியப்பட்டிருக்க)க் கண்டேன். அறிவிப்பாளர் அபூ இஸ்ஹாக்(ரஹ்), “நபி(ஸல்) அவர்கள் கேடு நேரப் பிரார்த்தித்த ஏழாமவனின் பெயரை நான் மறந்து விட்டேன்” என்று கூறுகிறார்கள். அபூ இஸ்ஹாக்(ரஹ்) அவர்களின் மற்றோர் அறிவிப்பில், “அறிவிப்பாளர்களில் ஒருவரான ஷுஅபா(ரஹ்), “உமய்யா அல்லது உபை“ என்று (ஐந்தாமவனின் பெயரை) சந்தேகத்துடன் குறிப்பிடுகிறார். ஆயினும், (அந்த ஐந்தாமவனின் பெயர்) “உமய்யா“ என்பதே சரியானதாகும்.
ஷஹீஹ் புகாரி 2934
அலீ(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னையும் ஸுபைர் அவர்களையும் மிக்தாத் அவர்களையும் “நீங்கள் “ரவ்ளத்து காக்“ என்னுமிடம் வரை செல்லுங்கள். ஏனெனில், அங்கு ஒட்டகச் சிவிகையில் ஒரு பெண் இருக்கிறாள். அவளிடம் ஒரு கடிதம் இருக்கும். அதை அவளிடமிருந்து எடுத்துக் கொள்ளுங்கள்” என்று கூறி அனுப்பினார்கள். (அவ்வாறே) நாங்கள் சென்றோம். எங்களைச் சுமந்து கொண்டு எங்கள் குதிரைகள் விரைந்தோடின. இறுதியில், நாங்கள் “ரவ்ளா“ எனும் அந்த இடத்தை அடைந்தோம். அங்கு ஒரு (சிவிகைப்) பெண்ணைக் கண்டோம். நாங்கள் (அவளிடம்), “கடிதத்தை வெளியே எடு” என்று கூறினோம். அவள், “என்னிடம் கடிதம் எதுவுமில்லை” என்று கூறினாள். நாங்கள், “ஒன்று நீயாகக் கடிதத்தை எடுத்து (கொடுத்து) விடு; இல்லையேல் (உன்) ஆடையை நாங்கள் கழற்றி (சோதனையிட்டு) விடுவோம்” என்று சொன்னோம். உடனே, அவள் (இடுப்பு வரை நீண்டிருந்த) தன்னுடைய சடையின் பின்னல்களுக்கிடையேயிருந்து கடிதத்தை வெளியே எடுத்தாள். நாங்கள் அதை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கொண்டு சென்றோம். அதில், ஹாத்திப் இப்னு அபீ பல்தஆ அவர்கள் மக்காவாசிகளான இணைவைப்போரிடையுள்ள பிரமுகர்கள் சிலருக்கு இறைத்தூதர்(ஸல்) அவர்களின் (ரகசியத்) திட்டங்கள் சிலவற்றை (முன்கூட்டியே) தெரிவித்திருந்ததைக் கண்டோம். உடனே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள், “ஹாத்திபே! என்ன இது?“ என்று கேட்டார்கள். ஹாத்திப்(ரலி), “இறைத்தூதர்(ஸல்) அவர்கள், “இறைத்தூதர் அவர்களே! என் விஷயத்தில் அவரசப்பட்டு (நடவடிக்கை எடுத்து) விடாதீர்கள். நான் குறைஷிகளில் ஒருவனாக இருக்கவில்லை. அவர்களைச் சார்ந்து வாழ்ந்தவனாக இருந்து வந்தேன். தங்களுடன் இருக்கும் முஹாஜிர்களுக்கு அவர்களின் வீட்டாரையும் சொத்துகளையும் பாதுகாப்பதற்கு மக்கா நகரில் உறவினர்கள் பலர் இருக்கிறார்கள். எனக்கு அவர்களிடையே அத்தகைய உறவினர்கள் (எவரும்) இல்லாததால் மக்காவாசிகளுக்கு உபகாரம் எதையாவது செய்து, அதன் காரணத்தால் அவர்கள் என் உறவினர்களைக் காப்பாற்ற வேண்டுமென்று விரும்பினேன். (அதனால் அவர்கள் கேட்டுக் கொண்ட படி இந்தத் தகவலைத் தெரிவித்தேன்.) நான் சத்திய மார்க்கத்தை நிராகரித்தோ, (இஸ்லாத்தைத் துறந்து) வேறு மதத்தைத் தழுவுவதற்காகவோ, இஸ்லாத்தைத் தழுவிய பின் இறைமறுப்பை விரும்பியோ இவ்விதம் செய்யவில்லை” என்று கூறினார்கள். (இதைக் கேட்ட) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் “இவர் உங்களிடம் உண்மை பேசினார்” என்று கூறினார்கள். உமர்(ரலி), “இறைத்தூதர் அவர்களே! இந்த நயவஞ்சகனின் கழுத்தை வெட்டி விட என்னை அனுமதியுங்கள்” என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், “இவர் பத்ருப் போரில் கலந்து கொண்டிருக்கிறார். மேலும், உமக்கென்ன தெரியும்? ஒருவேளை அல்லாஹ் பத்ருப் போரில் பங்கெடுத்தவர்களைப் பார்த்து, “நீங்கள் விரும்பியதைச் செய்து கொள்ளுங்கள். உங்களை நான் மன்னித்து விட்டேன்“ என்று கூறி விட்டிருக்கலாம்” என்றார்கள். ”என்ன (பலமான) அறிவிப்பாளர் தொடர் இது!” என்று இந்த நபிமொழியின் அறிவிப்பாளர் தொடரைக் கண்டு இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) (வியந்து) கூறினார்கள்.
ஷஹீஹ் புகாரி 3007
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். பத்ருப் போரின்போது போர்க் கைதிகள் (கைது செய்யப்பட்டுக்) கொண்டு வரப்பட்டனர். (அப்போது எதிரணியில் இருந்த நபி(ஸல்) அவர்களின் பெரியதந்தை) அப்பாஸ்(ரலி) அவர்களும் (கைதியாகக்) கொண்டு வரப்பட்டார்கள். அவரிடம் அணிவதற்கு ஆடை எதுவும் இல்லாதிருந்தது. நபி(ஸல்) அவர்கள் ஒரு சட்டையைத் தேடினார்கள். (நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் இப்னு உபையின் சட்டை அவர்களுக்கு அளவில் பொருத்தமாக அமைந்திருப்பதைக் கண்டார்கள். அதையே அப்பாஸ்(ரலி) அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் அணிவித்தார்கள். இதன் காரணத்தால் தான் அப்துல்லாஹ் இப்னு உபை (இறந்த பின்பு அவனு)க்கு நபி(ஸல்) அவர்கள் தங்களின் சட்டையைக் கழற்றி அணிவித்தார்கள். ”அப்துல்லாஹ் இப்னு உபை, நபி(ஸல்) அவர்களுக்கு இந்த வகையில் ஓர் உபகாரம் செய்திருந்தான். நபி(ஸல்) அவர்கள் அதற்குப் பிரதியுபகாரம் செய்ய விரும்பினார்கள்” என்று அறிவிப்பாளர் சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) கூறினார்.
ஷஹீஹ் புகாரி 3008
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: எதிரிகளை (போர்க்களத்தில்) சந்திக்க ஆசைப்படாதீர்கள். அவர்களை நீங்கள் (போர்க்களத்தில்) சந்திக்க நேர்ந்தால் (போரின் துன்பங்களைக் கண்டு) நிலைகுலைந்து விடாமல் பொறுமையாக இருங்கள். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஷஹீஹ் புகாரி 3026
அபூ மூஸா அஷ்அரீ(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், “(போர்க்) கைதியை (எதிரியிடமிருந்து) விடுவியுங்கள்; பசித்தவனுக்கு உணவளியுங்கள்; நோயாளியை நலம் விசாரியுங்கள்” என்று கூறினார்கள்.
ஷஹீஹ் புகாரி 3046
. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (புனிதப் போரிலிருந்து) திரும்பிச் செல்லும்போது மூன்று முறை “அல்லாஹு அக்பர் - அல்லாஹ் மிகப் பெரியவன்“ என்று கூறிவிட்டு, “இறைவன் நாடினால் நாங்கள் பாவமன்னிப்புக் கோரியவர்களாகவும் வணக்கம் புரிபவர்களாகவும், (அவனைப்) புகழ்ந்தவர்களாகவும், எங்கள் இறைவனுக்கே (நெற்றியை நிலத்தில் வைத்துச்) சிரம் பணிந்தவர்களாகவும் திரும்பிச் செல்கிறோம். அல்லாஹ் தன் வாக்குறுதியை மெய்யாக்கிக் காட்டிவிட்டான்; தன் அடியாருக்கு உதவி புரிந்துவிட்டான்; தன்னந் தனியாக (அனைத்துக்) குலங்களையும் தோற்கடித்துவிட்டான்” என்று கூறினார்கள்.
ஷஹீஹ் புகாரி 3084
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். பத்ருடைய தினத்தன்று (மிகக் குறைந்த எண்ணிக்கை கொண்ட தம் படையினரையும் மிகப்பெருந்தொகையினரான எதிரிகளையும் கண்ட) நபி(ஸல்) அவர்கள், “இறைவா! (மறுப்பாளர்களுக்கெதிராக எங்களுக்கு நீ வெற்றியளிப்பதாக நீ அளித்த) உன்னுடைய உறுதி மொழியையும், வாக்குறுதியையும் (நிறைவேற்றித் தரும்படி) கோருகிறேன். (இறைவா! இந்த விசுவாசிகளை அழிக்க) நீ நினைத்தால், உன்னை (மட்டுமே) வழிபடுவோர் (இப்புவியில்) இல்லாமல் போய்விடுவர்” என்று கூறினார்கள். அப்போது அபூ பக்ர்(ரலி) நபி(ஸல்) அவர்களின் கரத்தைப் பற்றிக் கொண்டு, “போதும் (இறைத்தூதர் அவர்களே!)” என்று கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் (தாம் தங்கியிருந்த கூடாரத்திலிருந்து)” அந்தப் படையினர் தோற்கடிக்கப்படுவர். அவர்கள் புறமுதுகிட்டு ஓடுவர்” என்று (திருக்குர்ஆன் 54:45-வது குர்ஆன் வசன வாசகத்தைக்) கூறிக் கொண்டே வெளியேறி வந்தார்கள்.
ஷஹீஹ் புகாரி 3953
பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார். நானும் இப்னு உமர்(ரலி) அவர்களும் பத்ருப்போரின்போது சிறுவர்களாகக் கருதப்பட்டோம். பத்ருப்போரில் அறுபதுக்கும் சற்றுக் கூடுதலான முஹாஜிர்களும் இரண்டு நூற்று நாற்பதுக்கும் சற்றுக் கூடுதலான அன்சாரிகளும் இருந்தனர்.
ஷஹீஹ் புகாரி 3956
3957. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார். பத்ருப் போரில் பங்கெடுத்த நபித்தோழர்கள் என்னிடம் கூறினார்கள்: தாலூத் அவர்களுடன் ஆற்றைக் கடந்து சென்றவர்களான முன்னூற்றுப் பத்துக்கும் சற்றுக் கூடுதலான அவர்களின் தோழர்களின் எண்ணிக்கையில் நாங்கள் இருந்தோம். மேலும், பராஉ(ரலி) கூறினார்: அல்லாஹ்வின் மீதாணையாக! தாலூத் அவர்களுடன் இறைநம்பிக்கையாளர்களைத் தவிர வேறெவரும் ஆற்றைக் கடக்கவில்லை.
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 64.
(நபிகளார் காலத்துப்)போர்கள்
3959. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார். ”முன்னூற்றுப் பத்துக்கும் சற்றுக் கூடுதலாயிருந்த பத்ருப் போர் வீரர்களின் எண்ணிக்கை, தாலூத் அவர்களுடன் ஆற்றைக் கடந்து சென்ற அவர்களின் தோழாகளின் எண்ணிக்கையேயாகும். இறை நம்பிக்கையாளர்களைத் தவிர வேறெவரும் அவர்களுடன் ஆற்றைக் கடக்கவில்லை” என்று நாங்கள் பேசிக்கொள்வது வழக்கம்.
ஷஹீஹ் புகாரி 3959
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் இறையில்லம் கஅபாவை நோக்கி, குறைஷிக் குலத்தைச் சேர்ந்த ஷைபா இப்னு ரபீஆ, உத்பா இப்னு ரபீஆ, வலீத் இப்னு உத்பா, அபூ ஜஹ்ல் இப்னு ஹிஷாம் போன்ற சிலருக்கெதிராகப் பிரார்த்தனை புரிந்தார்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர்கள் (நால்வரும்) சூரிய வெப்பத்தால் (உடல் உப்பி, நிறம் மாறி) உருமாறி (பத்ருப் போர்க்களத்தில்) மாண்டு கிடந்ததை கண்டேன். அன்றைய தினம் வெப்பம் நிறைந்த நாளாக இருந்தது.
ஷஹீஹ் புகாரி 3960
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். ”அபூ ஜஹ்ல் என்ன ஆனான் என்று பார்த்து வருபவர் யார்?“ என்று நபி(ஸல்) அவர்கள் (பத்ருப் போர் முடிந்த போது) கேட்டார்கள். உடனே இப்னு மஸ்வூத்(ரலி) (அவனைப் பார்த்து வரச்) சென்றார்கள். அப்போது அவனை அஃப்ராவின் இரண்டு புதல்வர்கள் (முஆத், முஅவ்வித் ஆகிய இருவரும பலமாகத்) தாக்கி விடவே, அவன் குற்றுயிராக இருக்கக் கண்டார்கள். அப்போது இப்னு மஸ்வூத்(ரலி) அவனுடைய தாடியைப் பிடித்துக் கொண்டு, “அபூ ஜஹ்ல் நீ தானே!” என்று கேட்டார்கள். ”நீங்கள் கொன்றுவிட்ட ஒரு மனிதனுக்கு மேலாக... அல்லது தன்னுடைய (சமுதாயத்து) மக்களாலேயே கொல்லப்பட்டுவிட்ட ஒரு மனிதனுக்கு மேலாக... ஒருவன் உண்டா?“ என்று (தன்னைத் தானே பெருமைப்படுத்தியபடி) அவன் கேட்டான்.
ஷஹீஹ் புகாரி 3962
அபூ தர்(ரலி) அறிவித்தார். குறைஷிக் குலத்தைச் சேர்ந்த ஆறு நபர்களான அலீ, ஹம்ஸா உபைதா இப்னு ஹாரிஸ்(ரலி) ஆகிய முஸ்லிம்கள்), மற்றும் ஷைபா இப்னு ரபீஆ, உத்பா இப்னு ரபீஆ, வலீத் இப்னு உத்பா (ஆகிய இறைமறுப்பாளர்கள்) தொடர்பாகவே “இவர்கள் தங்கள் இறைவனது (மார்க்க) விஷயத்தில் சண்டையிட்டுக் கொண்ட இரண்டு பிரிவினர் ஆவர்” என்னும் (திருக்குர்ஆன் 22:19) இறைவசனம் அருளப்பட்டது.
ஷஹீஹ் புகாரி 3966
கைஸ் இப்னு உபாத்(ரஹ்) அறிவித்தார். ”இந்த வசனங்கள் (திருக்குர்ஆன் 22: 19, 20, 21) பத்ருப் போரின்போது (முன்னின்று போரிட்ட) ஆறு பேர்கள் குறித்து அருளப்பட்டன...” என்று அபூ தர்(ரலி) (அல்லாஹ்வின் மீது) ஆணையிட்டுக் கூறினார்கள்.
ஷஹீஹ் புகாரி 3968
. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (மக்காவில்) “அந்நஜ்ம்“ என்னும் (53-வது) அத்தியாயத்தை ஓதினார்கள். (ஓதி முடித்த) உடன் நபி(ஸல்) அவர்கள் “ஸஜ்தா“ செய்தார்கள். அங்கிருந்த ஒரு கிழவனைத் தவிர மற்ற அனைவரும் நபி(ஸல்) அவர்களுடன் “ஸஜ்தா“ செய்தனர். அவன் ஒரு கை மண்ணை அள்ளித் தன்னுடைய நெற்றிக்குக் கொண்டு சென்றுவிட்டு, “இது எனக்குப் போதும்” என்று (ஸஜ்தாவைக் கேலி செய்து) சொன்னான். பிறகு, அந்த மனிதன் இறைமறுப்பாளனாகவே (பத்ரில்) கொல்லப்பட்டதை கண்டேன்.
ஷஹீஹ் புகாரி 3972
அபூ தல்ஹா(ரலி) அறிவித்தார். பத்ருப் போர் (நடந்து முடிந்த) நாளில் நபி(ஸல்) அவர்கள், குறைஷித் தலைவர்களில் இருபத்தி நான்கு பேர்(களின் சடலங்)களை பத்ருடைய கிணறுகளில் அசுத்தமானதும், அசுத்தப்படுத்தக் கூடியதுமான (கற்களால் உட்சுவர் எடுக்கப்பட்ட) கிணறு ஒன்றில் தூக்கிப் போடுமாறு உத்தரவிட்டார்கள். (எதிரிக்) கூட்டத்தினர் எவரிடமாவது நபி(ஸல்) அவர்கள் போரிட்டு வெற்றி கண்டால் (போரிட்ட இடத்திலுள்ள) திறந்த வெளியில் மூன்று நாள்கள் தங்கிச் செல்வது அவர்களின் வழக்கமாக இருந்தது. பத்ர் முடிந்த மூன்றாம் நாள் தம் வாகன(மான ஒட்டக)த்தின் மீது அதன் சிவிகையை (ஏற்றிக்) கட்டுமாறு நபி(ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். எனவே, அதன் மீது அதன் சிவிகை கட்டப்பட்டது. பிறகு நபி(ஸல்) அவர்கள் (புறப்பட்டுச்) சென்றார்கள். அவர்களின் தோழர்களும் அவர்களைப் பின்தொடர்ந்தனர். நபி(ஸல்) அவர்கள் ஏதோ தம் தேவை ஒன்றிற்காகவே செல்கிறார்கள் என்றே நாங்கள் நினைத்தோம். இறுதியில், அந்தக் (குறைஷித் தலைவர்கள் போடப்பட்டிருந்த) கிணற்றருகில் நபியவர்கள் நின்றார்கள். (கிணற்றோரம் நின்றிருந்த) நபி(ஸல்) அவர்கள், (அதில் எறியப்பட்டிருந்த) அவர்களின் பெயர்களையும், அவர்களின் தந்தையரின் பெயர்களையும் குறிப்பிட்டு, “இன்னாரின் மகன் இன்னாரே! இன்னாரின் மகன் இன்னாரே! அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் நீங்கள் கீழ்ப்படிந்து நடந்திருந்தால் (இப்போது அது) உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் தானே! ஏனெனில், எங்களுடைய இரட்சகன் எங்களுக்கு வாக்களித்த (நன்மை)தனை உண்மையானதே என்று நாங்கள் கண்டு கொண்டோம். உங்களுக்கு உங்களுடைய இரட்சகன் வாக்களித்த (தண்டனை)தனை உண்மையானது தான் என்று நீங்கள் கண்டு கொண்டீர்களா?“ என்று கூறினார்கள். உடனே (அருகிலிருந்த) உமர்(ரலி), “இறைத்தூதர் அவர்களே! உயிரற்ற சடலங்களிடமா பேசுகிறீர்கள்?“ என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், “என்னுடைய உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! நான் கூறுவதை (கிணற்றில் உள்ள) இவர்களை விட நன்கு செவியேற்பவர்களாக நீங்கள் இல்லை” என்று கூறினார்கள். (இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான) கதாதா(ரஹ்) கூறினார்கள்: அவர்களை இழிவுபடுத்தி சிறுமைப் படுத்தி தண்டிப்பதற்காகவும், அவர்கள் (தமக்கு நேர்ந்துவிட்ட) இழப்பை எண்ணி வருந்துவதற்காகவும் நபி(ஸல்) அவர்களின் சொல்லைச் செவியேற்கச் செய்யும் முகமாக (அந்த நேரத்தில் மட்டும்) அல்லாஹ் அவர்களை உயிராக்கினான்.
ஷஹீஹ் புகாரி 3976
அபூ உஸைத்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், பத்ருப் போரின்போது எங்களிடம், “(எதிரிகளான) அவர்கள் உங்களை நெருங்கி வந்தால் - அதாவது அதிக எண்ணிக்கையில் உங்களை அவர்கள் சூழ்ந்து கொண்டால் - அம்பெய்யுங்கள். (எதிரிகளை அம்பு தாக்காது என்றிருப்பின், வீணாக்கிவிடாமல்) உங்கள் அம்புகளை மிச்சப்படுத்திக் கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.
புகாரி 3985
. அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அறிவித்தார். நான் பத்ருப் போரின்போது (படை) அணியில் நின்று கொண்டிருந்தேன். திரும்பிப் பார்த்தபோது என் வலப்பக்கத்திலும் இடப்பக்கத்திலும் இளவயதுடைய இரண்டு இளைஞர்கள் (நின்று கொண்டு) இருந்தனர். அந்த இருவர் (அருகில்) இருப்பது குறித்து நான் அஞ்சினேன். அப்போது அந்த இருவரில் ஒருவர் தம் தோழரிடமிருந்து மறைவாக என்னிடம், “என் பெரிய தந்தையே! அபூ ஜஹ்லை எனக்குக் காட்டுங்கள்” என்று கூறினார். அப்போது நான், “என் சகோதரர் மகனே! அவனை என்ன செய்யப் போகிறாய்?“ என்று கேட்டேன். அதற்கு அவர், “அவனை நான் கண்டால் (ஒன்று,) அவனை நான் கொலை செய்வேன்; அல்லது அதற்காக(ப் போராடி) மடிவேன் என்று அல்லாஹ்விடம் சபதம் எடுத்துக் கொண்டுள்ளேன்” என்றார். அப்போது மற்றொரு வரும் தம் சகாவிடமிருந்து மறைவாக, முதலமாவரைப் போன்றே கூறினார். அவர்களைப் போன்ற இருவருக்கிடையே நான் இருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை. எனவே, அவ்விருவருக்கும், அபூ ஜஹ்லை சமிக்கை செய்து காட்டினேன். அந்த இருவரும் இராஜாளிப் பறவைகள் போன்று பாய்ந்து அவனைப் பலமாகத் தாக்கினர். அந்த இருவரும் “அஃப்ரா“வின் இரண்டு புதல்வர்கள் (முஆத், முஅவ்வித்) ஆவர்.
ஷஹீஹ் புகாரி 3988
நபி(ஸல்) அவர்களிடம் (வானவர்) ஜிப்ரீல்(அலை) அவர்கள் வந்து, “உங்களிடையே பத்ருப்போரில் பங்கெடுத்தவரைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்?“ என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், “(பத்ரில் கலந்து கொண்டோர்) முஸ்லிம்களில் சிறந்தவர்கள்” என்றோ அல்லது அது போன்ற வேறொரு வார்த்தையையோ கூறினார்கள். (உடனே) ஜிப்ரீல்(அலை) அவர்கள், “இவ்வாறுதான் வானவர்களில் பத்ருப்போரில் பங்கெடுத்தவர்கள் (எங்களில் சிறந்தவர்கள் என்று நாங்களும் கருதுகிறோம்)” என்று கூறினார்கள். இந்த ஹதீஸை பத்ருப்போரில் பங்கெடுத்தவரான ரிஃபாஆ இப்னு ராஃபிஉ அஸ்ஸுரகீ(ரலி) அவர்களிடமிருந்து அவர்களின் புதல்வர் முஆத் இப்னு ரிஃபாஆ(ரஹ்) அறிவித்தார்.
ஷஹீஹ் புகாரி 3992
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். பத்ருப் போரின்போது நபி(ஸல்) அவர்கள், “இதோ ஜிப்ரீல்! போர்த் தளவாடங்களுடன் தம் குதிரையின் தலையை (அதன் கடிவாளத்தை)ப் பிடித்துக் கொண்டிருக்கிறார்” என்று கூறினார்கள்.
ஷஹீஹ் புகாரி 3995
ஸுபைர் இப்னு அவ்வாம்(ரலி) அறிவித்தார். பத்ருப்போரின்போது நான் உபைதா இப்னு ஸயீத் இப்னி ஆஸ் என்பவனைச் சந்தித்தேன். அவன் தன்னுடைய இரண்டு கண்களைத் தவிர வேறெதுவும் வெளியில் தெரியாத விதத்தில் தன் உடல் முழுவதையும் ஆயுதங்களால் மூடி மறைத்திருந்தான். அவன் “அபூ தாத்தில் கரிஷ்“ (மக்கள் பலம் மிக்கவன்) என்னும் குறிப்புப் பெயரால் அறியப்பட்டு வந்தான். (போர்க்களத்தில் அவன்) நான் “அபூ தாத்தில் கரிஷ்“ (என்று பெருமையாகச்) சொன்னான். நான் அவன் மீது ஈட்டியைப் பாய்ச்சி அவன் கண்களில் தாக்கினேன். உடனே அவன் இறந்துவிட்டான். ”நான் அவன் மீது என்னுடைய காலை வைத்து மிதித்து மிகவும் சிரமப்பட்டு அந்த ஈட்டியை இழுத்தெடுத்தேன். அதன் இரண்டு ஓரங்களும் வளைந்து போயிருந்தன” என்று ஸுபைர்(ரலி) சொன்னதாக ஹிஷாம் இப்னு உர்வா(ரஹ்) அறிவித்தார். அறிவிப்பாளர்களில் ஒருவரான உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) கூறினார்: அந்த ஈட்டியை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஸுபைர்(ரலி) அவர்களிடம் (இரவலாகக்) கேட்கவே, ஸுபைர்(ரலி) அதைக் கொடுத்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இறந்தபோது ஸுபைர்(ரலி) அதை (திரும்ப) எடுத்தார்கள். பிறகு அதை அபூ பக்ர்(ரலி) (இரவலாகக்) கேட்க, அதை அவர்களுக்கு ஸுபைர்(ரலி) கொடுத்தார்கள். அபூ பக்ர்(ரலி) இறந்தபோது, அதனை உமர்(ரலி) (இரவலாகக்) கேட்டார்கள். அதனை ஸுபைர் அவர்கள் உமர்(ரலி) அவர்களுக்குக் கொடுத்தார்கள். உமர்(ரலி) இறந்தபோது அதை ஸுபைர் அவர்கள் எடுத்து (தம்மிடம் வைத்து)க் கொண்டார்கள். பிறகு அவர்களிடம் உஸ்மான்(ரலி) அதைக் கேட்க, அவர்களுக்கும் அதை ஸுபைர்(ரலி) கொடுத்தார்கள். உஸ்மான்(ரலி) கொலை செய்யப்பட்டபோது, அந்த ஈட்டி அலீ(ரலி) அவர்களி(ன் குடும்பத்திரி)டம் வந்தது. அதனை, ஸுபைர்(ரலி) அவர்களின் மகன் அப்துல்லாஹ், (அலீ - ரலி அவர்களின் பிள்ளைகளிடம்) கேட்டார்கள். அப்துல்லாஹ்(ரலி) கொல்லப்படும் வரையில் அது அவர்களிடமே இருந்து வந்தது.
ஷஹீஹ் புகாரி 3998
. கைஸ் இப்னு அபீ ஹாஸிம்(ரஹ்) அறிவித்தார். பத்ருப் போரில் பங்கெடுத்தவர்களின் (வருடாந்திர உதவித்) தொகை (நபர் ஒன்றுக்கு, தீனார்ஃதிர்ஹம்) ஐயாயிரம், ஐயாயிரமாக இருந்தது. உமர்(ரலி) (தம் ஆட்சிக் காலத்தின் போது), “(உதவித் தொகையை) மற்றவர்களை விட இவர்களுக்கு அதிகமாக்கித் தருவேன்” என்று கூறினார்கள்.
ஷஹீஹ் புகாரி 4022.
உவைஸ் மஸ்லஹி 🌹

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக